இணைய இதழ் 103கட்டுரைகள்

சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்

கட்டுரை | வாசகசாலை

குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும். இந்த மலைகள் எல்லாமே கிழக்குத் தொடர்ச்சி மலைக் கூட்டத்தில் சேராமல்தான் இருக்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குள் இல்லாத சிறிய மலைகளான அம்மாசி மலை, கரிபெருமான் கரடு, நாம மலை, சன்னியாசி குண்டு, தண்ணீர் மலை, குமரன் கரடு, பால மலை, வேடன் திட்டு, செல்லத்திட்டு எனப் பலவகை கரடுகள் மற்றும் ஏற்காடு சேர்வராயன் மலை, கஞ்ச மலை, கருமந்துறை, பச்சை மலை என நீளும் பட்டியல் இருக்கின்றது. மொழியியல் ரீதியாக சைலம் என்பது மலையைக் குறிக்கும் வடசொலாகும். சைலத்திலிருந்து சேலம் என்றானது என்ற கருத்தும் பலரிடையே உள்ளது.

சேலம் இலக்கியத் திரிபிற்கும் பெயர் பெற்றே வலிந்து காணப்படுகிறது. காவியங்களின் கற்பனையை நமது புவியியல் பரப்பில் பொருத்திக் கொண்டு வெளிவரும் வாய்வழி இலக்கியங்களை பணி நிமித்தமாக களத்திற்குச் செல்லும் பொழுது மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளில் கேட்க முடிந்துள்ளது. குறிப்பாக இராமாயணம் திரிபு கதைகள் கேட்க முடிகிறது.

சேலத்துக்கு பெங்களூரிலிருந்து வரும் மக்கள் ஓமலூர் தாண்டியதுமே எதிர் கொள்ளுவது ஒரு குன்றை. எங்கும் தோண்டி வெள்ளை நிற மணலை இறைத்த மாதிரி அது வெளுத்த வண்ணமும் இல்லாமல் வெங்கல நிறத்திற்கும் மாறாமல் பழுப்புமான கல் மண் குழிகள் நிறைந்த இடமாக இருக்கும். அதனைப் படித்தவர்கள், விஞ்ஞானிகள் பாக்ஸைட் என்றும், அலுமினிய உலோகத்திற்கு தேவைப்படும் பொருள் என்று நினைத்தாலும் சேலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ‘சுண்ணாம்பு கரடு’ என்றால் சட்டென்று நினைவிற்கு வந்துவிடும். கால்சியம் சுண்ணாம்பு என்பதை சரிவர தெரியாத காலத்தில் இந்த பெயர் திரிந்திருந்திருந்தாலும் களம் அறியாத நாடகக்காரராக சேலத்துக்காரர்கள் இதற்கு ஒரு இராமாயணக் கதையை சொல்லுவதை தவிர்க்காமல் விடமாட்டார்கள்.

இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாய் போகையில் ஐடாயு கழுகு குறுக்கிட்டு சண்டையிட்டு இராவணனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. அது விழுந்த இடமும், இறந்த இடமும்தான் வெள்ளையுடன் பழுப்பும் கூடியுள்ள இந்த சுண்ணாம்புக் கரடு. இதிலும் உயிரியலுடன் வேதியியலும் கலந்து கொள்ளும் என நினைக்கிறேன். வெட்டி வீழ்த்தப்பட்ட கழுகின் எலும்புகள் விழுந்த இடம் முழுவதும் இந்த சுண்ணாம்பு கரடு. அதாவது அந்த பிரம்மாண்டமான எலும்புகளில் நிறைந்து இருந்த கால்சியம் சத்தைத்தான் இதில் உயிரியலும் கலந்திருக்க வேண்டும் என உத்தேசிக்கிறேன். இந்த கரடைத் தாண்டாமல் பெங்களூரில் இருந்து யாராலும் நுழைய முடியாது. இரு திசைகளிலிருந்தும் இந்த கரடுகள் தென்பட்டாலும் பொதுத்துறை நிறுவனங்களான TANMAG மற்றும் SAIL Refractory Co Ltd தற்போது தங்களது தொழிலை மேற்கொண்டு வருகிறது.

சேலத்திலிருந்து நாமக்கல் போகும் நெடுஞ்சாலையில் இடப்புறம் இன்று வளர்ச்சியடைந்த இடமாக கெஜல்நாயக்கன்பட்டிக்கு அருகில் பொய்மான் கரடு‘ எனச் சொல்லும் இடம் ஒரு டீ கடை கூட இல்லாத இடம். “சில மரங்களால் சூழ்ந்த அடர்ந்த மாயப் பிரதேசத்தில் சற்று உயர்ந்து நிற்கும் பாறைப்பிளவுதான் பெயருக்கு காரணம். சில இடங்களில் நின்று வெளிச்சத்தில் பார்த்தால் மட்டுமே பக்கவாட்டில் திரும்பியவாறு அந்த மானின் வயிற்றுப் பகுதி வரை அசலான நிறத்தில் நிற்கும். அதாவது பாறையின் நிறமும் மானின் நிறமும் ஒத்துப்போவதால் அவ்வாறு சொல்கிறார்கள்” என அந்த பெரியவர் சொல்லும் பொழுது அதனை இராமயணத்திற்கு முடிச்சுப் போடுவார் என எதிர்பார்க்கவில்லை.

இங்கு உடனே இராமாயணமும் கிளம்பி பாறைப் பிளவுக்கு நெடுங்காலமாகவே புராதன காவிய அந்தஸ்தும் கிட்டியுள்ளது. ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது இந்தக் காட்டில்தான் இருந்ததாகவும், இங்குதான் மாரீசன் மான் உருவில் தோன்றி ஏமாற்றி வதையானதாயும், மாரீச மான் உருவம்தான் படிமாமாக மாறி அந்தப் பாறை பிளவில் தெரிவதாகவும் தன் கற்பனை குதிரையை ஓடவிட்டார் (அல்லது மானை ஓடவிட்டார்).

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் இதனை புகைப்படக் கருவி மூலம் படம் எடுத்துள்ளனர். அதனை டெவலப் பண்ணிப் பார்க்கையில் வெறும் பாறையும், அதன் பிளவும் மட்டுமே அறிவியலின் வெளிப்பாடாக தெரிந்துள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்த வந்த ஒரு புகைப்படக்காரர் எடுத்த படமும் அதே மாதிரிதான் வந்துள்ளது. புவியியல் அமைப்பில் இந்த கரடு இருந்துள்ள சூழலில், இந்த கரட்டில் இயற்பியல் உள்ளது என்பதனை எனது நண்பன்தான் கூறினான்..

சூரியன் உச்சியில் (10am to 5pm) இருக்கும் நேரங்களில் மட்டுமே தென்படும் குதிரை என்பது சூரிய ஒளி நன்றாக பாறை பிளவில் படும்போது பாறையிடுக்குகளில் மழைநீர் பட்டு ஓடி காய்ந்த நானாவித வண்ணக் கறைகளின் கூட்டுத் தோற்றம் (Abstract Colour Composition) ஆகும் என்ற இயற்பியல் கூற்றினை அவன் விளக்கினான்.

“இதனை மையமாக கொண்டு, ‘பொய்மான் கரடு’ என்னும் தலைப்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நாவல் எழுதினார். அது டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்க ஐம்பதுகளில், “பொன் வயல்” என்ற பெயரில் திரைப்படம் ஆனது” என்ற செய்தியினை அங்குள்ள டீ கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கும் சேலத்தின் மற்றொரு பகுதிக்கும் தொடர்பு இருப்பதை குறிப்பிடும் சேலத்தை பற்றிய‌ புத்தகம் ஒன்றினை படிக்க நேரிட்டது. ஆனால், அந்த ஊருக்கு மூன்று கதைகள் உண்டு. சேலத்தின் மையத்தில் அமைந்துள்ள தாதாகபட்டி என்ற பகுதி குறித்து, இந்து, முஸ்லீம் மற்றும் பௌத்தம் ஆகிய மூன்று மதங்களும் தங்களுடைய வரலாற்றை வாய் வழி இலக்கியத்தின் மூலமாக கூறுகின்றனர். இங்கும் இராமாயணத்தின் பங்குண்டு. அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறும் தாடகை, பல்வேறு வகையான கொடுமைகளைச் செய்துகொண்டு காட்டில் வாழ்கிறாள். தாடகையின் மகன் மாரீசன் தங்கத்தால் ஆன மானை வைத்து ராமனை கவரும் பட்சத்தில், தனது மாமன் இராவணன் சீதையை கடத்திச் செல்வார் என நினைத்து குதிரை அமைத்த இடம் என்கின்றனர். அதேசமயம் தாத்தகாத்தா எனும் புத்தரை குறிப்பிடும் பெயராகவும், சேலத்தை சேர்ந்த இசுலாமிய நிலப்பிரபுவின் மனைவியான தாதகா பீபி –என்பரின் பெயரால் வைத்த பெயர்‌‌ ஆகிய செய்திகளை ராஜண்ணன் எழுதிய Salem Encyclopaedia என்னும் நூல் தெரிவிக்கின்றது.

மாரீசன் வைத்த தங்க மானை கொல்வதற்காக ஏவப்பட்ட பாணம் இந்த இடத்தில் இருந்து செலுத்தப்பட்டதால் இந்த இடத்திற்கு ‘பானாபுரம்’ என பெயரானது என்ற வாய்வழி இலக்கிய தரவுகள் Salem Encyclopaedia என்ற புத்தகத்தில் கிடைக்கிறது. இந்த பானாபுரம் ஓமலூருக்கு அருகிலுள்ளது.

சேலத்து பெருமாள் கோயில் என்றவுடன் கடைவீதியில் இருக்கும் பட்டக்கோவிலும் அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர் கோயிலும்தான் நினைவிற்கு வரும். சேலத்தின் சிறப்புகளில் ஒன்றான அயோத்தியாப்பட்டிண கோதண்டராமர் கோவிலில் மூலவர் பட்டாபிஷேகம் திருக்கோலத்தில் நமக்கு காட்சி தருவார். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் வரலாற்றுச் சின்னங்களைத் தாங்கியுள்ளது எனலாம். “சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது” என ஆரம்பிக்கும் போதே அந்த கோவில் பட்டாச்சாரியார் தன்னுடைய இராமாயண சாரத்தை வரலாற்று உபதேசமாக விவரிப்பார்.

“இது பல்லவர்களால் செய்யப்பட்டது. இரண்டாயிரம் வருஷத்தது. இராமன், இலட்சுமணன், சீதா பிராட்டி என மூவரும் சேர்ந்து பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கும் சன்னதி இங்கு மட்டும்தான் உள்ளது” என்று சொல்லுவார். அங்கிருந்து வெளியே வந்து சர்க்கரைப் பொங்கல் வாங்கி சாப்பிடும் போது ஆண்டாள் அருளிய திருப்பாவையை அடியார் ஒருவர் பாடிக்கொண்டிருந்தது செவிக்கு வாய்த்த இன்பமென இருந்தது.

கோதண்டராமர் சுவாமி ஆலயத்தில் வரலாறு பாடத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இங்கு வருகை தரும் மாணவர்கள் விஜயநகர காலத்து சிற்பக்கலை குறித்து அழகுற தெரிந்துகொள்ள முடியும் என்றால் மிகையில்லை. விஜயநகர கலைப் பாரம்பரியக் கோயில்களில் பிரசித்திபெற்றதாக கருதப்படும் சிற்ப வேலைப்பாடுகள் என்பது கோதண்டராமர் கோவிலுக்கு மட்டும் விதிவிலக்கல்ல.

பல்லவர் காலமும் நாயக்க மன்னர்கள் காலமும் நமக்குத் தெரியும். எனவே, பட்டாச்சாரியார் இரண்டாயிரமாண்டு என சொல்லுவதை சரியென எடுத்துக் கொள்ள முடியாது. ‘இக்கோயில்கள் விஜயநகர் பேரரசு வீழச்சிக்குப் பிறகு பிற்கால விஜயநகர பாணியில் (Post Vijayanagara Temples) அமைக்கப்பட்டவை. அவர்களின் அழிவையடுத்து விஜயநகர ஆட்சியாளராய் நியமிக்கப்பட்ட நிர்வாகத் தலைவராக தமிழகத்தில் நீடித்த நாயக்கர் எனும் வம்சத்தவரால் அரண்மனை, மகால், சத்திரம், படிகட்டுக் கிணறு, குளம் ஆகியவை கட்டப்பட்டன. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியின் காலமும் நாயக்கர் ஆட்சி காலமும் தெரியும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் என்பது சரியாகுமா என்று யோசிக்க வேண்டும்.

‘ஹம்பியின் வீழ்ச்சிக்கு பிற்பட்ட விஜயநகர சிற்ப ஓவியப் பாணியில் உருவாண சிறந்த கோவில்களில் சேலம் அயோத்தியாபட்டணத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் ஒன்று. திருமலை நாயக்கரின் கீழ் ஆட்சி புரிந்த மாசி நாயக்கள் என்னும் மன்னன் பின்னானில் முன் மண்டபங்களையும், அழகிய சிற்பங்களையும் செய்திருக்கலாம். அதனாலே மாசிநாயக்கள்பட்டி என்ற ஊர் அயோத்தியாப்பட்டணம் அருகில் உருவாகியிருக்க வேண்டும். இங்கு கிடைத்த சிலை ஒன்றும் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது’ என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

வரலாற்றுப் பாடத்தை தாண்டி ஊர்காரரின் வாய்வழி இலக்கியம் இன்னும் அந்த கோவிலின் வரலாற்றுக்கு மெருகேற்றியது. இராவணன் இறந்து போன பிறகு, இராமன் சீதையுடனும், தன் படைகளுடனும் புஷ்ப விமானத்தில் அயோத்தி நோக்கி பறக்கிறானாம். இருட்டிவிட்டதால் வழியிலேயே மலைகள் சூழ்ந்த பூமியொன்றில் (சேலம்) இறங்கி, காலையில் விடிந்ததும் வெளிச்சத்தில் விமானத்தை கிளப்பலாமென்று ஓய்வுறுகையில் யுத்தக் களைப்பு மேலிட்டு நன்றாக உறங்கி விட்டார்களாம். காலையில் தாமதித்து துயில் எழும் சூழல் அமைந்துவிட்டதால் பட்டாபிஷேகத்துக்குக் குறிக்கப்பட்டிருந்த நாழிகை, காலம், நட்சத்திரமெல்லாம் கடந்து விட்டதாம். எனவே, அந்த மலைப் பிரதேசத்திலேயே (இன்றைய அயோத்தியாபட்டணம்) பட்டாபிஷேகத்தை முடித்து விட்டு அயோத்திக்குப் போய் முறைப்படி செய்து கொள்ளலாமென்று விபீஷணன் நேரில் வந்து சுபகாரியம் செய்ததாக அமைந்த கதைதான் அயோத்தியாபட்டினம் என்ற ஊரின் பெயர்க்காரணமாக சொல்லுவார்கள் அந்த உள்ளூர் பாணர்கள். அதன் இறுதியில் நான் கேட்ட சந்தேகத்திற்கு “எந்த நாடகத்திலும் இந்த இராமாயணக் கதையை நடிப்பதில்லை” என்பதை அவர் தெரிவித்தார்.

வாழை, கரும்பு, நெல், பாக்கு, தென்னை மற்றும் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் மிக்க பகுதிகளான அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர் என்று எல்லாமே வளமான பசுமையான பகுதி. இதற்கு காரணம் அந்த பகுதியில் பாயும் வசிஷ்ட நதி தான். மானுக்கும் சுண்ணாம்புக்கும் எழும் கதைகள் இருக்கையில் முனிவர் வசிஷ்டர் மட்டும் விதிவிலக்கல்ல. வடபுலத்தில் இருந்து இந்தப் பக்கம் வந்த வசிஷ்ட முனிவர் இந்த நதிக்கரையில் ஒரு வேள்வி செய்தார் என்று கூறப்படுகிறது. பேளூருக்கு வடக்கில் வெண்மையான பாறையொன்று உள்ளது. வசிஷ்ட ர் செய்த வேள்வியால் விளைந்த சாம்பலே அவ்வெண்மையான பாறையாக மாறிவிட்டதென்று கூறுகின்றனர். வசிஷ்ட நதிக்கு பேராறு என்ற மற்றொரு பெயரும் உண்டு என்றாலும் வசிஷ்ட நதி என்பதே நிலையான பெயராகிவிட்டது. வசிஷட்ர் வரலாறு போல பட்டாபிஷேகம் நடத்தி வைத்த விபிஷணனுக்கு வரலாறு இல்லை என்பது எனக்கு ஆச்சரயமாக இருக்கின்றது.

‘இயற்கையின் அமைப்பின் எல்லாம் அழகு’ என்பதைப் போல இயற்கையின் பல்வேறு பரிமாணாங்களில் அதிசயங்களும் அபூர்வங்களும் நிறைந்ததாக பல்வேறு குறிப்புகள் இன்றும் நமக்கு காட்சி அளிக்கின்றன. அந்தந்த ஊரிலும் அங்கு பூர்வீகமாக வசிக்கும் மக்களிடமும் அதன் வாய்வழி இலக்கியங்கள் மூலமான கதைகள் நமக்கு கேட்கக் கிடைக்கும். அதனை ஆராய்வது என்பது பல்வேறு சுவாரஸ்யமான பரிமாணாங்களை நமக்கு கற்பிப்பதுடன் அறிவியலை அழகுற கற்கவும் உதவும் என்று திடமாக நம்புகிறேன். பெருமைக்கும் வணிக ரீதியிலும் புகழ் பெற்ற கோவில்களுக்கு குடும்பத்துடன் செல்வது எதார்த்தமாக அமைந்தாலும், புராதன சிறப்பு மிக்க கோவில்களில் காணக்கிடைக்கும் காட்சிகள் வரலாற்றின் தொன்மங்களையும் அழகையும் கூறும். இராமயணக் கதைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நில மற்றும் புவியியல் அமைப்பிற்கும் ஏற்றார் போல அங்குள்ளவர்கள் இன்றும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button