
குற்ற உணர்வின் ஆலோசனை
மூன்று சென்ட் இடத்தில்
இரண்டு சென்டில் வீடு கட்டினேன்
எஞ்சிய ஒரு சென்டில்
மரங்கள் நடுமாறு
ஆலோசனை தந்துவிட்டுப் போனது
தன் இரண்டு சென்ட் நிலத்தில்
இம்மியளவும் இடம் மிச்சமில்லாமல்
வீடு கட்டியிருக்கும்
பக்கத்து வீட்டுக் குற்ற உணர்வு.
***
குளிர் விரட்டி
குளிர் விரட்டியபடி
தன் ஆயுளை
எண்ணிக்கொண்டிருக்கும்
விறகுக்கட்டை
இறுதித்தருணங்களில்
தனக்குப் பின்
குளிர் விரட்டுவது யாரென
அலைபாய்கிறது
ஒரு தீக்கங்கென.
***
முனைப்பின் தீவிரம்
இந்த உலகம் இப்படித்தானென
முன்பே தெரிந்திருப்பின்
இந்த உலகுக்கே வராமலொன்றும்
இருந்திருக்கப்போவதில்லை
கொஞ்சம் தயாராக
வந்திருக்கலாம்
அவ்வளவுதான்.
***
ஹல்க்கின் சாபங்கள்
சூப்பர் மேன் என்றும்
ஸ்பைடர் மேன் என்றும்
தாங்கள் நினைத்தது
மலையைப் புரட்டும்
கண்டங்கள் பாயும்
ஹல்க்கைத்தான்
என்று தெரிந்துகொள்ள
சூப்பர் மேன் என நினைத்தவர்களுக்கு
பத்து வருடங்களும்
ஸ்பைடர் மேன் என நினைத்தவர்களுக்கு
இருபது வருடங்களும்
பிடிக்கலாம்
இந்தப் பத்து இருபது வருடங்களுக்கு
ஹல்க் என்று கைகாட்டப்படும்
யார் யாரையோ
வறட்சி மிகுந்த புன்னகையுடன்
எட்ட நின்று
ஹல்க் வேடிக்கை பார்க்கையில்
வேறு யாருக்கும்
எவ்விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை
இன்னும் சொல்லப்போனால்
‘ஹல்க்கை இப்போதாவது
மேடையேற்றினோமே’
என்று ஹல்க்குடனே அமர்ந்து
உருகி மாய்கிறார்கள்.
*******