இணைய இதழ்இணைய இதழ் 48சிறார் இலக்கியம்

சயின்டிஸ்ட் ஆதவன்; 4 – செளமியா ரெட்

சிறார் தொடர் | வாசகசாலை

பூச்சி தின்னும் செடி!

மித்ரன், ஆதவன், மருதாணி மூவரும் சேர்ந்து தெருவில் நொண்டி விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். சாக்பீஸ் வைத்து ரோட்டில் பெட்டி பெட்டியாக நொண்டி ஆடும் கட்டம் வரைந்தாள் மருதாணி. ஆதவனும் மித்ரனும் நொண்டியாட கல் தேடிக்கொண்டிருந்தனர். 

5 மணிக்கே விளையாட வந்திருக்க வேண்டிய அமுதாவை இன்னும் காணவில்லை. கட்டம் வரைந்து, கல் தேடியெடுத்து வைத்துவிட்டு மூவரும் காத்திருக்க ஆரம்பித்தனர். அமுதா வருவது போலத் தெரியவில்லை. 

மித்ரன்: எல்லாரும் வாங்க, அமுதா வீட்டுக்கு போய் பாத்துட்டு வரலாம்.

மூவரும் அமுதா வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டனர்.

(மூவரும் கோரஸாக): அமுதா…. அமுதா….

அமுதா வேகமாக ஓடி வந்தாள்.

ஆதவன்: எவ்ளோ நேரம் உனக்காகக் காத்திருக்கிறது? விளையாட வர்றியா, இல்லையா?

அமுதா: எங்க வீட்டுக்குள்ள விதவிதமா பூச்சியா வந்துட்டு இருக்குது. என்ன பண்றதுனு தெரியாம கொசு பேட் வச்சு அடிச்சுட்டு இருக்கேன்.

மித்ரன்: என்ன சொல்ற? என்ன பூச்சிலாம் வருது? நாங்களும் வந்து பார்க்கலாமா?

மூவரும் அமுதாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அமுதாவின் பெட்ரூமுக்குள் ஏகப்பட்ட பூச்சிகள்.

அமுதாவின் ஜன்னல் வழி ஆதவன் எட்டிப் பார்த்தான். வீட்டின் பின்புறம் ஏகப்பட்ட குப்பைகள் இருந்தன.

ஆதவன்: அமுதா உங்க வீட்டுப் பின்னாடி நிறைய குப்பை சேந்திருக்கு. அதான் உங்க வீட்டுக்குள்ள பூச்சியா வருது. இந்தக் குப்பை எல்லாம் யாரு போடுறது? 

அமுதா: எங்க வீட்ட சுத்தி இருக்கிற எல்லாரும் இந்தக் காலி இடத்துலதான் குப்பை போடுறாங்க. நம்ம வீடுன்னா போடாதீங்கனு சொல்லலாம். எல்லார் வீட்டிலயும் போய் சொல்ல முடியுமா? 

ஆதவன்: ஓ! இதுக்கு ஏதாவது வழி பண்ணுவோம். 

ஆதவன் அவன் அப்பாவிடம் சொன்னான். அவர் ஏரியாவில் இருந்த தன்னார்வலர்களிடம் அது பற்றிப் பேசினார். அந்த வாரமே தன்னார்வலர்கள், ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி எல்லோரும் சேர்ந்து அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். 

ஒரு வாரத்தில் அந்த இடம் பளிச்சென்று ஆனது. இனி குப்பை போடக்கூடாது என்று பலகையும் எழுதி வைக்கப்பட்டது. இது நடந்து ஒரு வாரம் ஆனது. ஆனாலும் அமுதா வீட்டில் பூச்சித் தொல்லை இருக்கவே செய்தது. 

அமுதா: இன்னும் எங்க வீட்டுக்கு பூச்சி வருதுப்பா. பழைய அளவுக்கு இல்லைன்னாலும் வருது. ஆனா எங்க இருந்து வருதுனே தெரியல. 

ஆதவன்: கொஞ்சம் வெய்ட் பண்ணிப் பாக்கலாம். இப்பதான உங்க வீட்ட சுத்தி குப்பை இல்லாம இருக்குது?

மித்ரனுக்கு ஒரு ஐடியா வந்தது. 

மித்ரன்: ஹே.. யூட்யூப்ல ஒரு செடி பூச்சி சாப்பிடறத பார்த்தேன். அது வேணா வாங்கி வச்சுப் பாக்கலாமா?

அமுதா: என்னடா சொல்ற? பூச்சி சாப்டுற செடியா? அது எங்க கிடைக்கும்?

ஆதவன்: எங்க அம்மா நிறைய செடிகள் வச்சிருக்காங்க. அவங்களுக்குத் தெரியுமானு கேக்கலாம்.

அமுதா: உடனே கேக்கலாம் வாங்க.

ஆதவன் அவன் அம்மாவிடம் பூச்சி தின்னும் செடியைப் பற்றி கேட்டான். அவன் அம்மாவிற்கு அந்தச் செடி பற்றித் தெரிந்திருந்தாலும் அந்தச் செடி எங்கே கிடைக்கும் எனத் தெரியவில்லை. அதன்பிறகு அந்தச் செடியை நிறைய இடத்தில் தேடினார்கள். ஒரு கார்டனில் கிடைத்தது.

அடுத்த நாளே ஆதவன் அதை ஒரு பெட்டிக்குள் பேக் செய்து சர்ப்ரைஸ் கிப்ட்டாக அமுதாவிற்கு கொடுத்தான். நால்வரும் சேர்ந்து அதைப் பிரித்துப் பார்த்தனர்.

மருதாணி: நிஜமாவே இந்தச் செடி பூச்சியை சாப்பிடுமாப்பா?

ஆதவன்: இருங்க, வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.

அமுதா அவள் பெட்ரூமுக்குள் அந்தச் செடியை வைத்தாள். எல்லோரும் கொஞ்ச நேரம் காத்திருந்தனர். ஒரு பூச்சி உள்ளே வந்தது. நேராக அது செடியின் பக்கத்தில்தான் சென்றது. செடி மெல்ல அதன் இலைகளை வாய் போல் திறந்து, பூச்சி உள்ளே சென்றவுடன் தன் வாயை மூடிக்கொண்டது. எல்லோரும் அந்தச் செடியைப் போல் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து நின்றனர்.

நால்வரும் வேகமாக ஆதவன் அம்மாவிடம் ஓடினார்கள்.

ஆதவன்: அம்மா, நிஜமாவே அந்தச் செடி பூச்சி சாப்பிட்டுச்சும்மா. நான் பார்த்தேன். 

ஆதவன் அம்மா: இந்த மாதிரி நிறைய செடி இருக்கு. அந்தச் செடி நல்லா அழகா இருக்கில்ல. அதப் பாத்து பூச்சி எல்லாம் ஆசையா அது பக்கத்துல போகும்.

மித்ரன்: ஆமா ஆன்ட்டி, பூச்சி அந்தச் செடி பக்கத்துல ஆர்வமா போச்சு. 

ஆதவன் அம்மா: நமக்கு மாதிரி அந்தச் செடிக்கும் உணர்ச்சி இருக்கு. பூச்சி உக்காந்த உடனே வேகமா மூடிக்கும். 15 செகண்ட்ல மூடிரும்.

அமுதா: ஆமாங்க ஆன்ட்டி. ரொம்ப வேகமா மூடிக்கிச்சு.

ஆதவன் அம்மா: ம்ம். இந்தச் செடி பேரு Venus fly trap. அப்படியே இறுக்கிப் பிடிச்சே பூச்சியக் கொன்னுடும். அதோட இலைகள்ல சுரக்கற செரிமான நீர் பூச்சியை செரிச்சிடும். நம்ம உடம்புக்குள்ள சாப்பாடு செரிக்குதே அந்த மாதிரி.

ஆதவன்: அப்பறம் என்னாகும்மா? 

ஆதவன் அம்மா: அந்த சத்து செடிக்கு கிடைச்சிடும். பூச்சி செரிமானமான அப்புறம் இலை திறந்துடும். இது நடக்க 5 – 10 நாள் கூட ஆகும். 

மித்ரன்: ஒருவேளை செரிக்கலைனா?

ஆதவன் அம்மா: செரிக்காத பூச்சியின் பகுதிகள் இலை திறக்கும்போது கீழே விழுந்துடும்.  ஒரு இலை 2- 3 முறை மட்டுமே பூச்சியைப் பிடிக்கும். அப்பறம் அத திறக்கவே திறக்காது. வேற இலை பூச்சி பிடிக்க ஆரம்பிச்சுடும்.

அமுதா: அப்போ இந்தச் செடி பூச்சியே வராம பண்ணாதா?

எல்லோருக்கும் சப்பென்று போய் விட்டது. ஆனால் இடம் சுத்தமானதால் அமுதாவின் வீட்டில் பூச்சித்தொல்லை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அந்தச் செடி பூச்சி பிடிப்பதை எல்லோருக்கும்  காட்டி மகிழ்ந்தாள் அமுதா.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button