
தாய்லாந்து குகை மீட்பு சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும், அவ்வளவு எளிதில் மறந்து விட கூடிய சம்பவமா அது ! குகையைக் காணச் சென்ற 12 பள்ளி மாணவர்கள் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டதும், உலக நாடுகள் ஒன்றிணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டதும், 18 நாள் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதும் நாம் அறிவோம். இந்தச் செய்திகளை தொடர்ந்து கவனித்ததில், சிறுவர்களுக்காக, அவர்களைக் காப்பாற்றும் பணியில் உயிரிழந்த வீரருக்கான பிரார்த்தனைகளில் நிச்சயம் நாமும் பங்கு கொண்டிருப்போம். அது தான் மனிதம், நல்லது.
ஆனால், உங்களுக்கு மேகாலயா சுரங்க விபத்து தெரியுமா, தாய்லாந்து குகை சம்பவம் நிகழ்ந்த சில மாதங்கள் பிறகே இது நிகழ்ந்தது. 20 சுரங்கத் தொழிலாளர்கள், எலிப்பொறி சுரங்கம் என அழைக்கப்படும் மிக மிக குறுகலான நுழைவுகளைக் கொண்ட ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிக் கொள்கிறார்கள், எவ்வளவு நாள் தெரியுமா ? ஒரு வாரம், இரு வாரம் அல்ல ,கடந்த எட்டு மாதங்களாக சிக்கித் தவிக்கிறார்கள். இன்னும் மீட்கப்படவில்லை. 400 அடிகள் ஆழம் கொண்ட எலிப்பொறி சுரங்கத்தில் 8 மாதங்களாக சிக்கியிருக்கிறார்களா ? எப்படிங்க, அவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பே இல்லை என்ன நீங்கள் வருந்துவது, அஞ்சுவது நியாயம் தான். இந்திய அரசு எவ்வளவு முயற்சிகள் செய்தும் (எவ்வளவு என்ற உண்மையெல்லாம் கேட்காதீர்கள்) அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை, பல மாத முயற்சிக்குப் பிறகு சுரங்கத்தில் சூழ்ந்திருந்த நீரில் சில தலைக்கவசங்கள் மிதந்து வந்திருக்கின்றன. உடல் அழுகல் வாடையுடன். அதன் பிறகு அவர்களைத் தேடும் பணிகளை கைவிட்டு, காணாமல் போனவர்கள் என்று அவர்களை அறிவித்திருக்கிறது அரசு. சுரங்கத்தொழிலில் இறந்தவர்களைக் காட்டிலும் இப்படிக் கண்டுபிடிக்கப் படாமல் காணாமல் போனவர்களே அதிகம்.
கோலார் தங்க வயல் : 1907 ம் வருடம். ஆழம் : 2000 அடி

மனிதப் பரிணாமத்தின் மிக முக்கிய நிகழ்வு வேட்டை. இன்னொன்று தேடல். மனிதனாக மனிதன் தன்னை அறிந்து கொண்டதே இந்தத் தேடலில் தான். மலை, காடு, மேடு, குன்று, குகை, மரம் , செடி என எல்லாவிடத்திலும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருந்தான். நாகரிகம் வளர்ந்த பிறகு, இந்தத் தேடல்களே தொழில்களாக மாறின, பல தேவைகளைப் பூர்த்தி செய்தன, ஆனால், அவற்றுள் சில ஒரு நாட்டின் வளமையை, பொருளாதாரத்தை, அதிகாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக மாறின. அவற்றுள் சுரங்கத் தொழிலும் ஒன்று, Mining தொழிலில் இந்தியா எத்தனையாவது இடம், என்னவெல்லாம் இங்கு கிடைக்கின்றன என்று கூகுளுங்கள், காதுகளில் தேசிய கீதம் தானாகக் கேட்கும்.
இப்படியாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றிடும் சுரங்கத் தொழில், அதில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வை மாற்றியதா என்றால் நிச்சயம் இல்லை. இந்த பூமி தன் இதயத்தில் மறைந்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை , கனிமங்களை , புதையல்களை , மக்களுக்காக அரசுகளுக்காக ஒரு தனி நிர்வாகத்துக்காக, அனுதினமும் தேடிக் கொணரும் இந்தக் காணாமல் போனவர்களின் கதைகளில் ஒன்று தான் பொன்னி. அதில் எவ்வளவு பரபரப்பு மற்றும் சுவாரசியம் கூட்ட முடியுமோ அவ்வளவு கொடுத்திருக்கிறார் ஷான்.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஒரு அடர் வனத்துக்குள் துவங்குகிறது கதை , சோழச் சக்கரவர்த்தி வடக்கிருந்து உயிர் துறக்க முற்படும் காலகட்டத்தில் , அவரின் இரணிய சேனைப்படை என்ன செய்கிறது, அவர்கள் யார், முத்தரையர் யார் என்றெல்லாம் சொல்லி ஒரு பாகுபலியின் மூன்றாம் பாகத்திற்குக் கதைக்களத்தை தயார் செய்து விட்டுத் தடாலென அடுத்து அத்தியாத்திலேயே நியூயார்க்கில் பெராட்டா துப்பாக்கி வெடிக்கிறது. துப்பாக்கி வெடித்ததும் அதில் இருந்து கிளம்பிய தோட்டாக்கள் போல விரைந்து அறிமுகமாகிறார்கள் கதை மாந்தர்கள். ஆர்வம் நிறை இளைஞனாக சக்தி, அழகு நிறை நாயகியாக பொன்னி, அவர்களைத் தொடர்ந்து பழனி தாத்தா, ஏஞ்சல் எலினா, ரா கதிரவன், மொக்கை வைஜெயந்தி இவர்களின் பாஸ் வேதவல்லி என அறிமுகமாகியதும், கதை வேகத்தில் நம்மையும் கைபிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள், ஏன்யா எங்க இழுத்துக்கிட்டு ஓடறீங்க என கேட்பதற்குள், CIA வை வைத்து பின்னாலயே சுட்டுக்கொண்டு துரத்துகிறார் ஷான். ஜெய் ஸ்ரீ ராம் சொன்னாலும் CIA சுடுவதை நிறுத்தவில்லை.

ஆமா !! நியாயமா CBI தானே தொரத்தனும் , CIA ஏன் சார் தொரத்துறாங்க என்று கேட்டால், அமெரிக்காவின் பெடரல் வங்கியில் இருந்து 150 டன், பிற நாடுகளின் வங்கியில் இருந்து ஒரு 650 டன் தங்கம் என 800 டன் திருடுனா அமெரிக்கா துரத்தாம பின்ன அத்தி வரதரா துரத்துவார் என்கிறார் , எது 800 பவுன் ஆட்டைய போட்டாங்களா , யாருங்க என்பதற்குள் ,
இவர்கள் அனைவரும் மூடிக்கிடக்கும் கோலார் தங்கவயலை (KGF) வந்து சேர்கிறார்கள், அப்பாடி இண்டர்வெல் என எழுந்தால் கதையில் ஒரு மிக முக்கிய பிளாஷ்பேக் விரிகிறது. செல்லம்மாவும், ஜேம்ஸ் துரையும் அறிமுகமாகிறார்கள், கோலார் தங்க வயல் உற்பத்தியில் செழித்து வந்த காலகட்டம், தமிழர்கள் உயிரைக் கொடுத்து உலகிற்கு எப்படி தங்கத்தைக் கொடுத்தார்கள் என்று குறிப்பிடும் அதே வேளையில் மிக அழகிய, மனதிற்கு நெருக்கமான ஒரு காதல் கதையில் அரும்புகிறது, செல்லம்மாவிற்கும் ஜேம்ஸிற்குமான காதல் அது, காதலா கனிமமா என்ற போராட்டத்தில் , காதலே வெல்கிறது. இதை இரணிய சேனை ஏன் எதிர்க்கிறது , செல்லம்மா யார் , அவர்கள் காத்து வரும் பரம ரகசியம் எது என்பதெல்லாம் ஜேம்ஸ் துறைக்கு தெரிய வந்து பிரமிப்பதை போலவே நாமும் பிரமிக்கிறோம்,
இந்த அத்தியாயங்களின் இறுதியில் கதை மாந்தர்களின் நோக்கம் என்ன, பொன்னி மற்றும் சக்தியின் தங்க வேட்டை வென்றதா, கதிரவன் யார் , உலக வங்கியில் இருந்து திருடப்பட்ட 800 டன் என்ன ஆனது , எதற்காக திருடப்பட்டது என்பதெல்லாம் சேர்த்து ஒரு அற்புதமான இறுதி காட்சியுடன் நிறைவு செய்கிறார் ஷான். இங்கு காட்சி எனக் குறிப்பிடக் காரணம், பரபர சண்டைக் காட்சிகள் நிறைந்த இரும்புக்கை மாயாவி காமிக்சில் படம் வரைந்து ஒரு ஓரத்தில் எழுதியிருப்பார்கள், ஆனால் தன் எழுத்திலேயே படம் வரைந்திருக்கிறார் ஷான், கதை, காட்சிகளாக மனதில் பதிந்து போனது.
தங்கம் அதன் மூலம் , உருவாக்கம், வரலாறு, அதை வெளிக்கொணரப் படும் பாடு,( அதை வாங்கித் தர கணவர்கள் படும் சிரமங்களை விட சற்று அதிகம் தான் ) போன்ற தகவல்களைக் கதைக்கு துருத்தாமல் போகிற வேகத்தில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஷான், நாவல் முழுவதிலும் இது போன்ற விபரங்கள் குறியீடுகள் சிதறிக் கிடக்கின்றன, உண்மையான தங்க வேட்டை இது தான், மேலும் கண்ணகி சுனை என்று ஒரு முக்கிய இடம் நாவலில் வருகிறது. சாதாரண பாறையைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி வாய்ந்த சுனை அது, அந்த சக்தி வந்ததன் காரணத்தை இப்படி சொல்கிறார் ஷான், மதுரையை எரித்ததும் கண்ணகி மூழ்கி எழுந்த சுனை இது, அவர் கையிலிருந்த தன் சிலம்பை இதனுள் விட்டுச் சென்றதால் தான் பாறையைக் கூட அது பொன்னாக மாற்றுகிறது என்கிறார், என்ன ஒரு அழகான முரண் நிறைந்த கற்பனை பாருங்கள், இப்படியாகக் கண்ணகி, தேரையர், சிலப்பதிகாரம் குறித்த செய்திகள் எல்லாம் கதையின் ஆரம்பத்தில் புள்ளியாக வைத்து அவை அத்தனையும் இறுதிப்பக்கங்களில் நேர்கோடாக இணைப்பதில் ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் அசரடிக்கிறார் ஷான். கதை மாந்தர்களின் பெயர்கள், இடங்கள், புத்தகங்கள், என அனைத்தையும் காவியங்களில் இருந்து சொல்லிச் செல்லும் ஷான், கதையின் பக்கத்திற்குப் பக்கம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் பொன்னியின் நிறுவனம் ஆதி மைன்ஸ், இந்த ஆதி யார் என்ன உங்களுக்குத் தெரியும் வேளையில் நிச்சயம் நெகிழ்ந்து போவீர்கள். ஒரு எழுத்தாளனையும் வாசகனையும் இதயபூர்வமாக இணைக்கும் புள்ளிகள் இவை தான்.
இந்த நாவலின் தலைப்பை கூறிய போது ஷானிடம் கேட்டேன், ஏன் பொன்னி ? அதன் காரணம், பொன்னியின் செல்வன் தான், காலம் கடந்து நிற்கும் அது போன்றதொரு காவியத்தின் மீதான ஈர்ப்பே இந்தத் தலைப்பு. அதன் பிரம்மாண்டத்தின் ஒரு துளியாவது இது தர வேண்டும், நிச்சயம் தரும் என்றார்.
நான் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறேன், அது தந்த பிரமிப்பின் அடர்த்தியையும் உணர்ந்திருக்கிறேன், பொன்னி இரண்டாம் முறை வாசித்த பிறகு இதைச் சொல்லத் தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் எழுதிய திரு கல்கி மட்டும் இன்று இருந்திருந்தால் நிச்சயம் இது என் செல்வன் எழுதிய பொன்னி என உச்சி முகர்ந்திருப்பார் , வாழ்த்துகள் ஷான்.
பிரமாண்டங்கள் தொடரட்டும்.