
Chhapaak (2020)
Dir: Maghna Gulzar | 120 min | Hindi | Disney Hotstar
நம்மோட முகம் நமக்கு என்னவாயிருக்கு எனும் கேள்வி கொஞ்சம் அபத்தமானதா தோணலாம். ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாம சக மனிதர்களை ஞாபகம் வச்சிருக்கிறதாச் சொல்வது உண்மையில் அவங்களோட முகத்தைத்தானே? முகம் மனிதர்களோட முகவரி. முகம் மனிதர்களோட தனித்த அடையாளம். வளர்ந்து வருகிற நாடுகள்ல, அமிலம் வீசித் தாக்கும் குற்றங்கள் (acid attacks) ரொம்பவே அதிகமா நடக்குது. சொல்லப் போனா எண்ணிக்கையில குறிப்பா பெண்களுக்கு எதிராக, உலகத்துலயே அதிகமான அமில வீச்சு குற்றங்கள் இந்தியா உள்பட ஆசிய நாடுகள்லதான் அதிகமா நடக்குது என்பது கசப்பான உண்மை. தனிப்பட்ட சொத்துத் தகராறு, தனிப்பட்ட விரோதம் போன்ற காரணங்களால அமில வீச்சு தாக்குதலுக்கு ஆண்கள் உள்ளாகுறதா சொல்றாங்க. ஆனால், பெண்கள் இதில் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் விசித்திரமானவை. ஆனா, அதனை பொது சமூகத்தால கேள்வியே இல்லாமல் கடந்து போக முடியுது அப்டீங்றது அதை விடவும் வினோதமானது.
சினிமாங்கறது அற்புதமான மீடியம். அதைப் பயன்படுத்தி நாம சொல்ல நினைக்கிற செய்தியை மிக அதிகமானவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும். அதுதான் இந்த கலை வடிவத்தோட ஆகப்பெரிய பலம். இப்போ நாம இந்த அத்தியாயத்துல கவனத்துக்கு எடுத்திருக்கற படம் மிக நல்ல திரைமொழியோட எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான சினிமாவா என்றால் ‘இல்லை’ என்பதுதான் என் பதில். ஆனா, நல்ல படமா என்றால் ‘ஆமாம்’ எனத் தயங்காம சொல்வேன். சில படங்களை அது எடுக்கபட்ட விதத்திற்காக, புதுமையான கதைக்காக, கற்பனையின் வீச்சுக்காக, உருவாக்கப்பட்ட அழகுக்காக இப்படி எத்தனையோ காரணங்களுக்காக பார்வையாளர்களோட கவனத்துக்குக் கொண்டு போறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது ஒரு அவசியமான, நாம பார்க்காம தவிர்க்கிற ஒரு விசயத்தை கதையின் கருவாக எடுத்துகிட்டு அது குறிச்சு நம்மோட பேசுவதற்காக எடுக்கப்பட்ட படங்களை குறித்து கவனப்படுத்துறதும்.
ஒரு திரைப்படம் என்பது வெறுமனே ஒரு கலைப் படைப்பு. அவ்வளவுதான். அதனால சமூகத்தை மாத்த முடியுமா என்றால், ‘முடியாது’ அப்டீன்னு உண்மையைச் சொல்லிடணும். ஆனா, அதனால சமூகத்தோட மனசாட்சியை அசைச்சுப் பார்க்க முடியும். நமக்கு மத்தியில இருக்கிற ஆனா, நாம இல்லாதது போல பாவனை பண்ணிக்கிட்டு கடந்து போற விசயங்களை நம்ம முகத்துல அறையுற மாதிரி எடுத்துக்காட்டி, ‘இதுக்கு உன் பதில் என்ன?’ அப்டினு கேட்டு சங்கடப்படுத்த முடியும். இது மாதிரி சமூகத்தை தொந்தரவு செய்கிற படங்கள் ரொம்ப முக்கியமானவைனு நான் நினைக்கிறேன். அதனுடைய திரைமொழி சராசரியா இருந்தாலும் அந்த படத்தை நாம கவனத்துல எடுத்துக்கணும். ஏன்னா, பொதுவெளியில ஒரு விசயத்தைப் பத்தி நாம பேசவே இல்லைன்னா, நாம அதை ஏத்துக்குறோம் அப்டினு அர்த்தம். நம்ம மௌனம் அதைத்தான் எடுத்துக் காட்டும். மறந்த மாதிரி நடிக்கிற சமூகத்தோட எந்த ஒரு உரையாடலையும் துவக்குறதுக்கான ஆரம்பப் புள்ளியா ஒரு கலைப் படைப்பு இருக்கும்.
பிரபல பாலிவுட் பாடலாசிரியர் குல்சாரின் மகள் மேக்னா குல்சார் இயக்கத்துல, தீபிகா படுகோன் முதன்மை பாத்திரத்தில நடிச்சு வெளியான ‘சப்பக்’ திரைப்படம் பத்தி பேசுறதுக்குத்தான் மேலே சொன்னவை எல்லாம். வெறும் ஜிகினா தூவின பொழுதுபோக்குப் படங்கள் மண்டிக் கிடக்குற பாலிவுட் சினிமாவுலயும் அவ்வப்போது சில நல்ல கதைக்கருக்களை வச்சு எடுக்கிற படங்கள் வெளியாகுது.
இந்திய அளவுல எடுத்துக்கிட்டா எண்ணிக்கையில பெண்கள் மீதான அமில வீச்சு சம்பவங்கள் தென்னிந்தியாவைக் காட்டிலும் அதிகமாகவே வட இந்தியாவுல நடக்குது. இதுக்குப் பின்னாடி பல காரணங்கள் இருந்தாலும், என்னைக் காதலி என சொல்லி பசங்க பொண்ணுகளுக்கு கொடுக்குற தொந்தரவும், அது போக பாலியல் தொந்தரவும் முக்கியமான காரணங்களா இருக்கு. உலகம் முழுசும் ஆணாதிக்கம் மலிஞ்சு கிடந்தாலும், சில நாடுகள்ல கொஞ்சம் அதைக் கடந்து வரத் துவங்கி இருக்காங்க. ஆனா ‘ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ என இன்னும் பெருமை பேசித் திரிஞ்சுக்கிட்டு இருக்க இந்திய சமூகம் இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கு.
படம் அமில வீச்சில் பிழைத்தவரும், சமூகப் போராளியுமான லக்ஷ்மி அகர்வாலோட உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது.புது தில்லியைச் சேர்ந்த இவங்க 2005-ஆம் ஆண்டு (அப்போ அவங்க 15 வயசேயான பதினோராம் வகுப்பு மாணவி) அவங்கள ஒரு தலையா காதலிச்ச நயீம் கான் என்ற இளைஞனால அமில வீச்சுக்கு உள்ளாகி உயிர் பிழைச்சவங்க. தனக்கு நிகழ்ந்த கோரத்தால தன்னோட முகத்தை இழந்ததோட மட்டுமில்லாம வாழ்க்கையையும் சேர்த்தே இழந்திட்டதா நினைச்சு அவங்க முடங்கிப் போகல. மாறாக, ‘என் மீது வீசப்பட்ட அமிலம் என் முகத்தை மட்டும் தான் சிதைக்க முடிஞ்சது, என் நம்பிக்கையை அல்ல’ அப்டினு சொல்லி வீர மங்கையா அந்த துயரத்துல இருந்து மீண்டு வந்தாங்க.
படத்தோட முதல் காட்சி 2012-இல் நிர்பயா வழக்கு நடக்கிற நீதிமன்ற வளாகத்துல நீதி கேட்டுப் போராடும் இளைஞர்கள் கூட்டத்தை நமக்குக் காட்டுது. அந்த செய்தியை சேகரிக்க வருகிற அல்கா என்ற செய்தியாளர், கூட்டத்தில் அமோல் திவேதியை சந்திக்கிறாங்க. அவரு முன்னாள் பத்திரைக்காரர். ஆனா, இப்போ தனியா அமில வீச்சுக்கு ஆளானவங்களுக்காக குரல் கொடுக்கிற ஒரு அமைப்பை நடத்திக்கிட்டு இருக்காரு. அவர்கிட்ட மாலதி அகர்வால் என்ற பெண்ணைப் பத்தி சொல்றாங்க. அவங்க இப்போ வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும், அதுக்கு உதவ முடியுமான்னும் கேக்குறாங்க. பேரைக் கேட்டதும் அவர் உடனடியா ஆளை அடையாளம் தெரிஞ்சிக்குறாரு. (நிஜத்தில் லக்ஷ்மி 2006 ஆம் வருஷம் அமிலங்கள் கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்படுவதை தடை செய்யக் கோரி தொடுத்த ஒரு பொது நல வழக்கு முக்கிய செய்தியாக மாறிச்சு.)
மாலதி அவரை சந்திச்சு அவரோட அரசு சாரா அமைப்புல (NGO) வேலைக்குச் சேந்துக்கிறாங்க. ஒரு முறை அவங்க அமைப்பு ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கப் போகும் போது, அமில வீச்சுக்கு ஆளான அந்த பெண் தனக்கும் தன்னோட சகோதரிக்கும் சாதியின் பேரால நடந்த கொடுமைகளை சொல்லி அழுவது, கதைக்குள் வருகிற இன்னோரு சிறுகதைன்னு சொல்லாம். அந்த சம்பவத்தை அந்த பெண் விவரிச்சு முடிக்கையில, ஒரு பொண்ணு எந்த வகையிலையும் முன்னேறிடக்கூடாது, அதுவும் ஒரு தாழ்த்தப்பட்டதாக சொல்லபடுற (ஆமா! தாழ்த்தப்பட்டன்னு ஏன் நாமளும் சொல்லணும்? அது சரியான வார்த்தைப் பிரயோகம் இல்ல..இல்லையா?) பொண்ணு முன்னேறவே கூடாது என்பதற்காகவே அவங்க மீது இப்படி அமில வீச்சு சம்பவங்கள் நடத்தப்படுது அப்டிங்குறத நம்மால் விளங்கிக்க முடியுது. சமூகம் எப்படி கற்புன்னு சொல்லி கதைவிட்டு பெண்களை மட்டும் முடக்குதோ, அதே போலத்தான் இந்த கொதிக்கும் அமிலங்களைக் காட்டி பயமுறுத்தப் பாக்குது.
கதை முன்னும் பின்னுமா நகருது. மாலதியின் வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்திச்சு? ஏன் அவள் வாழ்க்கை சூன்யமா மாறிச்சு அப்படின்னு நாம கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிக்கிறோம். பப்பு என்ற பஷீர் கான் மாலதியின் வாழ்க்கையில ஒண்ணும் புதுசா நுழஞ்சவன் கிடையாது. குடும்ப நண்பன்தான். தையல்காரனா வேலை செய்ற அவன் ஒரு தலையா மாலதியை விரும்புறான். ஆனா, அவள் அவனை அண்ணனாத் தான் பார்க்குறா. அப்படித்தான் அவள் இதுவரை பாத்திட்டும் வந்திருக்கா. திடீர்னு அவளோட பெற்றோருக்குத் தெரியாம இவளை அவன் நச்சரிச்சு தொந்தரவு செய்றான். மாலதி தன் வயசு பையன் ஒருத்தனை விரும்புறா. இதைத் தெரிஞ்சுக்குற பப்பு, அவளுக்கு நல்ல நடத்தை சொல்லிக் கொடுக்குற ‘மாரல் போலீசிங்’ வேலையில தானாகவே இறங்குறான்.
இந்த காட்சிகள்ல நாம யோசிச்சுப் பாக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. ஒரு பையனைக் கண்டிக்க அவனோட பெத்தவங்களே தயக்கம் காட்டுற அதே வேளையில, ஒரு பொண்ணுன்னு வந்துட்டா மட்டும் எல்லாரும் அவளை ‘சரி’ செய்ய முன்வந்து களத்துல இறங்குற இந்த மோசமான மனோபாவம் காலங்காலமா இருந்துகிட்டுதான் வருது. ‘தலை நிமிராம நடந்தாதான் நல்ல பொண்ணு’ , ‘நாகரிகமா உடை உடுத்துறவங்க தப்பான பொண்ணுங்க’, ‘துப்பட்டா போடுங்க தோழி’ போன்ற கருத்துகளை நாம இதோட வெளிப்பாடாதான் பார்க்க வேண்டியதிருக்கு. ‘பசங்கன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க… பொண்ணு தான் பார்த்து கவனமா நடந்துக்கணும்..’ போன்ற அடி முட்டாள்தனமான மனநிலை இன்னும் பல காலத்துக்கு இங்க இருக்கத்தான் போகுது. அதுவும் இதை சக பெண்களே ஆமோதிக்கிற அவலம் ரொம்பவே வருத்தத்துக்கு உரியதுதான்.
தன்னோட வாழ்க்கையில தனக்கு நடந்த அநீதிக்கு எதிரா குரல் கொடுக்குற நபரை வீரன்/வீராங்கனை அப்டினு சொல்லலாம். ஆனா, தனக்கு நடந்தது வேற யாருக்குமே இனி நடக்கக் கூடாதுன்னு யோசிச்சு, அதுக்காக குரல் கொடுக்குறவங்களை நாம ‘சமூகப் போராளி’ ன்னு சொல்றதுதானே பொருத்தமா இருக்கும்! அப்படித்தான் மாலதியும் ஒரு வீராங்கனையா மட்டுமில்லாம சமூகப் போராளியாவும் மாறுறாங்க. இப்படி கொடுமைக்கு ஆளாகி உருக்குலைஞ்சு போன ஒரு பொண்ணோட மனசு எப்படி சிதைஞ்சு போகும்? தன் உருவத்தையும் அழகையும் தான் இழக்கல, மாறா அது தன்கிட்ட இருந்து இன்னொருத்தனால பிடுங்கப்பட்டிருக்குன்னு உணர்ற போது அவள் என்ன பாடுபடுவாள்? தான் சிறு வயசு முதல் பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போன தன் அழகு முகத்தை இப்போ கண்ணாடி கோரமாக பிரதிபலிக்கிறப்போ எப்படிபட்ட வேதனையையும் வலியையும் அவள் அனுபவிப்பாள்? அவளோட தாங்க முடியாத வேதனையோட வெளிப்பாடா படத்தில ஒரு சின்ன காட்சி வந்து போகும். முகமெல்லாம் சிதைஞ்சு போன மாலதி தான் ஆசை ஆசையா வாங்கிச் சேர்த்து வச்சிருந்த தோடு, ஜமிக்கியை எல்லாம் வேணாம்னு சொல்ல, அவளோட அம்மா ஏன்னு கேப்பாங்க… அதுக்கு அவ, “ஆமா காதும் இல்ல மூக்கும் இல்ல! அப்புறம் இது என்னத்துக்கு?” அப்டினு கேட்டு அவள் கடந்து போற கணம் உண்மையிலயே பாக்குற நமக்கு எல்லாருக்கும் வலிக்கும். ஒரே காட்சி அந்த கதாபாத்திரத்தோட வேதனையை அப்படியே நமக்கு கடத்திட்டுப் போயிடுது.
எல்லாத்தையும் இழந்து நிக்குற மாலதிக்கு மூணு ஆசீர்வாதங்கள் இருக்கு. முதலாவது அவளோட அப்பாவோட முதலாளியம்மா ஷிராஸ். மாலதியை படிக்க வைப்பதில் இருந்து அவளோட எல்லா கஷ்டங்கள்லையும் ஆதரவா கூடவே பயணிக்கிற, அவளுக்கு தோள் கொடுக்குற ஒரு தேவதை அவங்க. ரெண்டாவது அவங்க மூலமா அவளுக்கு அறிமுகமாகுற, அவளோட தனிமனித போராட்டத்தை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவான சட்டரீதியான போராட்டமா மாத்துற வழக்கறிஞர் அர்ச்சனா பஜாஜ். மூணாவது நாம இந்த கதையோட முதல் காட்சியில சந்திச்ச அமோல் திவேதி. அவருடைய பாத்திரப் படைப்பு மேம்போக்கா பார்த்தா ஒரு பெண் மையத் திரைப்படத்துல (Women centric films) வர்ற ஒரு சாந்தமான நாயகன் மாதிரி தெரியலாம். ஆனா, அந்த பாத்திரம் அதைத் தாண்டி நிறைய விசயங்களைச் செய்யுது. அதுக்கும் மேல அமோல் திவேதி பாத்திரம் நிஜ ஆளுமையான அலோக் திக்ஷித்ததான் காட்டுது. அலோக் திக்ஷித்தும் ஒரு போராளிதான். தனி மனிதர்களுக்கான கருத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுக்குறவர் அவர். போக நாம் கதையில பார்ப்பது போலவே அமில வீச்சினால் பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா தோள் கொடுக்குற ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருபவர். படத்தில வருவது போல உண்மையிலயே அலோக்கும் லக்ஷ்மியும் தம்பதிகள் என்பது கூடுதல் தகவல்.
மாலதியோட கதையில நாம கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான கோணம் இருக்கு. சமூகத்தோட அணுகுமுறையைப் போலவே அதுவும் மிகவும் முக்கியமானது. சொல்லப் போனா அதைவிடவும் முக்கியம். காவல் துறையும், அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் இந்த சம்பவத்தை எப்படி அணுறாங்க என்பதுதான் அது. வேகவேகமா மாலதி மேல அமிலம் வீசுன குற்றவாளியை காவலர்கள் சுத்தி வளைச்சாலும், இந்த கேஸை அவங்க பார்க்குற கோணம் அப்படியே சமூகத்தோட கோணத்தோட ஒத்துப் போறதை நாம கண்கூடா பாக்க முடியுது. போலீஸ் விசாரணையின் போது, மாலதியோட செல்பேசிய (cellphone) பாக்குற காவலர், “என்ன! உன் போனுக்கு வந்திருக்கிற எஸ்.எம்.எஸ்கள் முழுசும் ஆண் நண்பர்கள் பேரா இருக்கு?” அப்டினு கேட்பது. நடக்குற விசாரணையையும் அதுல எழுப்பப்படுகிற இந்த கேள்வியையும் தொடர்புபடுத்திப் பார்த்தா இது எவ்வளவு அபத்தமான பார்வைன்னு நாம புரிஞ்சுக்கலாம். அதாவது இந்த கேள்வியோட உள்நோக்கம் என்னன்னா “பாரு, உனக்கு எத்தனை ஆண் நண்பர்கள்! இப்படி இருந்தா ஏன் அமில வீச்சு நடக்காது?” அப்டிங்குற மாதிரியான மனநிலையைத்தான் இந்த கேள்வி எடுத்துக் காட்டுது. அதனாலதான் இதை அபத்தம்னு நாம சொல்ல வேண்டியிருக்கு.
சட்டரீதியா அமில வீச்சு என்கிற கொடூரத்தை குற்றமா நீதித்துறை பார்க்குது அப்டினாலும், அதை பெரிய குற்றமா கருதல என்பது அதற்கு கொடுக்கப்பட வேண்டியதா சொல்லப்படும் தண்டனையோட அளவுல இருந்தே தெரியுது. மாலதியை அமிலம் வீசி உருக்குலச்ச பஷீர் கான், அமில வீச்சுக்கு எதிராக சட்டங்கள் கடுமையா இல்லாத காரணத்தால ரொம்ப எளிதா பெயில்ல வர முடியுறத வச்சே இதனை நாம புரிஞ்சுக்க முடியும். இது பத்தி மாலதி சார்புல வழக்கை நடத்துற வழக்கறிஞர் அர்ச்சனா பஜாஜ் தன்னோட குழுவின் ஒரு சக தோழியோட பேசுற ஒரு சின்ன உரையாடல் கொஞ்சம் சினிமாத்தனமான காட்சி என்றாலும், முக்கியமானது.
அமில வீச்சு நடப்பதுக்கு அடிப்படையான காரணமே அந்த அமிலம் ரொம்ப எளிமையா எல்லாரும் வாங்கும் விதத்தில் எளிதா விற்கப்படுறதுதானேங்கிற பார்வை மாலதிக்கு வர, அதனை அர்ச்சனாக்கிட்ட பகிரும் போது, அதன் மூலமா அமிலம் விற்பதுக்கான நிபந்தனைகள் விதிப்பது அல்லது தடை விதிப்பது குறித்த ஒரு பொதுநல வழக்கா அது செயல் வடிவம் பெறுது. தனக்கு கொடுமை செஞ்ச பப்புவுக்கு 10 வருடம் சிறைதண்டனை கிடைச்ச போதிலும், அது போதாது எனச் சொல்லி மேல் முறையீடு செய்றாங்க. இதுக்கு இடையில கொஞ்சம் பார்வையாளர்களை ஆசுவாசப்படுத்திக்க வசதியாக மாலதிக்கும் அமோல் திவேதிக்கும் இடையேயான ஒரு மெல்லிய காதல் கதையும் ஓடிகிட்டு இருக்கு அவ்வப்போது. இறுதியா இவங்க இணைந்து, (மாலதி, அர்ச்சனா, அமோல்) எந்த நோக்கத்துக்காக இந்த சட்டப் போராட்டத்தை துவக்குனாங்களோ அதுக்கான பலன் கிடைப்பதோட படம் முடியுது. கூடவே அமோல்-மாலதியின் காதலும் திருமணமாகக் கனியுது.
ஒரு கதையா இது குறிச்சு பல்வேறு விசயங்களை நாம இதுவரையிலும் யோசிச்சுப் பாத்துட்டோம். ஒரு திரைப்படமா இதை உருவாக்குனதுல ரெண்டு விசயம் என்னைக் கவனிக்க வச்சுது. முதலாவது இயக்குனர் மேக்னா குல்சார் அமில வீச்சுக் காட்சிகளை கையாண்டிருக்க விதம். படத்தைப் பார்த்த சிலருக்கு, ஏன் பலருக்கும் கூட, ‘என்னப்பா இது ! அமிலம் ஊத்தப்படும் காட்சி தத்துரூபமா இல்லையே! ஏதோ முகத்துல தண்ணீரை ஊத்தினது மாதிரி காமிச்சிருக்காங்க’ அப்டினு கேள்வி எழலாம். காட்சிப்பூர்வமா பார்த்தா அது உண்மையும் கூட தான். இருந்தாலும் இயக்குநர் அந்த காட்சியை வெறும் ஷாக் வேல்யூவுக்காக இல்லாம, அந்த நிகழ்வு பாதிக்கப்பட்ட அந்த பொண்ணோட மொத்த வாழ்க்கையையும் எப்படி குலைத்துப் போடுது அப்டிங்குறத காட்டுவதில்தான் கவனம் செலுத்திருக்க மாதிரி இருக்கு. மாலதியின் கதை முடிஞ்ச பிறகும், எங்கோ ஒரு ஊருல ஒரு மணப்பொண்ணு அலங்காரம் செஞ்சுகிட்டுருக்கும் போது, ஒருத்தன் அந்த அறைக்குள்ளேயே அத்துமீறி நுழைஞ்சு அவளது ஒட்டு மொத்த கனவுகளையும் நொறுக்குவது போல முகத்துல அமிலத்தை ஊத்திட்டு ஓடுறான். அதாவது நம்ம தேசத்துல இது ஒரு தொடர்கதையா நடக்கிற அவலம்தான் அப்டிங்குறத முகத்துல அறையுற மாதிரி அழுத்தமா சொல்லிட்டுத்தான் படம் முடியுது.
கொசுறு:
பொதுவா ஒரு படம் பத்தி நாம தெரிஞ்சிக்கிறதுக்கு பெரும்பாலும் ரெண்டு விசயங்கள் செய்வோம். அதுல முதலாவது IMDB அல்லது Rotton Tomatoes மாதிரியான இணையதளங்களுக்குப் போயி நாம் தேடற படங்களுக்கான ரேட்டிங் என்ன இருக்குன்னு பாக்குறது. இதைத்தான் பலரும் செய்வாங்க. இன்னும் கொஞ்சம் அதிகமா தெரிஞ்சுக்க ஆசை இருந்தா விக்கிபீடியா தளத்தில அந்த படத்துக்கு ஏதாவது பக்கம் இருந்துச்சுன்னா அதைத் தேடிப் போயி வாசிப்போம். இந்த படத்தைப் பொறுத்தவரை எனக்கு ஆச்சரியமாகவும், அதே நேரம் சுவாரசியமாகவும் பட்ட ஒரு விசயம், இந்த படத்திற்கான ரேட்டிங். IMDB தளத்துல வெறும் 5.3 தான் வாங்கி இருக்கு. ஹிந்தியில வெளியான இதை விட குப்பைப் படங்களுக்கெல்லாம் இதை விட அதிக ரேட்டிங் இருக்க இந்த படம் இவ்வளவு மோசமா ஏன் மதிப்பிடப்பட்டிருக்கு என்பது ரொம்பப் பெரிய ஆச்சரியமெல்லாம் இல்லை. நான் முன்னமே சொன்னது போல இது ஒரு படைப்பாக அல்லாமல் இது எடுத்துக்கிட்ட கரு அவசியம் கவனப்படுத்தப்பட வேண்டியது அப்டிங்குறத முன்வச்சுத் தான் இந்த கட்டுரையை நான் எழுதிருக்கேன். ஆனா, தீபிகா படுகோன் போல ஒரு ஸ்டார் அந்தஸ்துள்ள நாயகி சிறப்பாக பங்களிச்சிருந்தும் (அவங்களே படத்தோட தயாரிப்பாளர்களுள் ஒருத்தர் என்பது முக்கியமான கூடுதல் தகவல்) படம் குறைவான ரேட்டிங் வாங்கிருக்க காரணம் ‘இது ஆண்களை தொந்தரவு செஞ்சிருக்கு’ அப்படீன்னு எல்லாம் சொல்ல வரல. இதுக்கு இன்னொரு அரசியல் காரணம் இருக்கு. ஆனா, அதை இங்க விலாவாரியா பேசணும்னா இன்னொரு கட்டுரையே எழுதணுங்கிறதால அதைத் தவிர்க்கிறேன். ஆர்வமுள்ளவங்க தேடித் தெரிஞ்சுக்குங்க.
தொடரும்…