இணைய இதழ்இணைய இதழ் 62கவிதைகள்

ரமீஸ் பிலாலி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல்

ஓவியம்: மிஹாரு யொகோடா

முல்லை ஆயன்
குழல் இசைக்கிறான்
ரூமியின் சபையில்.

நாணின் நாதத்தில்
தன்னை இழந்த வேட்டுவன்
பாணன் ஆகிறான்

பாலை வெளியில்
கவ்வாலி ஆகிறது
பழங்குடிச் சிறுவனின்.
கைத்தட்டல்.

பூவரச இலைச்சுருள்
சீவாளி ஆக
நாதத்துளியில்
கீத வெள்ளம்

தவிலும் மதங்கமும்
தபலாவும் டிரம்ஸும்
சர்வம் தாள மயம்
எனினும்,
எல்லாத் தோலும்
பறை குறித்தனவே.

குயிலின் அகவல்
கூறும் தகவல்:
நாதம் என்பது
வேத வித்து

உணர்வில் சுடர்ந்த
பண்ணின் சுரங்கள்
அறிவில் சரிந்து
பண்டிதம் ஆகும்

விற்பன்னம் அலுத்து
மீளும் வேளையில்
மௌனத்திற்கு வெகு அருகில்
கொண்டு நிறுத்துகிறது
நாதம் கீதம் ஏதும் அறியாச்
சிறுமியின் குரலில் ஓர்
ஆலத்தி கேட்டல்.

***

எமக்கு வாழ்வு கவிதை

இரா முச்சூடும்
நீரிலூறிய
வாதுமைப் பருப்புகளை
தொலியுரித்தல்

சதகூரிட்ட சச்சதுரங்களாக
வெங்காயம் நறுக்கி வைத்தல்

ஆட்டிறைச்சியை
கொழுப்பு நீக்கி
அலசிக் கழுவுதல்

கட்டிலில்
புதுக்கவிதையாய்க் கிடக்கும்
போர்வையை
மரபுக் கவிதையாய்
மடித்து வைத்தல்

அலுவல் கடிதமே ஆனாலும்
அழகாக எழுதுதல்

திறக்கத் தாமதிக்கும்
மடிக்கணினித் திரைக்காக
கொஞ்ச நேரம்
கோபம் கொள்ளாமல்
காத்திருத்தல்

சின்னத்திரை தொடரில்
பொருந்தாது
அபூர்வமாய்க் கேட்கும்
சிம்ஃபொனித் துணுக்கில்
மனம் நிற்றல்.

அணிலின் உரிமை பேணி
கொய்யாமல் பழம் விடுதல்

முட்டையோடுகள் நொறுக்கி
ரோஜாச் செடிகளுக்கிடுதல்

எரு வைப்பதற்குக்
குழி பறிக்கையில்
நெளியும் மண்புழுவின்
தரிசனத்தில் சிலிர்த்தல்

புழக்கடைச் சந்தில்
நிறுத்திய ஸ்கூட்டரை
சிறு சிறு பாகையாய்த்
திருப்பும் லாவகம்.

அலமாரி திறக்க
சட்டென்று கிளம்பும்
அத்தர் வாசத்தில்
சித்தம் கரைதல்

குழந்தையின் முன்
யானொரு
நனிச்சிறியன்
என்றுணர்தல்

இப்படி இப்படி
அன்றாடம் நிகழ்கிறது கவிதை
ஆயிரம் விதங்களில்

அவ்வப்போது மொழியிலும்
சிந்தத்தான் செய்கிறது
ஒன்றிரண்டு.

***

சிட்டுக்கவி

ஓவியம்: பியான்கா விஸ்ஸெலூ

மௌனமே இசையாக
மாறுவது பற்றிக்
க(வி)தைத்திருந்தபோது
சாளரக் கட்டையில்
சட்டென்று வந்தமர்ந்த
சிட்டுக்குருவி
கீச்சோபதேசம் அருளிற்று:
கவிதைத் தொழிலை
விட்டு
விடுதலை ஆகி
நிற்பாய்.

***

செங்குருகின் காடு

’காலி நிலம் வேண்டும்
என் வீட்டைச் சுற்றி’
என்றென் உள்மனம் எப்போதோ
பிரார்த்தனை செய்ததுபோலும்;
வீடில்லா மனைகளாகவே கிடக்கின்றன
ஏழாண்டுகளாக
(சதுர அடி ரூ.2400 என்கிறார்கள் இப்போது.)

பின்னால் கிடக்கும் அரை மனையில்
தோட்டம் போட்டிருக்கிறார்
மூன்றாம் வீட்டுக்காரர்.
அவர் வீட்டுச் சாக்கடையே
வாய்க்கால்கள் ஆகித்தான்
அதன் மேனி செழிக்கிறது.

புயலுடன் அடித்துத் தீர்த்த
பெருமழை ஒன்றில்
முருங்கை சாய்ந்த பின்
வாழை வைத்துப் பேணுகிறார்.

இப்போதெல்லாம்
ஒன்றரை ஆள் உயரத்திற்கு
ஓங்கி நிற்கும்
அரை டஜன் சிறுதோப்பின்
பரவசப் பசுமையில்தான்
விடிகிறது நாள் எனக்கு.

இளம் வெய்யிலில்
பசுஞ்சுடரென ஒளிரும்
வாழையிலைகளின் மேல்
வைத்த கண்ணில்
கணத்தில் கூடிவரும் தியானம்

நேரம் குறித்த மாதிரி
வாழைமர இலைமீது
வந்தமரும் தினமும்,
காற்றிலும் ஒளியிலும்
திளைக்குமொரு செங்குருகு.

தூய ஒளி பருகிக் களிக்கும்
கானுயிரே அப்போது
வானுயிராய்த் தோன்றி
ஆன்மாவின் குறியீடாய்
அமர்ந்தது என் அகத்துள்.

எவ்வளவுதான் நான்
கூர்ந்து நோக்கினும்
கண்ணில் படுமோ
செங்குருகின் காடு?

நேற்று மாலை
அகஸ்மாத்தாய் விழுந்த பார்வையில்
வாழையடிச் சாக்கடையில்
கிளறிக் கொண்டிருந்தது.

புலரியின் ஒளியும்
புழு தேர் வாழ்க்கையும்
குறையொன்றுமில்லை

புழுவே ஒளியை ருசிக்கிறது
ஒளியே புழுவைப் புசிக்கிறது.

******

trameez4l@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button