![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-21-at-21.46.39-780x470.jpeg)
உன்னால்
வாசிக்கவே
முடியாத
ஒற்றைக் கவிதை
என்னிடம் உண்டு!
காலந்தோறும்
அதன் வாசிப்பனுவம்
தேடி
என்னைத்
தொடர்ந்துகொண்டே இருப்பாய்
நீ!
ஒவ்வொரு
யுகத்தின்
முடிவில்
என் ஒற்றைக்கவிதையின்
நீளம் கூட்டிடுவேன்
நான!
சுழன்றுகொண்டே
இருக்கப் பிறந்தவர்கள்
நாமும் பிரபஞ்சமும்.
•
அவளுக்கும் எனக்கும்தான்
எத்தனை இடைவெளிகள் !!!
ஒருமுறை
நானும் அவளும்
ஒரே மாதிரி புடவையில்
கல்லூரி நிகழ்வொன்றில்!
என்னைக் கவர்ந்திருந்த
நகையை
எனக்கு முன்பே
வாங்கி இருந்தாள்
எனக்கு பிடித்த ஆசிரியர்
அவளிடம் சிரித்துப்
பேசியதுபோல்
தோன்றியது
ஒருநாள்
நான்
நன்கு எழுதிய தேர்வில்
அவள் முதல் மதிப்பெண்
வாங்கி இருந்தாள்
அவள் அம்மாவிற்கு
என்னைப் பார்த்தவுடன்
பிடித்துப் போயிற்று!
அவள் தேடியலைந்த
புத்தகத்தின்
முதல் பிரதி
என்னிடமிருந்தது!
என் கையெழுத்து
அழகாய் இருந்தது
அவள் தோழி
என் நீள்முடியை
ரசித்து,
தொட்டுப் பார்த்துவிட்டாள்!
இப்படி
உப்புச்சப்பில்லாத
காரணங்கள்
குறுக்கிடாமல்
இருந்திருந்தால்
இன்று நாங்கள்
உற்றதோழிகள் !
•
சும்மாதான்
பேசினேன்
திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டே
இருந்தேன்
வேலை பற்றி
அக்கறையாய்
விசாரித்தேன்
மதியம் என்ன சாப்பாடு?
ஆர்வமாய்க் கேட்டேன்
அரசியல் கூட பேச
முயற்சித்தேன்!
நான் பார்க்கவே
பார்க்காத
உலகக்கோப்பை
கிரிக்கெட் விளையாட்டு பற்றி
மும்முரமாய்
கருத்து
சொல்ல வந்தேன்!
உன்னிடம்
பேசுவதற்கு
பேச வைப்பதற்கு
எத்தனை
ஜாலங்கள்
தேவைப்படுகிறது
எனக்கு?
ஆனாலும்
கடைசி வரை
சொல்லவில்லை!
ஞாபகப் புதையல்களில்
சிறகடித்துக் கிடக்கும்
ஒரு சிறு சிட்டுக்குருவி
இன்று
நிம்மதியாய் உறங்கும்
என்று !
•
ஆச்சி
மைசூர் சாண்டல் சோப்பும்
ஜவ்வாது
வாசனையுமாய்
வளைய வரும்
ஆச்சியின்
அருகாமை
அடிக்கடி
தேவைப்படுகிறது
இப்போதெல்லாம்!
நினைவுகள்
மட்டும்
வைத்துக்கொண்டு
அவளைத் தேடும்
மனதை
எப்படி
ஏமாற்றி வைப்பது?
அவள்
மிஞ்சி நிற்கிற
நியாபக இடுக்குகளில்
ஏதோ ஒரு விதத்தில்
ஏக்கப்படுத்தும்
வெற்றிடத்தை
எப்படி நிரப்புவது?
சொற்களால்
செயல்களால்
பார்வையால்
சுகந்தத்தால்
ஆட்கொண்டு
விடுகிறார்கள்
மனிதர்கள்!
முதல் மூன்றும்
முடியாது
இப்போது!
நான்காவது
தேறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது!
சரி!
வாசனைகளால்
கொஞ்ச நேரம்
சுவீகரித்துக் கொள்ளலாமா
அவளை?
ஆன்லைன் ஆர்டரின்
வழியே
வந்து விட்டாள் என் ஆச்சி
சோப்பும் ஜவ்வாதுமாய்
அவள் வாசனையால்
நிரம்பிய
என் கைகோர்த்து
சேர்ந்தமர்ந்து
புன்னகைப்பாள்
முகம் பார்த்து
பள்ளி முடிந்து
ஓடி வரும்
என் குழந்தையை
அவள் அம்மாவும்
அவள் ஆச்சியின் அம்மாவும்
அணைத்துக்கொள்வார்கள்
இன்று!