இணைய இதழ்இணைய இதழ் 77சிறுகதைகள்

ரிமோட் – இமாம் அத்னான்

சிறுகதை | வாசகசாலை

மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே 
கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22)

‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன் குரல் எரிச்சலூட்டுகிறது. பகலில் சமைத்து வைத்திருந்தவைகளை எல்லாம் அப்பொழுதுதான் சூடாக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறாள். வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்தாலாவது சமைப்பவைகளை அதற்குள் வைத்துவிடலாம். தேவையான நேரத்தில் வெளியே எடுத்துச் சூடாக்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒவ்வொரு 7/8 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சூடாக்க வேண்டும். தப்பித் தவறி மறந்து போய் ஓரிரு மணித்தியாலங்கள்  பிந்திவிட்டால் முடிந்தது. தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மறுபடியும் சமைக்க வேண்டும். 

அவன் குரலுக்குப் பதில் எதுவும் கொடுக்க வில்லை. மூன்றாவது முறையாக அவன் கேட்கும் வரை சட்டை செய்யாமல் இருக்க முடியும். திருமணத்திற்குப் பின்பான இத்தனை நாட்களில் , அவன் பற்றி அவள் அறிந்திருந்த விசயங்களுள் இதுவும் ஒன்று. 

 அவளுக்குப் பிடித்த நடன நிகழ்ச்சி ஒளிபரப்பப்படத் துவங்கியிருக்கும் நேரமது. டீவி ரிமோட்டைத் தேடுவதில் தீவிரம் காட்டுகிறாள். அங்கு ஒரு ஊஞ்சல் இருக்கிறது. பாதியாக வெட்டிய அவகோடா பழத்தின் சதைப் பகுதியைத் தோண்டி எடுத்த பின் கிடைக்குமே கோது, அதன் வடிவத்தில் அமைந்த ஊஞ்சல் அது. அதற்குள் இருந்த தலையணைக்குக் கீழ் தான்  ரிமோட் இருந்தது. அதனை எடுக்கிறாள். அவளின் டீவி ரிமோட் போல் அது இல்லை என்பதை அவள் விரல்கள் உணர்கின்றன. கூர்ந்து பார்க்கிறாள். அதிலுள்ள பட்டன்கள் டீவி ரிமோட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. 

டீவியை நோக்கி நீட்டி ரிமோட்டை அழுத்துகிறாள். டீவி ஓன் ஆகவில்லை. மாறாகச் சுவரில் பொருத்தி இருந்த டீவி, சுவரில் மெல்ல அசையத் துவங்குகிறது. பதறிப் போய் ரிமோட்டால் ஓஃப் செய்கிறாள். அசைந்து சென்ற இடத்திலேயே நின்றது டீவி. எழுந்து சென்று டீவியைத் தொட்டுப் பார்க்கிறாள். பின், ரிமோட்டினை ஆராய்ந்து பார்க்கும் சமயம், ஒரு பட்டன் தெரியாமல் அழுத்தப்பட்டிருக்க வேண்டும். அவள் முன்னால் இருந்த கதிரை, தரையிலிருந்து மேலெழுந்து மிதக்கத் துவங்கி விட்டிருக்கிறது.  அதன் கால்களில் ஒன்று அங்கிருந்த கண்ணாடி மேசையில் முட்டும் சத்தம் கேட்டுத்தான், நிமிர்ந்து பார்க்கிறாள். அவள் கையிலிருக்கும் ரிமோட் கதிரையை நோக்கி இருப்பதையும் கவனிக்கிறாள். நகர்ந்து சென்று கதிரையை இழுத்துப் பார்க்கிறாள். அது நிலத்திற்கு வருவதாய் இல்லை. ரிமோட்டைக் காட்டி ஓஃப் செய்ததும், அந்தரத்தில் உறைந்து நின்றது. அதில் கண்டுபிடித்த அம்புக்குறி பட்டனை அழுத்திக் கீழே இறக்குகிறாள். 

பிற்பாடு, மேசையில் இருந்த புத்தகத்தை நோக்கி ரிமைட்டைத் திருப்புகிறாள். ரிமோட்டின் ஒவ்வொரு பட்டன் களையும் புத்தகத்தில் பரிசோதிக்கிறாள். உண்மையைச் சொல்வதென்றால், அந்தப் புத்தகத்திற்கு மட்டும் வாயிருந்திருந்தால் ஓவென்று அழுதிருக்கும். அந்தளவு கசங்கிச் சுறுண்டு போய்க்கிடக்கிறது. பின் எதனையோ அழுத்திப் பழைய நிலைக்குப் புத்தகத்தைக் கொண்டு வந்துவிடுகிறாள். முன்னறையில் கிடந்த செருப்பு முதற்கொண்டு சுவர்க்கடிகாரம் வரை அனைத்தையும் ரிமோட்டினால் இயக்கிப் பார்க்கிறாள். எல்லாவற்றையுமே கொன்ற்றோல் செய்ய முடிகிறது. அழுத்தி அழுத்தி அந்த ரிமோட் அவள் கைகளுக்குப் பழக்கமாகியும் விடுகிறது.  

அப்பொழுது மூன்றாவது முறையாகவும் டீ கேட்டுப் பாய்ந்து வந்த அவன் குரலிற்கு கையிலிருந்த ரிமோட்டைக் காட்டுகிறாள். அது ஈனஸ்வரத்தில் பம்மி தனது காலடியில் அடங்கிவிடுவதைப் போல் அவளுக்குத் தோன்றுகிறது. ரிமோட்டை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு நேராகப் படுக்கை அறைக்குள் செல்கிறாள். அவள் வந்து நிற்பதைக் கண்டதும், ‘டீ எங்கடீ.. பொன்டாட்டீ..’ எனக் கேட்கிறான். அவளோ எதுவும் சொல்லாமல், ரிமோட்டை அழுத்துகிறாள்.  தன்னிச்சையின்றி தான் எழுந்து கொள்வதைப் பார்ப்பவன் துணுக்குற்றுச் சத்தம் போட ஆரம்பித்தான். ரிமோட்டில் இன்னொன்றை அழுத்தி அவனை அமைதியாக்குகிறாள். அவனை நடந்து சமையலறைக்குள் போகச் செய்கிறாள். அவளுக்கும் சேர்த்து அவன் டீயைத் தயார் செய்தான். மன்னிக்கவும், செய்யவைத்தாள் என்று வரவேண்டும். 

தொடர்ந்தும் ரிமோட்டை அழுத்துகிறாள்.  அவன் தும்புத்தடியை எடுத்து வீடெல்லாம் ஒட்டறை அடித்தான். பின் திண்ணையைக் கூட்டித் துப்பரவு செய்யத் துவங்கினான். அவன் செய்வதை எல்லாம் பார்ப்பதில் பிஸியாக இருந்தவள், உள்ளே மாமியார் வந்து பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை.  இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு வீட்டில், கீழே மாமியாரின் குடும்பமும் மேலே இவர்களும் வசிக்கிறார்கள். 

என்னம்மா இவன்.. இப்படி மாறிட்டான் எனச் சொல்லிக் கொண்டு இவளின் தோளைத் தொடப் போய்த்தான், மாமியார் வந்து நிற்பதையே அறிந்து கொள்கிறாள்.  ஏகப்பட்ட பதட்டமும் குற்றவுணர்வும் அவள் மனதிற்குள் சுழன்றெழுந்து ஆக்கிரமித்தது. அதனைக் காட்டிக் கொள்ளாமல், வாங்க ஆன்டி.. என்ன  இந்த நேரத்தில்? எனக் கேட்கிறாள். வீட்டில் சீனி தீர்ந்து விட்டதால் அவசரமாகக் கொஞ்சம் எடுத்துச் செல்ல வந்ததாகச் சொல்கிறார். 

அவரைக் கதிரையில் அமரச் செய்துவிட்டு சீனியை எடுத்து வந்து கொடுக்கிறாள். திருமணத்திற்கு முன்னர், வீட்டில் ஒரு வேலையும் செய்து பார்த்திராத தனது மகன் இப்படித் தும்புத்தடியும் கையுமாக இயங்குவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தப் புலியும் புல்லைத் தின்னுமா? இதோ தின்னுகிறதே எனும் வியப்பில் உறைந்திருக்கிறார். மாமியார் பார்க்காத வண்ணம் ரிமோட்டை அழுத்தி படுக்கை அறையைச் சுத்தம் செய்ய அவனை அனுப்பி வைக்கிறாள். 

“நீ ரொம்பக் கெட்டிக்காரி தான் மா.. கொஞ்ச நாளிலேயே இவனை இப்படி மாத்திட்டாயே” என அவளிடமும் மாமியார் ஆச்சரியப்படுகிறார். 

அவள் சிரித்துக் கொண்டே என் கெட்டித்தனம் எதுவும் இல்லை. உங்கள் புதல்வன் என் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என பதில் கொடுக்கிறாள். 

“அதுதான் மா, எப்படி இவ்வளவு அன்பு காட்டச் செய்தாய்? எனக்கும் தான் சொல்லிக் கொடேன்.” 

இப்படி மாமியார் கேட்டது, இவளைக் கிண்டல் செய்யும் தொணியிலா அல்லது அவர் உண்மையிலேயே கேட்கிறாரா என்ற சந்தேகம் அவளுக்கு. 

“ஏன் ஆன்டி, அங்கிள் இப்படி எல்லாம் கூடமாட ஒங்களுக்கு ஒத்தாசை செய்றதில்லையா?”  

“ம்க்ஹும், இவன் அப்பாவும் இவன் கூடப் பொறந்ததுகளும் ஒரே குட்டையில் ஊறினதுகள் மா” என மாமியார் விரக்தியுற்றார். 

மாமியாரிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என ஒரு கணம் யோசித்துவிட்டு அமைதியாகவே இருந்தாள். அவர் எழுந்து வாசல் கதவினை நெருங்கும் போது கூப்பிட்டு நிறுத்துகிறாள். அவரிடம் சென்று துணியால் மறைத்து வைத்திருக்கும் ரிமோட்டை அறிமுகம் செய்கிறாள். இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் நிகழ்கிறது. மாமியார் அவளைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார். 

சிறிது நாட்களுக்குள்ளாகவே, அவ்விரு பெண்களின் மீதும் அவர்களின் குடும்பத்து ஆண்கள் அன்புகாட்டுவது பற்றியே அடுத்த வீட்டுக்காரர்கள் கிசுகிசுக்கலாயினர். அந்த கிசுகிசுப்புக்குள் இப்படி ஒரு அபிப்பிராயமும் சேர்ந்துவிட்டிருந்தது. அதாவது, ஆண்களே இப்படியாக அவர்கள் மீது அளவுக்கதிகமாக அன்பு காட்டி வீட்டு வேலைகளைச் செய்தால், பெண்களுக்குச் சதுரம் போட்டு ஊழச்சதைகள் அதிகரித்துவிடும். கொலஸ்ற்றோல், மூட்டுவலி என அலையப் போகிறார்கள் எனக் கிசுகிசுப்பதும் இவர்களின் காதுகளுக்கு வந்து சேர்கிறது. 

சேர்ந்ததும், குண்டுப் பூசணிக்காய்க்கு சேலை சுற்றியது போன்றுதானே இத்தனை நாட்களாக இருக்கிறீர்கள்.? இதற்கு மேலும் உங்களுக்குச் சதுரம் போட வேண்டுமா என மாமியாரிடம் கேட்டுக் கிண்டல் செய்கிறாள். நீயும் ஓரிரு பிள்ளைகளைப் பெற்றதும் யார் பெரிய பூசணிக்காய் என அளந்து பார்த்துவிடலாம் என மாமியாரும் அவளைச் செல்லமாகச் சீண்டினார். அவர்களின் உரையாடலுக்கு இடையில் அவர்களுக்காக டீ கொண்டு வரும் மாமனார், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணைப் போல் பாவனை செய்தவாறு நடந்து வருகிறார். மாமியாரின் முந்தானைக்குள் மெல்ல அசைவு காட்டுகிறது ரிமோட். 

*********

 – imamadhnan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button