இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

பயணம் – அரவிந்தன் : கே.ஜே. அசோக்குமார்

கட்டுரை | வாசகசாலை

இந்த ஜானரில் வெளிவரும் ஒரே நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்தவகை நாவல்களை எழுதுவதற்கு ஒரு தயக்கமும் பயமும் இருப்பது நாம் அறிந்ததுதான். எப்படி எல்லா காலங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய‌ நாவல்களை நாம் எழுத முயற்சிக்கிறோமோ அப்படி இதை எடுத்துக் கொள்ளமுடியாது. நாவல்களின் வகைமையிலிருந்து சற்று வேறுபட்டு, ஆனால், வருங்கால‌ புதிய வாசகர்களை நோக்கிப் பேசும் நாவலாக‌, அரவிந்தன் எழுதியிருக்கும் பயணம் நாவலைச் சொல்லலாம்.

இப்படி ஒரு வாழ்க்கை இருப்பதை நாம் அறிவதற்கு இந்த நாவல் தேவை. இதன் கூறுமுறை மிக பழமையான வடிவத்தில் இருந்தாலும் வாசிக்கும் வாசகர்களுக்கு அதன் நேரடிதன்மையால் மிக புதிய வடிவத்தைக் கொண்டிருப்பதாக தோன்ற வைக்கிறது. காந்தி, மார்க்ஸ் போன்றவர்தாம் இன்று நேரடி ஆதர்ச புருஷர்களாக இருக்கும் இன்றைய வாசகர்களுக்கு விவேகானந்தரை ஆதர்சமாக கொண்டிருக்கும் ஒருவனது கதை எனும்போது சற்று புதியதாகத் தோன்றும்.

இன்று நவீன இலக்கியத்தில் தேடல்களும் வாழ்க்கை லட்சியங்களும் முக்கியமானதாக‌ கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் வாழ்வை மகிழ்வாக‌ அனுபவிக்கும் மன‌நிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம். எதையும் ரசனைக்கு உட்பட்டதாக மாற்றிக் கொண்டுவிட்டோம். பல்வேறு நுகர்வு கலாச்சாரங்களால் சேவை என்கிற மனப்பான்மையை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெறும் ரசிக்கும் மனநிலையை அடைந்துவிட்டோம். முன்றாக உடைத்து அதை பல கூறுகளாக்கி ஆராயும் பின் நவீனத்துவ பாணி வாழ்க்கையில், லட்சியவாத நாவலை வாசிப்பது இன்று வாசகனுக்கு மிகப் புதியது. ஒரு சிறு பகுதியை மட்டும் சொல்லி மொத்த வாழ்க்கையையும் ஆராயும் பாணி கொண்ட நாவல்களுக்கிடையே பழைய பாணி முழுவாழ்வை சொல்லி ஆராயும் போக்கு இன்றைய வாழ்வில் சலிப்பூட்டக்கூடிய‌ நாவல் வகைமையைச் சார்ந்ததாக இருக்கும்.

ராமநாதன் என்ற சிறுவன் தன் ஆதர்சமான விவேகனந்தனைப் போல மாற துறவு வாழ்வை மேற்கொள்ள‌ தன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். இதற்குமுன் பார்த்த ஒரு ஆசிரமத்திற்கு, அங்கிருந்த ஒரு சுவாமிஜியின் பேச்சால் உந்தப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேறி அங்கு வந்து சேர்கிறான். பதின்பருவத்திலிருந்து அவன் வளரும்போதே பல உண்மைகளைத் தெரிந்து கொள்வதும் தன் சேவையால் புதிய அனுபவங்களைப் பெறத் துடிப்பதும் நடக்கிறது, கூடவே பெண் சவகாசமும் அதனால் பணத்தை கையாடல் செய்யும் செயலையும் செய்கிறான். அதனால் ஆசிரமத்திலிருந்து தப்பித்து வெளியேறி பல இடங்களில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து புதிய ஆசிரமத்தை உருவாக்கி அதில் தலைமைச் சாமியாராக உருவாகிறான்.

ஒரு வகையில் பார்க்கும்போது எளிய பயணமாக தெரியும் அவன் வாழ்க்கை, உண்மையில் பல சிக்கல்களையும் அலைக்கழிப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. விவேகானந்தராக‌ ஆகத்துடிக்கும் லட்சிய எண்ணங்கள் கொண்ட ஒருவனது துறவும் சேவை எண்ணங்களும் மாறி மிக எளிதில் உணர்ச்சிகளுக்கு அடிமையாவதும் மிக எளிதில் பணத்திற்கு அடிமையாவதும் நிகழ்கிறது. மிகப்பெரிய அவனது லட்சிய கனவுகள் மாறுவதை அவனாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாவலில் இரண்டு இடங்கள் முக்கியமானவையாகப்படுகிறது. ஒன்று, சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய சில ஆண்டுகளில் லட்சிய மனிதனாக, நல்ல திடகாத்திரமான மனிதனாக ஆனபின், வீட்டிற்கு ச் சென்று அம்மாவையும் அப்பாவையும் தம்பியையும் சந்திக்கும் இடம். புனைவாக மனஎழுச்சி கொள்ள வைக்கும் இடம். சாமியாரானபின் தாயைச் சந்திப்பது ஒருவகையில் தன்னை வெளியே இருத்திக் கொள்ளும் அறிவிப்பைச் சொல்ல வருவது போல. தன் வயிற்றில் உருவான பிள்ளையை இந்த கோலத்தில் பார்க்க நேரும்போது ஏற்படும் அவலம், கோபம், இயலாமை எல்லாமும் இயல்பாக வெளிப்படுகிறது இங்கு.

இரண்டாவது தன் மனதிற்குப் பிடித்த காதலியை சாமியாரானபின் நினைத்து ஏங்குவதும் அவளை காணச் செல்லும் இடமும் நாவலில் முக்கியமான இடமாக குறிப்பிடலாம். தன் சொந்த சேவை மனநிலை, பிரம்மச்சரிய விரதம் இவற்றிற்கு எதிரானதாக இருக்கும் போது ஏற்படும் அலைகழிப்பு. அதை மீற முடியாமல் தவிக்கும் தவிப்பு இவற்றை விட்டு அவளைக் கண்டு அவளுடன் உறவு கொள்ளுவதும் மிகப் பெரிய வீழ்ச்சியாக ஆகிறது. இந்த வீழ்ச்சி அவனது எல்லா செயல்களிலும் தொடர்கிறது. தன்னை அழித்துக் கொண்டு புதிய ஒன்றை உருவாக்க நினைக்கும் எளிய மனிதனின் வாழ்க்கை. தன்னை மீண்டும் தொகுத்துக் கொண்டு மீண்டும் கம்பீரமான பெரிய மனிதனாக தன்னை உயர்த்திக் கொள்ள சற்று தாமதமாகிறது. அதற்குள் செய்தி அவன் அம்மா அப்பாவிற்கு சென்றுவிடுகிறது. தன் வீழ்ச்சிகளிலிருந்தும், எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி மேலேறுகிறான் என்பது நாவலின் மிச்ச‌ பயணம்.

இந்நாவல் குறித்து சில மெனக்கெடல்கள் ஆசிரியர் அரவிந்தன் செய்திருப்பது தெரிகின்றது. சேவார்த்திகளின் அன்றைய நிலை, யோகாசன முறைமைகளில் தெரியும் தேர்ச்சி போன்றவற்றைச் சொல்லலாம். கூடவே நாவல் நடக்கும் காலகட்டத்து சில அரசியல் நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய வாசல்களை திறந்தபடி செல்கிறார். பின்னால் அந்த கதவுகள் மூடப்படுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

குறிப்பிடும்படியான சில குறைகள் இருப்பதையும் சொல்ல வேண்டும். ஒன்றையே மீண்டும் மீண்டும் பேசுவதாகத் தோன்றும் இடங்கள் பல உண்டு. என்ன மாதிரியான ஆசிரமம் என்பது பற்றி அல்லது அங்கு செயல்படும் தினசரி செயல்ககளைப் பற்றியும் அதிகம் பேசாதது.

அனுபவங்கள் மூலமாக தன்னை அறிந்துக் கொள்ளும் இளம் துறவியின் இறுமாப்பும், தடுமாற்றமும் உயர்வும் வீழ்ச்சியும் எப்படிப்பட்டது என்ப‌தை நாம் உணர வைக்கும் நாவல். இதில் கூடவே சில அரசியல் நிகழ்வுகள் வருவது எப்போது எங்கு நிகழ்வது என்பதைச் சொல்ல பயன்படுகிறது.

வாசகனை புதிய பயணத்திற்கு அழைக்கும் முயற்சி, நாம் அறிந்த ஆனால், சென்று பார்க்காத பாதை, அதை எழுதும் துணிச்சல் போன்றவற்றிற்காக இந்த ‘பயணம்’ நாவலைப் பாராட்டலாம்.

kuppa.ashok@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button