நூல் விமர்சனம்
Trending

“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ வாசிப்பனுபவம்

பாலகுமார் விஜயராமன்

“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து…

ஓர் ஐரோப்பியனின் மனம் தர்க்கங்களுக்குக் கட்டுப்பட்டது. மாறாக ஒரு கீழை தேசத்தவனின் மனம் சித்திரத் தன்மை கொண்டது.

  • எட்வர்டு செய்யித்

சில மாதங்களுக்கு முன்னர் தமுஎகச சார்பில் ஓசூரில் பா.வெங்கடேசன் படைப்புகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டமும் பாராட்டு விழாவும் நடந்தது. அதுவரை பா.வெங்கடேசனின் படைப்புகள் எதையும் வாசித்திராதவர்களுக்கு அவரது எழுத்துகள் குறித்த ஒரு பறவைப் பார்வை அனுபவமும் அந்நிகழ்வில் கிட்டியது. என் திருமணப் பரிசாக மதுரை வலைப்பதிவு நண்பர்கள் வழங்கிய பா.வெங்கடேசனின் புதினமான “தாண்டவராயன் கதை” எட்டு ஆண்டுகளாக வாசிக்கப்படாமலே அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டொரு முறை அதை வாசிக்க முயன்று, எழுத்து நடை புரிபடாமல் விலகிச் செல்ல வைத்திருந்தது. அந்தத் தயக்கத்துடனேதான் ஓசூர் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். விழாவில் பேசியவர்கள் பா.வெங்கடேசனை வாசிக்கத் துவங்குபவர்கள் “ராஜன் மகள்” தொகுப்பில் இருந்துதான் துவங்க வேண்டும் என்று கூறிய குறிப்பைப் பிடித்துக் கொண்டு “ராஜன் மகள்” தொகுப்பை வாங்கினேன்.

2002ஆம் ஆண்டு முதல்பதிப்பு கண்ட புத்தகம், 16 ஆண்டுகள் கழித்து அடுத்த பதிப்பாக 2018ல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. மழையின் குரல் தனிமை, ஆயிரம் சாரதா, நீல விதி, ராஜன் மகள் ஆகிய நான்கு நெடுங்கதைகள் அல்லது சிறுபுதினங்கள் கொண்ட தொகுப்பு இப்புத்தகம். எழுத்து வடிவின் வழமையான சொற்றொடரியல் (syntax) இலக்கணத்தை கலைத்துப் போட்டு அமையும் தன்மையுடையன பா.வெ.வின் படைப்புகள். பல பக்கங்கள் வரை கூட வளரும் மிக நீண்ட பத்திகள், முழுப்புள்ளிகள் தவிர வேறு நிறுத்தக்குறிகள் அற்ற வாக்கியங்கள், பெரும்பாலும் நேரடி உரையாடல் (dialogues) இல்லாத கதையாடல் என்று உள்ளே நுழைவதற்கு தயக்கம் கொடுக்கும் எழுத்து நடை அவருடையது. ’ராஜன் மகள்’ தொகுப்பில் உள்ள கதைகளும் அத்தகைய வடிவம் கொண்டவையே. ஆனால் கனத்த சரம்சரமாய்க் கொட்டும் செழித்த அருவியில் தலைகொடுக்கும் முதல் தயக்கத்துக்கு ஒத்தவை அவை. முதல் ஐந்தாறு பக்கங்கள் பொறுமையாய் வாசித்துவிட்டால், மிகப்பெரிய புனைவுப் பொக்கிஷம் காத்திருக்கிறது. புத்தகத்தை வாசித்து முடித்தபின், மிகு புனைவுத் தன்மை கொண்ட கதைக்களத்திற்கு இத்தகைய சொற்றொடரியல் அற்ற நீண்ட வாக்கியங்களும், பத்தியமைப்புமே கச்சிதமாகவும், வாசிப்பனுபவத்திலிருந்து விலக வைக்காத நெருக்கத்தைத் தருவதாகவும் தோன்றியது.

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட பா.வெங்கடேசன் கடந்த முப்பது ஆண்டுகளாக ஓசூரில் வசித்து வருகிறார். இன்று கனரக தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பெங்களூரின் புறநகராக முகம் கொண்டிருக்கும் ஓசூர் என்னும் புராதன நிலப்பரப்பை, அவ்வூரைச் சூழந்திருக்கும் ஏரிகள், மலைகள் மற்றும் பழைய சிதிலமைடந்த கோட்டைகள் வழி தனது புனைவுத் தளத்தின் அடிநிலமாகக் கட்டமைத்திருக்கிறார் பா.வெங்கடேசன். ஒரு நிகழ்வின் சொல்லவியலா சகல சாத்தியங்களையும் சோழி உருட்டிப்போட்டு ஆடும் பரமபத விளையாட்டின் ஏற்ற இறக்கங்களோடு தனக்கேயுரிய மாயமொழியில் கதையாக விவரிக்கிறார். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் எழுத்து வடிவிலான வாசிப்பாய் நகர்வது போலன்றி செவிவழி கேட்கும் நாட்டார் கதைகளின் புதிர்த்தன்மையோடும் ஓசை லயத்தோடும் நகர்ந்து செல்கின்றன.

’மழையின் குரல் தனிமை’ கதையில் மழைவீடு என்பது ஒரு சித்திரம். எங்கோ செல்லும் வழியில் கண்ணில்படும் ஒரு நிலத்தில் தனக்கான மாளிகை வேண்டும் என்று விடாப்பிடியாக எண்ணம் கொள்ளும் ஓர் இளம்பெண், அவளது கோரிக்கையின் பொருட்டு தனது ஆண்மையையும், அதிகாரபலத்தையும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவளது முதிர்கணவன், பரம்பரை நிலத்தை விட்டுக்கொடுக்க மனமுமின்றி அதே சமயம் அதிகார பலத்தை எதிர்க்கும் ஆயுதமாய் தனது மற்றும் தன் குடும்பத்தினர் அனைவரது உயிர்களையும் அதே நிலைத்தில் மாய்த்துக்கொள்ளும் குடியாயனவன், அத்தகைய துர்நிமித்தங்களையும் மீறி தன் திறமையின் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் அந்த நிலத்தில் மாளிகை கட்டத் துவங்கி, அதற்காகத் தனது ஆயுளையும், வாழ்க்கையையும் இழக்கும் கட்டிடக் கலைஞன், ஒரு மழைப்பொழுதில் அந்த நிலத்தில் இருந்து மேலெழுந்து வரும் ஒரு பச்சிளம் குழந்தை, அவன் சாகசக்காரனாய் வளர்ந்து, பாதி கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட அதே நிலத்தில், புதுமையும் பழமையும் ஒன்றோறொன்று பின்னிப்பிணைந்து  வடிவமைத்துப் பூர்த்தி செய்யும் அதிஅற்புத கலைத்திறன் கொண்ட அழகிய வீடு, இவை அனைத்துக்கும் சாட்சியாகப் பெய்யெனப் பெய்யும் மழை… இப்படியான புதிர்நெறி வட்டத்தில், காலத்தை முன் பின் கலைத்துப் போட்டு செழிவான புனைவு மொழியில் வனயப்பெற்றிருக்கிறது இக்கதை.

இயந்திரமயமாக்கலுக்கு முன்பிருந்த ஓசூரின் மாயத்தனிமையையும், ஊரெங்கும் வியாபித்திருந்த ஏரிகளின் குளிர்காற்றையும், ஊருக்கு வெளியே அனாதரவாக நின்று கொண்டிருந்த இரயில் நிலையத்தையும் அதோடு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக பாதியில் அறுந்து போன வசிய சக்தி கொண்ட ஒருவனின் காதலையும், யுகம்தோறும் தோன்றியபடி இருக்கும் அவனது காதலியையும் பற்றிய மாய யதார்த்தக் கதை ‘ஆயிரம் சாரதா’.  தனிமையினாலும், வாசிப்பினாலும் சூழப்பட்டிருக்கும் ஒரு நவீன மனதுக்குள் சலனத்தை ஏற்படுத்தும் அந்தக் காதலன் அல்லது ஜென்மங்களைக் கடந்து தேடிக்கொண்டிருக்கும் காதலனின் அழைப்புக் குரலைத் தனக்கானதாய் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனின் பிறழ்மனம் என்பதாக வாசகனை தொடரும் கதையின் தூரத்துக்கேற்றவாறு எண்ணிக்கொள்ள வைக்கும் மீபுனைவு நடை. ஒரு கதையை வாசிக்கும்போதே அது கூட்டிச் செல்லும் திசையை மீறி வேறுபக்கம் கிளைபரப்பி வாசிப்பவனின் மனதுக்குள் வேறொரு கதையாக வளர்ந்து நிற்கும் அனுபவங்கள் எப்போதேனும் நிகழ்வதுண்டு. அப்படியான ஒரு அனுபவம் இக்கதையை வாசிக்கையிலும் நேர்ந்தது.

அந்தரத்தில் கயிற்றில் ஆடும் சாகசக்காரி முதலில் தனிமையினாலும், பின்பு சகோதரனின் பிரிவினாலும் அதே நேரம் அவனது மரணச் செய்திக்காக ஆவலுடன் காத்திருப்பதினாலும், தனது மனதிற்குள் தோன்றிய காதலனை வண்ணத் துணியில் தொடர்ந்து வரைந்து பார்த்து தோற்றுக்கொண்டிருப்பதினாலும் உண்டாகும் அக அலைச்சலைப் பேசுகிற கதையா அல்லது பிறப்பிலிருந்தே சீரும் சிறப்புமாய் போஷிக்கப்பட்டு, தனிச் செல்வாக்குடன் செல்லுமிடமெல்லாம் மக்களின் கரவொலிகளையும், ஆச்சரியக் கூச்சல்களையுமே கேட்டு வளர்ந்த, அந்த தனிக்கவனிப்பின் காரணமாகவே தீக்கிரையாகி குத்துயிரும் குலையுயிருமாய் மரண ஓலத்துடன் துடித்தபடி இருக்கும் போத்தி என்னும் வெள்ளை யானையின் கதையா அல்லது பால்யத்தின் நினைவுகள் துல்லியமாய் நினைவிலிருக்க, தத்தெடுத்து வளர்க்கப்படும் இடத்து மதியூக இளைஞனாகவும், அழியாத பால்ய நினைவுகளைச் சுமந்து திரியும் சிறுவனாகவும், ஒரே நேரத்தில் இரண்டு ஆகிருதிகளாக நின்று யோசிக்கும், அந்த முரண்களால் இன்றிலிருந்து நேற்றுக்கும் நேற்றிலிருந்து இன்றுக்குமாய் மாறி மாறி பயணம் செய்து கடைசியில் இரண்டுமற்ற சமூகக் காரணங்களுக்காகத் தன்னுயிரை மாய்க்கும் ஸ்ரீவத்ஸன் என்னும் வஸந்த்ராமின் கதையா அல்லது நாடு முழுதும் திருவிழாக் கோலம் பூண பயணம் போகும் கல்கத்தா சர்க்கஸ் கம்பெனியின் கதையா அல்லது இவையெல்லாமும் சேர்ந்த ஆடுபுலியாட்டமா என்ற விடை ‘நீல விதி’ கதையில் ஒளிந்திருக்கிறது. பாலகங்காதர திலக்குடன் நட்பாய் இருக்கும் கங்காராம், வ.உ.சி.யின் தூத்துக்குடி ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு வேலைக்குச் செல்லும் வஸந்த்ராம், மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வந்து சர்க்கஸ் நடத்தும் கம்பெனி என்று இக்கதையின் புனைவு மாந்தர்கள், வரலாற்றுத் தலைவர்களோடும் நிகழ்வுகளோடும் இரண்டறக் கலந்தவர்களாகவும், சமூக மனிதர்களின் அகவாழ்க்கையில் வந்துபோனவர்களாகவும் காட்சிப்படுத்தியிருப்பது புனைவுக்கான நம்பகத்தன்மையை தத்ரூபமாக்குகிறது. ஆனால் இந்த புனைவு மாந்தர்கள் வரலாற்றின் நிகழ்வுகளில் குறுக்கிடாத வண்ணம் கதையமைத்திருப்பது, வரலாற்றை மாற்றாத வகையில் அமைந்திருப்பது தான் சிறப்பு.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ராஜன் மகள்’ பல தலைமுறையாக வாழ்ந்த அரசர்களின் பரிபாலனையையும், அவர்களின் பழைய நகரத்தின் சிறப்பையும், அவர்களின் இருபத்தி மூன்றாம் தலைமுறை இளவரசியைத் தாக்குகின்ற கொடிய நோயையும், ஒருவரின் கனவுக்குள் சென்று அவரின் கனவுகளின் தன்மையை ஆராயும் நுட்பத்தைக் கற்றறிந்த அந்த ராஜ்ஜியத்தில் தலைசிறந்த நாவிதர் அவளுக்கு இருக்கும் நோயைக் குணப்படுத்த நோய்க்குக் காரணமான ஒரு கதைப் புலியை, “நட்சத்திரவாஸிகளின் கலவி” என்னும் வேட்டுவர்களின் பாடல் மூலம் வெளியேற்றுவதையும் அற்புதமான புனைவு மொழியில் பேசுகிறது.  நிஜமான புலிவேட்டைக்கான நடைமுறைகளை கனவுப்புலியை விரட்டுவதற்காக அமைந்த கதைக்களத்தில் அழகிய படிநிலையில் விளக்கியிருப்பது வியப்பளிக்க வைத்தது. அதே போல, ஒருவரின் கனவுக்குள் சென்று சஞ்சாரிக்கவும், அதன் நோய் தீர்க்கும் மருந்தாகப் பாவிப்பதும், மனிதர்களைப் போலன்றி பிரபஞ்சத்தையே கனவாய்க் காணும் விலங்குகளைப் பற்றிய விளக்கங்களும், ஒரு காட்சியை அறிய முற்படும் மனிதனுக்கும், அதனை வெறும் காட்சியாக மட்டும் காணும் விலங்குகளுக்குமான வித்தியாசங்களையும் சொல்லியிருப்பது மிகுபுனைவுக்கான சரியான உதாரணங்கள்.

ஒரு நிகழ்வை விளக்கி, அதிர்ச்சியுறும் அல்லது வியப்புறும் அதன் முடிவைச் சொல்லிவிட்டு, பின்பு அந்நிகழ்வு முடிவு நோக்கி நகரும் வழித்தடத்தை விளக்கமாக விவரிப்பது இக்கதைகளில் அதிகம் காணப்படுகிறது. வழக்கமான கதைகளில் ஒரு நிகழ்வின் முடிவு தெரிந்துவிட்ட பிறகு அதற்கான வழிமுறைகள் அவ்வளவு சுவாரஸ்யமாகத் தோன்றாது. ஆனால் பா.வெங்கடேசனின் சிறப்பான விவரிப்பு முறையால் அந்த வழித்தடத்தில் வாசகனும் சேர்ந்து பயணிக்கும் அனுபவம் கிட்டுகிறது. அது அந்நிகழ்வின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதோடு, வேறு பக்கம் திரும்பிப் பார்க்கவிடாத கவனக் குவிப்பையும் ஒருசேர நிகழ்த்துகிறது.

நீண்ட சொற்றொடர்கள், இடைவிடாமல் நீளும் பத்திகள், உரையாடல்களும் கதை விவரிப்புகளூம் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும் நிறுத்தற்குறிகள் அற்ற நடை என்று வாசிப்பதற்கு சிரமமான எழுத்து நடையை ஏன் தரித்துக் கொண்டீர்கள் என்பதற்கு, ”நமது பாரம்பரியம் என்பது கதை வாசித்து வந்ததல்ல, மாறாக கதை கேட்டு வளர்ந்த மரபு. என் கதைகள் எழுத்து வடிவில் அமைந்தாலும், சொல்லிக்கேட்கும் ஓசை லயத்துடனும், இசைத்தன்மையுடனும் அமைந்திருக்கின்றன. இதுதான் கீழை தேசத்து கதைசொல்லும் முறை. தர்க்கத்தை வாசித்து உணர்ந்துகொள்ளும் ஐரோப்பிய எழுத்துமுறைக்குப் பழகிய வாசகனுக்கு முதலில் இத்தகைய நடை சற்று சிரமமானதாக இருக்கலாம் ஆனால் உள்ளே நுழைந்துவிட்டால், ஒரு இசையைக் கேட்பதைப் போல, இராகத்துடன் பாடப்படும் ஒரு நாட்டார் கதையைக் கேட்பதைப் போன்ற உணர்வைப் பெறலாம்” என்கிறார் பா.வெங்கடேசன். யோசித்துப் பாத்தால் ஐரோப்பிய இலக்கியத்தை விட இலத்தின் அமெரிக்க இலக்கியம் ஒரு தமிழ் வாசகனின் மனதுக்கு நெருக்கமானதாக உணரப்படுவதற்கு இத்தகைய கதை கேட்டு வளர்ந்து வந்த பாரம்பரியமும், அதன் இசைத்தன்மையும் கூட காரணமாய் இருக்கலாம்.

தீவிர வாசிப்பின் சுவையில் ஆழந்திருக்க விரும்புபவர்களுக்கும், அர்த்தமுள்ள சொற்கள் பகடையாட்டமாடும் புனைவெழுத்தின் இன்னுமொரு புதிய வகைமையை அறிந்துகொள்ள விளைபவர்களும் ‘ராஜன் மகள்’ தொகுப்பைத் தாராளமாக வாசிக்கலாம். முதல் சில பக்கங்களின் சிரமங்களைக் கடந்தேயாக வேண்டும் என்பதையும் மனதில் வைக்கவும். செழுமையாய் எழுத ஆர்வம் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன்.

******

ராஜன் மகள் (நான்கு சிறுபுதினங்களின் தொகுப்பு)

பா. வெங்கடேசன்

காலச்சுவடு வெளியீடு

பக்கங்கள்: 288

விலை: ரூ. 300

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button