இணைய இதழ் 95சிறுகதைகள்

பசலை – மோனிகா மாறன்

சிறுகதை | வாசகசாலை

அந்தக் கொய்யா மரக்கிளைகளில் நல்ல கரும்பச்சை நிறத்து இலைகளும் மடல் விரித்த வெண்ணிற சிறிய பூக்களும் நிறைந்திருந்தன. புவனா வேகமாக மரத்tதுல ஏறுனா. மண் வண்ணத்தில் இருந்த கிளைகளில் அவள் ஏற்கனவே எஸ்.பி என்று காம்பசால் செதுக்கி வச்ச எழுத்துக்கள் அச்சு போலத் தெரியுது. கையில் சிறுவர் மலருடன் மேலே ஏறி கொய்யா மரத்தோடு ஒட்டி இருந்த வீட்டின் ஓட்டுக்கூரைக்கு லாவகமா தாவி சாய்ஞ்சிகிட்டா. அவ தலைக்கு மேல் கொய்யா மரக்கிளை படர்ந்திருக்கு. மரத்துல கறுப்பு எறும்புகள் ஊர்ந்துகிட்டு இருக்குங்க. அடர்ந்த கொய்யா இலைங்களுக்குள் சாயங்கால வானம் தெரியுது. பள்ளியோடம் போற நேரந்தவிர புவனா இருக்கற எடம் இந்தக் கொய்யா மரந்தான். தனக்குன்னு சொந்தமா இந்த மரத்தையும் கூரையையும் நினைப்பா.

  பல முக மன்னன் ஜோ கதை இந்த வாரம் இவளுக்கு சுவாரசியமாக இல்ல. புக்கை மூடி வச்சிட்டு தைல மரக்கூப்பை வேடிக்கை பார்க்கறா. இங்க இருந்து பாத்தா உயரமா அடர்ந்த நீள நீளமான இலைங்களோட கூம்பு கூம்பா தைல மரங்களும் தூரத்துல தெரியற ஏரிக்கரையும் சாயங்கால வெயிலுல தங்கமா ஜொலிக்குது. எட்டி மரத்து ஓரத்துல போற ஒத்தையடி பாதையில யாரோ வர்றாங்க.

 ஐயோ இந்த சுமியக்கா என்ன இங்க வருது. அவுங்க வூடு பால் டிப்போ கிட்டதான இருக்குன்னு யோசிக்கறா. அந்தக்கா வந்து இவ இருக்கற கூரைக்கு கொஞ்சந்தள்ளி இருந்த சந்தனமரத்து மறைவுல நிக்குது. திரும்பவும் செருப்பு சத்தம். கந்துக்கடக்காரு புள்ள பிரபு வருது. இருண்டு கெடக்கற சந்தன மரத்தடியில் ரெண்டு பேரும் எதோ பேசுறாங்க. அவங்களுக்கு இவ மரத்து மேல இருக்கிறது தெரியல. சுமியக்கா மொகம் பளபளன்னு செவந்து கண்ணுல அப்படியே என்னமோ ஒரு பித்து பிடிச்சாப்புல அவனைப் பாத்து எதோ சொல்லுறா. சாயங்கால வெயில் இறங்குற வெளிச்சத்துல அவளோட சுருண்ட கூந்தலும் மூக்குத்தியும் கண்ணும் அப்பிடியே ஆரஞ்சா மஞ்சளா அவ்ளோ அழகா தெரியுது. அவன் இவ கைய புடிச்சிக்கிட்டு பேசறான். அவன் முகமும் அப்பிடியே அடுப்புல வச்ச வெண்கலப் பானை மாதிரி தளதளன்னு துடிக்குது. அவ கையில் எதோ பேப்பர குடுக்கறான். அவ தலையில் கை வச்சி தடவிட்டு கன்னத்த பிடிச்சி எதோ சொல்றான். அப்படியே திரும்பி ஏரிக்கரை பக்கமா போறான். அவன் போறதையே பாத்துட்டு நிக்கற சுமியக்காவ இவ பாக்கறா. கண்ண தொடச்சிக்கிட்டு அவளும் எதிர் பக்கமா வேகமா போறா. எதிர்காத்துல அவ நீலத்தாவணியும் கூந்தலும் பறக்குது. புவனாவுக்கு சிரிப்பா வருது. ஆமா பெரிய லவ்வு இதுங்களுக்குன்னு நெனச்சுக்கறா. இவ அம்மா சிங்கி எல்லார்கிட்டயும் ஆறாங்கிளாஸ் படிக்கையிலயே இவளுக்கு எவ்லாந்தெரியும்னு எப்பவும் சொல்லுவா. புவனாவுக்கும் அப்பிடித்தான் பெரிய ஆளுங்க பேசற எல்லாமே புரியும். பாரஸ்ட் அக்கா வீட்டுல இருக்கற டிவியில வர விளம்பரத்துல சினிமாவுல வர கொழந்தைங்க, கதாநாயகிங்க எல்லாம் அப்பிடியே ஒண்ணுந்தெரியாத பப்பா மாறி வெள்ளந்தியா இருக்கற மாறி நடிக்கறதெல்லாம் பாத்து இவ சிரிச்சுக்குவா. மே மாசம் லீவுல சும்மா இருக்காளேன்னு இவ அம்மா பக்கத்தில இருக்கிற சர்ச்சுல நடக்குற விபிஎஸ் கிளாசுக்கு போடீன்னு அனுப்புனா.

  அங்க போனா நல்லா ஜூஸ் , பிஸ்கெட் எல்லாம் குடுத்தாங்க. அப்பறம் நெறய அண்ணனுங்க கிடார், டிரம்ஸ் எல்லாம் வச்சிருந்தாங்க. இவளும் ஜாலியா இருக்கும்னு போயி உக்காந்துட்டிருந்தா. அந்த செல்வி அக்கா, ஜூலி ஆண்ட்டி, ஷாரன் அண்ணன் எல்லாரும்

  “ஏசப்பா கூட நடக்கலாம் நட நட

  குதி குதி

  ஒன்றுமறியா சிறு பிள்ளை நானே நானே நானே

  லிட்டில் பிளவர்ஸ் அஸ்”

அப்பிடினெல்லாம் சின்ன கொழந்தைங்க போல முகத்தை வச்சிகிட்டு மழலை மொழியில மிழற்றி மிழற்றி கொஞ்சறது போல பாட்டு பாடி டான்ஸ் ஆடறதப் பாத்து இவளுக்கு கொமட்டிகிட்டு வந்துச்சி. ஓடி வந்துட்டா. “அடி சிங்கி இனிமேச்சும் இப்பிடி எங்கனா அனுப்புனா இருக்குடி உனக்கு”- ன்னு அம்மாவை ரெண்டு வாங்கு வாங்குனா.

   அவளுக்கு புத்தகம் படிக்கிறதுதான் எப்பவும் புடிக்கும். அவங்க வீட்டுல யாரும் படிக்க மாட்டாங்க. எந்த புக்கும் இல்லை. அதனால பண்ணையில இருக்கற தோழர் தண்டாயுதபாணிகிட்ட போயி இவ புக் வாங்கிட்டு வந்து படிப்பா. அவர் இவளை அன்பா எஸ்பி ன்னு கூப்பிடுவார்.பெரிய மீசை தாடியெல்லாம் வச்சி

“சக்கரங்கள் நிற்பதில்லை

சத்தியங்கள் தோற்பதில்லை”- ன்னு அருமையா பாடுவாரு. அவர் தந்த புக்குல “அப்பு எல்லாம் தெரிந்த பையன்“ அப்டின்னு தொடங்கற ஒரு கதையை படிக்கும்போது அதை எழுதுன மீசைக்காரரையும் அவர் எழுத்தையும் இவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

   அது போல ஒரு புக்குலதான் “ஆகாயத்து பறவைகளை கவனித்து பாருங்கள்” அப்டிங்குற வரியை பைபிளில் இருந்து போட்டிருந்தது. இவதான் எப்பவும் உயர்த்துதல் இருந்து வானத்தை பார்த்துட்டே இருப்பாளே, அதனால அந்த வசனம் இவ மனசுல ஒட்டிக்கிச்சு. அத சொன்ன ஜீவ்ஸ் பத்தி நெறைய படிச்சா. அப்பறந்தான் ஐ இவரும் நம்பளப் போல கூழாங்கல்லையும் ஆட்டுக்குட்டியையும் வச்சிகிட்டு வயல்வெளியில பாறங்கல்லுல ஒலாத்தறார். மூஞ்சுக்கு நேரா அப்பால போங்கடான்னு சொல்றாருன்னு நெனைச்சா. ஜீஸஸ்னு சொல்றது எவ்ளோ நல்லா இருக்கு. முப்பது வயசுல இளமையா செத்துப் போனவரைப் போயி ஏசப்பா, இயேசுவானவரேன்னு வயசான தாத்தா போல இந்த பைபிள் கிளாஸ் கெளவிங்கதான் கூப்பிடறாளுங்கன்னு வையறா. பேரை மாத்தி கூப்பிடறது இவளுக்கு எப்பவும் புடிக்காது. இவ அப்பா சிங்கப்பெருமாளை ரேஞ்சாபீசர் சிங்கம்னு கூப்பிடவும் எல்லாரும் “சிங்கம் போகுது பாருடா; சிங்கம் டீ குடிக்குதுடா”ன்னு கண்டபடி ஓட்டுவாங்க. இவ அப்பா ஒரு சாதாரண பாரஸ்ட் கார்டு. அவங்கள எதுவும் சொல்ல முடியாம ராவுல குடிச்சிட்டு வந்து இவ அம்மாவையும் இவளையும் போட்டு சாத்துவாரு. திருவாரூர் பக்கத்துல சிங்கப்பெருமாக் கோயில்தான் இவங்க குல தெய்வம். இவ அம்மா பேரு சிங்கித்தாயாரு. அங்கெல்லாம் அப்படித்தான் பேர் வைப்பாங்க. இந்த ஜவ்வாது மலையில அதெல்லாம் சொன்னா புரியறது இல்லை.

   சுமியக்காவையும் பிரபுவையும் பார்த்தத அம்மாகிட்ட இல்லன்னா புஷ்பாகிட்ட சொல்லாலாமான்னு யோசிச்சா. அப்பறம் அமைதியாயிட்டா. இவங்க இருக்கிறது வனத்துறை ஊழியர் குடியிருப்பு. அவங்க எல்லாரும் எப்பவும் எதையாவது புலம்பிக்கிட்டும் அது வேணும் இது வேணும்னு ஆலாப் பறந்துகிட்டும் இருப்பாங்க. இத்தனைக்கும் எல்லாரும் மாச சம்பளக்காரங்கதான். ஆனாக்கா நல்லா சாப்பிட்டேன் தூங்கினேன்னு சொன்னாக் கூட யாராவது கண்ணு வச்சிடுவாங்கன்னு கவலைப்படற மாறி நடிச்சி நடிச்சி, நெசமாவே துக்கப்படற மனுஷங்களாவே மாறிட்டவங்க. அடுத்தவங்க பத்தின புரணி கேக்க ஆவலாதியா அலைவாங்க. இவ அம்மா சிங்கியும் அங்க இருக்குற பொம்பளைங்களும் சேந்தா அந்த ஜமுனாமரத்தூரே பொறண்டு விழற அளவுக்கு பேசுவாளுங்க.

 அது போக அந்த சுந்தரி அக்கா, ஜேனட் ஆண்ட்டி எல்லாம் மழை பேஞ்சா வெயிலடிச்சா குளிரடிச்சா எல்லாத்துக்கும் அம்மம்மா ஐயையோன்னு வஞ்சிகிட்டு கெடப்பாளுங்க. புவனாவுக்கு இவங்கள மாறியெல்லாம் வாழ்க்கையை பத்தி பெருசா எந்தப் புகாரும் இல்லை. நல்ல குளிர்ல போர்வைய போத்திட்டு தூங்கறதும் அதிகாலைப் பனியில புளியம் பழம் பொறுக்கறதும் அவளுக்குப் பிடிக்கும். வெய்ய நாளுல மாங்கா பிஞ்சு கோணப்புளியங்கா பெறக்கித் தின்னுகிட்டு, மத்தியான வெயிலும் மஞ்சங்கொல்லை கவலை கெணத்துல அமுந்து குளிச்சிட்டு ஏரியில அல்லிப்பூ பறிச்சிட்டு திரியறதும் இவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

  அம்மாவுக்குத்தான் நம்ம பொலம்பறதக் கேக்க மாட்டேங்குறான்னு இவ மேல குறை.புவனாவுக்கென்ன தலையெழுத்தா இவளுங்களப் போல நாள் முழுக்க இந்த குவார்ட்டர்ஸ் வீட்டுல உக்காந்துட்டு மாறி கொற சொல்லிட்டு கெடக்கனும்னு. அவ திரிஞ்சி அலைய எத்தனையோ இடமிருக்கு. ஏரிக்கரை சந்தனமரக்கூப்பு ஃபாதர் பண்ணைனு புஷ்பா மாலா அல்லாம் சேந்துகிட்டு திரிவாளுங்க.

   மறுநா சாயந்திரம் புவனா சந்தனக்கொட்டை பெறக்கிட்டு இருந்தா. சின்ன கரும்பச்சை எலைங்களோட கருத்த தண்டுகளும் வெளிர் நிற சின்ன சின்ன பூக்களுமா அடர்ந்திருந்த சந்தன மரங்க அங்க நெறய நிக்குது. இந்த கூப்புக்கு இவங்கப்பாதான் கார்டு. சின்ன நீள்வட்ட சந்தனக்காய்களில் இருந்த கொட்டைங்கள ஒடச்சித் தின்னா நல்லா இருக்கும். ஆனா, கொஞ்ச நேரத்துல தல கிறுகிறுன்னு சுத்தும். ஆனாலும் இவ அத தின்னுவா. இவங்க குவார்ட்டர்சில் நேத்து வீரப்பனை பத்தி பேசிட்டு இருந்தாங்க. சுமதி அக்காவும் கிளார்க் பொண்டாட்டியும், “அடீ புவனா மாலா, நீங்கல்லாம் சந்தனமரக்கூப்புக்கு போவாதீங்கடி. வீரப்பன் ஆளுங்க வந்தா கூட வருவாங்க”-ன்னு சொன்னாங்க. ரேஞ்ச் ஆபிசுல எல்லாம் வீரப்பன் ஒரு டிஎப்ஓ, நெறய கார்டுங்கள சுட்டுட்டான்னு பேப்பர்ல வந்தத படிச்சு பரபரப்பா பேசிட்டிருந்தாங்க. புவனா மட்டும் ஆமா வீரப்பன் போயி இந்த மலையில் இருக்கற பத்து மரத்த வெட்ட வரானான்னு நெனச்சா. இவ குனிஞ்சு சருகுகளுக்கு இடையில் காய் பெறக்கும் போது யாரோ கூப்பிடற மாறி இருந்துச்சு. பயந்து போயி திரும்பிப் பார்த்தா பிரபு அண்ணன் நின்னுட்டு இருக்கு. இங்க வான்னு இவளைக் கையை காட்டுது. பயந்துகிட்டே போறா. அந்தண்ணன் நல்ல செகப்பா ஒசரமா ஸ்டைலா ரஜினி முடி மாறி வச்சிட்டு இருக்கு.

“பாப்பா, இத சுமி கிட்ட குடுக்கறயா ப்ளீஸ்”-னு ஒரு மடிச்ச பேப்பரை தருது. வாங்கிட்டு வந்துட்டா. சுமியக்கா கிட்டயும் குடுத்துட்டா. அந்தக்கா இவள கன்னத்த புடிச்சி கொஞ்சி முத்தங்குடுக்குது. இவ ஓடியாந்துட்டா.

  ரண்டு நாள் கழிச்சு அம்மா சுமதியக்கா எல்லாம் சுமியக் காணம்னு பரபரன்னு பேசிட்டு இருந்தாங்க. இவளுக்கு திக்குன்னு இருந்துச்சு. அன்னிக்கு மத்யானம் கவலை கெணத்து பக்கத்துல சரம் சரமா பூத்திருந்த மஞ்சக் கொன்னப்பூவ இவ பறிச்சிட்டிருந்தா. இவ கூட வந்த மாலா அவங்கப்பனுக்கு தண்ணி குடுத்துட்டு வர பக்கத்து கொல்லைக்குப் போயிருந்தா. எல்லையே இல்லாம தங்கமா பூத்திருந்த கொன்னைப்பூவுங்கள பக்கத்துல இருந்த கல்லு மேல ஏறி பறிக்கையில சுமியும் பிரபுவும் ஏரிக்கரை தாண்டி பீமன் மடு பக்கமா போனத பார்த்தா. இப்ப சாயந்தரமாதான் இவங்க தேடறாங்க. மெதுவா அம்மா கிட்ட போயி பாத்தத சொன்னா. அம்மா, “அடிப்பாவி, இரு இரு நாம் போயி சொல்றே”-ன்னு கெளம்பனா.

“யம்மா அவங்கள எதுனா பண்ணிடுவாங்களா?”

“அதெல்லாம் இல்லடீ. சுமி வீடு வசதியானவங்கதான. இப்பிடி ஓடிப்போலாமா? கூட்டிட்டு வந்து நல்லா கல்யாணம் பண்ணி வைப்பாங்க.”

  கொஞ்ச நேரத்தில நெறய ஆளுங்க வந்து இவகிட்ட கேக்கறாங்க. இவளுக்கு ஐயோ தெரியாம அம்மாகிட்ட சொல்லிட்டமேன்னு இருந்துச்சி.

இருட்டுல பந்தங்கொளுத்தினு போயி பீம மடு அருவிக்காட்டுல இருந்து சுமியையும் பிரபுவையும் கூட்டிட்டு வந்துட்டாங்க. சுமிய அவங்கம்மா சரியா அடிச்சிட்டா. அவள செங்கல்பட்டுல இருக்கற அவங்க மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கன்னு தெருவுல பேசிட்டு இருந்தாங்க. அவங்க ரொம்ப பணக்காரங்க. பிரபு வேற ஜாதி. எப்புடி கட்டிக் குடுப்பாங்கன்னுல்லாம் இது போல கதையை ஆர்வமா சொல்ற வேணுகோபால் சார் சொல்லிட்டு இருந்தாரு. எல்லாரும் அவர் சொல்றதுக்கு ஆமா ஆமான்னு சொல்லிட்டு இருந்தாங்க. புவனாவுக்கு பயமா இருந்துச்சு. ஆனா, இவங்கல்லாம் சொல்றது சரிதான.. அது என்னா அப்பா அம்மாவுக்குத் தெரியாம ஓடிப்போறதுன்னு பிரபு சுமி மேல கோவம் வந்துச்சி.

  நாலு நாள் ஒரே பஞ்சாயத்தா பேசிட்டு இருந்தாங்க. இவ அந்த பக்கமே போகாம ஏரிக்கொல்லை மேட்டு பூச்சிக் கிழவன் மிளகாத் தோட்டத்துல தான்றி மரத்தடியில ஒக்கார்ந்து தாய் காவியம் படிச்சிட்டிருந்தா.

   ஞாயித்துக்கெழம காலையிலயே மோட்டார் தண்ணி வருது புடிடின்னு அம்மா எழுப்பி உட்டுட்டா. காலை கரண்ட்டு. அதனால எல்லாரும் அஞ்சு மணிக்கே தண்ணி புடிச்சாங்க. புவனா வேலைய முடிச்சிட்டு காலை வெளிச்சத்துல அம்மா கொடுத்த காபி டம்ளரோட அவளோட கொய்யா மரத்து மேல ஏறி உக்காந்தா. சோறு கூட மரத்து மேல உக்காந்து தின்றா பாருன்னு அம்மா வஞ்சாலும் இவ கேக்க மாட்டா.

“அடியம்மா இது என்னாடி இவங்க மறுபடியும் எங்க போறாங்க?”, ஆலங்காயம் போற பஸ்ஸ குறுக்கு வழியில பிடிக்க இவங்க தெரு பின்னாடி ஒரு வழி இருக்கு. அதுல பிரபுவும் சுமியும் போறாங்க.லேசா விடிஞ்ச காலை வெளிச்சத்துல கையில ஒரு பையோட வேகமா அவங்க நடக்கறது தெரியுது. புவனா சத்தம் போட்டு அம்மாவைக் கூப்பிட்டு சொல்லலாமான்னு நெனைச்சி கீழ் எறங்கி வரா. டக்குன்னு, “அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம் போவட்டுமே. இப்ப என்ன”ன்னு தோணுது. நடந்திட்டிருந்த பிரபு அண்ணன் திரும்பி பாக்குது. இவளைப் பாத்துட்டு திடுக்குன்னு நிக்குது. இவ போயிட்டு வாங்கன்னு சொல்றாப்புல கைய ஆட்டுறா. ரெண்டு பேரும் வேகமா நடந்து அந்த ஒத்தையடி பாதை வளைவுல மறைஞ்சிட்டாங்க. புவனா பாத்துட்டே அமைதியா நிக்கிறா.

maranmoni@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button