
கற்றுக் கொண்டவையும் பெற்றுக் கொண்டவையும்!
மர்மத்தின் முடிச்சை மறுநாள் காலையில் அவிழ்த்தார் சுரேஷ் ஸார். “கணேஷ், இப்ப கொஞ்ச நாளா நாங்க சீரியல், சினிமான்னு பிஸியாயிட்டதால நாவல்களை எழுதறதில்ல. ஒரு கேஸட்ல டிக்டேட் பண்ணிக் குடுத்துடுவோம். என் மிஸஸ் ஜெயந்தி அதை எழுதித் தருவாங்க. சூப்பர்நாவலுக்குக் குடுத்துடுவோம். இந்த மாசம் அவங்களால எழுத முடியாத சூழ்நிலை. அதுனால கேஸட்ல டிக்டேட் பண்றதைக் கேட்டு டைப் பண்ணித்தர உங்களால முடியுமா.?” -இதுதான் அவர் சொன்னது.
“டன் ஸார்…” ஒரு கணமும் யோசியாமல் வார்த்தைகள் வந்தன என்னிடமிருந்து. சுவாரஸ்யமும் த்ரில்லும் கூடிய வேலை. சுபாவின் கதைகளையும் முதல் வாசகனாகப் படிக்கிற சுவாரஸ்ய சூழல். வாய்ப்பை யார்தான் மிஸ் பண்ணுவார்கள்..?
சுரேஷ் புன்னகைத்தார். ஒரு கேஸட்டைத் தந்தார். “இதுல நாவலோட ஒரு பார்ட் பேசி ரெகார்ட் பண்ணிருக்கேன். டைப் பண்ண ஆரமிச்சிடுங்க. அடுத்தடுத்த பகுதிகள் பேசிட்டுக் கூப்டறேன்.”
என்னிடம் ஒரு ‘நடை மனிதன்’ இருந்தது. அதில் கேஸட்டைப் போட்டு, இயர்போனில் கேட்டு, அதேநேரம் கீபோர்டில் விரல்களை நடனமாட விட்டேன். நிதானமாக, தெளிவாக அவர் பேசியிருந்ததால் அடிக்கடி பேக் ஸ்பேஸைத் தட்டவோ, கேஸட்டை ‘பாஸ்’ பட்டனை அழுத்திப் பின்தள்ளவோ வேண்டிய அவசியம் அதிகம் நேரிடவில்லை. முதல் பகுதியைத் தட்டச்சியதும் ஒரு சிடியில் அதைப் பதிவு செய்து அவரிடம் எடுத்துப் போனேன். (பென் டிரைவுக்கு முந்தைய காலகட்டம்) “நாவல் எப்டிப் போயிட்ருக்கு..? நல்லாருக்கா.?” கேட்டார். “பிரமாதமாப் போகுது சார். நரேந்திரன் எண்ட்ரியானதும் இன்னும் ஸ்பீடாப் போகுது. ஆனா, ஒரு சின்ன லாஜிக் மிஸ்டேக் கண்ல பட்டது..” என்று விளக்கினேன். “திருத்திடலாம்” என்று புன்னகைத்தார்.
இது ஒருபுறமிருக்க ஜீயே பப்ளிகேஷன்ஸில் நன்றாகவே வேலை பழகி செட்டிலாகியிருந்தேன். வயதின் காரணமான இளமைத் துடிப்பில் அப்போது நான் பழக்கவழக்கங்களில் முழுமையாகப் பக்குவப்படாத ஒருவனாகவே இருந்தேன் அக்காலத்தில். நான் பழகிய நண்பர்களின், மனிதர்களின் மூலம்தான் சிறிது சிறிதாகப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு தேறினேன். அப்படியான அனுபவங்களில் ஒன்றை இப்போது சொல்கிறேன்.
ரிலையன்ஸில் அப்போது ஒரு புதிய போன் வெளியிட்டிருந்தார்கள். சிம் கார்டே போடாத போன். இரண்டே ஆயிரத்தில் ஓராண்டு வரை கால்கள் இலவசமாகப் பேசலாம், பெறலாம் என்பது ஸ்கீம். மாடலும் வெள்ளை நிறத்தில் மிக ஸ்லிம்மாக இருந்தது. எனவே, ஏர்டெல் போனைப் புறக்கணித்து அதை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன். ஒருநாள் அசோகன் ஸார் என்னிடமிருந்த அந்த போனைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தார். பெருமையாக அனைத்தையும் சொன்னேன். “கொஞ்சம் தாங்க..” என்று போனை வாங்கியவர், அதில் தனது எண்ணை டயல் செய்தார். உடனே ஸ்கிரீனில், ‘Calling Asogan.G’ என்று காட்டியது.
சற்றே அதிர்ந்து போனார். “என்னப்பா இது.? நான் உன் முதலாளின்னு இல்லாட்டாலும் வயசுல பெரியவன். அதுக்காவது மரியாதை தரக்கூடாதா? அசோகன்னு போட்டு வெச்சிருக்க..?”
“மரியாதை மனசுல நிறைய வெச்சிருக்கேன் சார். அது உங்களுக்கே தெரியும். Aல பேர் வெச்சா, டயல் பண்றதுக்கு ஈசின்றதாலதான் அப்டி வெச்சேன்.”
“ஏ-வுல ஆரமிக்கறது சரி. அசோகன் சார்ன்னு போட்டு வெக்கலாம். அசோகன் அண்ணான்னு போட்டு வெக்கலாம். அதெல்லாம் மரியாதை தானே..? இங்க பாருப்பா..” என்று தன் போனின் கான்டாக்ட் லிஸ்ட்டைக் காட்டினார். “பாத்தியா..? ராஜேஷ்குமார் அண்ணா, விவேகா அண்ணா, ….. சார்ன்னுதானே சேவ் பண்ணிருக்கேன். அதான்ப்பா சரியான முறை. புரிஞ்சுதா..?”
எனக்கு நன்றாகவே புரிந்தது. “ஓகே சார். இப்பவே மாத்திடறேன்.” என்றேன். அவர் சொல்லித்தந்த விஷயத்தைப் பின்பற்றத் துவங்கினேன்.
மூன்று கேஸட்டுகளில் பேசி முற்றும் போடப்பட்டிருந்த சுபாவின் நாவலைச் சரியான நேரத்தில் டைப் செய்து தந்தேன். அதன்பின் அவர்கள் பிழை திருத்தம், மேம்படுத்தல் ஆகியவற்றைச் செய்து பின் சூப்பர்நாவல் அலுவலகத்துக்குப் போனது. இந்த ப்ராசஸ் வெற்றிகரமாக முடிந்ததில் எங்கள் மூவருக்குமே மகிழ்ச்சி. அது தொடர ஆரம்பித்து, அதன் நீட்சியாக இன்னும் பல வேலைகளை ஒருங்கிணைந்து செய்தோம். அவற்றை வரப்போகும் சம்பவங்களை நான் சொல்கையில் நீங்களே உணர்வீர்கள்.
திருவள்ளூரிலிருந்து வந்துபோய்க் கொண்டிருந்ததில் சம்பளத்திற்கான வேலையையும் செய்துகொண்டு, ஆர்வத்திற்கான வேலையையும் கவனித்த வந்ததில் உறக்க நேரம் குறைந்து போனது மிகக் கஷ்டமாக இருந்தது. எனவே நகரத்திலேயே தங்கி விடலாம் என்று தீர்மானித்து வீடு பார்க்கத் தொடங்கினேன். மிக எதேச்சையாக, நான் முதன்முதலில் சென்னையில் வந்து தங்கிய அதே சைதாப்பேட்டை ஏரியாவில், அதே கொத்தவால் சாவடித் தெருவுக்கு அருகிலேயே ஒரு வீடு அமைந்தது. வீடு என்று பெயர்தானேயொழிய அது அடுத்தடுத்து மூன்று போர்ஷன்கள் அமைந்தது. நான் பிடித்த போர்ஷனில் இரண்டே அறைகள்தான். அதுவே எனக்கு அப்போதைய நிலையில் போதுமானதாக இருந்தது. வாடகையும் சல்லிசாக இருந்தது என்பதால் உடனே ஃபிக்ஸ் செய்தாகி விட்டது.
ஒருநாள் பாலா சார் கூப்பிட்டு, வீட்டுக்கு வரச் சொன்னார். போனேன். கேட்டார் : “கடுகு என்கிற எழுத்தாளரை உங்களுக்குத் தெரியுமா..?”
“கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற பி.எஸ்.ரங்கநாதன்தானே..? நல்லாவே தெரியும் எனக்கு. ஆனா, அவருக்குத்தான் என்னைத் தெரியாது.”
“இப்ப தெரிஞ்சுக்குவார்..” என்று சிரித்துவிட்டு போன் செய்து பேசினார். “சார், அவருக்கு உங்களை நல்லாவே தெரிஞ்சிருக்கு. இப்ப உங்க வீட்டுக்கு அனுப்பறேன். பேசிக்குங்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவர், கடுகு ஸாரின் வீட்டுக்கு வழி சொன்னார். “அவருக்கு ஒரு வேலை ஆகணுமாம். செஞ்சு குடுங்க கணேஷ்.” என்றார். கடுகு ஸாரைச் சந்திக்க உடனே போனேன். பாலா ஸார் வழி சொல்லி அனுப்புகிறார் என்றால், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன்/சிறுமி கூட எளிதாக அந்த இடத்தைச் சென்றடைந்து விடலாம். அத்தனை அழகாக, விரிவாக லேண்ட் மார்க்குகளுடன் வழிசொல்வதில் விற்பன்னர். சமயங்களில் பேப்பரில் படமாக வரைந்துகூடத் தருவதுண்டு.

ஜீவரத்தினம் நகரிலிருந்த அந்த அபார்ட்மெண்ட்டை எளிதாகக் கண்டடைந்து விட்டேன். இரண்டாவது மாடிக்குச் சென்றேன். இருபுறமும் இருந்து வீடுகளில் ஒன்றின் வாசலில் பெருமாளின் திருநாமம் கதவில் பதிக்கப்பட்டு, ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்’ என்று துவங்குகிற நாலாயிரப் பாடலொன்றும் எழுதப்பட்டிருந்தது. சந்தேகமேயின்றி அந்த வீட்டின் பெல்லை அழுத்தினேன். ஒல்லியாய், உயரமாய், சிவப்பாய், சுறுசுறுப்பாய் கதவைத் திறந்து வரவேற்றார் அந்த எழுபத்தொரு வயது இளைஞர்.
அவரது நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்தமானவைகளில் ஒன்று. கணவன், மனைவி, மைத்துனன் மூன்றே முக்கியக் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, இன்னபிற உபபாத்திரங்களுடன் அவர் நடத்தும் தொடர் நகைச்சுவைக் கச்சேரியை நான் மிக ரசித்ததைச் சொன்னேன். மிகவே சந்தோஷப்பட்டார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எளிமையாகப் பதம் பிரித்துப் புத்தகமாக்குகிற பணியில் அப்போது அவர் ஈடுபட்டிருந்ததைச் சொன்னார். அந்தப் புத்தகத்தின் சில மாதிரிப் பக்கங்களைக் காட்டினார். பிரமிப்பு அள்ளிக் கொண்டது என்னை.
தவிரவும், தமிழ் எழுத்துக்களை வேர்டில் டைப் செய்தால் ஒற்றைக் கொம்புகளைத் தனி கேரக்டராகக் கொள்ளும். எடிட்டிங் நேரத்தில் பேக்ஸ்பேஸ் கீயைத் தட்டினால் வார்த்தை இரண்டாக உடையும் – இப்போதுள்ள வசதிகள் வேறு, நான் சொல்வது அந்நாளில். அதைத் தவிர்க்க, அவரே ஒரு ஸாப்ட்வேரையும், அதற்கென்றே தனியாக ராஜராஜன், குந்தவை, நந்தினி என்று ஃபாண்ட்களை செய்திருப்பதையும் சொல்லி, அந்த சாஃப்ட்வேர் சிடியை அன்பளித்தார். (ஃபாண்டோகிராபர் மென்பொருள் மூலம் ஃபாண்ட்களை உருவாக்குவதிலும் அவர் வல்லவர்.)
அவருக்கு நான் செய்ய வேண்டிய வேலையைச் சொன்னார். எனக்கு அது எளிதான வேலைதான். செய்து தருவதாகச் சொல்லி, அதற்கு வேண்டிய மெட்டீரியல்களை அவரிடம் வாங்கிக் கொண்டு புறப்படலாம் என்று எண்ணுகையில், அவரது நான்கைந்து புத்தங்களை அன்பளித்தார். ஒன்றைப் பிரித்தேன்.
“அட, நந்தினி பதிப்பகம். மதுரைல இருக்கையில ‘ஐயோ பாவம் சுண்டு’ன்னு உங்க நாவல் ஒண்ணை வாங்கிப் படிச்சேன். அதுவும் நந்தினி பதிப்பகம் வெளியிட்டதுதான்.”
“கமலா, இங்க பாரேன்… என் புத்தகத்தைக் காசு குடுத்து இவர் வாங்கிப் படிச்சிருக்கார்..” என்று உள்ளே பார்த்து உரக்கக் குரல் கொடுத்துச் சிரித்தார். நானும் சிரித்துவிட்டேன். “நந்தினி பதிப்பகம் என்னுடையதுதான் சார். நல்லாக் கவனிங்க, இப்ப நீங்க இருக்கற இதே அட்ரஸ்தான்.” என்றார். கவனித்தேன். அட, ஆமாம்.
உள்ளிருந்து கமலாம்மா வர, “ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்று நமஸ்கரித்தேன். “என்ன திடீர்ன்னு..?” என்று வியப்பாகப் பார்த்தவரிடம் சொன்னேன். “மிகச் சின்ன வயசுலயே அப்பாவை இழந்துட்டவன் நான். இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட அன்பாப் பேசினது ஏனோ எனக்கு எங்கப்பாவை நினைவுபடுத்திடுச்சு. அவரை உங்கள்ல பாத்துட்டேன். அதான்..” இருவரும் மகிழ்வோடு ஆசீர்வதித்தார்கள். சொல்லிக் கொண்டு, நான் செய்யவிருந்த வேலைக்கு அவர் தரவிருந்த சன்மானம் கிடைப்பதற்கு முன்பே போனஸாகக் கிடைத்த அந்தப் புத்தகங்களைச் சந்தோஷத்துடன் சுமந்து கொண்டு விடைபெற்றுச் சென்றேன்.
-இது எங்களின் முதல் சந்திப்பு.
மூன்றாவது சந்திப்பில் அவர் நகைச்சுவையாக எழுதுவதன் நுட்பங்களை எனக்கு விளக்கினார். அத்தனையையும் இங்கே விளக்குவது கடினம். ஆனால் முக்கியமான ஒன்றைச் சொல்லலாம். “நிறைய நகைச்சுவைக் கதைகளைப் படியுங்க. எந்தெந்த இடத்துலல்லாம் நீங்க சிரிக்கறீங்கங்கறதை நோட் பண்ணுங்க. அது மாதிரியெல்லாம் உங்க கதைல பயன்படுத்தினீங்கன்னா உங்க கதைக்கும் சிரிப்பாங்க. எழுதிட்டுப் படிச்சதும் உங்களையே புன்னகைக்க வைக்காத கதை மத்தவங்களைச் சிரிக்க வைக்காது. இதை நினைவுல வெச்சுக்கிட்டு எழுதினாப் போதும். சரியா..?” தலையாட்டினேன்.
சிறுகதைகளை நான் எழுதத் துவங்கியதற்கு சுபாவும், பிகேபியும் காரணம் என்றால், நகைச்சுவையை நான் எழுத முயன்று, (ஓரளவு) வெற்றியும் பெற்றிருப்பதற்கு அவரே முழுமுதற் காரணம். எழுதுவதில் மட்டுமில்லாமல் பேசும்போதும் மற்றவரை நகைக்க வைக்க அவரால் அனாயசமாக இயலும். அவரைப் பின்பற்றி அதைச் சாதிக்கத்தான் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறேன்.
முதல் சந்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மூன்றாம் சந்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இரண்டாம் சந்திப்பு என்கிற ஒன்றைப் பற்றிச் சொல்லவே இல்லையே, என்ன விஷயமாயிருக்கும் என்றொரு எண்ணம் இதைப் படிக்கையில் புத்திசாலியான உங்கள் மனதில் எழுந்திருக்கும். காரணம் இருக்கிறது. அந்த இரண்டாவது சந்திப்பில்தான் அவர் ஒரு மகத்தான, என்றென்றும் நான் நினைவில் வைத்துக் கொண்டாடும்படியான காரியம் ஒன்றைச் செய்தார்.
அது என்னவென்பதை விளக்கலாமென்றால், தொடரும் போடுகிற இடம் வந்தாயிற்றே என்பதை அத்தியாயத்தின் அளவு உணர்த்துகிறது. ரைட். அடுத்த சாப்டரில் சொல்லிடலாம். அதுவரை, ஸீ யூ ஆல்….
(சரக்கு இன்னும் உண்டு…)