கட்டுரைகள்
Trending

பாடுபொருள் சொற்களைத் தீர்மானிக்கின்றன

முனைவர் சி.ஆர். மஞ்சுளா

நேருக்கு நேராக உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டும் தன்மை கொண்டவை நவீன கவிதைகள்.  இளைஞனாகி விட்ட சிறப்புக் குழந்தை அந்த வயதில் தன் கை விரல் நகங்களைத் தானே வெட்டிக் கொள்ள கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் நம் கண் முன் விரல்களை நீட்டிக் காண்பிக்கும் தருணத்தில் ஒரு கவிதை பிறக்குமேயானால் அது நவீன கவிதை.  ஒரு பெண் அணிந்திருக்கும் கிழிந்த மேல்சட்டையின் கிழிசலின் நடுவில் பெண்ணின் சதையைப் பார்க்காமல் வறுமையை நேர்மையுடன் பதிவு செய்ய முடிந்தால் அது நவீன கவிதை.

புதிய கருப்பொருள்களில் படைக்கப் பெறும் இக்கவிதைகளின் பாடுபொருள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  எல்லைக்கு உட்படாத பரந்த விரிந்த பாடுபொருளில் பயணிக்கக்cகூடியவை இவை.    இக்கவிதைகளின் முதன்மைக்கூறு எதார்த்தம்.  பிரச்சார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாத இக்கவிதைகள் வாசகனுடன் நேரடியாக உரையாடி விடுகின்றன.  நவீன கவிதைகளில் பயிற்சி இல்லையென்றால் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை என்பது பரவலான கருத்து.

படைப்புகளை விமர்சனம் செய்வது ஓர் அழகியல்.  விமர்சனங்கள் இன்னும் மேன்மையான படைப்புகள் பிறக்க வழி வகுக்கும் என்ற புரிதலைத் தருகிறது.  ஒரு கண்ணாடியைப் பார்த்துக் கலைந்த முடியையோ, முகத்தையோ சரி செய்து கொள்வதற்கு ஈடான வேலையை இலக்கிய விமர்சகர் செய்து விடுகிறார்.

இளைஞன் ஒருவன் தன் நண்பனுடன் அவன் அறையில் தங்கிக் கொள்ளும் சூழலில் நண்பனுடைய பற்பசையில் தொடங்கி எல்லா பொருள்களையும் பயன்படுத்திக் கொள்கிறான்.  தலை சீவுவதற்கு நண்பனுடைய சீப்பை எடுத்துக் கொள்ளும் இளைஞன் மீண்டும் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்து விடுகிறான்.  ஆனால் குளித்து முடித்த பின் தன் உடலைத் துவட்டிக் கொள்ளும் துண்டை எங்கே போடுவது என்பது பெரிய சவாலாக இருக்கிறது இளைஞனுக்கு.

எங்காவது ஒளித்து வைத்தாலும், அப்படியே மடித்து வைத்து விட்டாலும் அதிலிருந்து வீசும் துர்நாற்றம் அந்த அறைக்குள் நுழைய முடியாமல் செய்துழவிடும்.  நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது மனுஷ்ய புத்திரன் ஓர் ஈரத்துண்டிற்கு இப்படிப் பரிந்து பேச வேண்டுமா என்று நமக்குத் தோன்றும்.  ஆனால் ஈரத்துண்டில் காயாமல் இருக்கும் இளைஞனின் வறுமையை அல்லவா கவிஞர் உணர்த்திச் செல்கிறார்.

எல்லாக் காலங்களிலும் பெண்கள் மீதான கட்டுப்பாடு வலுத்துக் கொண்டே வருகிறது.  எந்த ஆடை அணிய வேண்டும், மற்றவர் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லா அம்சங்களையும் சமூகமே தீர்மானிக்கிறது.  ‘இளவரசியின் தவளை ஆடை’ என்ற கவிதையில் கவிஞர் சல்மா இதைத் தான் ஆழமாக விளக்குகிறார்.

பெண்களின் அசௌகரியத்தைப் பற்றியெல்லாம் இந்தச் சமூகம் சிந்திக்க மறுக்கிறது.  வெளியில் போய் மனபாரத்தை வேறு வேறு வழிகளில் இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று ஆண்களுக்கு வழிவிட்ட இந்தச் சமுதாயம் பெண்களுக்கான வடிகாலை அனுமதிப்பதே இல்லை.

“என்னைச் சரியாகப் பொருத்த விடவோ

அதனுள் அனுமதிக்கவோ மறுக்கிறது

அதன் விஸ்தீரணம்

உடைகளுக்கேற்ப அமையாத

உடலின் அளவை மாற்றுவதில்

தவறில்லை என்கிறாய்”

என்ற வரிகளில் வெளிப்படும் துயரம் மாறவேண்டியது அவசியம்.

பேருந்துகளில் பயணம் செய்யும் போது நீள்கிறது ஓர் ஆண்குறி என்று ஆணின் வக்கிரங்களை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள் ஒரு புறம்; மார்புகளைத் துறந்தால் சிறகுகள் முளைக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றொரு புறம்.  உருவ அடையாளங்களால் சிறைபட்டிருக்கிறது பெண்ணினம்.  அவள் உடலைச் சொல்லி ஆதிக்கக் கோட்டையை எதிர்க்கும் நிர்மலாவின் கவிதையில் ‘உடல் பெயர்கிறேன்’ என்ற சொல்லாடல் எல்லோரையும் தன் வசம் ஈர்த்து விடுகிறது.

உடலால் நான் சுமந்து கொண்டிருக்கும் அடையாளங்களை மீறிச் செல்கிறேன் என்ற விடுதலை உணர்வை வெளிப்படுத்துகிறது இந்தச் சொல்லாடல்.  செல்வி ராமச்சந்திரனின் ‘இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ’ என்ற கவிதை பெண்களைக் கற்பு என்ற கோட்பாட்டை வைத்து அச்சுறுத்தும் எதார்த்தத்தைக் கூறுகிறது.  காதலியை அடிக்கடி பெயர் மாற்றி அழைக்கும் போது புதிய பெண்ணுடன் பேசுவதாக ஆண்கள் நினைக்கும் உளவியலைப் பதிவு செய்கிறார்.  இதனால் பெண்ணுக்குள் எழும் அச்சத்தையும் கவிதை பேசுகிறது.

சே. பிருந்தாவின் ‘மாயக் கிணறு’ என்ற தலைப்பில் அமைந்த கவிதை முகநூல் பற்றி குறிப்பிடுகிறது.

“இப்போது கண்களைக் கட்டியிருப்பது

எரிமைலையின் முன்பாக இருக்கலாம்

மலை முகடாக இருக்கலாம்

கொடிய மிருகங்களுறை வனமாக

நெடிய பாலையாக

ஆழ் கிணறாக

சுழல் மிகு நதியாகவு மிருக்கலாம் ”

என்ற வரிகளில் மாயக் கிணறு என்ற முகநூலில் நுழைபவர்கள் சாகசங்களையும் விளையாட்டுகளையும் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு வெளிப்படுகிறது.  ஒருவரின் சாகசம் மற்றவருக்கு நகைச்சுவை என்று ஊடக பயங்கரவாதத்தை விளக்குகிறது கவிதை.

ஆண்கள் அழக்கூடாது என்ற எழுதப்படாத விதியை உடைத்துப் போடும் பிரான்சிஸ் கிருபா மனிதர்களின் தோற்றத்தைப் பார்த்து முன் முடிவுகளோடு அந்த மனிதர்களைக் கிறுக்கனாகச் சித்தரிப்போரிடம் அவர்களுக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.

“கையில் கத்தியோடு

கட்டையில் வைத்து

அவன் நறுக்கிக் கொண்டிருப்பது

அவனுடைய பசியைத்தான்

உங்களுடையதை அல்ல”

என்கிறார்.

கடவுள் குறித்த சர்ச்சைகளில் கடவுளையே நாத்திகன் என்று பேசும் சுகிர்த ராணியின் கவிதை சற்றே வித்தியாசமானது.  பிறப்பின் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஆதிக்கச் சாதியினரைப் பார்த்து உங்களுக்கும் —-தான் இருக்கிறது.  எனக்கும் —-தான் இருக்கிறது.  அதன் வழி மலம் கழிக்கிறோம் என்று காட்டமாகப் பேசியிருப்பார்.

கட்டுரையை முடிக்கும் முன் கவிதைகளின் மொழி என்பது இயல்பான நடையில் இருக்க வேண்டும் என்ற வாதத்தை எடுத்து வைக்கிறேன்.  அலங்கார நடையைக் கை விடும் இயல்புக் கவிதைகள் பளிங்கு நீர் போல் பளிச்சிடுகின்றன என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் சில சொற்களைத் (அசிங்கமான) தவிர்த்து இருக்கலாமே என்று வாதிடுபவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்.  சுகிர்த ராணியின் கவிதை வேண்டுமென்றே அசிங்கமான சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்று தவமிருக்க வில்லை.  ஆனால் அந்தப் பாடுபொருள் அந்தச் சொல் பயன்பாட்டை ஏற்றுக் கொண்டு விட்டது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button