
தெற்குப்புறம் வரிசையாக மங்களூர் ஓடுகள் வேயப்பட்ட ஒன்பது வீடுகளும், எதிர்ப்புறத்தில் நடுவில் அழகான சிமெண்ட் வளைவுகளுடன் கூடிய ‘வனத்துறை குடியிருப்பு’ என்ற கல்வெட்டும், அதன் இரு புறங்களில் ஏழு வீடுகளும் கொண்ட அந்தத் தெரு சாதாரணமானது தான்.
அது ஒரு சின்ன மலைப்பகுதி. அதனால வீடுகளின் முன்புறமெல்லாம் ஒரே மாதிரி இருக்காது. சில வீடுகளோட வாசல்கள் பெருசாவும், அங்கங்க சின்னப் பாறைங்க கருங்கல்லுங்க குறுக்காகவும், சில முற்றங்கள் சீராக இல்லாத முக்கோணங்களாவும் இருக்கும். எல்லா வீட்டுலயும் வேலி கட்டி எதாவது செடி வைச்சிருப்பாங்க. அநேகமாக ராமர் கலர், ரோஸ் கலர், நீலக்கலர் டிசம்பர் செடிங்க, மஞ்சள் அல்லது வெள்ளை சாமந்தி, வாடாமல்லிச் செடிங்க, முல்லைக்கொடி போல நாட்டுப்புறச் செடிங்களும், சில மிளகாய்ச் செடிங்களும்தான் இருக்கும். எல்லா தெருக்களைப் போலவும் அங்கேயும் வீடுகளின் பின்னாடி சாக்கடை ஓடும், குப்பைங்க சிதறிக் கிடக்கும். கோழிகளும் நாய்களும் பேண்டு வச்சிருக்கும். வாய் ஒடைஞ்ச பானைங்கள மண்ணுல கட்டுன பிரிமணைமேல வச்சி குளுவத்தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க. முறைதவறிய உறவுகளும் அங்க உண்டு. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது காதலிக்கும் சிறுவர்கள் உண்டு. வீடுகள்ல சண்டைங்க நடக்கும். எல்லாரையும் பத்தி புறணி பேசுவாங்க. ஆனாலும், அவங்க எல்லாருமே அந்த தெருவைப்பத்தி பெருமையா நெனைச்சாங்க.
மலப்பகுதி அப்பிடின்றதால அந்தத் தெரு தென்கிழக்குப் பக்கம் உசந்தும் எதிர்ப்புறம் தாழ்ந்தும் ஏரிக்கரையில் போய் முடியும். வீடுகளின் தொடர்ச்சியாக அடர்ந்த மரங்களும், ஒரு இயற்கையான சிறு ஏரியும் இருக்கறது அபூர்வமானது தான. விருந்தாளிங்க வந்தா எல்லா வீட்டுக்கும் போய் பேசிக்கிட்டிருப்பாங்க. அந்த தெருவே ஒரு பெரிய குடும்பம் போலவே லீலி புஷ்பத்துக்குத் தோணும். அங்க இருந்தவங்க பெரும்பாலும் முதல் தலைமுறையா வேலைக்கு வந்தவங்க.வனத்துறை ஸ்கூல்ல வேலை பார்க்கும் வாத்தியார்கள், அலுவலகப் பணியாளர்கள் பாரஸ்டர்கள் கார்டுகள் அப்டினு பலவிதமானவங்களும் இருந்தாங்க. வால்பாறை, பாளையங்கோட்டை, வந்தவாசி, செய்யாறு, திருப்பத்தூர், சுந்தரம் பள்ளி, வேலூர்,சேலம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் அப்டின்னு எல்லா எடத்துலயும் இருந்து வந்தவங்க இருந்ததாலயே அந்த எடத்துக்கு அந்தஸ்து அதிகம்.
கோழி வளக்கறது அவங்க எல்லாருக்குமே புடிச்ச விஷயம். மூங்கில் கூடையில ஆரஞ்சு, பச்சை, சிகப்பு, ஊதா, மஞ்சள்னு கண்ணைப் பறிக்கும் கலர்ல அழகான பூவுங்க மாதிரி ‘கீச்..கீச்’னு கத்திக்கிட்டிருக்கும் கோழிக்குஞ்சுகளை சைக்கிள்ல் வச்சி தள்ளிட்டு வரவங்களை லீலி புஷ்பத்துக்கு புடிக்கும். எந்த பரபரப்பும் இல்லாத ஜவ்வாது மலையோட இந்தமாதிரி சின்னஞ்சிறு கிராமங்கள்ல அன்றாட சுறுசுறுப்பைத் தருவது இந்த மாதிரி ஆட்கள் தான். கோழிக்குஞ்சு வாங்க ஈஸ்பரி அக்கா, எலீஸ் ஆண்ட்டி, கனகு டீச்சர், லீலா அக்கா, கிளார்க் பொண்டாட்டி , ராஜி அக்கா எல்லாரும் ஒண்ணா வந்துடுவாங்க. அந்தத் தெருவே அப்படித்தான். தக்காளி கூடை, குச்சி ஐஸ் வண்டி, ரோஜாப்பூ தொட்டி விக்கறவரு, ஜாக்கெட் பிட் விக்கறவரு, மீன்காரர், வளையல்காரர்னு யார் வந்தாலும் கூட்டமா வந்துதான் பேரம் பேசுவாங்க. அப்பவெல்லாம் டீவி சீரியல், ஸ்மார்ட் போன் எதுவும் கிடையாது. சின்ன பிள்ளைங்களுக்கும் அம்மாக்களுக்கும் இது போல வேளைகள்தான் நல்ல பொழுதுபோக்கு. லீலி புஷ்பம் எப்பவும் இந்தக் கூட்டத்துல முன்னாடி நிப்பா. அம்மா வந்து, ‘ஏ வாய் பாத்தவளே, தூர வா பிள்ளே…கூடைய சாச்சுடாத’ அப்பிடின்னு இவ தலையிலே ஒண்ணு வைப்பா. ‘வெல கேக்கறதுக்கு தங்கம்மா டீச்சர்தான் சரி’ன்னு கூட்டத்துல யாராவது சொல்வாங்க. அம்மாவும் பத்துருவா சொல்றவன் கிட்ட துணிஞ்சு ரெண்டு ருவாய்க்கு குடுன்னு கேப்பாங்க. அவனுங்களும் கடைசியில அஞ்சு ருவாக்கு தந்துட்டு போவானுங்க. அதனாலதான் பேரம் பேச எல்லாரும் அவங்களத் தேடுறது. அப்பிடித்தான் அன்னைக்கு அஞ்சு ருவாய்க்கு ஏழு கோழிக்குஞ்சுன்னு அம்மா பேசி முடிச்சா. லீலி புஷ்பமும் குட்டி தினாவும் பச்சை மஞ்சள்னு கலர் பாத்து வாங்கின கோழிக்குஞ்சுகளை அலுமினிய அன்னக் கூடையில வச்சு வீட்டு பின்னாடி பெஞ்ச்சில படுத்திட்டு இருந்த ஸ்பென்சர் கிட்ட காட்டிக்கிட்டு இருந்தாங்க. அவனால நடக்க முடியாது.பேசமாட்டான். ஆனா, இவங்கள விட ஜாலியா அந்தக் கோழிக்குஞ்சுங்களைப் பாத்து துள்ளினான். அப்ப கீதா டீச்சர் வந்து கூடைய எட்டிப் பாத்துட்டு, “மெஷின்ல பொறிச்ச குஞ்சுங்க; அதான் வெளியில் வந்ததும் இப்பிடி சத்தம் போடுதுங்கன்னு” சொல்லிச்சு. அந்த டீச்சர் ஒரு மாமி, இப்பிடியாபட்ட எல்லா கதையும் அதுக்குத் தெரியும்.
‘ஆமா..இதுங்களுக்கெல்லாம் தாய்க்கோழி இல்ல’ன்னு அம்மா சொல்லவும் இவளுக்கு திக்குன்னு இருந்துச்சி. இவ்ளோ சின்னக்கோழி எப்பிடி அம்மா இல்லாம இருக்கும்னு வெசனப்பட்டா. லீலி புஷ்பத்தால அம்மா இல்லாம இருக்கவே முடியாது. இத்தனைக்கும் அம்மா எப்பவும் அவளத் திட்டிக்கிட்டும், மண்ட மேல் கொட்டிக்கிட்டும்தான் இருப்பா. சினிமாவுல , கதை புஸ்தகத்துல வர மாதிரி கொஞ்சவெல்லாம் மாட்டா. ஆனாக்கா கண்ணாடி பாட்டிலை ஒடச்சுட்டு இவ அழுகை பொங்க நிக்கறது, ரேஞ்சாபீசர் வீட்டு திருப்பத்துல கொரைக்கற நாயிக்கு பயந்து நடுங்கற நேரம், ஏ ஒன் வீட்டுல இருக்கற சிவா அண்ணன் தண்ணி புடிச்சிட்டு வரையில் வழிய மறிச்சிகிட்டு எதாவது கேட்டு இவ முழிச்சிகிட்டு நிக்கறது, பட்டுப்பண்ணையில கொய்யாக்கா பறிக்கப்போயி காலுல சப்பாத்தி முள்ளு ஏறி நொண்டறது எல்லாமே அம்மாவுக்கு கரெக்டா தெரியும். எங்க இருந்தோ வேகமா வந்து இவளை அந்த எடத்துல இருந்து இழுத்துட்டுப் போயிடுவா. அவ சேலை முன் கொசுவத்தை இழுத்து மூடிகிட்டாலே லீலி புஷ்பத்துக்கு எல்லா பயமும் போயிடும். அதனால இந்தக் கோழிக்குஞ்சுகளைப் பாத்தா அவளுக்குப் பாவமா இருந்துச்சு. அதுக்கேத்த மாதிரி அதுங்களும் ரெண்டு நாளுல செத்துடும். இவங்களும் சலிக்காம ஒவ்வொரு முறையும் வாங்குவாங்க. லீலி புஷ்பமும் குட்டி தினாவும் இப்பிடி கலர் கோழிக்குஞ்சு வளக்கறது, ஏரியில இருந்து சின்ன மீனுங்களப் புடிச்சினு வந்து கண்ணாடி பாட்டிலுல வளக்கறது, ‘கட்டிப் போட்டா குட்டி போடும்னு’ ஒரு கத்தாழச் செடிய ஃபாதர் பண்ணையில இருந்து திருடிட்டு வந்து தொங்க வுடரதுன்னு நெறய பண்ணுவாங்க. எல்லாத்துலயும் அவங்கண்ணன் பென்சரக் கூட சேத்துப்பாங்க. அவனும் எல்லாத்துக்கும் உம் உம்னு இவங்க கூட சேந்து சத்தங்குடுத்துகிட்டு இருப்பான். இவங்க வெளையாட்டுக்கு ஏத்த மாறி அவனை பஞ்சரு, பெனியல், முட்டக்கண்ணன்னு எல்லாம் கூப்பிடுவாங்க. அவனும் எப்படா இவங்க ஸ்கூலுல இருந்து வருவாங்கன்னு பாத்துனு இருப்பான்.
இவ அப்பா அம்மாவப்போல தைரியமானவங்க அந்த தெருவுல யாரும் கெடையாது. இவங்க வீட்டுக்கு வரவங்க எல்லாருமே வேற மாறியானவங்க தான். கருவாடு விக்கறதுக்கு நெட்ட மாடத்தின்னு ஒரு அக்கா வரும். அந்தக்கா ஆம்பள பொம்பள ரெண்டுமுன்னு இவளுக்கு அப்ப தெரியாது. நல்லா கருகருன்னு ஆறடி ஒசரத்துல கணுக்காலுக்கு மேல சேலய கட்டிகிட்டு ஆட்டிகிட்டு நடந்து வரும். அது ஏன் அப்டி நடக்குதுன்னு இவ நெனைப்பா. இவ அம்மாவத் தவிர அந்த குவார்ட்டடர்சில் யாரும் அதை வீட்டுக்குள்ள ஏத்த மாட்டாங்க. அது செல நேரம் பஸ் ஏறி அம்மாவப் பாக்குறதுக்குன்னே வரும். “ஏ அண்ணி, ரண்டு மாசமா திருப்பத்தூரு பஸ் ஸ்டாண்டுல உன்னிய தேடினன். இன்னாடின்னு என்னிய கேக்கறதுக்கு ஒலகத்துல இருக்கறதுல நீயும் ஒருத்தி”ன்னு சொல்லி, படுக்கையில இருந்த பென்சர கட்டிக்கினு கட்டக்கொரலுல அழும். அம்மாவும் அது கிட்ட சொந்தமா கதை கேட்டுக்கிட்டு இருப்பா.
அஜீஸ்னு ஒரு ஒத்தக்கை வடநாட்டு பிச்சைக்காரன் வருவான். இந்தி மட்டுந்தான் அவனுக்குத் தெரியும். பழைய கிழிஞ்ச துணிங்கள குப்பையில இருந்து பொறுக்கி, இடது கையையும் காலையும் வச்சி எப்பவும் தச்சிகிட்டு இருப்பான். ஒரு ரூபாய்க்கு மேல யார் குடுத்தாலும் வாங்க மாட்டான். “குச்சிமல்லி ஹாத்தா ஹேன்னு” ஏதோ பாட்டை ராகமா பாடிகிட்டே வருவான். ரசம் சோறு குடுத்தா வாங்கிப்பான். வேற எதை அவன் தட்டுல போட்டாலும் வேணாம்னு கொட்டிடுவான். இவ அப்பா ஆபிராம் இருந்தா வாசலுல உக்காந்து பாடிகிட்டு, துண்டு சிகரெட் வாங்கி புடிச்சிட்டு இருப்பான். பென்சர் கிட்ட வந்து ரெண்டு வெரலால அவன் நெத்தியோட ரெண்டு பக்கத்தையும் புடிச்சி மந்தரம் மாறி சொல்லுவான். வாணியம்பாடி பஸ்ஸ்டாண்டுல பைத்தியமா சுத்திட்டு இருந்த அவனை டிக்கெட் போட்டு இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்ததே இவ அப்பா ஆபிராம் தான்னு அந்த தெருவுல பேசிக்குவாங்க. ஆனா, யாரும் இவ அப்பா முன்னாடி நின்னு பேச மாட்டாங்க. பெரிய மீச வச்சி மொரட்டுத்தனமா அவர் உருவத்தப் பார்த்தாலே அந்த தெருவுல பாதி பேருக்கு பயத்துல பேதி புடுங்கும்.
அது போக நொண்டிக்காலன் குமாரு, கழுத்த முறிச்சான் கோயிந்தன், செய்வினை வைக்கிற குருஜி சாமியாரு, வைதம் பாக்கற குப்பன், ஒன்றரக் கண்ணு வேம்படியான், சந்தனக்கட்ட வெட்டற திருமல அப்டின்னு நெறய பேரு இவ அப்பாவத்தேடி வருவாங்க. அவங்க எல்லாம் செல நாள் கூட்டமா வந்து இவங்க வீட்டு கொய்யா மரத்தடியில பெஞ்சுல படுத்திருக்கற பென்சர சுத்தி வட்டமா உக்காந்துகிட்டு சிரிச்சி பேசிட்டிருப்பாங்க. உள்ளங்கையில காஞ்ச கஞ்சா எலைங்கள வச்சி தேச்சி தேச்சி குழல் மாதிரி இருக்கற மண் சிலும்பியில நெரப்பி, அடியில சின்னத் துணி சுத்தி பத்த வச்சி, மாத்தி மாத்தி இழுத்து பொக உட்டுட்டு இருப்பாங்க. அப்பா நடுவுல உக்காந்துட்டு
“ஆலமரம் ஆலமரம் பாலூற்றும் ஆலமரம்
காலத்தின் கோலமெல்லாம் கண்டுணர்ந்து
நிற்கும் மரம்”
– அப்டினு சத்தமா பாடுவார்.
பைப் புகை சூழ அவங்க உக்காந்திட்டிருக்கறதப் பார்க்கையில லீலி புஷ்பத்துக்கு அவங்க வீட்டுல மாட்டியிருக்கற இயேசுவும் அவர் சீடர்களும் நடுவாக உக்காந்து திராட்ரசக் கோப்பையைக் கையில வச்சி ஜெபிக்கிற ஆயில் பெயிண்ட் ஓவியத்தைப் பார்க்கற மாறியே இருக்கும். அந்த குவார்ட்டர்ஸில் மத்த வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் இந்த மாறி ஆளுங்க கிட்ட பேசக்கூட மாட்டாங்க. அங்க எல்லார் வீட்டுலயும் நெறய கோழிங்க இருந்துச்சி. அப்பவெல்லாம் நாட்டுக்கோழின்னு தனியா சொல்ல மாட்டாங்க. செகப்பு வெள்ளை, மஞ்சள் நெறத்துல கருப்பு பொரி பொரியா, செங்கல் கலர், வெள்ளையும் கருப்பும் கலந்ததுன்னு நெறய கோழிங்க அங்க இருக்கும். வீடுகளின் பின்னாடி கோழிக்கூண்டுங்க கட்டியிருப்பாங்க. சின்னதா மூணுக்கு மூணு அடியில மண் வச்சி பூசி மேல எதாவது தகரம் வச்சிருக்கும். கடும் பனியும் குளிருமா காடு, மரங்கள் இருக்கற எடம் அப்பிடின்றதால மூங்கில் கோழிக்கூடையில வச்சி மூட முடியாது. நைட்ல காட்டுப் பூனை நாயி, கீரிப்புள்ளை, நரி இப்டினு எதாச்சும் வந்து புடிச்சிட்டு போயிடும். அது போக அப்பவெல்லாம் அந்த ஜமுனாமரத்தூரே ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் அடங்கிடும். இவங்க வனத்துறை குடியிருப்பு வேற ஊர்ல இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். தெருவுக்கு மேப்புறம் சின்ன சுடுகாட்டு ஏரிக்கரையில போற ஜேஎம்எஸ் பஸ் ஆரன் சத்தம் ஏழரைக்கு கேக்கும். அதுக்கப்புறம் எங்காவது கேக்கற சைக்கிள் மணி சத்தங்க தவிற வேற எதுவும் இல்லாம காட்டு சத்தங்க மட்டுந்தான் இருக்கும். லீலி புஷ்பத்துக்கு பனிக்கூதலில் ரெண்டு கதர் போர்வை போர்த்திக்கிட்டு ராவோட சத்தங்களக் கேட்டுக்கிட்டே புக் படிக்கறதுக்கு பிடிக்கும். மழைக்காலங்கள்ல ஓயாத ‘கொர் கொர்’னு தவளைச்சத்தம், இருட்டுல அந்த ஓட்டு வீடுகளின் மேல் உருளும் ஆந்தைகளின் தடதடப்பு, கீச்சுன்னு சில்வண்டுங்க, நாய்களின் ஓலங்கள், கிராப்ட் சார் வீட்டு பின்னால் நிக்கும் புளியமரத்துல எதாவது பறவைங்க கலயற சத்தம், யூகலிப்டஸ் மரங்கள்ல காத்து அலயுற சத்தம், பூனைகளின் அழுகைக்குரல்கள் அப்டின்னு படுத்துகிட்டு கேட்டுகிட்டே எதாவது யோசிச்சிட்டிருப்பா. ஏரிக்கரைக்குப் போற வழியில எட்டி, மூங்கில், வாகை, ஈட்டி, புங்கன், புளியன், நுணா அப்டின்னு பல மரங்களும் காட்டுக்கொடிங்களும் லண்டானா புதர்களும் நெறஞ்ச சின்ன காட்டுப்பகுதியிலிருந்து இனந்தெரியா ஓசைகள், சின்னச் சின்ன ஜீவராசிகளோட திடீர் அலறல்கள்னு மாறி மாறி கேக்கும். அவ அண்ணனைப் பாத்துக்கற ரஞ்சனியும் அமுதாவும் அதெல்லாம் பேய் பிசாசு கத்துறதுன்னு வேற சொல்லியிருந்தாங்க.
அப்டித்தான் அன்னைக்கு நைட் ஆறாங்கிளாஸ் இங்கிலீஷ் பொயட்ரிய மனப்பாடம் பண்ணிக்கிட்டிருந்த லீலி புஷ்பத்துக்கு என்னமோ ‘தடால்’னு சத்தங்கேட்டுச்சி. அமைதியா கேட்டா. திரும்பவும் கொஞ்ச நேரங்கழிச்சி ‘தடால்’னு செவுத்து மேல் ஏதோ உழுந்த மாறி இருந்துச்சி. இவ எழுந்து வரவும் இவங்கண்ணன் பெனியல் ‘ஊ ஊ’ன்னு சத்தங்குடுத்தான். “எதோ உழுந்துச்சா பெனியல்?” னு இவ கேக்கறா.அவன் படுக்கையிலயே துள்ளி துள்ளி கத்தறான். இவங்க பேசற சத்தங்கேட்டு அம்மா எழுந்து வந்து”என்ன பிள்ளேங்கறா”. “ என்னாவோ வந்து உழுதும்மா”ன்னு இவ சொல்லவும், வீட்டு பின்னால இருந்து ‘தொம்’முன்னு சத்தம் கேக்குது. அம்மா பின்கதவைத் திறந்து வெளியில போய் பாக்கறா. லேசான மஞ்ச வெளிச்சம் வர்ற குண்டு பல்பு மட்டுமே எரியுது. லீலி புஷ்பத்துக்கு அந்த இருட்டைப் பார்த்தாலே நடுங்குது. அம்மா எதுக்கும் பயப்பட மாட்டா. வெளியில நின்னு ‘ஓடு நாயே’ன்னு வெரட்டிட்டு உள்ள வரா. ‘நீ போயி படு புள்ள; யிங்க ஓடுதுங்கன்னு’ சொல்லிக்கிட்டே பெனியலைத் திருப்பி படுக்க வச்சி தலகாணிய வக்கிறா.அவனுக்கு திரும்பி படுக்க முடியாது. லீலி புஷ்பத்துக்கு தூக்கமே வரலை ‘கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்னு’ திரும்பத்திரும்ப ஜெபம் சொல்லிகிட்டே கண்ணை இறுக்க மூடிக்கிறா. காலையில அவ எழுந்ததே வெளியில கூச்சலைக் கேட்டுத்தான். போயி பாத்தா தெருவே கூடி நின்னு பேசிக்கிட்டிருக்காங்க. கிளார்க் வீடு, சாமுவேல் சார் வீடு ரெண்டு வீட்டுல இருந்தும் கோழிங்க திருடு போயிடுச்சி. வீட்டு பின்னாடி நெறய கருங்கல்லுங்க கெடந்துச்சி. ‘ஐயோ..ஐயோ நல்ல செகப்பு சேவல், பெரிய பெரிய பொட்டக்கோழிங்க’ன்னு நர்கீஸ் கெளவி பொலம்பிகிட்டு கெடந்தா. “நைட் நான் கதவைத் தெறந்து பாத்தேன். அப்ப எதுவும் தெரியல”ன்னு அம்மா சொல்லவும், “டீச்சர், நீங்க கொரல் குடுத்திருந்தா வந்து பார்த்திருப்போமேன்னு’ சரவணன் சார் சொல்றார். அவர் அப்பத்தான் புதுசா மலைக்கு வந்து வேலையில ஜாயின் பண்ணியிருக்கார். கல்யாணம் ஆகாதவர். ராத்திரியில ரெம்ப நேரம் சுமதி டீச்சர் வீட்டுல பேசிக்கிட்டு இருப்பார். ‘இவன் அந்நேரத்துக்கு அவ வூட்டுல தான் இருந்திருப்பான். இவம்மேல தான் யார்னா கல்லடிச்சாங்களோ இன்னாவோ’ ரஞ்சனி மெதுவா சொல்றா. லீலி புஷ்பம், சௌந்திரி அமுதா மூணு பேரும் சிரிக்கறாங்க. “என்னாடி சிரிக்கறீங்க?” ன்னு அம்மா அதட்டுறா. இவளுங்க இன்னும் சிரிக்கறாளுங்க.
அன்னிக்கு அந்த தெரு பூரா திருட்டுக்கதைங்க, எகிறி குதிச்ச கதைங்கன்னு போவுது. ரெண்டு நாயி சத்தமா கொரச்சாலே அதப்பாக்க அவங்கல்லாம் ஓடி வந்துடுவாங்க. இப்பிடியாபட்ட எடத்துல கோழி திருடு போன கதையெல்லாம் அல்வா மாறி. மென்னு மென்னு துப்புனாங்க. சந்திரா அக்கா,மாரியம்மா ரண்டு பேரும், ‘எனக்கே ஒரு முட்ட நாப்பது காசுக்கு வித்தா. இப்ப கோளியே பூடுச்சி.இன்னா பண்ணுவா?’ன்னு நர்கீஸ் கெளவியப் பாத்து ரகசியமா சிரிச்சாங்க. அன்னிக்கு ராத்திரி பத்து மணி வரைக்கும் எல்லாரும் தெருவுல நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. லீலி புஷ்பத்துக்கும் அமுதாவுக்கும் இதெல்லாம் திருவிழா மாறி. ஓடி ஓடி அங்கங்க கதை கேட்டுக்கிட்டு, பெனியல் கிட்ட ஒவ்வொருத்தர் சொல்றதையும் வந்து சொல்லிக்கிட்டு இருந்தாளுங்க. பீ.டி சார் கைல சின்ன டார்ச் வச்சிக்கிட்டு ஒவ்வொரு வீட்டு பின்னாடியும் பாத்துட்டு இருந்தாரு. சரவணன் சார், வாச்சர் சிவன், பரந்தாமன் சார் எல்லாரும் கூட போனாங்க. இவங்க குவார்ட்டர்ஸ் பின்னாடி பாதி கட்டி முடிக்காம ஒரு பெரிய வனத்துறை கட்டடம் இருந்துச்சி. அங்க ஒரே இருட்டா இருக்கும். அதுக்குள்ள கூட லைட் அடிச்சி பார்த்தாங்க.கடசில எல்லாரும் ஒரு வழியா போயி படுத்துட்டாங்க.
அடுத்த நாள் காலையில அஞ்சறை மணிக்கெல்லாம் சத்தங்கேட்டு லீலி புஷ்பம் எழுந்து வந்து பாக்கறா. இன்னிக்கு கனகு டீச்சர் வீட்டுலயும் சந்திரா அக்கா வீட்டுலயும் கோழிங்களக் காணம். எல்லாரும் கூடிப் பேசி காவல் இருக்கனும்னு முடிவு பண்ணாங்க. அன்னிக்கும் சாயந்தரத்துல இருந்தே அந்தத் தெரு பரபரப்பாயிடுச்சி. எட்டு மணி இருக்கும். தீடீர்னு பின்பக்க கட்டத்துல இருந்து கல்லுங்க வந்து உழுது. எல்லாரும் ஓடறாங்க. டார்ச் லைட், கொம்புங்க கல்லுங்க எல்லாந்தூக்கிகிட்டு அண்ணனுங்க, சாருங்க எல்லாம் போறாங்க. ‘டேய், டூய்’னு சத்தம். தடார்னு திரும்பவும் கல்லு உழற சத்தம். ஐயோ அம்மான்னு சரவணன் சார் குரல். அவர சாமுவேல் சாரும் பியூனும் கூட்டிட்டு வராங்க. நெத்தியில கல்லு பட்டு ரத்தம் வருது. அவர சைக்கிளில் ஒக்காரவச்சி கூட்டிட்டு போயிட்டாங்க.
இதுக்கப்பறம் ரெண்டு நாள் அமைதியா இருந்துச்சு. கோழி எதுவும் காணாமப் போகல. திர்ணாமலையில தலைமையாசிரியர்களுக்கு சியிஓ நடத்தன ரிவியூ மீட்டிங்குக்குப் போயிருந்த இவ அப்பா அன்னிக்குத்தான் வந்தாரு. இவளும், குட்டி தினாவும் அப்பாகிட்ட கதை கதையாகச் சொல்றாங்க. பெனியலும் கூட சேந்து கிட்டு ‘ஊம்..ஊம்’னு துள்ளறான். அப்பா எல்லாத்தையும் கேட்டு மீசைய நீவிக்கிட்டு சிரிக்கறாரு.”ஏ தங்கம் அந்த ஆலாஞ்சனூர் தொரைதான்னு” சொல்றாரு. “ஆமா, ராத்திரி நீரு கதவத்தெறந்து போட்டு இருக்காதீரும்.உள்ள பூந்திருவானுங்கன்னு” அம்மா சொல்றா.
மறுநாள் காலையில ஒரே சத்தம். பரந்தாமன் சார், ஏ ஒன் சிவா சார், லில்லி டீச்சர்னு ஏழெட்டு வீட்டுல கோழிக்கூண்டு காலியா கெடக்கு. சாமுவேல் சார் வீட்டு பின்னாடி இருந்த பித்தளை அண்டா, கணேசன் பாரஸ்டர் வீட்டு பின்னால் கெடந்த இரும்புக் கம்பிங்க, சிமெண்ட் மூட்டை, சுமதி டீச்சர் வீட்டு கொடியில் காஞ்சிட்டிருந்த சரவணன் சாரோட பேண்ட் சட்டைங்க எல்லாமே காணம். ‘ஐயோ அம்மா.. கட்டயில போக.. பாம்பு புடுங்க, ஆ ஊ’ன்னு எல்லாரும் கத்திகிட்டு கெடந்தாங்க. இவ அப்பா ராத்திரி பைப் புடிச்சிட்டு ஒக்காந்திருந்தவர் பின் கதவ மூடல. அவர் கழட்டிப் போட்டிருந்த சட்டை பின் கதவுல தொங்கிட்டு இருக்கு. அதுல ரூபாயும் சில்லறையுமா பணம் இருக்கு. பக்கத்துல அவர் கழட்டிவச்ச வாட்ச், தங்க மோதிரம் எல்லாமே அப்பிடியே இருக்கு. இவங்க வீட்டு கோழிக்கூண்டு மட்டும் தெறக்காம கெடக்கு.
அம்மா வந்து, ‘நம்ம வீட்டத்தவிர ஒருத்தர் வீட்டுலயும் இப்ப கோழி இல்லை’ன்னு சொல்றா. ஏ ஒன், பரந்தாமன் சார் எல்லாம் இவ அப்பாகிட்ட வந்து பேசினாங்க. ‘சார். ஸ்டேஷனுக்குப் போகலாம்’னு கூப்டாங்க. அப்பாவும் போறார். அடுத்த நாள் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் ‘கெக்.. கெக்’னு கோழிங்க சத்தம். திருட்டுப்போன பாதி கோழிங்க திரும்பவும் கிராப்ட் சார் வீட்டு பின்னால மேயுதுங்க.எல்லாரும் ஓடிப்போய் பாக்குறாங்க. பித்தளை அண்டா, சிமிட்டி மூட்டை, துணிங்க, இரும்புக்கம்பிங்கன்னு களவு போன பாதிப்பொருளு அங்க இருக்கு.ஆளாளுக்கு அவங்கவங்களுதத் தேடி எடுத்துக்கறாங்க. எங்க கோழி உங்க கோழின்னு எண்ணிப் பாக்கறாங்க.
அன்னைக்கு சாயந்தரம் ஏரிக்கரையில கபோஸ் வெளையாடி முடிச்சி பாவாடை கொட போல பம்முன்னு பறக்க சுத்தி சுத்தி ஆடிக்கிட்டே லீலி புஷ்பம் வீட்டுக்கு வரா. இவ பின்னாடியே வாலு போல, ஸ்டியரிங் புடிச்சி வண்டி ஓட்டற மாறி ஆரன் சத்தம் குடுத்துகிட்டு தினாவும் ஓடி வரான். ஒத்தக்கொட்ட புளியா மரத்துல பறிச்ச கூங்காய கொணாந்து பென்சருக்கு குடுக்கலாம்னு வேகமா உள்ள போறாங்க. அங்க அவன் படுத்திருந்த பெஞ்சுக்கு பக்கத்துல அப்பா உக்காந்து பைப் பிடிச்சிட்டு இருந்தார். கஞ்சா சிலும்பியில நெருப்பு செகப்பா கனிஞ்சு பொகயறதப் பாக்க இவளுக்குப் பிடிக்கும். அதையேப் பாக்கறா. பொகை சுழண்டு மணக்குது. அப்பத்தான் அப்பா உக்காந்துட்டு இருந்த சேருக்கு கீழ அவர் காலடியில் ஒக்காந்திட்டிருந்தவனப் பாக்கறா. அவனும் சிலும்பிய வாங்கி கைய குவிச்சி இழுக்கறான். சின்ன உருவமா செகப்பு சட்டை போட்டு லுங்கி கட்டியிருக்கான். மொகத்துல கையில செராச்ச காயங்கள் கண்ணிப்போயி இருக்கு. “ஏண்டா திரும்பத் திரும்ப வந்த?” ன்னு அப்பா கேக்கறார்.
“ஐயா, சாராய துட்டுக்கு ரெண்டு புட்சினு கம்முனு போயிருப்பேன்.அவனுங்க என்னைச் சும்மானாச்சும் பொம்பள மின்னாடி கலர் காட்ட கல்லால அடிச்சானுங்கய்யா. அதான் நானும் சின்ன பையனும் அல்லாத்தையும் தூக்கினு பூட்டோம்”
“ஏ தொர, அறிவுகெட்டவனே..எதுக்கு இப்படி அடி வாங்கிச் சாவற?” – அப்டினு அம்மா திட்டிக்கிட்டே தட்டுல சோத்தைப் போட்டு அவன் முன்னாடி வைக்கிறா. அத்தோட, ‘ரத்தம் கட்டியிருக்கு இத்த தடவு’ன்னு கொட்டாங்குச்சியில் மஞ்சாத்தூளைக் கொழச்சித் தரா.
“அக்கா, ஐயா கூட அன்னிக்கு கதவத் தொறந்து போட்டு தூங்கிட்டு இருந்தாரு. நான் கை வக்கலயே. பென்சரு கூட சிரிக்குது பாரு” ன்னு சொல்லிட்டு அள்ளிச் சாப்புடறான். படுத்திருந்த ஸ்பென்சர் அவனைப்பாத்து கன்னம் ரெண்டும் குழியச் சிரிக்கிறான். லீலி புஷ்பத்துக்கும் குட்டிக்கும் சிரிப்பு வருது.
*******