
வேலூரில் என்ன ஸ்பெஷல்?
“விளையாடாதீங்க இன்ஜி ஸார்.” என்றேன்.
“இல்லய்யா. ஐயாம் டெட் ஸீரியஸ். டேய் நரேஷ், சொல்லேண்டா..” என்று அவனை முறைத்தார்.
“ஆமாண்ணா. இங்கயே ஆள் கம்மியா இருக்கு. யாரையும் அனுப்ப முடியாது. நம்மட்டருந்து போனவங்கள்ல யாராச்சும் சரிவருவாங்களான்னு இன்னிக்குக் காலைலதான் எம்டி கேட்டுட்ருந்தார். நாங்க ரெண்டு பேருமே உங்க பேரத்தான் சொன்னோம். உடனே ஓகேன்னுட்டார். நல்ல மூட்ல இருக்கார் இன்னிக்கு. வாங்க, இப்பவே போய் அவரைப் பாக்கலாம்…”
“டேய் நரேஷ்… ஒரு கம்பெனிலருந்து விலகிட்டு, மறுபடி அதுலயே ஜாயின் பண்ணினா மருந்தளவுக்கும் மரியாதை இருக்காதுடா. ஆள வுடு..”
“நம்ம எம்டிய நீங்க இன்னும் முழுசாத் தெரிஞ்சுக்கலை” சிரித்தார் இன்ஜி. “அதெல்லாம் ஒண்ணும் குறைச்சலிருக்காது கணேஷ். தவிர, நீங்க வேலை பாக்கப்போற வேலூர் ப்ராஞ்ச் திருச்சி ஆபீஸ் எம்டியோட கண்ட்ரோல்ல வருது. மதுரை ஸ்டாஃப்ன்னா நல்லா கவனிப்பாங்க. வாங்க..”
இப்படியும் அப்படியுமாகப் பேசி, என்னைக் கைப்பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துப் போய்விட்டார்கள். எங்கள் தலைவர் இருக்கிறாரே… மனிதர் மறந்தும் பழையது எதையும் கிளறவில்லை. “நாலைஞ்சு நாள் இங்க நம்ம ஆபீஸ்ல வந்து பழசை ஞாபகப்படுத்திக்கோங்க கணேஷ். வர்ற மண்டே அங்க ஜாயின் பண்ற மாதிரி ஏற்பாடு பண்றேன். ஸாலரி உங்களுக்குச் சென்னைல வாங்கினதைவிட முன்னூறு ரூபா கூடத் தரச் சொல்றேன்.” என்றவர், “போய் வா..” என்பதாகத் தலையசைத்தார்.
மறு வார்த்தை பேச வழியின்றித் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன். “என்னை இன்னிக்கு நைட்டே அங்க போகச் சொல்லிருக்கார்ணா. ஜனவரி ஒண்ணு எடிஷன் ஸ்டார்ட்டாகுது. அன்னிக்கு எம்டியும் அங்க வருவாரு. அதுக்கப்பறம் என்னையும் கூட்டிட்டு மதுரைக்கு வந்துடுவாரு. நீங்க அங்கியே தங்கிடுவீங்க..” என்று ‘விம்’ போட்டு விளக்கினான் நரேஷ்.
“ரைட்டுடா. எனக்கு என்ன மறந்து போச்சுன்னு இங்க நாலு நாள் ப்ராக்டிஸ் பண்ணச் சொல்றாரு இவரு..?”
“நீங்க மூணு மாசத்துல கீபோர்ட் செட்டப்பை மறந்துருப்பீங்கன்னு நினைச்சுட்டார். அதுவும் நல்லதுதானே… ஜாலியா இங்க நாலு நாள் இருந்துட்டு அப்பறம் வாங்களேன். நான்தான் இருக்கேன்ல..” நரேஷ் சிரித்தான்.
“நீ இருக்க மாட்டியேடா. நான்ல்ல அங்க இருப்பேன்.” என்றேன் அழாக் குறையாக. “அதுசரி… வேலூர்ல என்னடா விசேஷமாப் பாக்கறதுக்கு இருக்கு..?”
“ம்… அங்க ரொம்ப ஃபேமஸான ஜெயில் இருக்குண்ணா. நம்ம ஆபீஸ் இருக்கற லொகேஷன்லருநது ஒரு ஸ்டாப் தள்ளிப் போனா பாகாயம்ன்னு ஒரு எடம் வரும். அங்க மெண்ட்டல் ஆஸ்பிட்டல் ஃபேமஸாம்..” என்று ஆரம்பித்த நரேஷின் தலையில் தட்டினார் இன்ஜி.
“வெண்ணை… சொல்ற இடத்தையெல்லாம் பாரு. இவன் சொன்னதை மறந்துடுங்க கணேஷ். வேலூர்ல பெரிய அகழியோட கோட்டை இருக்குது. நீங்க லைஃப்ல பாத்திருக்க மாட்டீங்க அதுமாதிரி. கோட்டைக்குள்ள ஜலகண்டேஸ்வரர்ன்னு பெருசா சிவன் கோயில் இருக்குது. வேலூரைச் சுத்திலும் நிறைய இடங்கள் ஜாலி டூர் அடிக்கறதுக்கு இருக்குது. அங்க உள்ளவங்க சொல்லுவாங்க..” என்று சொல்லிச் சிரித்தார்.
இப்படியாகத்தானே, மதுரை ஆபீஸில் நான்கு நாட்கள் ஜாலியாக, வேலை செய்வதாகப் பெயர் செய்துவிட்டு வேலூருக்கு இடம் பெயர்ந்தேன். ஓட்டேரி என்பது எங்கள் அலுவலகம் அமைந்திருந்த இடத்தின் பெயர். என்னை ஏற்றிச் சென்ற பேருந்து வழக்கம்போல அதிகாலை ஐந்து மணிக்கு அங்கே இறக்கி விட்டது. அத்தனை ஸ்டாஃப்களும் தங்குவதற்கென ஒரு பெரிய வீட்டை அலுவலகமே வாடகைக்குப் பிடித்திருக்கிறது, அங்கே தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்கள். அலுவலக வாயிலில் சென்று செக்யூரிட்டியிடம் நான் வந்திருப்பதைச் சொன்னதும், ஓர் ஆளை அனுப்பி அலுவலகப் பொறுப்பாளரைச் சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தால்… அட, நம்ம சென்னை கேஷியர்!
அந்த அதிகாலையில் மனிதரை எழுப்பி, என் விஜயத்தை அறிவித்தேன். “காலைல பத்து மணிக்கு ஆபீஸ் வாங்க. எம்டி இருப்பாரு. பாத்துட்டு சேந்துக்கலாம்.” என்றவர், என்னை அழைத்து வந்தவனிடம் தங்குமிடத்தில் விடச் சொன்னார். அந்த இல்லமானது பெரிதாகத்தான் இருந்தது. ஆனால், நிறைய ஸ்டாஃப்கள் தங்கிய காரணத்தால் அவரவருக்கு சின்ன ஸ்பேஸ் மட்டுமே கிடைத்தது. சுருக்கமாகச் சொன்னால் ஏதோ அகதி முகாமுக்குள் நுழைந்த ஃபீலிங். எனக்கென்று ஒரு மூலையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தவர்களை அறிமுகம் செய்து கொண்டேன்.
உண்மையில் வேலூரில்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆபத்து வாழ்ந்து வந்தது என்பது தெரிந்திருந்தால் அந்த ஊருக்கே போயிருக்க மாட்டேன். நான்காண்டுகள் கழித்து நான் கல்யாணம் செய்து கொண்டபோது எனக்கு அமைந்த இல்லாளானவள் வேலூரில் வாழ்ந்து வந்த ஒருத்திதான். நோ… நோ… நீங்கள் நினைப்பதுபோல, லவ் மேரேஜெல்லாம் இல்லை. வீட்டினர் ஏற்பாடு செய்ததுதான் அந்த விபத்து. என்னடா, விபத்து என்கிறேனே என்று தோன்றுகிறதா..? கல்யாணமும் அதைத் தொடர்ந்து அவள் விவாகரத்து வாங்கிச் சென்றது வரையிலான பத்தாண்டுகள் என் வேலையிலும் தனிப்பட்ட வாழ்விலும் இருண்ட காலகட்டம். அதை விட்டுத் தொலைப்போம். நான் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த நாட்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலகட்டம் என்றால் அது வேலூரில் வாழ்ந்த காலகட்டம்தான். தங்குவதற்குச் செலவில்லை. அலுவலகத்தில் பிக்கல் பிடுங்கல் இல்லை. அலுவலகத்துக்கு அருகிலேயே இரண்டு பில்டிங்குகள் தாண்டி ஒரு மெஸ். பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது. ஓர் ஏழ்மையான குடும்பத்தினர் மூன்று வேளையும் சமைத்துப் போட்டு, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டார்கள். குறைந்த தொகைதான். ஆனால், உணவு பிரமாதமாக இருந்தது. ஆகக்கூடி கிடைத்த சம்பளம் சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் கூட, உணவு போக, செலவுக்குக் கையில் நிறைய மிச்சம் இருந்தது. பிறகென்ன… வார விடுமுறையில் ஜாலியாக ஊர் சுற்றல்தான்.
பத்திரிகை அலுவலகத்தில் என்போன்ற வடிவமைப்பாளனாக இருப்பதில் சில வசதிகள் உண்டு. ஒன்று இரவுப் பணி என்பதால், இரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து படுத்தால், காரை ஏழரை வரை உறங்கிவிட்டு, குளித்துத் தயாராகி, கோஷ்டியாகச் சென்று சாப்பிட்டுவிட்டு, ஊர் சுற்றுவதோ, இல்லை காலைக் காட்சி படத்துக்குச் செல்வதோ நடக்கும். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மறுபடி குட்டித் தூக்கம் போட்டுவிட்டு ஹாயாக மாலை ஆறு மணிக்கு வேலைக்குப் போனால் போதும். எனவே எங்கள் டீம் ஆட்கள் ஒன்றாகச் செலவழிக்க, ஊர் சுற்ற நிறைய நேரம் கிடைக்கும். இரண்டாவது வசதி, வார விடுமுறை என்பது ஒரே நாளில் அனைவருக்கும் இராது. எனக்குப் புதன்கிழமை வார விடுமுறை என்றால் வேறொருவனுக்கு செவ்வாய், பிறிதொருவனுக்கு வியாழன் என்று தினம் ஒருவனுக்கு வார விடுமுறை அமையும். அந்த நாட்களில் மாலையும் ஊர் சுற்றிவிட்டு செகண்ட் ஷோ சினிமா பார்க்கலாம்.
ஆகக்கூடி, வேலூரையும் அதன் சுற்றுப் புறங்களையும் நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. இன்ஜி சொன்னது போல வேலூர்க் கோட்டையும் கோயிலும் மனதைக் கவர்ந்தது. அக்கம்பக்கத்து ஊர்களுக்கு அவ்வப்போது சுற்றுவதும் உண்டு. ஆம்பூர் பிரியாணி, பள்ளிகொண்டான் ஆலயம் என்று ஏதாவதொரு இடம். கூடுதல் கொழுப்புடன், எங்களுக்கு டிஷர்ட் வாங்க, வேலூரிலிருந்து எளிதாகச் செல்லக்கூடிய – ஆந்திரா பார்டரான – சித்தூருக்குச் சென்று வருவோம். இப்படியாகத்தானே வேலூர் வாழ்க்கையானது சலிப்பின்றி மிகச் சிறப்பாகச் சென்றது. ஆனால், அங்கேதான் நான் முன் அத்தியாயங்களில் பெருமையடித்துக் கொண்டதற்கான கர்வபங்கமும் நிகழ்ந்தது.
ஆம், தவறே செய்யாமல் இருக்கிற ஒருவன் என்கிற திமிரினால் விளைந்த தண்டனை அது. ஒருசமயம், இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீதை வைத்து ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியை நடத்தியது எங்கள் நிறுவனம். ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி என்பதால் தினந்தினம் விளம்பரம். முதல்நாள் விளம்பரம் வந்த அன்று எனக்கு வீக்லி ஆஃப் என்பதால் எதுவும் தெரியாது. மறுநாள் எங்கள் செக்ஷன் சீஃபிற்கு வார விடுமுறை. எடிஷனை முடிக்கப் போகிற நேரத்தில் அன்றும் விளம்பரம் வைக்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள் எடிட்டோரியலில். அந்த சீஃப் பிரகஸ்பதி அதை என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லை, எங்கள் பிரிவின் எந்தக் கணினியில் தேடினாலும் அதன் கோப்பு இல்லை. செய்திப் பிரிவோ அவசரம் என்கிறார்கள்.
வேறு வழியின்றி, முதல்நாள் பேப்பரைப் பார்த்து, நானே அதைப் புதிதாக கம்போஸ் செய்து தந்தேன். அடுத்த நாள் வேலைக்கு வந்தபோதுதான் தெரிந்தது- டைப்புகிற அவசரத்தில் ‘தினமலர்’ என்பதை ‘தினலமர்’ என்று நான் டைப்பித் தொலைத்திருந்தது. நிறுவனத்தின் பெயரிலேயே தவறு! பிழை திருத்தப் பிரிவின் கண்களையும் ஏமாற்றிவிட்டு அச்சாகி இருந்தது. விளைவு… வேறென்னவாக இருக்கும்..? நான் மிகவும் ‘பாராட்டப்’ பட்டேன். ஹி… ஹி… பிழை திருத்தப் பிரிவில் ஓர் ஆசாமி வேலையிழந்தார். உனக்கேன் வேலையிழப்பு நிகழவில்லை என்று உங்கள் உள்மனம் நினைப்பது மிகச் சரியானது. அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், முதல்முறை என் சர்வீஸில் ஏற்பட்ட தவறு என்பதாலும், என் வேலைத் திறமையை நிர்வாகம் மதித்ததாலும் சிறு தண்டனையுடன் மன்னிக்கப்பட்டேன்.
மனிதகுமாரனாகப்பட்டவனுக்குக் கிடைக்கிற சந்தோஷம் எதுவாயினும் அது ஒரு நாள் முடிவுக்கு வந்தேயாக வேண்டும் என்பது விதியல்லவா..? பிரம்மச்சாரியாக நிம்மதியாக வாழ்க்கையைக் கழிப்பவன், கல்யாணம் செய்து கொள்வதைப் போல. அந்த விதியின்படி, என் வேலூர் வாழ்க்கைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. ஒருவகையில் அது நானே வலிந்து ஏற்படுத்திக் கொண்டது என்றும் சொல்லலாம். அச்சமயம் என் அண்ணனுக்குக் கோவையில் வேலை மாற்றம் ஏற்பட்டிருந்த படியால், குடும்பத்துடன் மதுரையைவிட்டுக் கோவைக்குக் குடியேறியிருந்தார். சரி, குடும்பத்துடன் கோவையில் இருக்கலாமே என்று ஆசைப்பட்டு, மதுரை சென்ற சமயம், கோவைக்கு என்னை மாற்றிக் கொள்ளும்படி கேட்டு வைத்தேன். மதுரை, கோவை இரண்டும் ஒரே பதிப்பின் கீழ் வருபவை என்பதால்.
எங்கள் வேலூர் எம்டிக்கு இந்த விவரம் தெரியவர, ‘இத்தனை நன்றாகப் பார்த்துக் கொள்கிற என்னைவிட்டு, அவர்களிடம் போய் பணிமாறுதல் கேட்டானே’ என்ற கோபத்தில் என்னை ரிலீவ் செய்து, ‘கோவைக்குப் போ’ என்று சொல்லிவிட்டார். விளைவாக… அடுத்ததாக கோவையில் கால் பதித்தேன்.
பயப்படாதீர்கள். கோவையில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து அடுத்த நான்கைந்தாண்டுகள் நான் பட்ட கஷ்டங்களைச் சொன்னால், பத்திரிகையுலக வேலை என்றாலே வேண்டாம் என்று இதைப் படிக்கிற வாசகர்கள் நினைத்துவிடக் கூடும். ஆகவே, சுருக்கமாகச் சொல்லி லாங்ஜம்ப் செய்து அவற்றைக் கடந்து, சென்னையில் நான் செட்டிலான நாட்களுக்கு வந்துவிடலாம். அதுவரை, இளைப்பாறுங்கள்….
(தொடரும்…)