
தீர்வதில்லை
மனம்கொள்ளாமலிருந்த நம்பிக்கைகள்
மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கின்றன…
பதற்றத்துடன் ஒருபோதும் தீர்ந்துவிடலாகாதென
மிச்சசொச்சங்களை ஊதிநிரப்பி வைக்கிறாள்…
அன்பின் மீதான கேள்விகளை அவநம்பிக்கைகளை
கண்டுகொள்ளாமலிருக்க எடுக்கும் பிரயத்தனங்களால்
அவை விஸ்வரூபம் எடுக்கின்றன…
எத்தனை பிரிவுகள்..!என்றபோதும்
தோழி ஒருத்தி தூரத்து நாட்டிற்கு
விடைபெற்ற நேரத்தில் ஆழத்தில் நழுங்கி
அன்று முழுவதும் அதிர்ந்து மனம்
உயிர்த்திருப்பது எத்தனை ஆனந்தம்.
***
ஔிர்வு
தனக்கான ஔியை
தானே சுமக்க விதிக்கப்பட்ட மின்மினிகள்…
வேட்டையில் தன் ஔியால்
தன்னைத் தானே காட்டிக்கொடுத்துக்கொள்ளும் மின்மினிகள்…
பார்வைக்கு எத்தனை பரிதாபதிற்குரியவை.
மின்மினிகளே அறியும்,
அவை…
சுடரவனின் துளி என,
அந்த கங்கின் உயிர்வடிவம் என,
அந்த பெருவெம்மையின்
குளிர் துளி என…
ஔியால் வீழ்ந்தாலும்
சுடர்என பறக்கும் வாழ்க்கை
எத்தனை மகத்தானதென.