கவிதைகள்
Trending

ப்ரின்சி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

செருப்புகளை உதறிவிட்டு தேவாலயத்தினுள் நுழைந்தேன்.
இந்த கடினமான வாழ்விற்குள்
நான் இன்னமும் இருந்தாகவேண்டிய
இரக்கமின்மையை
இதயச்சுவர்கள் எதிரொலிக்க சாட வேண்டியிருந்தது.
எரியும் மெழுகுதிரியின் முன்பு
பொங்கும் கண்களில்
கை கூப்பி இறுக்கி வெடித்த வேண்டுதலொன்று
உச்சிக்கூரைவரை வியாபித்திருக்கிறது.
சிந்தியிருக்கும் மெழுகுடன்
உருகிக் காய்ந்திருக்கும் பொருக்குத்தட்டிய பாரங்கள்
காலத்தின் நிறமேறி கடினப்பட்டிருக்கின்றன.
கையூன்றி எழுந்துபோன ஒருவருடன்
காற்றின் அழுத்தம் லேசாகியிருக்கிறது.
என்னருகில் மேடாகி சமைந்து போயிருக்கும்
பாரமொன்றைத் தொட்டுப் பார்த்தேன்.
உறக்கத்தின் இசைவான மூச்சு
உள்ளங்கையில் முட்டியது.
நான் பேச்சற்று தரையில் அமர்ந்தேன்.
சில்லென்று சதைக்குள் நிரம்பி வழியாத தவிப்பு.
இறுதியாகப் பார்த்துக்கொள்ள வேண்டிதான்
கிடத்தப்பட்டிருந்த உடல் நோக்கி முன்னேறியிருந்தேன்.
அருமையான அந்த உயிரிடம்
நான் காட்டியிராத நேசமனைத்தும் ஒருங்கேற
என் உள்ளங்கை நெற்றியைத் தொட்டுணர பார்த்தது.
ஆனால்
அந்த சுருண்ட தோல் கடும் சில்லிடலுக்குத்
தன்னை ஒப்புக்கொடுத்திருந்தது.
யாராலும் எனக்கு இனி
தரப்பட முடியாத மன்னிப்புக்காக
தாளா வறட்சியில் எனது நாவு தொங்கியிருந்தது.
நான் சிரம் தாழ்த்தி தரவேண்டிய
நன்றிக் குறிப்பும் அன்பும்
புதை நிலத்தின் புழு பூச்சிகள்வரை
சென்று சேர முடிகின்றது.
உறவுகளற்று உங்களின் சிரிப்பே உலகமென
அன்பு காட்டிய ஒருவருக்கு
நீங்கள் என்ன தருவீர்கள்?
நான் முடிந்தமட்டும் அவமதிப்புகளை
அள்ளி வீசியிருக்கிறேன்.
நான் மூக்கை உறிஞ்சிமுடித்தபோது
என்னெதிரில் புது பாரமொன்று வழிந்திருந்தது.
அது கடினப்பட காத்திருக்காமல்
கையூன்றி எழுந்தேன்.
நான் அழுகையுடன் எழுப்பிய வேண்டுதலொன்று
ஒரே மூச்சில் உச்சி தொட்டு
லேசாகி
காற்றில் மறைந்துகொண்டிருந்தது.

***

அகன்ற அந்த புல்வெளிக்கு வந்திருந்தேன்.
இளம்வெயிலின் மென்சூட்டில்
எனது சேலையை அகற்றிவிட்டு
குத்தும் சிறு புல்லிற்கு
உடலை நீட்டிப் படுத்தேன்.
தாலாட்டும் அமைதி என்னுடன் படுத்திருந்தது.
ஒரு பெருமூச்சில் என்னை லேசாக்கிக்கொண்டு
ஒருகளித்துத் திரும்பினேன்.
இடப்பக்கம் படுத்திருந்த அவன்
அன்பாய்த் தலையசைத்து முறுவலித்தான்.
இந்த விடுதலையின் அமைதியில்
இன்னொருவரும் என்னுடன் கலந்திருப்பது
மகிழ்வளிப்பதாய் இருந்தது.
“என்னுடலை உன்னுடன் இணைத்துக்கொள்ளவா?”
அவன் கண்கள் கேட்டன.
நான் தலையசைத்த பின்
எனது ஈரத்தை அவன் விரல்கள்
உறுதி செய்துகொள்ள இயங்கின.
முதல் அசைவில்
ஒரு மாபெரும் கடல் முன்பு நான் நின்றிருந்தேன்.
அடுத்தகட்ட அசைவில்
திறக்கவியலாத கதவுகளை
வலிமையுடன் தட்டிப் பார்த்தேன்.
வேகத்தின் பரபரப்பான அசைவுகளில்
மறுபடியும் அதே புல்வெளியில்
விழுந்த என்னை பொறுக்கிக்கொண்டு
எனது காட்டை நோக்கி விரைந்தேன்.
அசைவுகளின் நிறைவுப் புள்ளியில்
நான் கண்மூடி
நீண்ட வானத்தைப் பார்க்க முயன்றுகொண்டிருந்தேன்.
என் தோளை நெருங்கி அவன் படுத்துக்கொண்டான்.
பிறகு அணைப்பின் குரலில்,
“உனக்கு என்ன வேணும்?”
பார்த்திராத கேள்விகளை
நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?
மிஞ்சிப்போனால்
அது நன்றிகள் நவிழும் தருணமாய்தான் இருந்திருக்கிறது.
நான் பரவசமாய் அவன் கைபற்றி
உணர்ச்சிகள் தொண்டையை அடைக்க
கன்னத்தில்
ஒரு முத்தமிட சொல்லிக் கேட்டேன்.
அவனுடன் அடி ஆழம்வரை
இணைந்துகொண்ட நேரம்
அதுவாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.

***

ஒருநாளின்
சுரண்டலுக்குப் பின்
எனது தெருவின்
மஞ்சள் விளக்குமுன்
நின்றுகொண்டிருக்கையில்
எனக்குத் தோன்றுகிறது,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
எனது நகரத்தின்
ஓர் மூலையில்
எட்டிப் பாத்திரத்தை எடுக்கும்போது
தொடையிடுக்கில்
இழுக்கும் பளுவை உணர்பவள்,
சிரமத்துடன் முகம்பார்க்கையில்
நினைத்திருக்கக் கூடும்,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
எனது தெருவின்
நீலநிற வீட்டுப் பால்கனியில்
தம் அடித்துக்கொண்டிருப்பவள்,
இருநாட்கள் முன்பு
இடுப்பில் சிகரெட்டை அழுத்திய
தடத்தில்
அழுத்த முயன்று தோற்கும்போது
நினைத்திருக்கக் கூடும்,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
எனது அடுக்ககத்தின்
ஏழாம் மாடி
குளியலறை ஒன்றில்
வீரிட்ட நினைவுகளில்
தளர்ந்து சாய்ந்திருப்பவள்,
கண்ணீர் காய்ந்த நேரம்
நினைத்திருக்கக் கூடும்,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
எனது வீட்டில்
வேலைபார்க்கும் அக்காவின்
ஒலி உணராத
காதைத் திருகி
அவரின் தையல் இயந்திரத்தில்
தலையை முட்டும்போது
மறுபடி மறுபடி
நினைத்திருக்கக் கூடும்,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
அதோ,
எனக்கு எதிரில்
உடைகளைக் களைந்துவிட்டு
பலவீனத்தோடு
தன்னுடலைக் கையில் ஏந்தி
அதனுடன்
பேசிக்கொண்டிருக்கும் பெண்ணொருத்தி
இதையே தான்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது’
இதன் பிறகு
தரையில் வீழ்ந்து
நான் பெருங்குரலெடுத்து
கதறிக் கொண்டிருக்கையில்,
மஞ்சள் விளக்கு
மீண்டும் மீண்டும் சொல்கிறது,
‘நேசிப்பதென்பது எவ்வளவு எளிமையானது
தெரியுமா, கண்ணே!’

***

நான் நுழைந்திருக்கும் இந்த இடம்
ஒரு வதைகூடமாய்
இருக்கவேண்டுமெனதான் அனுமானிக்க முடிகிறது.
வெளிச்சத்தின் சிறுபொட்டில்
முனகல்களும்
பிளவுண்ட தரையில் ஈரமும்
தோலைத் தொடுகின்றன.
இருளில்
நிறைய உடல்களை மிதித்துக்கொண்டு
முகவரி தொலைந்த மன்னிப்புகள் எதிரொலிக்க
நான் வெளிச்சம் நோக்கிப் போனேன்.
கண்ணுக்கு அகப்படாத
பிறப்பிடத்தில் ஒளிர்ந்த வெளிச்சப்பொட்டில்
ஒரு உடல் குறுக்கிப் படுத்திருந்தது.
கைகளால் தொட்டு எழுப்ப முயன்றேன்.
சுருண்டிருந்த தோலில்
தழும்புகளின் தடிப்புகளை நான் உணர்வதற்குள்
திடுக்கிடலில் அந்த உடல் எழுந்தது.
“நான் உன் கண்ணுக்குத் தெரியறேனா?
யாருக்கும் தெரியவேணாம்னு தான இங்க வந்தேன்
நா அசிங்கமா இருக்கேன்,
நா உடைஞ்சு போயிருக்கேன்,
என்னைய யாரும் பாக்கக் கூடாது”
கண்ணீருடன் தடுமாறிக்கொண்டு
அந்தக் குரல் மோதியது.
தவிப்புடன் நாங்கள் நெற்றியை இணைத்துக்கொண்டு
கைகள் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.
அந்த வெளிச்சப்பொட்டு
மெல்ல மெல்ல அதிகரிப்பதை
மூடிய கண்களுள் நாங்கள் உணர்ந்தோம்.
உண்மையில்,
நான் என்னைக் கண்டுபிடிக்கவேண்டிதான்
இங்கு நுழைந்தேன்.
ஆனால் இந்த இடத்தில்
அடையாளங்கள் தெரியவில்லை.
உங்களின் உதவி வேண்டும்,
இந்த வெளிச்சப்பொட்டு அணைந்துவிடாமல்
காப்பதற்கு, வளர்ப்பதற்கு.
சீக்கிரமாய் வாருங்கள்,
உங்களையோ
என்னையோ
வேறு யாரையோ
என்னையோ வேறு யாரையோ உங்களையோ
வேறு யாரையோ உங்களையோ என்னையோ
கண்டுபிடிப்பதற்கு.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button