
ஒரு கருப்பு காகிதப் பூ விரிந்திருந்த மாதிரி குடை, முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. சுபாஷினியை நான் முதலில் பார்த்த அன்றும் குடை அதே இடத்தில் அதே மாதிரியாகத்தான் வைக்கப்பட்டிருந்தது. அன்று விரித்த குடைக்குள் சாய்வாக விழுந்து கொண்டிருந்த இளம் வெயிலில், குளிர் காய்வது போல் சுபாஷினி உடம்பை சரிவு வாக்கில் நீட்டிப் படுத்திருந்தது.
முற்றத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கயல் ஓடிவந்து இடுப்பில் கட்டிக்கொண்டு, ‘ப்ளாக்கி நேத்துதான் வந்திச்சு’ என்றபடி சுபாஷினி பக்கம் கை காட்டினாள்.
‘அப்படியா! அழகா இருக்கு’ கயலின் கன்னத்தில் தட்டினேன்.
‘என்னக்கா… ‘கயலுக்குப் பின்னாடியே அம்சா முந்தானையில் கையைத் துடைத்தபடியே வந்தாள்.
‘இப்பதான் கவனிச்சேன். கடுகு தீர்ந்து போயிருச்சு. இப்ப அவரு ஆபிஸ் போற அவசரத்தில சொல்ல முடியாது பாரு… ‘நான் முடிப்பதற்குள், ‘அதுக்கென்ன இதோ வரேன்’ என்று அம்சா வீட்டிற்குள் போனாள்.
சுபாஷினி என்னை மிரண்டபடி பார்த்துக் கொண்டிருந்தது.
அது எனக்கு மட்டும்தான் சுபாஷினி. மற்ற எல்லாருக்கும் ப்ளாக்கி. எல்லாரும் அப்படிதான் அதை கூப்பிட்டார்கள், என்னைத் தவிர. நான் ஒருநாள் கூட அதனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை ஆனால், அதனைப் பார்க்கும் பொழுதெல்லாம் மனம் சுபாஷினி என்று உள்ளுக்குள்ளாகவே முனகிக் கொள்ளும். சுபாஷினி சாம்பல் நிறத்தில் கொழு கொழுவென்று இருக்கும். ப்ளாக்கி கருப்பு நிறத்தில் ஒட்டிப் போய் இருந்தது. ஒருவரைப் பார்க்கையில் இன்னொருவர் நம் நினைவுகளில் இருந்து மேலெழும்பி வருவதற்கு சில நேரங்களில் எந்தக் காரணமும் அவசியமும் தேவைப்படுவதில்லை.
அதன் சாம்பல் நிறக் கண்களின் நடுவே இருந்த கருப்பு புள்ளிக்கு ஒரு நீர்மையான பளபளப்பு இருந்தது. அந்த பளபளப்புதான் அதன் மொத்த வசீகரமும். வாழைப்பழங்கள் நடுவே இருக்கும் கருப்பு விதை போல் அந்த கருப்புப் புள்ளி இருக்கிறது,என்று அவரிடம் சொன்னதற்கு, ‘இப்ப வர வாழைப்பழத்தில் எங்க விதை இருக்கு?’ என்று சிரித்தபடியே அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக சட்டையின் இடது கையில், தனது இடது கையை நுழைத்து,தோளில் ஏற்றி விட்டுக் கொண்டார்.
சுபாஷினி முதன்முதலாக ஏதோ ஒரு ராட்சத பூனையின் விரட்டலுக்கு பயந்து எங்கள் வீட்டிறகுள் பரபரப்போடு பாய்ந்து ‘மியாவ்’ என்று பதுங்கியது என் கண்களுக்குள் விரிய ஆரம்பித்தது. அன்று நான் ஆரஞ்சுப் பாவடையும் பச்சை தாவணியும் போட்டிருந்தேன். அன்றிலிருந்து அது எங்கு சென்றாலும் இரவு திரும்ப எங்கள் வீட்டிற்கே வர ஆரம்பித்திருந்தது. அப்படிதான் அது ‘எங்கள் சுபாஷினி’ ஆனது. வீட்டில் உள்ள அத்தனை நபர்களையும் விட்டுவிட்டு இரவு என் பக்கத்தில் வந்து படுத்துக்கொள்ளும். கால் நகத்தால் செல்லமாய் பிராண்டி வைக்கும். காயம் படாமல், பிராண்டுவது எப்படி என்று சுபாஷினிக்கு துல்லியமாய் தெரியும். இடை இடையே அதன் முகத்தை அதன் காலால் தடவிக் கொள்ளும். நெட்டி முறிக்கும். பப்படம் (அப்பளம்) பொரிக்கும் சப்தம் கேட்டால் ஓடி வந்து அருகில் நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் முகத்தை ஏற இறங்க பார்த்துக் கொண்டு நிற்கும்.
ஒருநாள் ராத்திரி வித்தியாசமான, பயங்கரமான சப்தம் கேட்டு விழித்துப் பார்த்தபொழுது சுபாஷினியை ஒரு ராட்சத பூனை கடிப்பதற்காக விரட்ட, அது சுவர் ஏறி தெருவில் குதிப்பது நிழல் ஆடுவது போல் தெரிந்தது. அதே ராட்சத பூனை தான் சுபாஷினியை முதன் முதலாய் விரட்டி எங்கள் வீட்டிற்குள் வர வைத்த பூனையாகவும் இருக்கலாம். அன்றுதான் சுபாஷினியை நான் கடைசியாய் பார்க்கிறேன் என்று அந்த நொடி எனக்குத் தெரிந்திருக்கவில்லை.வாழ்க்கையின் பெரிய இழப்புகள் போகிற போக்கில், முன் அறிவிப்பின்றி அரங்கேறிவிடும் நொடிகளாகவே இருக்கிறது. இன்றைக்குத் திரும்பி வரும், நாளைக்குத் திரும்பி வரும் என்று மூன்று மாதங்கள் ஓடிய பின்பு இனி சுபாஷினி திரும்ப வராது என்று வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்குள்ளாக அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள். என்னிடம் யாரும் எதுவும் நேரடியாகச் சொல்லிக் கொள்ளவில்லை.
‘ஆபிஸ் போயிட்டு வரேன்ம்மா’ என்றவரின் குரல் என்னை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது.
அவர் நடையில் இறங்குவதும், கயல் ‘அத்தை’ என்று ஓடி வந்து அவரை வழியனுப்ப நின்று கொண்டிருந்த, என்னைத் தொடையோடு கட்டிக் கொள்வதும் ஒரே நேரத்தில் நடந்தது. கயல் என் மகள் சாலோவோடு விளையாடுவதற்காகத்தான் என் வீட்டிற்கு வருகிறாள் என்றாலும், என்னிடமும் நெருக்கமாக இருப்பாள்.
‘உள்ள போ, சாலா டிவி பார்த்திட்டு இருக்கா’ – நான் கயலின் முடியை கைகளால் செல்லமாய் சிலுப்பி விட்டேன்.
கயல் மின்னல் போல பாய்ந்து வீட்டிற்குள் ஓட அவர் பைக்கில் ஏறி என்னை பார்த்துக் கையசைத்தபடி வண்டியை கிளப்பிச் சென்றிருந்தார். பின்னர் ஏறக்குறைய ஆறு மாதங்கள் இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக கயல், சாலாவைப் பார்க்க வீட்டிற்கு வரவில்லை. கயலை பார்க்கச் சென்ற சாலா ‘ப்ளாக்கி செத்துப் போச்சாம். கயல் அழுதுகிட்டு இருக்கா’ என்று வந்து நின்றாள். ‘மீண்டும் ஒரு சுபாஷினி’ என்று தோன்றியது. எனக்கு இப்பொழுது கயலைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அம்சா வீட்டிற்க்குச் சென்ற பொழுது கயல் வெளியே வரவில்லை. விரிந்த குடையின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த என்னை ‘என்னக்கா… ‘என்ற வழக்கமான கேள்வியோடு அம்சாதான் எதிர்கொண்டாள்.
‘ஒன்னுமில்ல..கயல பார்க்கலாம்னு வந்தேன்’
‘வாங்கக்கா..உள்ள வாங்க. அவ அந்தா அழுதுகிட்டு கிடக்கா. சாப்பிடவும் இல்ல’ – சொல்லிக்கொண்டே உள்ளே சென்று அம்சா சோபாவில் அமர்ந்து கொண்டாள். நானும் அவள் அருகில் அமர வேண்டும் என்று அவள் பார்வை எதிர்பார்க்க, நானும் அவள் அருகிலேயே சோபாவில் அமர்ந்தேன்.
‘க்கீ’ என்ற கணீர் சப்தம் வெளியே தெருவில் கேட்டது.
‘இந்த மெயின் ரோடு வேலை நடக்குறது நமக்குதான் பெரும் ரோதனையாப் போச்சு. காள் பூள்ன்னு எல்லா வண்டிக்காரணும் நம்ப தெருவு வழியாகத்தான் போறான்’
நான் தலையை மட்டும் ஆட்டினேன். கயல் வெளியே வருவாளா என்று என் கண்கள் படுக்கையறையை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது.
‘பூனைனு வளத்தா சாகத்தான் செய்யும். அதுக்கு இப்படி அழுது அடம் பண்ணி துக்கம் கழிப்பேன்னு நின்னா முடியுமாக்கா? ‘
நான் பதில் சொல்வதற்குள் தெருவில் சங்கு ஊதும் சப்தம் கேட்டது நானும் அம்சாவும் நடையில் சென்று பார்த்தபோது. ஒரு பெரியவரின் பாடை வாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தது. வாசலுக்கு நேரே ஒரு முழு செவ்வந்திப் பூவும், ஒரு சில ரோஜா இதழ்களும் தரையில் சிதறியிருந்தது.
‘எங்கேயோ உள்ள ஆளுங்க. மெயின் ரோடு வழியா கொண்டு போக முடியாதுலா. அதான் இப்படி எடுத்துகிட்டுப் போறாங்க போல..’ – அம்சா அந்தப் பாடைக்கு பின்னால் சோக முகத்தோடு வரிசையாக சென்ற ஆட்களை பார்த்தபடியே ரகசியக் குரலில் சொன்னாள்.
சிதறிக் கிடந்த ரோஜா இதழ்களைப் பார்த்தபடி நான் நின்று கொண்டிருந்தேன்.
****