
கின்ட்சுகி
ஆதவன், மருதாணி வீட்டுக்கு தாராவும் அவளது அப்பா, அம்மாவான சுதாகர் பிரியாவும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோது மித்ரன், அமுதா, ஆதவன், மருதாணி நான்கு பேரும் பேக்கிங் (Baking) செய்யப் பயின்று கொண்டிருந்தனர்.
மித்ரன்: டேய், தேவையான பொருள்கள் எல்லாம் சரியான அளவுல எடுத்து வச்சீங்களா?
ஆதவன்: வச்சாச்சுடா. இனி மெல்ல கலக்கனும்.
அமுதா: என்கிட்ட பீட்டர் (Beater) இருக்குது. தனியாப் பண்ணா கை வலிக்கும். ஆளுக்கு கொஞ்ச நேரம் கலக்கலாம்.
தாராவுக்கு இதையெல்லாம் பார்க்க ஆர்வமாக இருந்தது.
தாரா: அம்மா, நானும் உள்ள போய் பாக்கவா?
(தாரா அனுமதி கேட்டுக் கொண்டிருந்ததை ஆதவன் அம்மா சௌம்யா பார்த்துக் கொண்டிருந்தார்)
சௌம்யா: உள்ள போ தாரா..
மருதாணி: ஹாய் தாரா.. வா, சேர்ந்து கேக் செய்யலாம்.
தாரா: கேக்கா? நானும் ஹெல்ப் பண்ணலாமா?
மருதாணி: தாராளமா… கலந்து oven-ல வைக்கற வேலை மட்டும்தான் இருக்கு. எல்லாரும் கொஞ்ச நேரம் கலக்கப் போறோம்.
தாரா: அப்போ நானும் கொஞ்ச நேரம் கலக்குறேன்.
எல்லோரும் கொஞ்ச கொஞ்சம் நேரம் கலந்து, கலவையை பேக்கிங் பேனில் ஊற்றினார்கள்.
ஆதவன் அப்பா மனோ பேனை அவனில் வைக்க உதவினார். Oven-ல் எல்லாம் சரியாக செட் செய்து விட்டு ஹாலில் அமர்ந்து பேச வந்தார்கள்.
கேக் ரெடியாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆதவனும் மித்ரனும் காப்பி தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
தாரா தான் கிப்ட்டாக கொண்டு வந்திருந்த செராமிக் கப்புகளை ஆதவன் மருதாணியிடம் கொடுத்தாள்.
தாரா: இந்தாங்க உங்களுக்காக நான் செலக்ட் பண்ண கிப்ட்.
மருதாணி: அழகா இருக்கு தாரா. தேங்க்ஸ்…
ஆதவன்: நன்றி தாரா. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
சில நிமிடங்களில் கேக் தயாரானது. 9 தட்டுகளில் கேக்கை துண்டுகளை வைத்தனர். தாரா கொடுத்த செராமிக் கப்புகளில் காபியையும் வைத்து ஐவரும் சேர்ந்து எடுத்து வந்தார்கள்.
ஆளுக்கு ஒன்றாக கொடுக்குப்போது, சின்னக்குட்டி மருதாணி ஒரு காப்பி கப்பை கீழே போட்டு விட்டாள். ஐந்து சில்லுகளாக உடைந்தது காபி கப்.
மருதாணி: அச்சச்சோ.. தெரியாம கீழ போட்டுட்டேன்.
சௌம்யா: பரவால்ல மருதாணி. இடத்தை சுத்தம் பண்ணிடலாம். கப் உடைஞ்சதப் பத்தி வருத்தப்படாத
மருதாணி: இல்லம்மா.. இப்பதான் தாரா கொடுத்தா
மருதாணிக்கு அழுகை வருவது போல் இருந்தது. தாரா மருதாணியை சமாதானப்படுத்தினாள்.
ஆதவன்: சரி, வருத்தப்படாத மருதாணி. இதை நாம எப்படியாவது சரி செஞ்சிடலாம்.
மித்ரன்: ஹே… கம் எடுத்துட்டு வரட்டா ஒட்டிப் பார்க்கலாம்.
முயற்சித்து பார்த்தனர். ஒட்டிய பின் தூக்கிப் பார்த்தால் ஒட்டியது எல்லாம் பிரிந்து வந்தது.
அமுதா: மெழுகுவர்த்தி உருகும் போது சொட்டு சொட்டா வரும்ல. அதைப் போட்டு ஒட்டிப் பார்க்கலாமா?
முயற்சித்துப் பார்த்தனர். வேலைக்கு ஆகவில்லை.
“தப்பில்லை தப்பில்லை
எந்த ஐடியாவும் தப்பில்லை
எந்த சின்ன ஐடியாவும் வெற்றிக்கு வழிவகுக்குமே
மீண்டும் மீண்டும் முயற்சிப்போமே..
சரியானதைக் கண்டுபிடிப்போம்”
பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு மீண்டும் யோசிக்க ஆரம்பித்தனர்.
தாராவும் மருதாணியும் ஒன்றாக அமர்ந்து கொண்டிருந்தனர் மருதாணியை உற்சாகப்படுத்தும் விதமாக தாரா சிரிப்பு காட்டிக்கொண்டிருந்தாள்.
ஆதவன்: ஹே.. போன வாரம் கின்ட்சுகி பத்தி படிச்சோமே. ஞாபகம் இருக்கா?
மித்ரன்: ஆமாடா.
தாரா: கின்ட்சுகின்னா என்ன மருதாணி?
மருதாணி: உடைந்ததை ஒட்ட வச்சு அழகான பாத்திரமா மாத்துற ஒரு ஜப்பானிய முறை தாரா.
தாரா: வாவ். அப்போ அத முயற்சி பண்ணி பாக்கலாமே!
மித்ரன்: ஆனா, முதல்ல ஒட்ட வைக்கனுமே.
ஆதவன்: எல்லாரும் வாங்க. சயின்ஸ் ஜகா அங்கிள்கிட்ட போலாம்.
எல்லோரும் ஜகா அங்கிளை கூப்பிட்டுக் கொண்டு அவரது லேபிற்கு சென்றார்கள்.
ஜகா: இதை ஒட்டுவதற்கு என்றே தனியாக பசைகள் கிடைக்கின்றன குட்டீஸ்களா… நாம் அதை நமது லேபில் தயாரிக்கலாமா?
எல்லோரும் உற்சாகமாக சரி என்று கத்தினார். கொஞ்ச நேரத்தில் ஆளுக்கு ஒரு உதவியாய் செய்து, பசையை தயாரித்து விட்டனர்.
ஒட்டி முடித்து மருதாணி கையில் அதைக் கொடுத்தாள் தாரா.
மருதாணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
உடனே அவளது அறைக்கு சென்று, வண்ணங்களைக் குழைத்து ஒட்டிய இடங்களில் எல்லாம் தங்க நிறக் கோடுகளைப் போட்டாள். பார்க்க கின்ட்சுகி கப்பைப் போலவே இருந்தது.
தொடரும்…