![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/05/Picsart_22-05-16_20-30-37-354-780x405.jpg)
The Illegal (2019)
Dir: Danish Renzu | 86 min | English | Amazon Prime
உலகத்துலயே சுமக்க கடினமான எடை கூடுன விசயம் என்ன என்று எப்போதாவது யோசிச்சுப் பாத்துருக்கீங்களா? எனக்கு இந்தக் கேள்வி மனசுக்குள்ள எழுந்தது இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கிறபோது. உடனடியா அடுத்த நொடியே அதுக்கான பதிலும் மனசுக்குள்ள மின்னலா வெட்டி மறஞ்சது. உலகத்துலயே சுமக்க மிகக் கடினமான விசயம் ஒரு மனுஷன் சுமந்துக்கிட்டு அலையுற, நிறைவேறவே முடியாத அல்லது வாய்ப்பில்லாத கனவும் லட்சியமும்தான்.
வெளிநாடு போயிட்டா வாழ்க்கையில நல்ல நிலைக்கு வந்துடலாம்ன்ற கனவோட சுத்திக்கிட்டு இருக்க மிடில் கிளாஸ் பசங்ககிட்ட கேட்டுப் பாருங்க, ‘உன் கனவு தேசம் எது?’னு. யோசிக்காம அதுல பெரும்பாலானவங்க சொல்ற பதில் அமெரிக்காவாதான் இருக்கும். அமெரிக்கா ஒரு கனவு தேசம். வளர்கின்ற நாடுகள் எல்லாத்துலயும் இருக்கிற இளையவங்க எல்லாருக்கும் அது கனவு தேசம்தான். அங்க போயி படிச்சா வாழ்க்கையில முன்னேறிடலாம். அங்க வேலை கிடச்சா செட்டில் ஆகிடலாம். அங்க போயிட்டா கை நிறைய சம்பாரிச்சுடலாம். இப்படி அந்த கனவு தேசத்துக்குப் போறதைச் சுத்தி பல பல எண்ணங்கள் பின்னிக் கிடக்கு.
ஒரு நல்ல Feel good Cinema எப்படித் துவங்குமோ அப்படித்தான் துவங்குது படம். சினிமாதான் வாழ்க்கை, கனவு, எல்லாமே என வாழுற ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் ஹசன் (Suraj Sharma – அட Life of Pi படத்துல வந்தாரே அந்த தம்பியேதான்). குடும்பத்தோட சக்திக்கும் மீறி அவனுடைய கனவுக்கு வீட்ல எல்லோரும் துணை நிக்குறாங்க. அவன் அமெரிக்காவுல இருக்குற ஒரு பெரிய பல்கலைக்கழகத்துல சினிமாவை பாடமாகவே எடுத்துப் படிக்கிறதுக்காக கிளம்பிட்டு இருக்கான். மனசு முழுக்க நிறைஞ்சு கிடக்குற சினிமாவை முறைப்படி கத்துக்கப்போற அவனை நல்லபடியா வழியனுப்பி வைக்கிறாங்க அவங்க பெற்றோரும், சகோதரி மாஹியும் ( Shweta Tripathi – நம்ம மெஹெந்தி சர்க்கஸ் பொண்ணு). அமெரிக்காவுல இருக்கிற அவனது மாமுஜான் (மாமா) வீட்டில் தங்கி கொஞ்சம் செலவை மிச்சம் பிடிக்கலாம்னு முடிவு செய்து, நல்லதொரு துவக்கமா அங்க போயி சேருறான்.
போன பிறகுதான் புரிஞ்சுக்கிறான். அவனோட மாமுஜான் மற்றும் அவரது குடும்பமும் அவன் அங்க தங்குறத சுமையா நினைக்குறாங்க என்பதை. இப்போதான் மொட்டு விட்டிருக்கிற தன் கனவுக்கு உதிர்ந்து விடுமோனு கலங்கி நிக்கிற அவன் முன்னால கலஞ்சு போன கனவை கையில வச்சிக்கிட்டு நிக்கிற கடந்த தலைமுறை ஆளா அவனது மாமுஜானை வெறுமனே கடந்து போயிடறான். ஒண்ணும் தெரியாத தேசத்துல கொஞ்சம் இந்திய வாசனையோட, ’New Delhi Café கண்ணில் தட்டுப்பட அதுக்கு எதிர்புறம் தெருவில் அப்படியே அமர்ந்து தத்தளிக்கிற அவனை தற்செயலா பாக்குறார் அந்த ஓட்டலில் வேலை பாக்குற பாபாஜி. பார்த்து அனுதாபம் காட்டுறார். கூடவே உணவு, வேலை, தங்குமிடத்துக்கும் அவரோட முதலாளிகிட்ட சொல்லி ஏற்பாடு செய்றார்.
கருகிடும் என அவன் கலங்கிப் போயிருந்த லட்சியக் கனவு இளைப்பாற ஒரு நிழல் கிடைச்சது அவனுக்கு பெரிய ஆறுதல். அந்த ஹோட்டல் முதலாளி, ‘கான்’ ரொம்ப கறாரான ஆசாமியா இருக்குறார். கனவையும், கனவு நினைவாக அவசியமாகிப் போன வேலையையும் ஒருசேர சுமக்க ரொம்பவே சிரமப்படுறான் ஹசன். மறஞ்சு மறஞ்சு சினிமா குறிச்ச புத்தகங்களை ஹோட்டலுக்கு உள்ளேயே அங்க அங்க படிக்கிறான். இத கவனிக்கிற முதலாளி கானோட கோபத்துக்கு ஆளாகிறான். அப்போ அவனுக்கு ஆதரவா இருப்பவர் பாபாஜி மட்டும்தான். முதலாளி போதாது என ஸ்பானிய சமையல்காரன் குஸ்தாவ் வேற ஹசனை முறைச்சுக்கிட்டு சமயம் அமையும் போதெல்லாம் வம்பிழுக்கிறான்.
பல்கலைக்கழகத்துல பாடம் எடுக்கிற பேராசியர்கள் எல்லாம் மாணவர்கள்ட்ட கலையை கத்துக்க வந்துள்ள உங்க கவனம் எல்லாம் கலை மேலதான் இருக்கணும். அதனால வேற வேலை செய்றது, வேறு விசயங்கள்ல கவனத்தை சிதறவிடறது என எதுவும் இல்லாம பாத்துக்கச் சொல்லி அறிவுரை சொல்றாங்க. அவங்க சொல்றதுல இருக்கும் நியாயம் புரிஞ்சாலும் ஹசனுக்கு வேறு வழியே இல்லை.
பொதுமக்கள் மத்தியில பொதுவா கலைஞர்கள் எல்லாரும் கொஞ்சம் விசித்திரமான (eccentric) ஜந்துக்கள் என்பது மாதிரியான பார்வை இருக்கு இல்லையா! அது ஒரு வகையில் உண்மை. ஆனா ஜந்துக்கள் என்பது எல்லாம் நம்மோட பார்வைதான். உண்மையில கலை எதுவானாலும் அதை தங்கள் வசமாக்க கலைஞர்கள் தங்களையே கொஞ்சம் இழக்குறாங்க. சமரசங்கள் (compromises) இல்லாம வாழ்க்கையில எதுதான் கிடைக்கும்? கலைக்குள்ளயே மூழ்குற கலைஞன்தான் முத்தெடுக்கிறான்.
கனவையும் அன்றாட வாழ்க்கை கஷ்டத்தையும் ரெட்டைக் குதிரையாய் ஓட்டுற ஹசன் சீக்கிரமே களைப்பாகுறான். அது தவிர்க்க முடியாததும் கூட… அவனோட திரைக்கதை அசைன்மெண்ட் சொதப்பிடுது. வேலை செய்யுற இடத்துல அடுத்தடுத்து கசப்பான அனுவங்கள். முதலாளியோட உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுது. சுருங்கச் சொன்னா எல்லா முதலாளி மாதிரியும்தான் அவனும் நடந்துக்குறான். வேலைக்காரனை விட லாபத்தை குறியா பாக்குற எல்லாரை மாதிரிதான் அவனும். அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பாபாஜிதான். கொஞ்சம் கொஞ்சமா அவனை தன் பிள்ளையாகவே பாக்கத் துவங்குறான் அந்த நல்ல மனுஷன். அவரு ஊருக்குப் போயி இருபத்தஞ்சு வருசமாச்சு என இவனுக்குத் தெரிய வரும்போது ஹசன் கலங்கிப் போறான். ஆனா அவரோ, ‘ஆமா, இதுதான் வாழ்க்கை. என்ன செய்ய முடியும்?’ என்ற பாவனையோட ஒரு எளிமையான புன்னகையால அதைக் கடந்து போயிடறார். அவரோட கதாபாத்திரத்தை படம் முடிஞ்ச பின்னாடி பாக்குறப்போ, மாத்த முடியாததை ஏத்துக்குறதைத்தான் மனுஷன் வாழ்க்கையில பக்குவப்படுவது எனச் சொல்றாங்களோ என நினைக்கத் தோணும். சொல்லப் போனா ஒரு வகையில அதுவும் உண்மைதானே!
இடையில ஹோட்டலுக்கு சாப்பிட வர்ற ஜெச்சிக்கா மீது உருவாகுற ஒரு மெல்லிய நட்பு மெல்ல காதலா அரும்புது. ஆனா இந்த தென்றலுக்கு மத்தியில வேலையில புயல் வீசுது. முரட்டு குஸ்தாவோட ஏற்படுற ஒரு கைகலப்பால வெளிய துரத்தப்பட்டு திரும்பவும் தெருவுக்கே வருது ஹசனோட வாழ்க்கை.
*********
முதல்ல சொதப்புன திரைக்கதைய திரும்பவும் உழைச்சு சரி செஞ்சு புதுசாக்குறான். அவனோட படைப்பு ரொம்ப பிடிச்சுப் போயி, பேராசிரியர் தனியா அவன்கிட்ட பேசுற காட்சி ரொம்ப முக்கியமானது. அவர் அவன்கிட்ட, ”ஹசன்… நீ ஏன் ஒரு சினிமா கலைஞனா வரணும் என நினைக்கிற?” எனக் கேட்க அவனோ , “என்னை நான் வெளிப்படுத்திகிற ஒரே மீடியம் சினிமாதான் என நினைக்கிறேன்… என்னோட உணர்ச்சிகளையும் (emotions), உணர்வுகளையும் (feelings) திரையில் காட்ட எனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறான்.”
இதுல என்ன முக்கியம் அப்டீன்னு கேக்குறீங்களா? “ஹசன், உனக்கு திரைமொழி குறிச்ச புரிதல் நல்லா இருக்கு. உன்னோட கதாபாத்திரங்களை உருவாக்குற திறன், ஒளிப்பதிவோட தன்மை, விஷுவலா கதை சொல்லும் பாங்கு எல்லாமே நல்லாயிருக்கு…” தொடர்ந்து போகிற அந்த உரையாடல்ல பேராசிரியர் கேக்குறார் , “உனக்கு ஃபெல்லினியை (Federico Fellini ஒரு இத்தாலிய திரைமேதை) ரொம்பப் பிடிக்குமோ!?”. மலர்ந்து போற ஹசன் , “ஆமாம்” எனச் சொல்ல, அதுக்கு அவரு சட்டுனு , “ஆனா நீ ஃபெல்லினி இல்ல. நீ ஹசன். உன்னோட படைப்புல நீதான் தெரியணும் ஹசன். வேறு யாரும் இல்ல” எனச் சொல்ற இடத்துல, உண்மையிலயே ஹசன் போலவே கலையை புரிஞ்சுக்க ஆசைப்படுற நம்மள்ல ஒவ்வொருவரும் அயர்ந்து போவோம் ஒரு நொடியாவது.
பதில் சொல்லத் திணறும் ஹசன் தன்னோட கஷ்டமான நிலையை எடுத்துச் சொல்ல முயற்சி பண்றான். மறுபக்கம் பேராசிரியர் கலையோட, வாழ்க்கையோட எதார்த்தத்தை சொல்றார். இந்த ரெண்டு பேரையும் நாம் ஒரு பார்வையாளரா ஒரே சட்டகத்தில் (frame) பாக்குறது வித்தியாசமான ஒரு கணம். கனவைத் துரத்துற ஒருத்தனுக்கும் அந்த கனவுக்குமான தூரத்தை அதுல நாம உணர முடியும்.
கலையைப் பத்தின, படைப்பாற்றலைப் பத்தின ஒரு பெரிய புரிதல் இந்தக் காட்சி வழியா நமக்குக் கிடைக்கிது. எந்த ஒரு கலையும் நமக்கு அறிமுகமாகுறது அதுக்கு முன்னாடி அதில் கோலோச்சிய மாஸ்டர்களோட படைப்புகள் வழியாதான். அவங்களோட படைப்புகள் வழியாக கதவுகளைத் திறந்துதான் நாம கலை என்ற அரண்மனைக்குள்ள நுழையுறோம். ஒரு கட்டத்துல படைப்புத் தாகம் நமக்கும் ஏற்பட அங்க ஒரு சிக்கலை அப்படி வருகிற எல்லாருமே சந்திச்சே ஆகணும். இயல்பாகவே மனிதன் குழந்தைப் பருவத்துல இருந்து எல்லா விசயங்களையும் பார்த்துப் பார்த்து அதைத் தானும் செஞ்சு தானே கத்துகுறான். அதாவது பாத்ததை பிரதி (imitate) செய்யுறான். தான் மயங்கிக் கிடந்த மாஸ்டர்களோட சாயல் அவன் படைப்புல எட்டிப் பார்ப்பது இயல்புதான். ஆனா அதை ஒரு கலைஞனாக விரும்புறவன் அனுமதிக்கவே கூடாது. அதனைத்தான் அந்த மாஸ்டர் ஏற்கனவே செஞ்சுட்டாரே. அப்புறம் எதுக்கு இவன் அனாவசிய நகல் (ஜெராக்ஸ்). கால வெள்ளம் நகல்களை எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிடும் அசலான படைப்புகள்தான் தாக்குப் பிடிக்கும். அதனால தேடுற கலைஞனோட முதன்மையான சவால் தனக்கான குரலை/தனி அடையாளத்தை தன்னோட கலை வடிவத்துல அடையுறதுதான். இதைத்தான் ஹசன்கிட்ட அந்த பேராசிரியர், “நான் உன்னோட படைப்பில் உன்னைத்தான் பாக்கணும்” எனச் சொல்றார்.
**********
எப்படியோ சவால்களைச் சமாளிச்சு எதிர்நீச்சல் அடிச்சுக்கிட்டு இருக்கிற ஹசனை உடைச்சுப் போடுறது மாதிரி ஒரு செய்தி வருது. முன்னமே பார்வையாளரா நமக்கு கதையில சொல்லப்பட்டிருந்தாலும், ஹசனுக்கு தாமதமாதான் அது தெரிய வருது. அது அவனது அன்பு அப்பாவோட தவிர்க்கவே கூடாத அறுவை சிகிச்சை பத்தின தகவல். உண்மையில அவன் சந்திக்கிறதுலயே மிகப் பெரிய சவால் இதுதான். ஏன்னா முன்ன அவன் சந்திச்சது எல்லாமே பொருளாதார ரீதியில மட்டும் இருக்குற சவால்கள். அது வெறும் சர்வைவல் பிரச்சனை சார்ந்தது. ஆனா இது அப்படியானது இல்ல. ரொம்பவே எமோஷனலானது. தன்னோட கனவு அஸ்தமிச்சுப் போச்சுன்றத உடனடியா புரிஞ்சுக்குது மூளை. ஆனா மனசை ஏத்துக்க வைக்கிறதுதானே சிரமமான காரியம். ஹசன் ஒரு கட்டத்தில் தான் பொக்கிஷமா பாதுகாத்து வந்த காமிராவை அவனே வீதியில் உடச்சு எறியும் காட்சி அவனே தன்னோட கனவுகளை நொறுக்கி சிதைக்கிறதன் குறியீடுதான். ரெண்டே விநாடிகள் வருகிற அந்தக் காட்சி இதை நம்ம எல்லாருக்குமே உணர்த்திவிடும். சினிமா மொழியில சில விசயங்கள் கிளீஷே காட்சி போல தெரிஞ்சாலும் அதனை பயன்படுத்துறதுக்குக் காரணம், அதுதான் அந்த இடத்துல ரொம்ப அழகா பார்வையாளருக்கு ஒரு குறிப்பிட்ட உணர்வைக் கடத்தும் என்பதாலதான்.
முன்னாடி நியூ டெல்லி கஃபேயில வேலை பார்த்தபோது பாபாஜி வாழ்க்கைய கொஞ்ச நாட்கள்ல சிறிது சிறிதா தெரிஞ்சுருப்பான் ஹசன். அதாவது அவன் முதலாளியும் சராசரி முதலாளிதான் என்பதை. பணத் தேவை இருக்குற தொழிலாளிகளோட அவசர காலத் தேவைகளை தீர்த்து வைப்பது கானோட வழக்கம். ஆனா அதுக்கு ஈடாக அவன் கேட்பது அவன் கொடுத்த தொகைக்கும் மிக அதிகமான உழைப்பை. கான்கிட்ட சிக்கும் இந்த மாதிரி உழைப்பாளிகள் எல்லாம் நவீனமான கொத்தடிமைகள் என்பதற்கு மேல சொல்வதற்கு ஏதுமில்ல. என்ன, அவங்க கொஞ்சம் போல அடிப்படை வசதிகளோட வாழுற, ‘புலம் பெயர்ந்த கொத்தடிமைகள்’ (Immigrant bonded labours). அப்படியான ஒரு கொத்தடிமைதான் பாபாஜி. தன்னோட செல்ல மகளை ஊரில் நன்றாக வளர்ப்பதற்காக, அவள் எதிர்காலம் பிரகாசமாக இவர் தன்னை அடமானம் வச்சிருக்கிறார் முதலாளிகிட்ட. அவன் செய்யுற அப்பட்டமான உழைப்புச் சுரண்டலுக்கு தெரிஞ்சே தன்னை ஒப்புக் கொடுக்குறார் பாபாஜி.
இது ஹசன் முறை. தன்னோட கனவை ஒட்டுமொத்தமா குழி தோண்டிப் புதைச்சுட்டு திரும்பவும் வேற வழியில்லாம ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்குறான். பாபாஜி சிபாரிசோட திரும்பவும் கான் ஹோட்டல்லையே வேலை. ஆனா இப்போ முழு நேர வேலையா… கிடைத்த காதலோட நிழல்ல கூட இவனால் ஆசுவாசமா உக்கார முடியாத நிலை. அதுல இருந்தும் வெளிய வர்றான். தனக்காக எல்லாததையும் தூக்கிப் போட்டுட்டு தன் கனவுக்கு வடிவம் கொடுத்த குடும்பத்துக்காக, குறிப்பா அவனோட அப்பாவுக்காக, தன் கனவைத் தூக்கி எறியுறான் ஹசன். ஒரு பெரிய தொகையை முன்பணமா முதலாளிகிட்ட இருந்து வாங்கி தன்னோட அப்பாவின் அறுவைசிகிச்சைய நல்லவிதமா முடிச்சு அவரை மீட்டு எடுக்குறான். இடையில பாபாஜி தன் பெண்ணை பாக்க முடியாத ஏக்கத்துலயே மூச்ச நிறுத்திக்கிறார். தன் அப்பா செத்தது போல வலிக்குது ஹசனுக்கு. கேட்க நாதியற்ற ஊரில் உடன் இருக்கிற உண்மையான தோழமைதானே உசிரு. அதுவே போயிட்டா அப்புறம் என்ன நம்பிக்கை மிச்சமிருக்கும்.
திரை இருண்டு, ‘ஐந்து வருடங்களுக்குப் பிறகு’ன்னு மீண்டும் ஒளிறுது. இப்போ பாபாஜி இடத்துல ஹசன். அவரைப் போலவே தன் வாழ்க்கையை அடைமானம் வைத்திருக்கும் முதலாளி முன்னால் கைகட்டி நிக்குறான். அமெரிக்க கனவோட அங்கு வரும் இன்னோரு இளைஞனுக்கு கான் அடைக்கலம் (!) தர்றாரு. இங்கே இந்தியாவுல ஹசனோட தங்கைக்கு, இவனோட உழைப்பின் பயனா, திருமணம் நடக்குது. ஒரு சகோதரனா அவனால அதை நடத்த பணம் தர முடியுதே ஒழிய கலந்துக்க முடியாது. இங்கே இருக்கிற தன் குடும்பம் மகிழ்ந்திருக்க தன்னையே உருக்கிக்கிற கணக்கற்ற வெளிநாடு வாழ் உழைப்பாளிகளோட ஒரு துளி ஹசன்.
முன்பு ஹோட்டல்ல இருந்த காலகட்டத்துல, அவன் தன் காமிராவில வேலை செஞ்சுக்கிட்டு இருக்கிற சக பணியாளர்களை/நண்பர்களை வீடியோவாக எடுப்பது வழக்கம். அவன் எடுத்த அந்தக் காட்சிகள் படம் முடிஞ்சு எழுத்துகள் ஓடிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமா நாம பார்க்கக் கிடைக்குது. அங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற நாடு, வேற வேற கதை. ஆனா ஒரு விதத்துல எல்லா கதையும் ஒண்ணுதான். தங்களோட பல வண்ணக் கனவுகள் நெனவாக, தேசம் வந்து பிழைக்க வந்த மனிதர்கள் கடைசியா வாழ்க்கை என்ற சூறாவளியில் சிக்கின குப்பை மாதிரி ஒதுக்கி அடிக்கப்பட்டு கனவுகள் எல்லாம் உடைஞ்சு போயி, உயிர் வாழுறதயே கனவா சுமக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு நவீன கால கொத்தடிமைகளா மாறிப் போன கதைதான் அவங்களோடது எல்லாமுமே. என்ன! கதாபாத்திரங்கள் வேற… கதையோட தன்மை வேற… ஆனா எல்லாத்துலையும் புதைஞ்சு கிடக்குற துயரம் ஒண்ணுதான்.
படத்தோட இயக்குநர் Danish Renzu காஷ்மீரத்து (பிறந்தது) இளைஞர். அவரோட முதல் படமான Half Widow (2017) பரவலா கவனம் பெற்ற படம். (Amazon Prime UK இல் இந்தப் படம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனா பார்க்க முடியல.) இவரோட ரெண்டாவது படம்தான் இப்போ நாம் பார்த்த திரைப்படம். ஒரு வகையில இவரோட சினிமா தேடலும் இந்தப் படத்தின் ஹசனோட சினிமா தேடலும் ஒண்ணுதான்னு சொல்லத் தோணுது. பணம் பண்றதுக்காக இவர் சினிமா எடுக்கல. மாறா தான் சொல்ல நினைக்கிற விசயத்தை பரவலா மக்கள்கிட்ட எடுத்துக்கிட்டு போற மீடியமா சினிமாவைப் பார்க்குறார். காஷ்மீர்ல இருந்து இன்னும் நிறைய இளைஞர்கள் புதிய பார்வைகளோட சினிமா துறைக்கு வரணும் என்பதை இவர் விரும்புறார். அதுக்கான முயற்சிகள் எடுத்துகிட்டு இருப்பதாகவும் சொல்றார்.
*****
A heartwarming story sir.
Your language made me to understand the emotions in the story….. Movie selection is super sir…. I learnt something from this movie, it made me to feel guilt about
Characters with unsuccessful dreams. I believe your words can change something positive in our souls✨.
Thankyou sir.
Keep doing….. eagerly waiting for the next.