கவிதைகள்

உமா மோகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இலை நுனி தாண்டும்வரை
உலகம் பச்சையாகத்தான் இருந்தது
பனித்துளிக்கு.

***

தன் நிறம் பச்சையென்றே தளும்பிக்கொண்டிருந்த
பனித்துளிக்கு
விழுந்தபின்
குழப்பமில்லை.

***

ஆற்றின்துளிக்கு
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
தோன்றும் தானும் ஒருநாள் நீலமாகிவிடுவோம் என.

***

சடசடத்து இறங்கும் பொழுதில்
செம்புலம்தான் சேர்கிறோமா எனச் சிந்திக்கும் அவகாசமில்லை.

***

பொத்தல் கூரைக்கடியில் காத்திருந்து ஏந்திக்கொள்ளும்
ஒடுக்குவிழுந்த அலுமினியக்கிண்ணம்
அத்தனை கதகதப்பாகிறது
குளிர்துளிக்கு.

***

யாரும் பார்க்கவில்லையென
உறுதிப்படுத்தியபடி
ரகசியமாகக் கைநனைத்துக் களிக்கும்
பிஞ்சுக்கரம் தொடுகையில் குழம்பிவிடுகிறது மழை
அனுப்பிய தேவன்
தனக்குமுன் இறங்கி விட்டானோ என.

***

வேலையற்றுப்போன நாளில்
ஊர்மந்தையில் சுருண்டிருப்பவன் போல
ஆண்டின் பாதிநாள்
எங்கு கிடக்கும் மழை.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button