
வேற்றுமையில் ஒற்றுமை
நம் இருவரின் திணைகளும்
வேறு வேறு
நெய்தல் எனக்கு
பாலை நீ!
தண்ணீரில் குதிக்கிற
ஓங்கில் என் மகிழ்ச்சி..
நிஷாகந்திப் பூவென தற்காலிக
வாழ்வியல் உனக்கு
அருவி கண்டால் சிலிர்த்து
புணர்வது எனக்கு சுகம்
ஆரவாரமற்று புகைப்படத்தில்
அடக்கி மகிழும் அமைதி உனது
பள்ளியில் படித்ததை
தவிர செய்த அனைத்தும் நினைவிருக்கிறது
என்றால் படித்தது மட்டுமே
நினைவிருக்கிறதென்பாய்
அதிரும் இசைகளுக்குள்
எனை எழுதிக் கொடுப்பேன்
ராஜாவின் தாலாட்டுகளுக்குள்
நீ மிதந்து திரிவாய்
வேற்றுமையில் ஒற்றுமை
வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்தவுடன்
தற்காலிகப் பிரிவு
வரம் என்றும் சாபம் என்றும்
முடிவிலியென விவாதங்கள்
இருவரும் திணைகள் பரிமாறிக் கொண்டோம்
இப்போதும் இருவரின்
திணைகளும் வேறு வேறானவை.
***
நீரதிகாரம்
வெயில் விழுங்கி நிழல்
பிரசவிக்கும் தாவரம் போல்
ஸ்கலித ரசவாதத்தில் திரவத்தை
அடைகாத்து உயிராய் சுமக்கிற
இறைவி!
உமிழ்நீர் சுரப்பிகளில்
சில சிட்டிகைகள் இனிப்பு கலந்து
பரிமாறுகையில்
கொதி நிலையில் காமம் பிற நிலையில் பாசம் எனவும்
கூடு பாய்கிறது முத்தம்
சமையலறை தொடங்கி
வீட்டின் முடுக்குகளில் நீக்கமற
பிரார்த்தனையென நிறைந்திருக்கும்
வேலைக்கென பிறந்திருக்கும்
வியர்வை இயந்திரங்கள்
சொட்டு சொட்டாக வலி
உடலுக்குள் உடும்பென
உருக்கும் ரத்தப்போக்கிலும்
புன்னகை வீசும் பூக்களின்
மனித உருவம்
நிபந்தனைகளற்ற அன்பின்
வாசம் அணிந்தவளை
திமிர் ஆயுதம் கொண்டு
வார்த்தை கங்குகளில் எரியூட்டி
கண்ணீர் கசிய உள்ளீடென
உரமாறாமல் இருந்து விடுங்கள்
மற்றவர்களுக்கென உருகி
சுவாசிக்கும்
அவள் ஒரு நீரதிகாரம்!
********