
பிள்ளைத்தாயம்
தன் அப்பன் கல்லறையில்
குனிந்து கிடந்து ஐந்துபேர்
துக்கித்து அழுத சமயத்தில்
மல்லார்ந்து தாயம் விழுந்த
ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும்
பல்வரிசையை ஆகாயம் காட்டி
ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை
அசைத்துக்கொண்டிருந்தாள்
கையோடு வந்துவிட்ட பல்லை
தகப்பன் குழியிலேயே
குட்டிக்குழி செய்து
புதைத்து வந்தாள்
சமாதி செய்வது எப்படியென
சமீபத்தில் வாய்த்த பட்டறிவில்
முதல் பல் முளைத்தபோது
‘கடி… கடி…’யென அவள் வாய்க்குள்
தன் விரல் நுழைத்து கூசிய
அப்பனின் ஆள்காட்டி விரலுக்கு
அதை எப்படியாகிலும்
சேர்த்துவிடும் நோக்கத்தோடுதான்
ஒற்றைத் தூறலாய்
துவங்கியிருக்கிறது மழை.
****
முதியோர் இல்லத்து முற்றம்
சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிற
பார்வதி பாட்டி
தனது நிழல்
விடியலில் வானேறும் பரிதியால்
எவர் துணையுமின்றி
நகர்கிறதை ரசிப்பதற்காகவே
வெயில் காய வந்தமையால்
மழை கண்டு
உதடு பிதுக்குகிறாள்
வீட்டை விட்டு வெளியேறும்போது
அணிந்திருந்த சட்டையையே
மீண்டும் மீண்டும் சலவை செய்து
அணிகிற பழக்கமுள்ள அவர்
“பெயர் ஆறுமுகம்
அணிந்திருந்த சட்டைநிறம் பச்சை”
என்ற வாக்கியத்தை
காணாமல் போனோர் அறிவிப்பில்
இன்றும் தேடித்தோற்று
வானிலை அறிவிப்பு பக்கத்துக்கு
வறண்ட விழியுடன் நகர்கிறார்
கருத்த கழுத்தணிந்த
முத்தாரத்தை விரல்நுனியால்
திருக்குகிறார்ப்போல்,
மங்கிப்போன பார்வைக்குள்
வெளிச்சம் கூசுகிற
கடந்தகால நினைவுகளைச்
சுழற்றும் மரகதம் பாட்டிக்குள்
மழை வாசம் எதை மலர்த்தியதோ
மழுக்கெனப் பிறக்கிறது
ஒரு விசும்பல்
மைதானத்தில் திமிர்ந்து
ஆடிக்கொண்டிருந்த
மழையைக் காற்று
காது திருகி இழுத்துவந்து
வணங்கப் பணிக்கிறது
அந்த முற்றத்தவர்களின் கால்களுக்கு
சாரலாக.
******