
ஒரு ரயில் காட்சி
ரயிலடியில்
வழியனுப்ப வந்தவர்களும்
வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில்
ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு
அங்குமிங்கும் அலைந்தபடி
யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள்
கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான்
காபி காபி என்று கூவுகிறான் ஒருவன்
உட்கார்ந்த கணத்தில்
இட்லியைப் பிரிக்கிறார்கள் சிலர்
கண்ணும் கருத்துமாய்
பொருட்களை வைக்கிறார்கள் சிலர்
யுவதியொருத்தி
சன்னமான குரலில் தனது ஆண் நண்பனுக்கு ரயில் கிளம்பி விட்டதை
முணுமுணுக்கின்றாள்
90 கிட்ஸ் இருவர்
அப்பர் பெர்த்தில் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்
இப்போது
மொத்த ரயிலும் மொபைலுக்குள்
வந்துவிட்டது
கொஞ்சம் கொஞ்சமாக
அத்தனை பெட்டிகளும் மெஸஞ்சரிலும்
புலனத்திலும் மூழ்கத் தொடங்கியது.
****
கண்களால் பேசுபவள்
சமீபத்தில்
கண்களால் பேசும் ஒருத்தியைக் காண நேர்ந்தது
சுற்றியிருப்போர்
திருமண பரபரப்பில் இருந்தார்கள்
இவளோ
அவர்களுடன்தான் இருந்தாள்
ஆனால்
அவர்களுடன் இல்லாதிருந்தாள்
மணப்பெண் அறையில் அவ்வளவு அரட்டை
என்றபோதும்
அவ்வளவு மௌனமாக இருந்தாள்
அங்குதான் இருந்தாள்
அவளது முகம் அவ்வளவு ஜொலித்தது
பச்சைப் பட்டில் அவ்வளவு அழகாயிருந்தாள்
மை சுழியோ
அவளது கண்களால் பெருமை கொண்டது
மணப்பெண் தோழிகளில் அவளொருத்தியென்றபோதும்
அதிர்ந்தவள் பேசவில்லை
கூட்டம் வெடித்துச் சிரித்தது
எல்லா சந்தோஷங்களையும் அவள் கண்களால் காட்டினாள்
கூர்மையான அவளது கண்களின் மொழி மிகுந்த வசீகரம் தரக்கூடியதாக இருந்தது
அவளின் திசையில் எட்டு வைத்தேன்
என்னருகில் நின்றிருந்த அவளை நோக்கினேன்
மணமகனின் நண்பனான என்னை
அவள் கவனித்திருக்கக் கூடும் போல்
குறுகுறுவென பார்த்தாள்
எனக்கு கொஞ்சம் வெட்கம் வந்துவிட்டது
திரும்பிக் கொண்டேன் அவளது கண்களை எதிர் கொள்ளும் தைர்யமற்று
இப்போது
என்ன செய்கிறாள் என்று பார்த்தேன்
என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாளவள்
ஒரு சொல் கூட சொல்லாமல் மணப்பெண் கூடவே அவள் செல்வது
எனக்கு மிகுந்த ஆச்சயத்தையும் விநோதத்தையும் தந்தது
அவளது பச்சைப் பட்டும் அவளது மை பூசிய கண்களும்
கறுகறுவென்றிருந்த கூந்தலும் என்னை என்னவோ செய்தன
மணமக்கள் மேடையைச் சுற்ற மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் துணைகளாக நாங்கள் இருவரிருந்தோம்
அப்போதும் என்மீதிருந்தன அவளது கண்கள்
சற்று தடுமாறிய என்னை மேலும் சளைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன அந்தக் கண்கள்
மணமக்களை காரில் அனுப்புகையில்
இருவரும் இலேசாக முட்டிக் கொண்டோம்
சன்னமான குரலில் தனது வாட்ஸ்ஆப் எண்களை
சொல்லிவிட்டுக் கடந்தாள்
அப்போது அவளது கண்கள் குனிந்தபடியிருந்தன.
****
புலனக்காதல்
உனது பச்சை விளக்கு எரியும்போதெல்லாம்
அவ்வளவு பரவசம் கொள்வேன்
உனது குரலாக வரும் மெஸஞ்சர் சப்தம் குதூகலம் தரும்
நான் சாமத்தில் அனுப்பியதை நீ பார்த்ததற்கான அந்த ப்ளூ டிக் பெரும் போதை சேர்ப்பது
சில கணம் தொடர்ந்து நீ உள்பெட்டியைத் தட்டும் போதெல்லாம் ஆயுளொன்று கூடும்
ஆறுமாதங்கள் பழகியதற்கே இவ்வளவு அன்பா?
திகட்டத் திகட்ட நீயனுப்பும் வண்ணநிறப் பூக்களை
எங்கிருந்து தேர்வு செய்கிறாயென வியப்பேன்
அவ்வளவு காதலும் காமமும் தோய்ந்த நமது உரையாடல்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொள்வேன்
பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கும்
இருபது ஆண்டுகள் கழித்து நீதான் எனது எண்ணைக்
கண்டறிந்து பேசினாய்
அப்போது தோற்றது நான்தான்
வெறிபிடித்தது போல் பேசித்தீர்த்தோம்
முன்னிரவில் தொடங்கி
புலர்ந்தது தெரியாமல் பேசியது எல்லாம்
பைத்தியக்காரத்தனத்தில் சேருமா என்ன?
நாளொன்றை அழகாக்கும் மற்றுமொரு குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறேன் அன்பே.
****
கூதற்காலம்
வாடை வீசும் இந்நண்பகலில்
மாதங்கள் கடந்து அழைத்தாள்
முதலில் நம்பவில்லை அழைப்பது அவள்தானாவென்று
அதிசயம்தான்
ஏன் ஆச்சரியமும் கூட
இத்தனை காலம் கடந்து ஏனவள்
அழைக்கிறாளென்று சற்று குழப்பத்துடன் எடுத்தேன்
எப்படி இருக்க என்றாள்
இப்பதான் கண் தெரிந்ததாவென்று கேட்க நினைத்தேன்
அவள் அழைப்பதே பெரிய விடயம்தானேயென்றிருந்துவிட்டேன்
குளிர்கிறதா என்றாளவள்
நாம் இருவரும் தேநீர் அருந்தினால் எப்படியிருக்கும் என்று தொடர்ந்தாள்
நான் வெப்பம் ஆனேன்
ஒரு கணம் என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
“ச்” ஒன்று வந்து சேர்ந்தது
மேலும்
எனது கைகளை இறுகப்
பற்றிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்றாள்
இப்போதுதான் தோன்றுகிறதா என்றேன்
எப்போதும் இருப்பதுதான் என்றாள்
என்ன திடீரென ஞாபகம் என்றேன்
இந்தக் குளிர் உன்னை நினைவுபடுத்துகிறது என்றாள்
நான் கொதிக்கத் தொடங்கினேன்
ஒரு கூதல் என்ன செய்யும்?
எல்லாம் செய்யும்.
********