
அதற்குப் பெயர்
—————————
வார்த்தைகள் இல்லாததால் அல்ல
குவளையில் தளும்பி நிற்கும்
தேனில்
எத்துளியை முதலில் எடுப்பதென
திகைத்து நிற்கிறேன்
பார்க்கப் பிடிக்காததால் அல்ல
முழுவதும் பூத்த மலர்மரத்தில்
எப்பூவை முதலில் பார்ப்பதென
அசந்து நிற்கிறேன்
பேசியும் நோக்கியும்தான்
உணர்த்திட வேண்டுமென்றால்
அதற்கு காதலென்றா பெயர்?
உணர்த்தல்
—————————
பூமியின் மீதான
வெய்யோனின் கருணையென்றா
மண்ணின் மீதான
மழையின பிரியமென்றா
மனிதர் மீதான
மரத்தின் வாஞ்சையென்றா
உலகின் மீதான
காற்றின் ஈர்ப்பென்றா
புற்களின் மீதான
பூமியின் அன்பென்றா…
இதில் ஒன்றை மட்டுமா
அல்லது அனைத்தையும் கூறியா ..
எப்படிப் புரியவைப்பது…
காதலென்பது என்னதென்றே
உணராதவளிடம்
என் காதலை.
பத்திரமாய்
——————-
கசக்கினால் குப்பையாகி,
கீழே போட்டால் காணாமலாகிவிடும்
குறிப்பேட்டில் கிழித்த
சிறு தாள்தான்
இப்போது பத்திரமாகிறது…
அருமணியுடன் பெட்டகத்தில்
அதிலுள்ளதே,
அவள் தீட்டிய
ஒரு வார்த்தை.
***