
அடவு
கோட்டுத் துண்டாய்
கிடக்கும் காதல்
இரு மருங்கும்
ஈட்டி முனைக் கெழு
கிரணங்களாக!
எட்டிப் பார்த்திடும்
இயல்பில்லா
நேர்க்கோட்டுப் பாதை
நித்தம் அவஸ்தை!
வாயூறும் காதல்
வார்த்தைகள்
செவி சேராமல்
எங்கோ பயணிக்கும்
திசைக்கொன்றாய்
திரும்பி நிற்கும்!
என்னை மட்டும்
நோக்கிடு என
நாளும் கேட்கும்
செவிடன் காதில்
ஊதிய சங்கென
ஊடல்களின் கோர்வைப் பயணம்!
நம் விருப்புகளின்
மித மிஞ்சிய பாசாங்கும் அடவும்
தொலைதூரக் கல்வியாக
இன்னும் கட்டிப் போட்ட புத்தகமாக
பரணில் கிடக்கிறது
தூசி தும்பு அண்டியே,
துடைக்க அல்ல
எட்டிப் பார்க்கக் கூட
யாருமற்ற
இருள் வெளியில்.
***
அது கிடக்கு
சுருங்கிய முந்தானையில்
பாதிப் பாதியாக பூக்கள்
அவளின் பால்ய
எண்ணங்களாய்
வேர்களாய் கிளை
பரப்பிய
சடைக் கயிறுகள்
சிக்கல் முடிச்சாக
சற்று திண்ணமாக
காய்ந்த வெண்டையாக
விரல் நீண்ட நகங்கள்
வெளியே காய்த்து
கிடக்கின்றன
முத்து ஈன்ற சிப்பியாக
சில பற்கள்
இன்னும் வலுவோடு
அவளுடன்
உரையாடுகின்றன
ஆறிய கஞ்சி
ஏடுகளாக
அவளது தோல்
அடுக்கு சுருக்கம்
பொழுதெல்லாம்
பேசியே தீர்க்கிறாள்
உணவோடு
உரையாடலையும்
சேர்த்தே உண்கிறாள்
திரு நாளும்
வெறு நாளும்
அவளுக்கு ஒன்றுதான்
இப்போதெல்லாம்
அவள் சாமியறையை
எட்டிக் கூட
பார்ப்பதில்லை
அவளது பேரிரைச்சலால்
நான்கு சுவர்களும்
பாபேல் கோபுரமாக
வளர்கின்றன
ஒவ்வொரு வார்த்தை
அடுக்கிலும்
தோல் பறியாக
அவ்வப்போது
அமிழ்ந்தெழும்
க(ம)வலையின்
இறைப்பாக
அரற்றும் அதரங்கள்
பிள்ளைப் பருவத்தில்
கொஞ்சுகையில்
கிள்ளிய விரல்
பருவ வயது
பாலியல் மீறல்
வயதான பிறகும்
விடாத வன்மக் கணையை
அசைபோடும்
அனிச்சை நினைவுகள்
இளமைக் கால
அத்து மீறல்களை
தடுக்க இயலாத
இயலாமையை
எடுத்தெறிகிறாள்
வீதியில் வார்த்தை தெளிப்பாக
காலை முதலே…
அவளைச் சீண்டிய ஆண் அறிவான்
அவள் யாரை
அவலமாகத் திட்டுகிறாள் என,
அவர்(ன்)களும்
காதில் வாங்கியே
விரைவாகக் கடக்கின்றனர்
அவளது வீடு தாண்டியே
எட்டிய நடையோட்டு
அவளது தோல்
போர்த்திய எலும்பை
பார்த்து சிரிக்கிறாள்
பல வருட சீண்டல்களை
பார்த்த வெறுப்பாக
காலம் கடந்து
வெளியே சொல்கிறாள்
கேட்கத்தான் யாருமில்லை
அது கிடக்கு பைத்தியமென
கடந்து செல்லும்
சமூகம்
மீ டூ சொன்னவளை
கடப்பது போல…
******
‘அது கிடக்கு’ !!
உணர்வுள்ள வரிகள்.