
இரவு
இந்த மாலை கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது.
ஒருபோதும்
இறங்கமுடியாத
வழுக்குப்பாறையாக
விரியும் மனதை
ஆட்டுக்குட்டியைப் போல
கடந்தாக வேண்டும்.
பூச்சிகளாக மறையும் வாகனங்கள்
தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை.
ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென
ஓடுகின்றன.
மெல்லிய ஒளியின் கோடுகள் அணக்கமற்றிருந்த தெருவை தங்களது வெளிச்சப் புள்ளிகளால் அளந்து கொண்டிருந்தன.
சுவையற்ற வார்த்தைகளால் ஆன இரவு நீலம் பாரிக்கிறது
தனது கால்சிராயை இறக்கி விட்டு சிறுகுழந்தையைப்
பார்த்துக் கொண்டிருந்த வேடனொருவனின் பார்வையில்.
***
எருமையின் இறுதி ருசி
நிலவிருட்டில் வேகவேகமாய் கடந்து செல்லும் யாக் எருமைகள் நொடி தாமதித்தாலும்
பனிச்சிறுத்தைக்கு இரையாக வேண்டியது தான்.
உறைந்த வெந்நிலத்தில் வரையப்பட்ட கரும் வரியென
ஊர்ந்து செல்லும் எருதுகள் எந்நேரமும் தாக்கப்படலாம்.
ஓநாய்களிடமிருந்து கன்றுகளைக் காக்க வேண்டி
ஆழ்ந்த இறுக்கம் சூழ்ந்த கணங்களை
பனித்துகள்களென இலகுவாக்கிக் கொள்கின்றன பைஸன்கள்.
உடலெங்கும் கூராக்கப்பட்ட பற்களின் துவாரங்களை மொத்தமாகக் கிழித்த ஓநாய்கள்
தங்களது உண்ணுதலின் ஓசையினால் கடந்து போகின்றன எருமையின் இறுதி ருசியை.
***
ஆயிரமாயிரம்
உயிர்களுக்குத் தேவையான உணவை,
ஒரு இம்பாலா தனது கன்றை
மடு நிறைந்த உணவால்
ஆசுவாசப் படுத்துவதென
காடு வழங்கியபடியிருக்கிறது.
***
கூகுளைப் போல
புரிந்தவர்கள் இருப்பார்களா.
யார்
யாரைப் புரிய முடியும்?
யார்
யாரையும் புரியாவிட்டால் தான் என்ன?
நீ போய்க் கொண்டேயிரு.
யாருடைய பாதையிலோ யாராகவோ.
இல்லையென்றால்
உன்னுடைய பாதையில் நீயாக.
வேண்டுமானால்
இன்னும் ஒரு அப்பளத்தை பொறித்துத் தருகிறேன்.
*** ***