
The Great Indian Kitchen (2021)
Dir: Jeo Baby | 100 min | Malayalam | Amazon Prime
பொதுவாக ஆசிய நாடுகளில் தான், உலகளவில் என எடுத்துக் கொண்டாலும் கூட, குடும்பம் எனும் அமைப்பு சிதையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்தியா உள்பட பெரும்பான்மையான தேசங்களில் இந்த குடும்ப அமைப்பின் அடிக்கட்டுமானமாக பெண்ணே இருக்கிறாள். குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கடவுள் என அவளுக்கு ஸ்தானம் வழங்கப்படுகிறது. ஆனால், இது ஒரு வித சுரண்டலின் ஒப்பனை செய்யப்பட்ட வடிவம் மட்டுமே. மேலைநாடுகளில் சமூகம் எனும் ஒட்டுமொத்த அமைப்பின் நுண் அலகுகளாக தனிமனிதர்களையே நாம் அடையாளப்படுத்த முடியும். அங்கும் குடும்ப அமைப்பு இருக்கிறதெனினும், தனிமனித சுதந்திரத்திற்கு நிகரான முக்கியத்துவத்தை அது என்றோ இழந்து விட்டது. ஆனால், பெரும்பான்மையான கீழைத்தேய நாடுகளில் குடும்பம் எனும் அமைப்பே சமூகம் எனும் பேரமைப்பின் அடிப்படை அலகாக இருக்கிறது. குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஆணும் பெண்ணுமிருப்பினும், அவரவர்கென ஒதுக்கப்படுகிற பொறுப்புகளில் நிலவும் பாகுபாடுகள் பாலின சமத்துவத்தின் அவசியத்தையே நமக்கு உணர்த்துபவையாக இருக்கின்றன.
எந்தவொரு குடும்பத்திலும் மிக மிக அடிப்படையான பொறுப்புகளாக நாம் சுட்டத்தக்கவை உணவு தயாரித்தலும், சுத்தம் பேணலும். இவை இரண்டுமே குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆரோக்கிய வாழ்வுக்கான பிரதான அடிப்படைகள். மேலும் இவை வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி செய்யப்பட்டே ஆகவேண்டிய கடமைகளாகவும் இருப்பவை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரண்டுமே பெண்ணுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட கடமைகளாகவே சமூகத்தின் பொதுப்பார்வையில் நிலைபெற்றுவிட்டது. மிகப் பெரிய உடலுழைப்பைக் கோருகிற சமையல் செய்தல் மற்றும் வீட்டின் சுத்தம் பேணுதல் ஆகிய இரண்டு கடமைகளையும் சுமந்தலையும் பெண்கள், அதனோடேயே தங்கள் சுயத்தைக் கருக்கிக் கொள்வதே பெரும்பான்மை சமூக யதார்த்தமாக இருக்கிறது. வீடடைந்து கிடந்த பெண்கள் மிகச் சமீப காலத்தில் தான் கொஞ்சம் சிறகுகள் விரித்து வெளியுலகம் பார்க்க வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் இரட்டைச் சுமை சுமந்து உழல்கின்றனர் என்பதும் நிகழ் யதார்த்தம்.
குடும்பப் பாரம்பரியம் எனும் பாறையில்..புகுந்த வீட்டின் உறுப்பினர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டுமெனும் எதிர்பார்ப்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டவாளாக ஒடுக்கிப் போகிறாள் மணமான பெண்ணொருத்தி. அவள் பெரும்பான்மை இந்தியப் பெண்களின் வகைமாதிரி. அவ்விதத்தில் ‘சமையலறைக்கு வாக்கப்பட்ட’ பெண்களின் கதைதான் இயக்குநர் ஜியோ பேபியின் அற்புதமான இயக்கத்தில் கடந்த வருடம் நேரடியாக ஓடிடி தளத்தில் (படம் முதலில் Nee Stream தளத்தில் தான் வெளியானது.) வெளியாகிய ‘The Great Indian Kitchen’ மலையாளத் திரைப்படம்.
அறியாத கதை என்றில்லை. ஆனால், அதை காட்சிரீதியாகவும் , அதே வேளையில் தர்க்கரீதியாகவும் அணுகுகிற விதத்தில் தான் படம் முக்கியமான ஆக்கமாக திரள்கிறது. பஹ்ரைனில் மிகச் சிறப்பாக வளர்ந்த, நல்ல கல்விதகுதியுடன் நாட்டியமும் பயின்ற ஒரு பெண், பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் ஆசிரிய மணமகனை மணந்து கொள்கிறாள். ஆனால், அது ஆணாதிக்க மனோபாவம் புரையோடியிருக்கிற ஒரு சராசரி குடும்பம் தான் என்பதை சென்ற ஓரிரு நாட்களுக்குள்ளாகவே உணர்ந்து கொள்கிறாள் மருமகள். பாத்திரங்களைத் துலக்கும் கைகள், காய்கறிகளை நறுக்கும் கைகள், மாமிசத் துண்டங்களை வெட்டும் கரங்கள், சமையல் செய்கிற கைகள், விளக்குமாறு பிடிக்கிற கைகள், ஈரத்துணி கொண்டு இல்லம் துடைக்கும் கைகள் என பெண்களின் கரங்களே சட்டகங்களை பெரும்பான்மை காட்சிகளில் நிறைக்கின்றன. அசுர வேகத்தில் கோர்க்கப்பட்ட துண்டுக் காட்சிகளில், நாம் மேலிருந்து குழம்புகள் கொதிக்கும் சட்டிகளை, நேந்திர வறுவல் கொதிக்கும் எண்ணெய்ப் பாத்திரங்களை… வறுத்தல், அரைத்தல், வதக்கல், பொறித்தல், அவித்தல் என சகலத்தையும் காண்கிறோம். வசனங்களே மிகக் குறைவாக இருக்கின்ற இப்படத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வேளை உணவு தயாரிக்கும் காட்சிகளே பிரதான கவனத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடுகிற ஜெர்மன் இயக்குநர் சாண்டல் அகர்மனின் ஒரு திரைப்படத்தில் (Jeanne Dielman, 23, quai du commerce, 1080 Bruxelles) தொடர்ச்சியாக ஒரு பெண் அன்றாட வீட்டு வேலையைச் செய்வதையே சலிக்கச் சலிக்கக் காட்டியிருப்பார். பெரும்பாலான ஜப்பானிய திரைப்படங்களில் ஒரு காட்சியேனும் உணவு மேசையும், உணவு அருந்துதலும் இடம்பெற்றுவிடும். பெரும்பான்மையான இந்தியப் படங்களில் உணவு மேசை, கதாபாத்திரங்களின் பொருளாதார நிலையை உணர்த்தவே பயன்படுவதை அது காட்சிப்படுத்தப்படுகிற விதத்தை வைத்தே யூகிக்கத் தோன்றும். உணவு ஒரு மிக முக்கிய ‘பிரதேச கலாச்சார அடையாளம்’. ஆனால், அந்த கோணத்தில் உணவருந்துகிற காட்சிகள் இந்திய சினிமாக்களில் பயன்படுத்தப்படுவதே இல்லை. ஆனால், இதை எல்லாம் ஈடு செய்வது போல அர்த்தப்பூர்வமாக ஆனால் சலிக்கச் சலிக்கச் சமையல் மேடையையும், இடைவிடாமல் எரியும் அடுப்பையும் காட்டுகிற இந்த காட்சிப்படுத்துதல் என்பது வெறும் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே என்பது கவனத்திற்குரியது.
மாமியாரும் மருமகளும் இணைந்து சமைலறையே கதியெனக் கிடந்து வெந்து கொண்டிருக்கிற அதே கணத்தில், ஆண்களின் கால்கள் உணவு மேசையை விட்டு ஒரு அடி கூட சமையலைறைப் பக்கம் நகராததையும் நாம் கவனிக்க முடிகிறது. ஒரு குடும்பத்தின் அடிப்படை வேலைகளைச் செய்ய வீட்டின் பெண்கள் மட்டுமே பணிக்கப்படுவதை துண்டுக் காட்சிகளை அழகாய் அடுக்கி உருவாக்கப்பட்ட சிற்சில மாண்டேஜ் காட்சிகளின் வழியே கடத்தி விடுவது மிகச் சிறப்பு. வீட்டின் தலைவி உறங்கும் முன்னர் சமையலறையை துப்புரவு செய்து ஒழுங்குபடுத்தி களைக்கிற அதே கணத்தில் குடும்பத்தலைவன் தனது கைபேசியில், மெத்தையில் சாய்ந்தபடி, புலனப்பகிர்வுகளை மேய்வதைக் காண்கிறோம். மறுநாள் காலை தினசரியை வாசிக்கையில், பரபரத்த தனது காலைப் பணிகளுக்கு ஊடாக அவனது பற்குச்சியையும் பற்பசையையும் கூட அவள் ஓட்டமும் நடையுமாய் வந்து தந்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் புகுந்து கொள்வதையும் காண்கிறோம். தலைமுறை மாறினாலும் கண்ணோட்டங்களில் மாற்றமில்லை என்பது போல மருமகள் சமையலில் மாமியாருக்கு தோள் கொடுக்க அவள் கணவனோ யோகாசனம் செய்கிறான். Intercut ஷாட்களாக காட்டப்படுகிற இவை கவனிப்புக்குள்ளாக்க வேண்டியதை சொற்ப நேரத்தில் நிறைவாய்ச் கோடிட்டுக் காட்ட உதவுகின்றன.
குடும்பத்தில் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு வயது பேதமென்பதே இல்லை. புதுமருமகள் வந்த சில நாட்களில் மாமியார் தனது கர்ப்பிணி மகளின் அழைப்பின் பேரில் அவளை கவனித்துக் கொள்ள சென்றுவிட, முழுப்பொறுப்பும் புகுந்தவளின் தலையில் விழுகிறது. தமது தனி ருசியறிந்து சமைக்கப்பட்ட உணவுகள் மேசையில் வேளாவேளைக்குத் தயாராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்கள், அதனை தயாரிப்பதன் பின் இருக்கின்ற சிரமங்களை யோசிக்கக் கூட மறுக்கின்றனர். அது குறித்து கிஞ்சித்தும் கவலையற்றவர்களாகவும் இருக்கின்றனர். தனது கணவனின், மாமனாரின் தேவைகளை தனியொருத்தியாக பூர்த்தி செய்திட தன் பலத்தை மீறி அவள் பெருமுயற்சி செய்கிறாள். ஆனால், எதிர்பார்ப்புகள் விருட்சங்களாய் வளர்கின்றனவேயொழிய சாணளவும் குறையக் காணோம். நிறைகளை குறைவாகவும், குறைகளை நிறையவும் சொல்கிற உதடுகள், அதற்கு மேலதிகமாக எதையும் சொல்வதில்லை எப்போதும்.
மொத்தக் கதை சார்ந்து நமக்கு ஏற்படுகிற படத்தின் பார்வையனுபவம் என்பது தனிப்பட்ட சிறு சிறு நுணுக்கமான காட்சிகளின் பார்வையனுபவத்தின் கூட்டுப்பலனாய் இருப்பதை, படம் பார்த்த அத்தனைபேருமே உணர முடியும். ஒவ்வொரு எளிய காட்சியும் செயற்கைத்தனமோ, மிதமிஞ்சிய நாடகீயமோ இன்றி அதன் இயல்போடு பிற்போக்குத்தனத்தில் ஊறிய ஒரு ‘பெரிய குடும்பத்தினுள்’ உள்நுழைந்து அங்குள்ள மனுஷிகளின் வாழ்வியலை, அதன் பகிரப்படாத துயரங்களை காட்சிப்படுத்துகிறது.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சமையலுக்கான தயாரிப்புகளாகவும், சமையல் செய்வதாகவுமே இருப்பது படம் துவங்கி ஏறத்தாழ ஒரு அரைமணி நேரத்திலேயே சலிப்பை பார்வையாளருக்கு நிச்சயம் ஏற்படுத்தும். ஆனால், இந்த காட்சியமைப்புகள் அப்படியான சலிப்பை பார்வையாளர்களிடம் உருவாக்கியே ஆகவேண்டிய பிரயத்தனத்துடன் வலிந்து உருவாக்கப்பட்டவை என்றே தோன்றுகிறது. அச்சலிப்பினூடே அது ஒரு கேள்வியை பார்க்கிற ஒவ்வொருவரிடத்திலும் எழுப்புகிறது. மிகக்குறிப்பாக ஆண்களை நோக்கி அது “சில நிமிடங்கள் தொடர்ச்சியாக இதனைப் பார்ப்பதே உனக்கு இவ்வளவு சலிப்பும், அயற்சியுமாய் இருக்கிறதே! இதையே வாழ்நாளெல்லாம் ஓய்வின்றி தன் வாழ்க்கையில் பெரும்பகுதியாக வாழ்ந்தே கொண்டிருக்கிற பெண்களுக்கு எப்படி இருக்கும்?!” என்பதே.
பல காட்சிகள் மிக அற்புதமான திரைமொழியில் மையக் கதாபாத்திரமான மருமகளின் உளவியலை, அவள் வாழ்வில் திருமணம் வழியே நிகழ்ந்துவிட்ட இந்த தலைகீழ் மாற்றத்தை எதிர்கொள்ளும் தடுமாற்றத்தை, ஏற்க மறுத்தும் அதனுள் வாழ்ந்தேயாக வேண்டிய அசௌகர்யத்தை, அது கொணரும் கலவையான உளச்சிக்கலை கையாளத் தெரியாத கையறுநிலையை விள்ளல் விள்ளலாக காட்சிப்படுத்துகிறது. வேலைக்குப் போக நினைக்கும் அவளது ஆசையை அப்பட்டமாய் நிராகரிக்கிற மாமனாரை எதிர்கொள்ள இயலாமலும், தன் ஆசையை அணைப் போடத் தெரியாமலும் அலைவுறும் தவிப்பை ஊரிலுள்ள மாமியாரிடம் பகிர்ந்து கொள்ள அவரோ விண்ணப்பம் செய், வேலை கிடைத்தால் பிறகு யோசிக்கலாம் என்று ஆமோதித்தே பேசுகிறார். இருப்பினும் இணைப்பாக இதனைத் தான் சொல்லியதாக அங்கு பகிர வேண்டாமென்றும் வேண்டுகோள் வைக்கிறார். பிறிதொரு காட்சியில் மாமனார் தன் மனைவி ஒரு முதுகலை பட்டதாரி என்றபோதிலும் வேலைக்குச் செல்லாமல் வீட்டை கவனித்துக் கொண்டதாய் பகிர்வதை இங்கு பொருத்திப் பார்க்கையில் அவர் உளவியலை விளங்கிக் கொள்ள முடிகிறது. இணையவழியே அவள் விண்ணப்பிக்கையில் சமைலறை மேசையில் அவள் தட்டச்சும் மடிக்கணினி இருக்க பின்னணியில் உலை கொதிக்கிற சோற்றுப் பானை இருப்பது முற்றான மாறுபாட்டை ஒரு குறுஞ்சோகக் காட்சிக் கவிதையாக முன்னிறுத்துகிறது. பிற்போக்குத்தனம் என்பது ஒரு மனநிலையே (mind set). அதற்கும் மனிதர்களின் கல்வித்தகுதிக்கும் தொடர்பே இருப்பதில்லை. வீட்டில் இவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்க ஆசிரியக் கணவன் மாணவிகளுக்கு சமூகவியல் பாடத்தில் குடும்பம் குறித்து விளக்குகிற காட்சி உண்மையில் நகைமுரணே.
போலவே ஆணாதிக்கமும் ஒரு வகையில் நோக்கின் ஒரு மனநிலையே. அதனை ஆண்களே பெரும்பான்மையாய் செயலாக்குகிறார்கள் என்றாலும் கணிசமான பெண்கள் ஆணாதிக்கத்தால் ஒடுங்கி ஒரு கட்டத்தில் அதனை ஒருவித சம்பிரதாயம் போல பழகிப் போய் ஆமோதிக்கிற மனநிலையை வந்தடைகின்றவர்களாக இருக்கிறார்கள். முதன் முறையாக திருமணத்திற்குப் பின் மாதவிடாய் சுழற்சி வருகின்ற நாட்களில் அவள் தனிமைப்படுத்தப்பட்டு அந்த நாட்களுக்கு மட்டும் வேலைக்காரப் பெண்ணொருத்தி வரவழைக்கப்படுகிறாள். இன்னும் மோசமாக அடுத்து வரும் மாதத்தின் அந்நாட்களில் அங்கு வருகிற ஒரு உறவுக்கார நடுத்தரவயதுப் பெண்மணி ‘தீட்டு ‘ நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வகுப்பெடுக்கிறார். முழுவதுமாய் நாயகியை தனிமைப்படுத்துகிறார். தவறிழைத்தவள் போல தனிமைப்படுத்தப்படுவதன் வாதையை சுமக்க விரும்பாமல் குமைகிறாள் அவள். தன் மீது கரிசனம் காட்டும் ஒரு சிறுமியின் தூய அன்பைக் கூட எட்ட நின்றே பெற்றுக் கொள்கிற அவலநிலையை நினைத்து சோர்கிறாள். உண்மையில் திருமணம் எனும் பெயரில் தானொரு அடிமைச் சந்தையில் வாங்கிவரப்பட்ட அடிமையாக உருமாறியிருப்பதை உணருகிறாள். அவளது திருமண வாழ்க்கை எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் நீடித்தது என்பதனை நாம் யூகிக்க நமக்கு வழங்கப்படுகிற ஒரே வாய்ப்பு அவளுக்கு வருகிற இரு மாதவிடாய் சுழற்சி காலங்கள் தான். அது தவிர கடக்கிற காலத்தை எவ்விடத்திலும் எவ்விதத்திலும் அடிக்கோடிட்டுக் காட்டாமல் இருப்பதும் ஒரு வித மறைமுக செய்தியை பகிர்கிறது. காலம் வாரமாகவும், மாதமாகவும் மாறி வருடமாக வளர்ந்தால் கூடத்தான் என்ன! பெண்ணின் நிலையும் அவள் ‘ஆற்ற வேண்டிய கடமைகளும்’ மாறப்போகிறதா என்ன?! எனக் கேளாமல் கேட்பதையே நமக்கு உணர்த்துகிறது.
உணவு மேசையில் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம் என்பது ஏதோ வெளியிடங்களுக்கு மட்டுமானது எனும் மனநிலையில் ஊறிய ஆண் மனங்களின் வெளிப்பாடு தான், ஒரு முறை அவன் மிக நாகரிகமாய் உணவகத்தில் உண்பதை அவள் சுட்டிக் காட்டும் போது அவனை நிலைகொள்ளாமல் தவிக்க விடுகிறது. தன் வீட்டில் தான் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்பதை தன் விருப்பம் என்று கூடச் சொல்லாமல் அது தனது அடிப்படை உரிமை என்று சொல்வதான தொனியே ஓங்கி ஒலிக்கிறது அவனது மறுமொழியில். அத்தோடு முடிவுறாத அந்த அத்தியாயம் வீட்டில் இரவு படுக்கையறையில் அவள் தான் பேசியது தவறு என்று சொல்லிக் கோருகிற மன்னிப்புடன் தான் (!) முடிவுறுகிறது. மன்னிப்புக் கோரிய மறுநொடி அவன் சிரித்து சடுதியில் இறுக்கம் தளர்ந்து இயல்பாவது அவனுள்ளிருக்கும் ஆணெனும் அகங்காரம் திருப்தியுற்றதன் அடையாளமே.
மறுநாள் முதல் விரதமிருக்கப் இருப்பதால் தாம்பத்திய உறவை நாடும் அவனிடம் மனைவி முன்கலவியே இல்லாமல் புணர்வது வலிப்பதாகவும், அதனால் கொஞ்சம் முன்கலவி இருந்தால் நலமென்கிற அவளது நியாயமான கோரிக்கையைக் கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்க மட்டுமே முடிகிற மடமையில் ஊறியவனாகவே அவனால் இருக்க இயலுகிறது. ஆண் மோகத்திற்கு வடிகாலாக மட்டுமே பெண் எனும் பார்வை கடந்து அவ்வுயிருக்கும் பாலியல் தேவைகள் உண்டு எனும் யதார்த்தம் அவனது மூடத்தனத்தால் மூடிக்கிடக்கிற மூளைக்கு எட்டிடும் சாத்தியமே இல்லை. வீட்டின் ஆண்கள் சபரிமலைக்கு மாலை போட முடிவு செய்து ஆன்மிகவாதிகளாய் அவதாரமெடுக்கிற நாட்களில் எதிர்பார்ப்புகள் வேறு ரூபங்கொள்கின்றன. மதத்தின் தலையீடு எள்ளளவும் பெண்ணடிமைத்தனத்தை மாற்றாது எனவும், இன்னும் உடைத்துச் சொல்வதானால் அதன் வேர்களே மதம் எனும் நிலத்தில் தான் செழித்து நிலைத்திருக்கின்றன என்பதையும் காட்சிகள் பட்டவர்த்தமாக எடுத்துக்காட்டுகின்றன. சபரிமலையில் பெண்கள் பிரவேசிப்பது தொடர்பான பிரச்சனையில் ஒரு பக்கம் பெண்கள் சார்பில் பேசுகிற ஒரு பெண்ணின் வாகனம் நால்வரால் வீடு புகுந்து கொளுத்தப்பட்டு, மிரட்டல் விடுக்கப்படுகிறதென்றால், முகநூலில் வெளியான அந்த காணொளியை தன் பக்கத்தில் பகிர்ந்த இவளை, அதனை நீக்குமாறு கணவனால் அழுத்தம் தரப்படுகிறது. அந்த அழுத்தத்திற்கு இணங்க மறுக்கிற அவள் முதன் முறையாக காத்திரமாக தன் எதிர்ப்பை பதிவு செய்கிறாள்.
வந்த சில நாட்களிலிருந்தே வீட்டின் சமைலறை கழுவு தொட்டியில் (kitchen sink) நீர் ஒழுகுவது அவளுக்கு மிகுந்த அசூயையைத் தருகிற விசயமாய் இருக்கிறது. ஒரு கட்டத்தில் தாளமுடியாமல் அவள் அதனைப் பழுதுபார்க்க யாரையேனும் வரச்சொல்லுமாறு சொல்ல, அவனோ ஒரு நக்கல் தொனிக்கும் புன்னகையோடு பார்க்கலாம் என்று வெகு எளிதில் கடக்கிறான். அதன் அர்த்தம் அதுவெல்லாம் உனது பிரச்சனை; இதில் நானொன்றும் செய்வதற்கில்லை என்பது தான். ஆனால், இதே ஆண்கள் தான் தங்களுக்கு பார்க்கப்படும் பணிவிடைகளில் சிறுது பிசகல் இருப்பினும், எல்லாம் மோசமென, குதிக்கிறவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு வகையில் அவர்களின் (ஆண் கதாபாத்திரங்களான தந்தையும் மகனும்) உதடுகள் அபூர்வமாய் உதிர்க்கிற பாராட்டுகள் கூட மேலும் சுரண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே கருதலாம். ஒரு ஆண் சாதரண குழாய் ஒழுகுதல் தானே! இதென்ன பெரிய பிரச்சனை என்று நகர்கிறான். ஆனால், ஒரு பெண்ணின் மனதில் அது மாபெரும் பிரச்சனையாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது. புணரும் தருணத்திலும் கைகளை விட்டகலாத அந்த கழிவுநீரின் துர்நாற்றம் அவளை பேதலிக்கச் செய்கிறது. ஏனெனில் அதனை அவள் மட்டுமே வாழ்நாள் முழுக்க எதிர்கொள்கிறாள்.
இறுதிக் காட்சியில் தேநீர் கேட்கிற அவர்களுக்கு அவள் அளிக்கிற அதிர்ச்சி வைத்தியம், புழுங்கிக் கிடந்த அவளது ஆறாமனதில் எரிமலை வெடிப்பு தான். படத்தின் மிகப் பெரும்பான்மை காட்சியில் அவளை நாம் சமையலறையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே பார்க்கிறோம். அவளுக்கு அது கம்பிகளற்ற, பூட்டப்படாத சிறையறையாகவே இருக்கிறது. இறுதியில் அதிலிருந்து வெளியேறி கடற்கரையை ஒட்டிய சாலையில் நடக்கத் துவங்கையில் அவள் அடைகிற விடுதலையுணர்வை அந்த அசைவாடுகிற நீல வெளி காட்சிரீதியாக நமக்கும் கடத்திவிடுகிறது. கடக்கின்ற வீதியில் பின்னணியில் ஒவ்வொரு வீட்டின் பெண்ணும் ஏதோ ஒரு வேலையைச் செய்வதையும், வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆண்கள் சிலர் கைபேசிகளை கரங்களில் ஏந்தி கதைத்தபடி இருப்பதையும் காணமுடிகிறது. அது பூடகமாய் உணர்த்துவது, நமக்குக் காட்டப்பட்டது ஏதோ ஒருத்திக்கு நடக்கிற கதை அல்ல; மாறாக அவளது கதை ஒரு ஒட்டு மொத்த சமூக அவலத்தை பிரதிநிதித்துவப்படுத்த மட்டுமே செய்கிறது என்பதையே.
அதனை விடவும் கவனிக்க வைப்பது, அவள் தன் பிறந்தகம் சென்றபின் அங்குள்ள பதின்மன் தண்ணீர் கேட்க, எழுந்தோடும் அவளது தங்கையை அதட்டி அமரச் செய்து, ‘உனக்கு கையிருக்கிறது இல்லையா! நீயே எடுத்துக் குடி’ என்று அவனிடம் வெடிப்பது தான் படம் முன்வைக்கிற முடிவாகத் தோன்றுகிறது. முன்சொல்லியதைப் போல ஆணாதிக்கமென்பது ஒரு மனநிலையே. அதனை கட்டிக் காப்பது ஆண்களெனினும், அதனை ஆமோதிப்பின் மூலமாக அனுமதித்து வளர்த்தெடுப்பதில் பெண்களின் பங்கு கணிசமானது. இதுவரையிலான முடை நாற்றத்தை சரி செய்வது என்பதைக் காட்டிலும் வரும் தலைமுறைக்கு அதன் விடத்தை பரவ விடாமல் தடுப்பதே மாற்றத்தின் ஆதாரப்புள்ளி. அதன் அச்சாரமாகவே அக்காட்சியை நாம் உள்வாங்க முடியும். இங்கு மாற்றம் என்பது பாலின சமத்துவத்தைப் புரியவைத்து வளர்த்தெடுப்பதில் இருந்து துவங்குகிறது. அது தான் நிரந்தர மாற்றத்தை எதிர்வருகிற காலத்தில் சாத்தியப்படுத்தும். குடும்பத்தின் பணிகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பாலின பேதமின்றி பகிரப்பட வேண்டியதன் அவசியத்தை இளையோருக்கு உணர்த்தி அதை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில், முந்தைய தலைமுறையின் அழுக்குகள் அவர்களைத் தீண்டாவண்ணம் காப்பதும் இன்றியமையாதது.
(தொடரும்…)