பியானோவில் விளைந்த பசுமை
தேர்ந்த பியானோவின்
இசைக்கு
தனது
துதிக்கரங்களை ஆட்டி
நடனமாடுகிறது யானை.
முன்பு எப்போதும்
அது
கேட்டதில்லை
ஏறி இறங்கி
வளைந்தோடும்
உவப்பின் ஒலியை.
இசையின் வழியே
தனது காட்டின் எல்லைக்குள்
புகுந்து ஏறுகிறது.
ஒரு மேடான
ஒலியின் பகுதியை
மூச்சடக்கி உள்வாங்குகிறது.
மலைச் சரிவின்
நீளங்களில் ஆசுவாசம் கொள்கிறது.
இசையின் பிரதிக்குள்
கால்களை
முன்னும் பின்னுமாய் அசைத்தபடி
நீரில் நீந்துகிறது.
தனது நிலத்தின்
பசுமையைக் கண்ட யானை
வெடுக்கென எழுந்து
முற்றிய தளைகளை உண்ணத் துவங்குகிறது.
*** *** ***
பிங்க் கடல்
எப்போதும்
பிங்க்
நிறப்பொருட்களையே உபயோகிப்பவன் உலகம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமைப்
போல விடிகிறது.
அன்றைய தினத்தின்
ஒவ்வொரு அடுக்குகளையும் தனது ஆதர்ச நிறத்தினால் வடிவமைக்கிறான்.
காண்பது எதுவும்
கடப்பது எதுவும்
ஸ்பரிசிப்பது எதுவும்
மோகிப்பது எதுவும்
பிங்க் நிறத்தில் இருக்கும்படி
கவனிக்கிறவன் கண்கள்
இரண்டு பிங்க் நிறப் பழங்களாக விரிகின்றது.
அதே கணத்தில்
ஒரு பிங்க் வண்ண மீனாக தன்னை உருமாற்ற விழைகிறான்.
நீலம் தின்ற கடல்
அவனுக்காக
தனது வண்ணத்தை
பேரிசை முழங்க கரையினில் சென்று
துப்பியவாறே அலைகிறது.
*** *** ***
கானகத்தின் மூதாய்
பரந்த ஒரு வெண் பூவென பனியைத் தன் தலையில்
சூடியிருந்தது அம்மலையுச்சி.
தேன் சேகரிக்கச் செல்லும்
மலை மக்கள்
சேவலைப் பிடித்துத் தீயில் வாட்டுகின்றனர்.
தீயில் கசியும்
பறவையின் நிணத்தில்
பொழுதை எழுப்பும்
குரலின் ஓசை கேட்கிறது.
முதுகினில்
தனதிரு குழந்தைகள் சுமந்தவாறு தலை மேல் இரவிற்கான உணவோடும்,
மேலுயர்ந்த மலைப்பாதையில் தனது கால்தடங்கள் பதிய
சென்றுகொண்டே இருக்கிறாள் முடியாத தன் பயணத்தில்.
மேகங்கள் காட்டின் மீது தூரிகையிட்டுச் சென்ற கணத்தில்
மழையில் கரைகிறது
பச்சை ஓவியம்.
கசடு வாழ்வின் நிழல் தீண்டாத பகுதியில்
மூச்சுவிட்டுக் கொள்கிறாள் கானகத்தின் மூதாய்.
*** *** ***
பெருவாழ்வு
முதலை பற்றி அறியாத குட்டிசிங்கங்களைப் போல இந்த ஆற்றில் நகருகிறது வாழ்வு.
கடும் வெயிலில் காய்ந்திடவும்,
அடர் குளிரில் அடங்கிடவும்
மழை நீரில் குதூகலிக்கவும் அறிந்தேயிருக்கிறது என் செடி.
மண்ணில் பற்றியிருக்கும்
வாசனை முகர்ந்து,
தளிர்களின் பொன்பச்சை கண்டு,
பரவியிருக்கும்
வேர்களின் முடி தீண்டி,
நாசி கமழும்
இளம் இலைகளின்
செவ்வரித் தடங்களின் இடையில் காட்டைப் போல புதைகிறேன்.
ஒளியை சிநேகிக்கும் இலைகள்
சூரியக்கதிர் நோக்கி
தனது கிளைக்கரங்களை நீட்டும்.
யாமத்தினுள் பறந்து செல்லும் நீலப்பட்சிக்கு
முகம் எல்லாம்
இலைகளின் ரூபம்.
ஆற்றின் கரைகளில் மிதக்கும் கொடிகள்
பார்வையாளனைப் போல ஆற்றைப் பார்த்தபடியிருக்கின்றன.
புதர்களினுள்ளிருந்து ஏதோ கடந்து செல்கிறது.
ஆறு முதலையென நகர்கிறது.
குட்டி சிங்கமென நீந்திக் களிக்கிறது பெருவாழ்வு.
*** *** ***