...
சிறார் இலக்கியம்
Trending

சாக்லேட் மழை

முனைவர்  ஜெயந்தி நாகராஜன்

‘’ப்ரியா! போதும் நிறுத்து. இதோட  ஏழாவது சாக்லேட்.  அம்மா! ப்ளீஸ்மா!  இதோட கடைசி என  எட்டாவதாக ஒன்றை வாயில் போட்டுக் கொண்டாள் ப்ரியா.  சாக்லேட் சாப்பிட்டா பல்லுக்குக் கெடுதல்ன்னு எவ்வளவு முறை சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்றே. உன்னை எப்படிதான் திருத்தறதுன்னும் புரியல்லே.  என அலுத்தவாறு சோபாவில் அமர்ந்தவாறு டிவியை ஆன் செய்தாள்.  பல சேனல்களைத் தாண்டி தான் எப்போதும் பார்க்கும் நிறைமதி டிவியில் தன் பார்வையை நிறுத்தினாள்.

மெகாசீரியல்கள், குத்தாட்டம் என ஏதும் இல்லாது அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளையே பிரதானமாகத் தரும் டிவி என்பதால் சுகந்திக்கு மிகவும் பிடிக்கும். அப்பொழுது ஒரு பெண் பிரமுகரின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரலை நிகழ்ச்சியைக் கண்டாள். அவர் ஒரு குழந்தை எழுத்தாளர் என்பதை அறிந்து நிகழ்ச்சியைக் கவனிக்கத் தொடங்கினாள்

கதைகள் வாயிலாகக் குழந்தைகளின் மனதை மாற்ற முடியும் என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக  உரைத்தவிதத்தைக் கேட்டாள் சுகந்தி.அட!.    ஆமாம்! இது  உண்மைதான்!   கதைகள் பல பிரபலங்களின்    வாழ்க்கையில் பல திருப்பங்களை உண்டாக்கியதைப் படித்திருக்கிறேனே! ஏன்? என்   பாட்டியும் அம்மாவும் எத்தனை கதைகளை சொல்லி என்னை வளர்த்து ஆளாக்கினர். பெரிய படிப்பு, பெரிய பதவி என இருந்தும் என் குழந்தையை  நானே வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதால் பணியை    வி ட்டு  விலகி இருக்கிறேன்.  இனி தினமும் அவள் படுக்கும் முன்பாகக் கதைகள் அதுவும் நீதிக் கதைகள்    சொல்வதே என் முதல் வேலை என்று முடிவெடுத்தவள் அன்று இரவே அதனை மறக்காமல் கடைப் பிடிக்கவும் செய்தாள்.  அன்று வழக்கத்திற்கு மாறாகக் குழந்தை சீக்கிரம் உறங்கிவிட்டதைக் கவனிக்கவும் செய்தாள்.

நாட்கள் நகர்ந்தன. ஆனால் ப்ரியா சாக்லேட் தின்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் ப்ரியா மாலை நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள  தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். அப்போது  அழகிய பட்டாம்பூச்சி ஒன்று பறந்து

அவளருகில் உள்ள மரத்துப் பூவொன்றில் அமர்ந்தது.ப்ரியா! என்று அது அழைத்ததும் ஆச்சர்யப்பட்ட ப்ரியா அதன் அருகில் சென்றாள்.  ‘’உனக்கு மூன்று வரங்களைத் தருகிறேன். என்ன வேண்டும் கேள்!” என்றதும் ப்ரியா அப்படியா!  நான் வேறென்ன கேட்பேன்! சாக்லேட் சாக்லேட் சாக்லேட்  சாக்லேட் மழை பொழிய வேண்டும்.  என்றதும் கடகடவென சாக்லேட் மழை பொழியத் தொடங்கியது. ஓ  எனக் கூக்குரலிட்ட ப்ரியா சாக்லேட்டை அள்ள முயன்றாள்.

ம்! அடுத்த வரம் என்ன என்ற பட்டாம்பூச்சியிடம்  இந்த செம்பருத்தி மரம் முழுதும் சாக்லேட் மரமாக வேண்டும். அவ்வளவுதான். அடுத்த நொடியில் அம் மரம்  முழுவதுமே சாக்லேட்டாக மாறியதும் ப்ரியா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  இன்னொரு வரம் இருக்கு. அதற்கு என்ன கேட்கப்போகிறாய் ?  வந்து  நான் எதைத் தொட்டாலும் அது சாக்லேட்டாக மாற வேண்டும் என்று கேட்டதும்  உடனே அங்கிருந்து பட்டாம்பூச்சி வேகமாகப் பறந்தது. எங்கே இன்னும் சற்று நேரம் இருந்தால் தன்னைத்    தொட்டுவிடுவாள் என்ற அச்சமோ!

அப்போது ப்ரியாவின் செல்ல நாய்க்குட்டி டாமி வாலைக் குழைத்தபடி அவளருகே ஓடிவந்தது. டாமி! என்று அதனைத் தூக்க அவ்வளவுதான். டாமி அப்படியே சாக்லேட் டாமியாக  மாறியது.     ஓ!  என் டாமி எங்கே! என்று அழுதபடி வீட்டினுள் நுழைந்த ப்ரியா  தன் தாயைக் கண்டதும்       அம்மா! என்று அம்மாவைக் கட்டிக் கொண்டாள். அடுத்த நொடி அம்மா அப்படியே                    சாக்லேட் பொம்மை அம்மாவாக மாறிவிட்டாள்.  இதைப் பார்த்த ப்ரியா பெருங் குரலில் அழத் தொடங்கினாள்.

என்னப்ரியா! தூக்கத்திலே ஏதாவது கனவு கண்டாயா? என்றாள் சுகந்தி. என்ன ! கனவா! அம்மா! அப்படின்னா நீயும் டாமியும் சாக்லேட்டா மாறலியா? வெயில் வந்ததும் அப்படியே உருகிப் போகலியா? நான் பயந்தே போயிட்டேன்மா! என்று தாயை இறுகக்        கட்டிக் கொண்டாள்.  சரி! சரி பள்ளிக்குக்கிளம்பு ! என்று அவளை அவசரப்படுத்தினாள்.

எதைத்தொட்டாலும் பொன்னாக மாறவேண்டும் என்று பேராசை கொண்ட மைதாசு வரம் வேண்ட  அப்படியே தேவதையும் வரத்தைத் தந்தாள்.  அப்படியே எல்லாம் பொன்னாக மாறியது. கூடவே அவனுடைய ஒரே மகளும் என்று தான் நேற்று சொன்ன மைதாசு கதையின் பாதிப்பு என்பதை உணர்ந்தாள்.  ப்ரியா பள்ளிக்குப் புறப்படும்போது ப்ரியா! இந்தா! சாக்லேட்! இன்றைய கோட்டா! என்று தர, அம்மா! வேண்டாம்மா! நீ யா பார்த்து கொடு! என்று கூறி பள்ளிக்குப் புறப்பட்டாள்.

ஆஹா! கதை நன்றாக வேலை செய்கிறதே! என்றவள் மனதிற்குள் அந்த எழுத்தாளருக்கு நன்றியைத் தெரிவித்தாள். இன்னும் ப்ரியா சுத்தத்தின் மேன்மையை உணரனும். அதுக்கான கதையை நாளைக்குச் சொல்லணும் என்று நினைத்தவளாய் உற்சாகத்தோடு வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.