’பாவங்களின் கணக்கு’ கருட கமனா ரிஷப வாகனா – திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி
கட்டுரை | வாசகசாலை

சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட
ஒரு வெளி உண்டு
அங்கு உன்னைச் சந்திப்பேன்
–ரூமி
நம் வாழ்க்கையில் நமக்கு சரியாக இருப்பது வேறொருவருக்குத் தவறாகத் தெரியும். வார்த்தைகளில் இதனை எளிதாக விவரிக்க முடிகிறது, ஆனால் வாழ்க்கையில் கடைபிடிப்பது அவ்வளவு எளிதாயில்லை. இதனை எல்லாம் கடந்த அவரவர் அவர் இயல்பினில் இருக்கின்ற மங்களதேவியின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது இந்த, ‘கருட கமனா ரிஷப வாகனா’ திரைப்படம்.
இந்து மதத்தில் பெரும்பாலும் வழிபடக்கூடிய கடவுள்களின் குணங்களை மையமாகக் கொண்டு முக்கிய கதாபாத்திரங்களை வடிவமைய்துள்ளார் இயக்குநர். அதற்கு ஏற்றவாறு சூழ்நிலைகளையும் அமைத்துள்ளார். அப்படி வருகின்ற முக்கிய கதாபாத்திரங்கள்தான் சிவா, ஹரி மற்றும் பிரம்மய்யா.
நிலபரப்புக்களும் இந்தியத் திரைப்படங்களும்:
இந்தியத் திரைப்படங்களில் நிலபரப்புகளைச் சார்ந்தும் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களைச் சாரந்தும் வெளிவருகின்ற திரைப்படங்கள் மிகவும் குறைவுதான். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. வணிகத்தில் தொடங்கி ரசிகர்கள் வரை பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் மீறி ஒரு சில திரைப்படங்கள் அந்த வாழ்வியலையும் அந்த மக்களையும் காட்டி, கதைக்குள்ளும் அந்தத் தெருக்களின் உள்ளும் நம்மை அழைத்துச் செல்லும். அப்படி அழைத்துச் செல்லும் சில படங்களில் சிறந்த படமாக இருக்கின்றது இத்திரைப்படம்.
மூன்று கடவுள்கள் என்று நம்பபடும் சக்திகள்:
படத்தின் முதல் போஸ்டரில் இருந்தே இந்த கடவுள்களின் பிரதிநிதித்துவம் தொடங்கிவிடுகிறது. கடவுள்கள் அதாவது சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரும் சண்டையிட்டுக் கொண்டால் என்ன ஆகும் என்ற கேள்விதான் படத்தில் எழுப்பப்பட்டு அந்தக் கேள்வியை நோக்கி கதை நகர்கிறது. மங்களதேவி என்னும் ஊரில் இருவரின் வாழ்க்கை தொடங்கி, அதே மங்களதேவியில் அவர்களின் வாழ்வு முடிகிறது. இந்த தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடைப்பட்ட வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன, ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் ஒருவனது மனது எப்படி மாறுகின்றது என்பதை விவரிக்கும் கதை. இந்தக் கதையில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் குணாதிசயங்களுக்குள்ளும் அவர்களின் பண்புகளுக்குள்ளும் நிறைய மாற்றங்கள் நிகழும். அதாவது முதலில் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கின்ற ஹரி, பின் வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றான். சிவா, எப்போதும் அக்கோராஷமாக செயல்பட்டு வந்தவன் எதுவுமற்று அமைதியாகிப் போகின்றான். அதே போல் பிரம்மய்யா, ஒரு சாதாரண வாழ்வு குடும்பம் தாண்டி பெரிதாய் ஏதும் யோசிக்காத ஒரு மனிதன் எவ்வளவு வன்முறையாளனாக மாறுகின்றான் என்பதை இந்த கதை அவ்வளவு யதார்த்தமாக விவரிக்கிறது.
அன்பும் மௌனமும்:
இந்தப் படத்தில் கதாபாத்திரங்களைத் தாண்டி அன்பு, காதல், நேசம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம் வாழ்வில் இருக்கும் எல்லா உறவுகளுக்கும் அது பொருந்தும். சிவாவுக்கும் ஹரிக்கும் இடையிலான பலவருட உறவை ஓரிரு நிமிடங்களில் ஒரு முதலாளியையும் நாயையும் வைத்து விவரிக்கின்ற அந்தக் காட்சியமைப்பு ஏதோ மனதில் ஊடுருவிச் சென்று உட்காரந்து கொண்டது. எல்லா உறவுகளும் பல பிரிவுகளைக் கடந்துதான் செல்கின்றன. ஒருவரின் மீது வைத்த அளவு கடந்த அன்பு கூட ஒருநாள் கோபமாகவோ வெறுப்பாகவோ மாறும் என்பதை அந்தக் காட்சி உரைக்கின்றது. இந்த இருவரின் உறவில் மௌனம் மிகவும் முக்கியமாக இருக்கின்றது. இவர்களுக்கு இடையில் பெரிதாக உரையாடல்கள் இருக்காது. எனினும் அந்த உறவு பல வருடங்களைக் கடந்திருக்கும்.
பாவங்களின் கணக்கு:
ஒவ்வொரு முறை கொலை செய்த பின்னும் ஹரி சென்று நீரில் முங்கி எழுந்து பாவங்களைக் கழித்துக்கொள்வதாக எண்ணிக்கொள்கின்றான். அதே சமயத்தில் சிவா ஒவ்வொரு முறை கொலைக்குப் பின் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறான். அதில் அவனுடைய அப்பாவித்தனம்தான் வெளிப்படுகிறது. அவன் ஒரு போதும் அவன் செய்த கொலைகளை சுமந்து கொண்டது இல்லை. அந்த கொலைகளை யாருக்காக செய்து இருந்தாலும் அதே நிலைப்பாடுதான். அது அவன் அன்பிலும் வெளிப்படும். ஹரியை முதல் நாள் எவ்வாவறு நேசித்தானோ அது எல்லா நிலைகளிலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஹரியின் பொருளாதார நிலை, சமூக நிலையினால் அவனுடைய அவனின் அன்பின் அளவுகோல்கள் வேறுபட்டுக்கொண்டு இருந்தன.
பிரம்மய்யா என்னும் சாதாரணன்:
ஒரு பக்கம் கொலைகளாலே சூழ்ந்திருக்கும் ஹரியும் சிவாவும்… மற்றொரு பக்கத்தில் அந்த இருவரின் உறவை ஒரு கட்டதில் இருந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றார் பிரம்மய்யா. ஒரு சாதாரண மனிதனை அவனுடைய வாழ்வை, இயல்பை இன்னொருவர் அவருடைய சுயநலத்திற்காக சுரண்டும்போது அந்த சாதாரணன் எவ்வளவு வன்முறையாளனாக தயவற்றவனாக மாறுகிறான் என்பதை இந்தக் கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது.
இறுதியில் எது எஞ்சும்:
இந்தப் படம் வன்முறை சார்ந்த படமாக இருந்தாலும் இந்தப் படம் ஒரு முக்கியமான தத்துவத்தை மையமாக வெளிப்படுத்துகிறது. ஒரு தத்துவத்தின் மேல் வன்முறையை கையாண்டு இருக்கிறார் இயக்குநர். கையாள்வது மட்டும் இல்லாமல் அதனை பார்வையாளர்களிடமும் கடத்தியிருக்கிறார். வாழ்வில் நாம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இறுதியில் ஒன்று மட்டும் உறுதி. அதுதான் மரணம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்வில் ஒருவரின் எதிர்வினை என்பது அவர்களுடைய சூழ்நிலைகளைப் பொருத்துதான். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு திரைபடத்தில் இருந்து எடுத்துகொள்வதற்கு பல தத்துவங்களும் வாழ்வு குறித்த புரிதல்களும் கிடைத்தன. பல்வேறு காட்சிகள் அப்டியே மனதிற்குள் புகைப்படமாக ஒட்டிக்கொண்டன. அதில் முக்கியமாக இறுதிக் காட்சியில் அந்த சிறுவர்களின் சிரிப்பு, படம் பார்த்து பல நாட்கள் ஆகியும் நீங்கவில்லை.
திரைமொழி:
இந்தத் திரைப்படம் கதையைத் தாண்டி எல்லா அம்சங்களையும் முழுமையாக திருப்திபடுத்தியிருந்தது.
அது திரைப்படத்தில் கேமரா பார்வையாளர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்ததில் தொடங்கி இசை, பாடல் வரிகள், படத்தொகுப்பு, காட்சிமைக்கப்பட்ட இடங்கள் என அனைத்திலும் சிறப்பாக இருந்தது.
கதை தாண்டிய ஒரு விமர்சனம்:
ஒவ்வொரு முறை ஒரு இலக்கியம் கலை சார்ந்த படைப்பினை நான் விமர்சனதுக்குள்ளாக்கும் போதும் எனக்கு சாதஹ் ஹசன் மண்டோவின் வரிகள் நினைவுக்கு வந்துவிடும்.
“Literature can never be obscene and it is a mirror of society.”
எப்போதுமே கலைப்படைப்புகள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் திரைப்படங்கள் வன்முறையைக் கொண்டாடத் தொடங்கியது போல் இருக்கிறது. ‘Glorification of violence’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். அது தொடராமல் இருந்தால் திரைப்படங்கள் நிறைய ஆக்கப்பூர்வமான அறம் சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.
******