
புல்லாங்குழல் துளைகளைப் பிரித்து
விரல் நுனியில் வைத்து…
பெருநிழலை சுமந்த பகல் எங்கோ
விடியல் பூ பறிக்கச் சென்றிருக்கையில்
மென்மையான கல் ஒன்று
கண்ணாடிக் குளத்துக்குள் வீழ்ந்து
மிதக்கிறது
ஏசுநாதரின் சிலுவையிலிருந்து ஒழுகும் உதிரம்
வரைந்த வழி பாயும் நதி
சுமந்திருந்த நீர் குடித்து வளர்ந்த மரங்களில்
ஒன்று சிலுவையாகிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை!
உந்தி உந்தி நடக்கும் போது இல்லாத வலி
மிகுந்திருந்த அவமானப் பொழுதில்
தன் விரல்களில் இருக்கும் துளைகளின்
மூடித் திறந்தவனின் கண்களின் வழி
சிறகடித்துப் பறக்கிறது
செவிக்கினிய இசை!
அதன் நுண்ணிய குறிப்புகளில்
இச்சமூகத்தின் தோல்களை உறிக்கும்
வன்மம் இல்லை!
பேரமைதியின் புறா பறந்து கொண்டிருந்தது
நுழையவே இயலாத அடர்வனத்துக்குள்
நுழையும் ரகசியம் இருந்தது
தாய்ப்பால் நிரம்பிய மார்பு இருந்தது
தலை கோதும் விரல்கள் அவனைச் சூழ்ந்தன
பேரிருள் கடலில் மிதந்து
மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது
இரவெனும் படகு.
***
இரண்டு கண்கள் சந்தித்தன
அவையிரண்டும் ஒருவரின் கண்கள்
சந்திப்பு வாய்க்காத கண்கள்
சந்தித்த போது
அழுத கதைகளைப் பற்றி
பேசிச் சிரித்தன.
***
உடலை இரண்டாகப் பிளந்து
உடல்களாக்கி
உலர்ந்த பழம் போல் தேனில் ஊற வைத்து
மெல்ல அழுக வைத்துப் பிழிந்து ரசமாக்கி
செய்த ஒயின்
என் கண்ணீர்…
***