
- விதைகள்
உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் வயது முதிர்ந்து வீழ்ந்து மடிகிறவரைக்கும் தன் இனத்தை விதைகளின் மூலம் கடத்திக் கொண்டேயிருக்கும். அப்படிக் கடத்துவததை காற்று, நீர், போன்ற பூதங்களின் துணையோடும் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட நகர்தலின் மூலமாகவும், பறவைகள் மற்றும் பூச்சியினங்களின் மூலமாகவும் (இதைச்செய்யும்) செய்யும்.
இவற்றில் எந்தெந்த தாவரங்கள் எப்படிப்பட்ட சக்திகளை தனது இனக்கடத்தலுக்கு பயன்படுத்துகின்றன என்பதை நாம் கண்டுகொள்வதில் தான் அடங்கியிருக்கிறது வேளாண்மையின் மொத்த சூட்சுமமும்.
இலவம் பஞ்சு, வேலிப்பருத்தி, எருக்கு, பருத்தி போன்றவை காற்றின் மூலமாகவும்; நீர் மருது, தென்னை, புளி, புங்கன், பூவரசு போன்றவை நீரின் மூலமாகவும்; மா, பலா, கொய்யா, சப்போட்டா போன்ற கனிதரும் மரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மூலமாகவும்; வாழை, கற்றாழை போன்றவை பக்ககன்றுகளின் வழியாகவும்; ஒரு சில தாவரங்கள் அனைத்து சக்திகளின் வழித்தடங்களையும் தன் இனக்கடத்தலுக்கு பயன்படுத்துகின்றன.
உங்களது பண்ணையின் வரைபடத்தில் குறிப்பிட்டதைப் போல நிலங்களை வடிவமைத்த பின்பு வேளாண்மைக்காக விதைகளைத் தேடுகிற போது உங்களின் பணத்தை வேட்டையாட கடைவிரித்துக்காத்திருக்கும் கார்ப்பரேட் கரங்களுக்குள் சிக்காமல் தமிழகத்தில் உங்களின் முன்னத்தி ஏர்களின் பண்ணைகளை அணுகும் போது நல்ல தரமான நாட்டு விதைகளைத் தருவித்து தருவார்கள்.
அதில் பலர் பணம் பெற்றுக்கொண்டும், சிலர் இலவசமாகவும் உங்கள் கைகளுக்கு விதைகளை கைமாற்றுவார்கள்.
ஒரு முறை நீங்கள் விதையை வாங்கி வந்துவிட்டால் போதும், அதற்கு அடுத்தடுத்த போகத்திற்கு விதைகளை நீங்களே சேகரித்து பயன்படுத்தவும், மீதமுள்ளதை உங்களைப் போலவே நாட்டு விதைகளைத் தேடியலையும் புதிய வேளாண்குடிமக்களுக்கு கடத்தி பணப்பரிவர்த்தனையிலிருந்து விடுபட்டு நமது பழைய மரபான பண்டமாற்று முறைக்கு திரும்பலாம்.
தருவித்த விதைகளை வேளாண்மைக்கு உட்படுத்துகிற பொழுது, ஒரு நெல்லை விதைத்தால் அது நாற்பது சிம்புகளாக பிரிந்து மொத்தம் ஆயிரத்து நானூறு நெல்மணிகளையும், சிறுதானியங்கள் விளைந்து விதவிதமான பறவைகள் வந்திறங்கும் போதும், ஒரு முறை ஊன்றி விட்ட உயிர் வேலியானது பல்கிப்பெருகி ஒரு மிகச்சிறந்த உயிர்ச்சூழல் பன்மயமாக மாறும்போதும் நீங்கள் நித்தம் நித்தம் புதிதாக பிறந்துகொண்டேயிருப்பீர்கள்.
அறுவடை காலங்களில் அடுத்த போகத்திற்கான விதைகளை எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள தானியங்களை விற்று காசாக்குவீர்கள். அப்படி எடுத்து வைத்த விதைகளை உங்களுடைய தேவைக்கேற்ற வடிவங்களில் மண்கலயங்கள் வாங்கி வந்து ரசாயனங்கள் பாய்ச்சாத வெள்ளைத்துணியில் கட்டிப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பு முறை தான் தற்சார்பு விதை வங்கி. இந்த வங்கி மிகச்சரியாக பாதுகாக்கப்படும்வரை நீங்கள் தற்சார்புக்குள் நிலைத்திருப்பீர்கள்.
இதைத்தான் இயற்கைவழி வேளாண் பேராசான் திரு. கோ. நம்மாழ்வார் அவர்கள் ‘விதைகளே பேராயுதம்’ என்கிறார். ஒருவிதை தாவரங்களான தக்காளி, கத்தரி போன்றவற்றின் பழங்களைப் பறித்து தண்ணீரில் போட்டு பிழிந்தெடுத்த பின் சாம்பலிட்டு வெயிலில் உலர்த்தியும், வைக்கோல் பரப்பி சாணம் மொழுகி பிரி தயாரித்து பண்ணிரெண்டு மரக்கால் நெல் அளந்து கோட்டை கட்டி பாதுகாக்கும் முறையினையும், சிறுதானியங்களை மண்கலயத்தில் வைத்து பாதுகாக்கும் போது, அவற்றை எறும்பு உள்ளிட்டவற்றிடமிருந்து பாதுகாக்க நொச்சி இலைகளை போட்டு பாதுகாக்கிற முறையையும் வருங்காலத்தில் உங்களது நிலமே உங்களுக்கு ஆசானாக இருந்து வழி நடத்தும்.
பின்னாட்களில் உங்களது விளை நிலத்தில் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு கூடிக்கொண்டே செல்லும் போது, குதில், பத்தாயம் என்று விரியலாம். விதை வங்கியை நிர்வகிப்பதில் சோம்பேறித்தனம் கூடவே கூடாது.
அதையும் மீறி விதைகளுக்காக கடையேறிச் சென்று ஒரு கிலோ ‘ரெட் லேடி பப்பாளி விலை எவ்வளவு?’ என்று கேட்டால் அவன் ஒரு லட்சத்து இருபதாயிரம் என்பான். அந்த விலையை நம்பமுடியாமல் உங்கள் நெஞ்சு வலிக்கும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் தற்போதைய ‘விதை அரசியல்’ நிலவரம்.
பாதை விரியும்…