உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைக்கு சித்தம் கலங்கிய பொழுது – பாலைவன லாந்தர்
சிறுகதை | வாசகசாலை
”நீ யாருப்பா புதுசா இருக்கே.. நேத்திக்கெல்லாம் ஒன்னிய பாக்கலயே ஊருக்குப் புதுசா இல்ல ஏரியாவுட்டு ஏரியா வந்திருக்கியா”
“அண்ணே, நான் வேற ஊருண்ணே. இது எந்த எடமுன்னே தெரியலண்ணே.. ராவோட ராவா லாரில ஏத்தி இங்கன எறக்கி விட்டுட்டாய்ங்கண்ணே. ரொம்ப பசிக்குது. என்னமாச்சும் சாப்பிட இருக்குதா?”
“தோடா.. வந்ததும் எவ்ளோ உரிமையா கேக்குது பாரேன். தம்பி, இங்க என்ன சாப்பாடு கொட்டியா கெடக்குது? நாங்களே விடிஞ்சாத்தான் வவுத்துக்கு எதுனா கெடக்கிதான்னு தேடிப்போவோம். ஒன்னிய பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு. நேத்து நைட்டு தின்னுட்டு வச்ச மிச்ச சோறு கொஞ்சம் இருக்கு.. திங்கறியா?”
“ஐயோ அண்ணே, நான் எச்சியெல்லாம் தின்னு பழக்கமில்லண்ணே மேலுக்கு ஒத்துக்காது.. “
“அடிங்க.. பாவம் பசியில செத்து கித்து போயிடுவியோன்னு எனக்குன்னு வச்ச சோத்தக் கொடுத்தா எச்சி சோத்த திங்க மாட்டேன்னு சொல்லுது பாரேன்..”
“இல்லண்ணே நான் பொறந்ததுலேந்து பழச உண்டதே இல்ல.. தப்பா நெனச்சுக்காதிங்க. சாப்பிடக் கூடாதுன்னு இல்ல.. மீறித் தின்னுட்டா வாந்தி வரும்; காய்ச்சல் வரும். பொறவு, ரொம்ப செரமமா போவிரும்”
“ஆங்.. அவ்ளோ பதவிசா வளத்தானுங்கன்னா ஏன் ராவோட ராவா சாரத் தூக்கி லாரில போட்டானுங்களாம்? கேக்கறவனுங்க பூரா கேணப்பயன்னே முடிவு பண்ணி கெளம்பி வர்ரானுங்க போல”
“அதெல்லாம் பெரிய கதைண்ணே. அதச் சொல்லுறதுக்கு எனக்கு திராணி வேனும்னாக் கூட எதயாச்சும் உங்கனும்”
“உங்கனும்னா”
“சாப்பிடனும்ணே.. அந்த மிச்ச சோத்த போடுங்க ப்ளீஸ்”
“தொரை வூட்டுப் பிச்சக்காரனா.. ஹாஹாஹா. சரி இரு, புஷ்பாக்கா டீக்கடையத் தொறந்திருப்பா. ரெண்டு பிஸ்கட் வாங்கிட்டு வரேன்”
இரண்டு பிஸ்கட்டுகளை உணவாக்கிக் கொண்ட பிறகு,
“இப்ப சொல்லு ஒன்னோட கதைய கேப்போம். இன்னிக்கு திங்கக் கெழமதான் சார் ஃப்ரீயா இருக்கேன்”
“அண்ணே, நா பொறந்து வளந்தது எல்லாமே ஒரு வெளிநாட்டுக்காரன் வீட்டுலதான். அவரு எங்க அம்மாவ காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டாராம். அவிங்களும் ரொம்ப நல்லமாதிரிதான் வளத்தாங்க, என்னைய பெத்த அம்மையும் அப்பனுங் கூட வேற வேற நாட்ட சேந்தவய்ங்க. அதனாலயே நா பொறக்கயில புஸுபுஸுன்னு ரொம்ப அழகா இருந்தேன்னு சொல்லுவாய்ங்க நெதத்துக்கும் நான் சாப்புடுற சாப்பாடு வெளிநாட்டுல இருந்து வாங்கினதுன்னு சொல்லுவாய்ங்க.. மாசாமாசம் டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் மேலுக்கு எதுவும் கொறயில்லயேன்னு கேட்டு தெரிஞ்சுக்குவாய்ங்க.. அவியலுக்கு எப்பலாம் தேவையோ அப்பலாம் தூக்கி கொஞ்சி அன்பாத்தான் பாத்துக்கிட்டாவ.. கொஞ்ச நாளைக்கி முன்னாடி அந்த அம்மாவுக்கு என்னமோ நோயி வந்து செத்துப் போயிட்டாவ. நல்ல தளதளன்னு இருந்த அம்மா கெறங்கிப்போயி கருவாடுப் போல வாடிப்போயிட்டாவ. அதுலயே இந்த மனுஷனும் வாழப் புடிக்காம, ‘அவ போன எடத்துக்கே போறென்னுட்டு’ என்னயத் தூக்கி அவங்க வீட்டு டிரைவர்கிட்ட புள்ளயப்போல பாத்துக்கோன்னுச் சொல்லி நெறய பணமெல்லாம் கொடுத்தாவ.. அந்தப்பய அவிய கொடுத்த காசையெல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு என்னயத் தூக்கி லாரில போட்டுவுட்டுட்டான். ஹ்ம்ம்.. இந்தேரம் அப்பா செத்துப் போயிருப்பாரு”
“அடப்பாவி மனுஷனுங்களா.. சரி, நீ கவலப்படாதே நாங்கள்லாம் இருக்கோம் பாத்துக்குவோம்,, அதுசரி, அந்தாளு செத்துப் போயிருப்பான்னு எப்படி நிச்சயமா சொல்லுறே”
“முந்தா நேத்து ராவுக்கே கவுறு வாங்கிட்டு வந்து ஸ்டூல்ல ஏறி காத்தாடில மாட்டி கழுத்துல சுருக்கு போட்டுக்கிட்டு தொங்க பாத்தாரு. நாந்தான் காலச் சுத்திச்சுத்தி சத்தம் போட்டுக்கிட்டே கெடந்தேன். என்னயே பாத்தவன் என்ன நெனச்சானோ தெரியல எறங்கி வந்து நெஞ்சோடத் தூக்கி வச்சுக்கிட்டு அழுவுனான்.. பாவமா இருந்திச்சு”
“சரி வுடு.. மனுஷப்பய வாழ்க்கையே நாற வாழ்க்கத்தான். அவன மறந்துட்டு உன்னோட லைஃப பாரு.. சரியா? நம்ப உசுர நாமதான் பாத்துக்கனும்”
“ஆமா, இவரு பெரிய கவர்னரு வாழ்க்க வாழறாரு. மனுஷப்பய லைஃப பத்தி சொல்ல வந்துட்டாரு”
“ஏய் சல்சா, எப்ப வந்த நீயி?”
“ஆங் அந்த தம்பியாண்ட கத வுட்டுக்கினு கெடந்தியே அப்பயே வந்துட்டேன்”
“ஐயம் சாரி.. நான் பாக்கல.. சரி, காலு எப்படி இருக்கு இப்ப.. நடக்க முடியுதா? இல்ல இன்னமும் நொண்டித்தான் வந்தியா?”
“ஆமா, இவரு அபல்லோ ஆஸ்பத்திரிக்கி இஷ்த்துனினு போயி ஆபரேசன் செஞ்சிட்டாரு. அப்படியே ஒடஞ்ச எலும்புலாம் ஒட்டிக்கிச்சி பாரு. நீ வேற வெறுப்பேத்தாத.. வலி தாங்க முடியல. ஆனா, அப்படியே படுத்துக் கெடந்தா செத்த பொணன்னு காப்பரேஷன்ல தூக்கிக்கினு போயிடுவானுங்க. அதான் நொண்டி நொண்டி வந்தேன் பொழப்ப பாக்கனுமில்ல”
“அண்ணே, இந்த அக்கா யாருண்ணே. பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்க. என்ன ஆச்சுண்ணே?”
”டேய் தம்பி.. கடவுள் ஒன் முன்னாடி வந்து சொர்கத்துக்கு போறியா, நரகத்துக்கு போறியான்னு கேட்டா நீ என்ன சொல்லுவே?”
“இதென்ன கேள்விண்ணே நிச்சயமா சொர்க்கத்துக்குதான் போவனுன்னு சொல்லுவேன்”
“ஆனா, இங்க சொர்க்கம்னு பேரு எழுதி வச்ச நரகந்தான் இந்த வாழ்க்க, நம்ம பொறப்பு எல்லாமே.. மனுஷனுங்க அவங்க காரியம் நல்லபடி நடக்கலன்னா நாய்ப்பொழப்புன்னு சொல்லுவாங்க. ஆனா, நாய்க்கு என்ன பொழப்புன்னு அவனுங்களுக்கு என்ன தெரியும்?”
“அண்ணே, இந்த அக்கா யாருன்னு..?”
“டேய், இருடா சொல்லுறேன்.. ஒருகாலத்துல இந்த மெரினா பீச்சு எப்படி இருந்திச்சாம் தெரியுமா? சனிக்கெழம ஞாயித்துக் கெழமைன்னா குடும்பம் குடும்பமா கூட்டமா வந்து போர்வைய விரிச்சு ஒக்காந்து கடலை பொறுமையா ரசிச்சு, காத்த அனுபவிச்சு இங்கன இருக்குற கடைங்கள்ள பஜ்ஜி கடலைன்னு வாங்கி தின்னுட்டு அவங்க கொண்டு வந்த சாப்பாட்ட சாப்பிட்டுட்டு நமக்கும் கொடுப்பாங்க.. இந்த சின்னச் சின்ன கடைங்க போட்டுருக்குறவங்க எல்லாருமே நல்லா இருந்தாங்க.. இப்ப பாரு ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் போக்கிடம் இல்லாதவங்களுக்கு மட்டுந்தான் பீச்சுன்னு ஆகிடுச்சு.. ஊரு முழுக்க கட்டிடம் கட்டிடமா கட்டி ஏசியப் போட்டு சில்லுன்னு வச்சிருக்கானுங்க. நேச்சுரல் காத்துக்கு மவுசு இல்லாம போகிடுச்சு. அவனவன் காலங்காத்தால டாக்டர் சொன்னான்னு மட்டுந்தான் நடக்க வாரானுங்க”
“அண்ணே, அந்த அக்கா யாருன்னு..?”
“டேய், அதத்தாண்டா சொல்ல வாரேன்.. கொஞ்சம் சுத்திமுத்திப் பாரு.. ஒன்னியத் தவிர எவனாச்சும் நல்ல நெலமைல இருக்கானான்னு.. என்ன பாக்குதே, நீ புதுசா வந்திருக்கே.. ஒனக்கு ஒன்னியும் தெரியாது .. சொல்லுறேன் கேட்டுக்கோ.. இந்த பெரிய ஊருல எந்த சந்து பொந்துல நம்ம சனங்க அடிபட்டாலும், நோய்ப்பட்டாலும் ஒன்னு செத்துப் போயிடுவானுங்க இல்லன்னா இங்கன தூக்கிட்டு வந்து போட்டுடுவானுங்க.. இப்ப சுத்திப்பாரு பூராப் பயலுகளும் சீக்காளிங்கதான் கொஞ்ச நாள்ள ஒவ்வொருத்தனா செத்துப் போயிடுவானுங்க”
“ஐயோ அண்ணே, என்னண்ணே சொல்லுதிங்க..?”
“ஆமாண்டா, அதுக்காக நீ ரொம்ப யோசிக்காத. ஒருத்தன் செத்தான்னா ரெண்டு பேரு புதுசா வந்துடுவானுங்க. அவனுங்களுக்கு சாவுதாண்டா பெரிய விடுதலை அத்தோட ஒடம்புல உள்ள அத்தன வேதனையும் பறந்து போயிடுமுல்ல.. மனுஷனுங்களுக்கு நம்ம கூடவே வச்சுக்குறது ஒரு பெருமை, சந்தோஷம். ஆனா நமக்கு நோய் வந்துடுச்சுன்னா அவனுங்களுக்கு பயம் வந்துடும் அவங்க கொழந்தைங்களுக்கோ அவங்களுக்கோ அது பரவிடுமோன்னு பயம். ஒடனே தூக்கிட்டுப்போயி எங்கனயாச்சும் விட்டுடனும்னு பாப்பானுங்க.. ஹ்ம்ம்ம்.. உயிர் மேல அவ்வளோ ஆசை. ஆனா, அவங்களுக்கு நோய் வந்துச்சுன்னு வச்சுக்கோயேன்.. சாகத்தட்டியும் நாம காலாண்டயே கெடந்து பாசத்தோட பாத்துக்குவோம். கேட்டா நமக்கு அஞ்சறிவுண்ணு சொல்லுவானுங்க”
”நெசந்தாண்ணே, என்ன வளத்த அம்மா சாகும்போது கூட நான் பக்கத்துலயேத்தான் இருந்தேன்..”
“தம்பி, ஒன்னு சொல்லுதேன் பச்சுன்னு மனசுல பதிஞ்சுக்கோ. இந்தா இந்த பீச்சுக்கு இந்தாண்ட ஒரு ஒலகம் அது உன்னையும் என்னையும் வேணான்னு தூக்கிப் போட்டுடுச்சு.. இந்தாண்ட கடலு அது போனாப் போவுது எங்கால்மாட்டுல கடந்துக்கோன்னு இருக்க வச்சிருக்கு. மவனே, இதுல எதுனா ஒன்னு மாறிச்சுன்னு வய்யேன் பொறவு சங்குதான் ஊஊஊ”
”ரொம்ப பயமுறுத்தறிங்கண்ணே.. இந்த அக்கா யாருன்னு கேட்டது ஒரு குத்தமா?”
“சரி விடு.. இந்த அக்கா இருக்குதே இது பக்கத்து தெருவுலதான் ரொம்ப நாளா இருந்திச்சு. ஆரம்பத்துல சங்கிலியெல்லாம் மாட்டிக்கினு அவங்க மேடம் கூட வாக்கிங் வரும்போது நான் அப்டியே லைட்டா லுக்கு உடுவேன் பாரு.. திரும்பிக் கூட பாக்க மாட்டா அவளோ திமிரு.. ஒருநாளு எவனோ இவங்க வீட்டு பைக்க திருடப் பாத்திருக்கான். இந்த மேடம் அப்டியே பெரிய ஜேம்ஸ்பாண்டு போல தாவிக் குதிச்சு நாலு தெருவுக்கு தொரத்திக்கிட்டே போயிருக்கு. திருடுனவன் கடுப்பாகி வண்டியத் திருப்பி மேடம் மேல ஏத்திட்டுப் போயிட்டான்.. அதுல ரைட்டு காலு ஒடஞ்சிப் போச்சு. ஆனா, சும்மா சொல்லக்கூடாது. அவங்க வீட்டு ஆளுங்களும் டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போயி காமிச்சு ட்ரீர்மண்ட்லாம் பண்ணுனாங்க. ஆனா, மேடம்க்கு வயசாகிடுச்சுல்ல செட் ஆகல.. அப்புறம் ஒருநாள் அழுதுக்கிட்டே வந்து விட்டுட்டு போயிட்டாய்ங்க”
“அண்ணே.. நீங்க ரொம்ப நல்ல மனசுக்காரருண்ணே”
“அதெல்லாம் ஒன்னியும் இல்லடா..”
அன்றிலிருந்து உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையின் புதிய உறுப்பினராகிப் போன டாமிக்கு சார்ளி எழுதப்படாத உறவாகிப் போனான். சார்ளி எங்கே போனாலும் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு சுற்றும் டாமியை மற்ற பழைய உறுப்பினர்கள் பொறாமையோடும் கடுப்பாகவும் கவனித்தார்கள்.
சார்ளி மெரினா கடற்கரையின் ராஜா என்றால் சற்று மேட்டிமைத்தனமாக இருக்கும். ஆனால், அதற்கு தகுந்த காரணம் இல்லாமலில்லை. சார்ளி முதலில் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தான். காவலர்களால் கண்டு பிடிக்க முடியாத பல வழக்குகளில் சார்ளி மட்டுமே குற்றவாளியை நெருங்கிப் போய் இருந்திருக்கிறான். சார்ளியின் அபரிதமான அறிவு அவர்களை பலமுறை வியக்க வைத்திருக்கிறது. குறிப்பாக பள்ளிச் சிறுமிகள் நால்வரை கடத்திச் சென்று வட நாட்டிற்கு அனுப்ப இருந்த கும்பலை சார்ளியின் உதவியுடன் பிடித்ததை எல்லா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி இருந்தார்கள். வயதாகிவிட்ட போதிலும் சார்ளி காவல் துறைக்கு பணியாற்றத் தயங்கவில்லை. ஒருமுறை வெடிகுண்டு மருந்து நிரம்பிய பையை பற்களால் கடித்து இழுக்கும்போது மருந்தின் துகள்கள் கசியத் தொடங்கிவிட்டது. நல்லவேளையாக பெரிதாக எந்த ஆபத்தும் நடக்கவில்லை. ஆனால், அதன்பிறகு சார்ளிக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டார்கள். சார்ளியின் கண்களில் விழுந்த மருந்து துகள்களால் ஒரு கண்ணின் பார்வை பறிபோனதை தாமதமாக அறிந்து கொண்டார்கள். வேறு வழியின்றி சார்ளியும் மெரினா கடற்கரையில் தனித்து விடப்பட்டான்.
நாகரிக வளர்ச்சியில் இயற்கை சவலைப்பிள்ளையாக மாறிவிடுகிறது. வயதான மரங்களை வெட்டி பயனை அனுபவித்துக் கொள்கிறவன் தொட்டிச்செடிகளை மாடியில் வைத்து தண்ணீர் ஊற்றி புண்ணியம் தேடிக்கொள்வதை எப்படி சமமாக எண்ண முடியும்? மக்கள்தொகை பெருக்கமென்பதை மிகப்பெரிய ஆற்றலாக யாரும் பார்க்க மாட்டார்கள்
மிகப்பெரிய உழைப்பு
மிகப்பெரிய கனவு
மிகப்பெரிய முயற்சி
மிகப்பெரிய நம்பிக்கை
கோடிக்கணக்கான கைகளின் ஆற்றலை தொடுதிரையை தேய்ப்பதின் மூலம் வீணாக்கும் மூளைகள் இயற்கையை மிகச்சரியாக பயன்படுத்த தவறுவதில் ஆச்சரியமும் இல்லை.
சார்ளிக்கு சிட்டுவின் குரலை மிகவும் பிடிக்கும். சிட்டு வடநாட்டிலிருந்து வந்த எட்டு வயது சிறுமி. அவளுடன் இருக்கும் தடியன் நிச்சயமாக அவளின் அப்பாவோ அண்ணனோ இல்லை. சிட்டு யாருடன் பேசினாலும் உடனே வந்து இழுத்துக்கொண்டு போய்விடுவான். சிட்டுக்கு சார்ளியை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. சார்ளியைப் போன்ற யாரோ அவள் வாழ்வில் இதற்கு முன்பாக இருந்திருக்கக் கூடும். கையிலிருக்கும் கண்ணாடிக் குடுவை விளக்குகளை ஒவ்வொருவரிடமும் ஓடிச்சென்று விற்பனை செய்வாள். தன்னிடமிருக்கும் பிஸ்கட்டை இரண்டாக ஒடித்து தருவாள். சார்ளி மறுத்தாலும் சூடான தேநீரை கோப்பையில் ஊற்றி ஆறவைத்து தருவாள்.
சிட்டுவின் குரலில் அற்புதம் நிகழ்வதை சார்ளி மெய்மறந்து ரசிப்பான்.
கேட்பதற்கென அக்குரல் வழிந்து ஒழுகி கூனிக்குருகி நிற்கும்; கொடுப்பதெற்கென அக்குரல் கொஞ்சிக் குலாவி கனிந்து உருகி நிற்கும். சிட்டின் உலகத்தில் சார்ளி மட்டுமே இருந்தான். பகல் பொழுதுகளில் கூட்டம் இல்லாத சமயங்களில் சிட்டு கடலோரத்தில் கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சேமிப்பாள். கிளிஞ்சல்களைப் போட்டு வைக்க ப்ளாஸ்டிக் குடம் ஒன்றை தடியனுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறாள். அதற்கும் சார்ளிதான் காவலாக இருக்கிறான் அன்று குடம் நிறைந்து விட்டிருந்தது. அதை அவள் என்ன செய்யப் போகிறாளென சார்ளி ஆர்வமாக காத்திருந்தான். சிட்டு அந்தக் குடத்தை வெகு சிரத்தையாக தூக்கிக் கொண்டு வந்தாள். சார்ளி அவள் பின்னாடியே ஓடினான். அவளுடைய சிரிப்பு அன்று மிகவும் சப்தமாகவும் அழகானதாகவும் இருந்தது சிட்டு ‘ஹ்ஹாஹ்ஹாஹாஹாஹா’ என்று சிரித்துக் கொண்டே கடலுக்குள் தன்னால் இயன்ற மட்டும் உள்ளே சென்று கழுத்தளவு நீரில் நின்றபடி குடத்தை கவிழ்த்து கிளிஞ்சல்களை கடலில் தூக்கி வீசினாள். இரண்டு கைகளாலும் இயன்ற மட்டும் அளாவி அவைகளை கடலுக்குள் போகச் சொன்னாள். பிறகு நிதானமாக குடத்தைக் கழுவி தண்ணீரை வடியவிட்டு அதே இடத்தில் மறைத்து வைத்தாள் சார்ளியைப் பார்த்து கண்களைச் சிமிட்டி “ஷ்ஷ்ஷ்” என்றாள்.
டாமிக்கு மெரினா கடற்கரை பழகிப் போய்விட்டது. அழுக்காகிப் போன தன்னுடலைக் குறித்து அவனுக்கு கவலையில்லை பழைய உணவை சண்டை போட்டு அடைவதிலும் பிரச்சனையில்லை ஆனால், சார்ளியின் அன்பை மட்டும் யாருடனும் பங்கிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சார்ளியைப் போலவே நடக்க, பேச, சண்டையிட பழகிக் கொண்டான். சார்ளியின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டாமி ஓடினான்.
“இன்னாடா அவனுக்கு ஒன்னுன்னா இவன் ஓடுறான். பெரிய பாசப்பறவைகள்னு நெனப்பு! ஏய் சல்சா, கவனிச்சியா இப்பல்லாம் அவன் ஒன்னயே சார்ளிகிட்ட பேச விட மாட்டேங்குறான்”
“ஆமா ஜித்து.. நேத்திக்கி சார்ளிக்கு புடிக்குமேன்னு சிக்கன் சிக்ஸ்டிஃபை எடுத்துட்டுப் போனா இந்த டாமிப்பய லவக்குன்னு புடுங்கித் தின்னுட்டான். கேட்டா, கெட்டுப்போச்சி அவனுக்கு ஆவாதுன்னு ஒளறிக் கொட்டறான். ஏன், கெட்டுப்போன சிக்கன இதுக்கு மின்னாடி நாம தின்னதே இல்லயா என்ன?”
“என்ன அந்தப் பையன் வந்து நாலு மாசங்கிட்ட இருக்குமா? என்னவோ இவனும் ரொம்ப வருஷம் பழகுனதுப்போல ஈசிக்கிட்டு திரியறான் பௌர்ணமி அன்னிக்கு நாம எல்லாரும் சேந்துத்தானே ஊரு சுத்தப் போவோம்.. அதுதானே வழக்கம்? கடைசி பௌர்ணமிக்கு வந்தானா யோசிச்சுப் பாரு. நானும் தேடிப் பாத்தேன் எல்லாப் பயலுகளும் வந்திருந்தானுங்க. இவனையும் டாமியையும் மட்டும் காணல அப்படின்னா என்ன அர்த்தம்.. பயபுள்ளைங்க தனியா ஊரு மேயப் போயிருக்கானுங்கன்னு தானே”
“சரி வுடு ரோஸி.. ஒனக்கு ரொம்ப நாளாவே சார்ளி மேல கண்ணு அதான் ரொம்ப சலிச்சுக்கறே”
“ஏன், இருக்கக் கூடாதா? நான் அவன லவ் பண்றேன்னு அவனுக்கும் தெரியும். நெறய தடவ அவங்கிட்டயே லவ் பண்றேன்னு சொல்லியும் இருக்கேன். அவனுக்கு என்னய புடிக்கும். ஆனா, எதுக்கோ தயங்கிக் கிட்டு ஓகே சொல்ல மாட்டேங்குறான். பரவாயில்ல, என் சார்ளிக்காக நான் இன்னும் எவ்ளோ நாளுன்னாலும் வெய்ட் பண்ணுவேன்”
“அது சரி.. நீ அவனையே நெனச்சு ஏங்கிக்கிட்டு கெட. அவன் என்னாடான்னா அந்தப் பயக் கூடவே சுத்தறான். எப்படியோ போங்க”
அதிகாலையில் கூட்டமாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்த புறாக்களை டாமி துரத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு பிடித்த விளையாட்டு புறாக்களை துரத்துவது. அவை மொத்தமாக ‘ஜொய்ய்ய்’யென பறக்கும் போது பெரிய போர் வீரனைப் போல் மகிழ்ச்சிக் கொள்வான். அவனுடைய அந்த பராக்கிரமத்தை சார்ளி பார்த்து மெச்ச வேண்டும் என்பதே அவனது திட்டம். கடலில் எப்போதாவது ஒதுங்கும் மீனைப் பிடிப்பதும், சிட்டுவின் குடத்தைப் பாதுகாப்பதும், சல்சாவுக்கு உதவ ஓடுவதுமாக டாமியின் செயல் முழுக்க சார்ளியின் அன்பைப் பெறுவதாகவே இருந்தது.
ரோஸி, சார்ளியை சந்திக்க வரும்போது மட்டும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் படுத்துக் கொள்வான். அவர்களின் சந்திப்பை தடுக்கும் எல்லா காரியங்களையும் செய்தான். சார்ளி, ரோஸியிடம் சிரிப்பதைம் நெருங்குவதையும் நாளடைவில் வெறுக்கத் தொடங்கினான்.
“ஒனக்கேத்த பொண்ணு இல்ல அவ”
“டேய், என்னாடா என்னென்னவோ பேசறே”
“நீ அவ கூடப் பழகுறது எனக்கு புடிக்கல”
“டேய் லூசு, அவ எனக்கு சின்ன வயசுலேந்து பழக்கம்டா. நா போலீசா இருந்தப்பவே எனக்கு லவ்வ சொன்னவ. அவள ஏண்டா ஒதுக்கனும்?”
“அதெல்லாம் இல்ல.. நமக்கு கல்யாணம் குடும்பம் குட்டி அதெல்லாம் ஒன்னியும் வேனாம்.. ஒனக்கு நான் எனக்கு நீ இப்படியே இருந்துடலாம்”
“டேய் கிறுக்குப் பயலே, மனுஷப் பயலுகளோட பழகிப் பழகி அவனுங்களப் போலவே புரியாத மாதிரி பேசித் தொலையாதடா. எதுன்னாலும் நேரடியா சொல்லித் தொலை”
“ஐ லவ் யூ சார்ளி”
“டேய்.. கடிச்சே கொன்னுடுவேன் என்ன ஒளறுறே?”
“ஏன் இப்பல்லாம் ஒன்னய அண்ணன்னு கூப்பிடலையே நீ கவனிக்கலையா.. ஏன் ரெண்டு ஆண் நாய்ங்க காதலிச்சா ஒலகம் என்ன அழிஞ்சா போயிடும் சொல்லு.. மனுஷனுங்க என்ன செஞ்சாலும் நாயி நாயின்னு சொல்லுறானுங்க.. நாம மட்டும் அவனுங்களுக்கு கொறஞ்சவனுங்களா என்ன?? நீ எனக்குதான் சார்ளி.. ரோஸிய விட ,சல்சாவ விட, சிட்ட விட ஏன், உன்னவிட நான்தான் உன்ன அதிகமா காதலிக்கிறேன் லவ் யூ”
சார்ளி எதுவும் பேசாமல் திரும்பி கடல் பார்த்து படுத்துக் கொண்டான். இன்று கடல் வித்தியாசமாக வெகு அமைதியாக அலைகள் இல்லாமல் இருந்தது. அவை பெருங்கொண்ட ஒன்றை அழைத்து வர கடலுக்குள் உள்வாங்கின. வானம் இருண்டு போய் கருமேகங்கள் சூழ்ந்தன, பறவைகள் கூட்டம் கூட்டமாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டன.
அன்று 26/12/2004
அதிகாலையில் கடலின் மட்டத்திலிருந்து வான் நோக்கி எழும் பேரலை ஒன்றின் மைக்ரோ புள்ளியில் கடற்கரையில் உள்ள அனைத்து பெயர்களுடன் சார்ளியின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.