
அண்ணாமலையும் பஜ்ஜிக்கடையும்!
அந்தச் சிறப்பு மலர் வெளியான அடுத்த தினம்….
காலை பதினொரு மணிக்கே அலுவலகத்திலிருந்து எல்லாப் பிரிவுக்கும் தகவல் வந்திருந்தது- ஷிப்ட் முடிந்ததும் அலுவலகம் வந்து ஓ.எஸ்-ஐப் பார்த்துச் செல்லும்படி. ஓ.எஸ். என்றால் ஆபீஸ் சூப்பரின்டென்ட். முதலாளிக்கு அடுத்தபடியாக சர்வாதிகாரம் படைத்தவர். (இவருடைய கேரக்டர் மிகவே வித்தியாசமானது. அதைப் பற்றி தனியாக ஒரு அத்தியாயம் எழுதவேண்டும் பின்னர்.) நாங்கள் அவருக்கு வைத்திருந்த பட்டப்பெயர், ‘சித்ரகுப்தன்’. இது ஒருசமயம் எம்.டி.யின் செவிகளை எட்டிவிட, “ஏன்டா, அப்ப நான் என்ன எமதர்மனா..?” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.
என்னவாயிருக்கும் என்று குழப்பத்தோடு அலுவலகத்திற்குப் போனால், காத்திருந்தது இனிய அதிர்ச்சி. அதிகப் பக்கங்களோடு நாங்கள் நாளிதழ் வெளியிட்டதாலும், அதற்கு நல்ல பெயர் கிட்டியதாலும் மகிழ்ச்சியடைந்த நிர்வாகம், அத்தனை ஸ்டாஃப்களுக்கு பேண்ட், சர்ட் பரிசளித்தனர். (லேடி ஸ்டாஃபுகளுக்குமான்னு கேக்காதீங்க, அவங்களுக்கு புடைவைதான்.) கூடவே, மலருக்கான ஓவர்டைம் பார்த்தவர்களுக்கு கணக்குப் பண்ணி, அதற்கான துட்டை தனிக்கவரிலிட்டு, அதுவும் கேஷியர் கேபினில் காத்திருந்தது. அதைத் தவிரவும், பேண்ட் ஷர்ட் பிட் தைத்துக் கொள்வதற்கான தையற்குலியாக ஆளுக்கு இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா வேறு. அத்தனையையும் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
கையில் ட்ரஸ்ஸுடனும், பையில் பணத்துடனும், வாயில் சிரிப்புடனும் செக்ஷனில் மீண்டும் ஒன்று கூடினோம். மதுரைக்காரங்க சும்மாவே ஆடறவங்க. கைல இத்தனை பணமும், சந்தோஷமும் கிடைச்சதுன்னா சொல்லவா வேண்டும்..? இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும், என்ன செய்யலாம் என்று பேசத் துவங்கினோம். ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்ல, எதை முடிவு செய்வது என்பது குழப்பமாகி விட்டது. இறுதியில் ஓட்டல், ஊர் சுற்றுதல் என்று வந்த பல ஆப்ஷன்களைப் புறக்கணிக்கப்பட்டு, எல்லாருமாக சேர்ந்து சினிமா பார்ப்பது என்ற முடிவுக்கு மெஜாரிட்டி கையை உயர்த்தியிருந்தார்கள். ஓரிருவர் வர இயலாது என்று சொல்லிவிட, சிலருக்கு ஷிப்ட் இருக்க, எஞ்சியவர்கள் எட்டுப் பேர். படம் பார்ப்பது என்று முடிவாகி விட்டது. சரி, என்ன படத்துக்குப் போவது..?
“சேவகன் போலாமாடா..?” -இது ஓர் ஆக்ஷன் ப்ரியன்.
“அம்மா வந்தாச்சு போலாம்டா…” -இது பாக்யராஜ் ப்ரியனான அடியேன்.
“அதெல்லாம் வேண்டாம், அண்ணாமலை போலான்டா” -இது சூ.ஸ்டாரின் கடினச்சாவு விசிறி ஒருவன்.
“ப்ரதர் மவுண்ட்டன் வேண்டாண்டா. வந்து மூணு நாள்தான் ஆவுது. ஒரே விசிலும் கத்தலுமா இருக்கும்.” -இது நான்.
“இவன் வேற, எல்லாத்தையும் இங்கிலீஷ்ல சொல்லி உசிரை வாங்கறான்” – அலுத்துக் கொண்டான் ஸ்ரீதர். (படத்தில் ஜனகராஜே அப்படித்தான் கூப்பிட்டார். நான் அவனைப் பார்த்துக் காலரை தூக்கிவிட்டுக் கொண்டேன்.)
ரஜினி ரசிகக் கண்மணிக்கு ஆவேசமே வந்துவிட்டது. “பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவே பாத்தவன் நான். அதெல்லாம் இருந்தாத்தான்டா படம் பாக்கறதே ஜாலி. ‘இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ’ன்னு தலைவர் தொடைதட்டி சவால் விடுவார் பாரு…. கைல இருக்கற முடியெல்லாம் விறைச்சுப் போச்சு. செமையான படம்” என்று கைகளை நீட்டிக் காட்டிப் பாய்ந்தான். அவரைப் போலவே தொடையைத் தட்டி நடித்து வேறு காட்டினான். (அது எத்தனை மொக்கையான நடிப்பென்பது படம் பார்த்ததும் புரிந்தது வேறு விஷயம்.)
ஆகக்கூடி, மறுபடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெருவாரியான வாக்குகளில் ரஜினிகாந்த்தே வெற்றி பெற்றார். (அதில் நாலு பயலுக குஷ்பூ விசிறிகள்ங்கறதால ரஜினியோட ஸ்ட்ரென்த்தாலதான் ஜெயிச்சாரான்னு உறுதியாச் சொல்ல முடியவில்லை.) மறுநாள் காலை அண்ணா நகரில் அம்பிகா தியேட்டரில் ‘அண்ணாமலை’யைச் சந்திப்பதென்று முடிவானது.
அடுத்த நாள் காலைல தியேட்டர் வாசல்ல ஒன்று கூடினால்…. ஏதோ அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க வந்தாற்போல் அத்தனை பெருங்கூட்டம்! (கையில் மொபைலை வைத்துக் கொண்டு சுழற்றி அட்வான்ஸ் புக்கிங் செய்ய முடியாத, 20 ரூபாயில் ஏஸியில் படம் பார்த்த பொற்காலம் அது என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.) ஆக, டிக்கெட் வாங்கறது எப்டியென்று பிரமைதட்டிப் போனது எங்களுக்கு. ஜெய் அந்த ஏரியாப் பையன்ங்கறதால, லேடீஸ் கவுண்ட்டர் பக்கம் போய், ஓரிரு தெரிந்த ஆண்ட்டிகளைக் கரெக்ட் பண்ணி, எட்டு டிக்கெட்டோட வந்து சேர்ந்தான். ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விட்டு தியேட்டருக்குள் ஐக்கியமானோம்.
அப்படி ஒரு ஆரவாரத்துடன், கொண்டாட்டமாக என் வாழ்வில் அதுவரை எந்தப் படமும் பார்த்ததில்லை. எப்படியும் ரசிகக் கண்மணிகளின் கத்தலை, கிழித்த துண்டுப் பேப்பர்கள் எறிதலைத் தடுக்க இயலாது என்பதால் (வேறு வழியின்றி) நானும் ஜோதியில் ஐக்கியமாகி ஆர்ப்பாட்ட ஒலிகளுடன் ரசிக்கலானேன். க்ளைமாக்ஸில் ரஜினியின் பெருந்தன்மைக்கு உருகி, கைதட்டி வெளியே வந்ததும் காத்திருந்தது மற்றொரு க்ளைமாக்ஸ்.
அனைவரும் அவரவர் ஏரியாவிற்குப் பிரிவதற்கு முன், அந்த ஏரியாவின் பிரபல டீக்கடையில் தேநீரும், ஸ்நாக்ஸும் அருந்தாமல் போனால் தெய்வக்குற்றமாகிவிடும் என்றான் ஜெய். யாருக்குமே அதில் ஆட்சேபமில்லாததால் அவன் பின்னே போனோம். சுடச்சுட பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆளுக்கு இரண்டு மூன்றை வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். “ஒரே எண்ணையா இருக்கு. அண்ணே, ஒரு பேப்பர் தாங்க, ப்ளீஸ்” என்றான் ராமன்.
“அந்தா அந்தக் கம்பில குத்தி வெச்சிருக்கு பாருங்க நெறைய பேப்பர். எடுத்துக்குங்க” என்று கைகாட்டினார் டீக்கடை அண்ணாச்சி. ஒரு செய்தித்தாள் பக்கத்தை நான்காகக் கிழித்து, பன்ச்சாக ஒரு வளைகம்பியில் சொருகி வைத்திருந்தார்கள். மதுரைக்காரய்ங்க எப்பவும் மூளைக்காரய்ங்கதான். ஆளுக்கொரு பேப்பர் துண்டைக் கையில் எடுத்துவந்து, பஜ்ஜியைக் கசக்கலாம் என்று பார்த்தால்….
அந்தப் பேப்பர் துண்டுகள் முந்தைய தினம் வெளியான, நாங்கள் டிசைன் செய்திருந்த விளம்பரங்களின் அச்சுத் துண்டுகள். ‘அடப்பாவிகளா, ஒரே நாள்தான் இதுக்கு வாழ்வா..? இப்டிப் பண்ணிட்டீங்களேடா’ என்று மைண்ட் வாய்ஸ் ஒலிக்க நிமிர்ந்து பார்த்தால், அத்தனை பயல்களும் பேஸ்தடித்துப் போய் ‘ழே’யென்று விழித்துக் கொண்டிருந்தார்கள். ஜெய்க்கு லேசாகக் கண்ணீரே வந்துவிட்டது.
“சரி, விடுங்கப்பா…. நாம செஞ்சதுன்றதுக்காக எல்லாரும் ஃப்ரேம் போட்டா வீட்ல வெச்சுப்பாங்க..? அது அவ்ளவுதான். நீங்க புதுசுன்றதால ஃபீல் பண்றீங்க. நாங்க நிறையப் பாத்தாச்சு. டேக்கிட் ஈஸி” என்றார் எங்களுடன் வந்திருந்த சீனியர் ஒருவர். நிலையாமைத் தத்துவத்தை மிக எளிமையாகப் புரிந்து கொண்டோம் நாங்கள் அன்று அங்கே.
இப்படியாகக் கடந்த நாட்களில் புதிதாகச் சேர்ந்த குழுவில் என்னுயிர்த் தோழன் ராமனுக்கு அரசு வேலை கிடைத்து ரிசைன் செய்துவிட்டுப் போய்விட, மற்றும் மூவர் வேறுவேறு காரணங்களால் வெளியேறிவிட, நான் அங்கேயே செட்டிலானேன். இப்போது செக்ஷனில் கூடுதல் ஷிப்ட் தேவையின்றி எல்லா சீட்டுக்கும் ஆட்கள் கரெக்டாயிருந்தார்கள். எட்டுப் பேரை எடுத்தால் எப்படியும் நான்கு பேர் கழன்று கொள்வார்கள் என்று தீர்க்கதரிசனமாய்ச் சிந்தித்திருந்த எங்கள் எம்.டி.யை மனதிற்குள் பாராட்டிக் கொண்டேன்.
அடுத்த இரண்டு மாதத்தில் தீபாவளி கைகட்டிக் காத்திருந்தது. ‘தினமலர்’ அதற்கு முன் இரண்டாண்டுகள் தீபாவளி மலரை வெளியிட்டிருந்தது. நாளிதழ் ஒன்று தீபாவளிமலர் வெளியிட்டது அதுதான் ஆரம்பம் என்று நினைக்கிறேன். புத்தகத்திற்கு நல்ல பெயர், சிறப்பான விற்பனையை எட்டியிருந்தது. இதழுக்கான மேட்டர்கள் சென்னை அலுவலகத்தில் தயாராகி, டிசைன் செய்து வர, அவற்றைச் சிவகாசியில் அச்சிட்டு, மதுரை அலுவலகம் மூலம் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம் என்பது அந்த ஆண்டு தீபாவளி மலர் வேலைகளுக்கு அலுவலகம் தயாரான போதுதான் புரிந்தது எனக்கு. அதுவரை வாசகனாக வெளியிலிருந்து பார்த்த அனுபவம்தானே!
கடந்த ஆண்டில் சிறுசிறு இலவசப் பொருட்கள் கொடுத்திருந்ததில் விற்பனை கூடியிருந்தது. இந்த ஆண்டில் அதைவிடச் சிறப்பாக எதையேனும் செய்து விற்பனையை எகிற வைக்க வேண்டும் என்று மேலிடத்தில் யோசித்திருந்தார்கள்.
விளைவாக… அந்த அறிவிப்பு வெளியானது. ‘தினமலர் தீபாவளி மலர் வாங்குகிறவர்களில் ஐந்து பேரைக் (மூன்று பேரா? சரியாக நினைவில்லை) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவர்கள் சிங்கப்பூர் சென்று தங்கி, உண்டு, சுற்றிவர ஆகும் அத்தனை செலவையும் நிர்வாகம் செய்யும். அதற்கு வாசகர்கள் செய்ய வேண்டியது- ரூ./// மணியார்டர் அனுப்பி (முழு முகவரியைத் தெளிவாக எழுதி) முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வளவே’ இதுதான் வெளியான அறிவிப்பு.
அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து தொடர்ந்த வாசக ஆதரவு திக்குமுக்காடச் செய்தது. பெருவெள்ள நீர் அனைத்தையும் அடித்துக் கொண்டு பாய்வது போன்ற வேகத்தில் மணியார்டர்கள் குவியத் தொடங்கின. அதில்தான் முதல் பிரச்சனை ஆரம்பித்தது- நிர்வாகத்திற்கு. அதற்கு அவர்கள் கண்டுபிடித்த தீர்வினால் அடுத்த பிரச்சனை ஆரம்பித்தது- வேலை பார்த்த எங்களுக்கு.
அந்தப் பிரச்சனைகள் என்னவாக இருக்கும் என்பது உங்கள் யூகத்தில் எல்லைகளுக்குள் அடங்காதது என்பதால், அடுத்த அத்தியாயத்திற்காகக் காத்திருங்கள், ப்ளீஸ். தெரிந்து கொள்ளலாம்.
(சரக்கு இன்னும் உண்டு…)