இணைய இதழ்இணைய இதழ் 94சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 5

சிறார் தொடர் | வாசகசாலை

மர்ம மனிதன்

’’நான்… நான்… எங்கே இருக்கிறேன்?’’ என்று மெல்ல கண்களைத் திறந்தபடி கேட்ட சிங்கமுகன், அரண்மனையில் தனது கட்டிலில் படுத்திருந்தார்.

‘’ம்… சுரங்கக் கொள்ளையர்களைப் பிடித்துவிட்டு களைப்போடு உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்று கிண்டலான கிளியோமித்ரா குரல் கேட்டது.

நன்றாகக் கண்களைத் திறந்து பார்த்தார். அவரது கட்டில் முனையில் ராணி அமர்ந்து இருந்தார். அருகில் ஒரு நாற்காலியில் அரண்மனை வைத்தியர் இருந்தார். சற்றுத் தள்ளி தளபதி கம்பீரன், சூர்யன், செவ்வந்தி நின்றிருந்தார்கள்.

சட்டென எழுந்து அமர்ந்த சிங்கமுகன், ‘’எ… எங்கே எங்கே அவர்கள்?’’ என்று பரபரப்பானார்.

‘’ம்… உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறார்கள்’’ என்று மீண்டும் கிண்டலுடன் சொன்னார் கிளியோமித்ரா.

‘’கிளியோ…’’ என்று கோபமாக முறைத்தார் சிங்கமுகன்.

‘’என்னிடம் முறைத்துப் பயனில்லை அன்பே… சூர்யன் மட்டும் சரியான நேரத்தில் அங்கே வந்திருக்காவிட்டால் உங்கள் நிலை என்ன ஆகியிருக்குமோ’’ என்றார் கிளியோமித்ரா.

‘’அரசியாரே… சற்று அமைதியாக இருங்கள். இப்போதுதான் அவர் கண்விழிக்கிறார். தொந்தரவு செய்யாதீர்கள்’’ என்றார் வைத்தியர்.

‘’வை… வைத்தியரே… என்னுடன் வந்த மந்திரி எங்கே?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’பக்கத்து அறையில் படுக்க வைத்திருக்கிறோம் மன்னா… அவருக்கு மயக்கம் தெளியவில்லை. பாவம்… வயதானவர் அல்லவா? மயக்கப் புகை சுவாசம் முழுக்க கலந்திருக்கும். கண்விழிக்க இன்னும் ஓரிரு நாழிகை ஆகலாம்’’ என்றார் வைத்தியர்.

‘’அ… அந்தக் கொள்ளையர்கள்?’’

‘’அவர்கள் ஓடிவிட்டார்கள் அரசே… நான் உங்களையும் மந்திரியாரையும் காப்பாற்றும் முனைப்பில் அவர்களைப் பின்தொடரவில்லை’’ என்றான் சூர்யன்.

‘’மரத்தின் மீதிருந்து புகை குண்டுகளை வீசியவனையாவது பிடித்திருக்கலாம். மடையன்… அவனையும் கோட்டை விட்டுவிட்டான்’’ என்று சூர்யனை முறைப்புடன் பார்த்தவாறு சொன்னான் கம்பீரன்.

‘’அதானே… நம் தளபதி மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இரண்டு பேரையும் இரண்டு கைகளால் காப்பாற்றி இருப்பார். அந்த மரமேறியை ஒரு கையால் வளைத்திருப்பார். மற்ற ஒன்பது கரங்களால் கொள்ளையர்களையும் பிடித்து இருப்பார். முருகன் போல பன்னிரு கரங்கள் அல்லவா நம் தளபதிக்கு’’ என்று கேலியாகச் சொன்னாள் செவ்வந்தி.

விருட்டென அவள் பக்கம் திரும்பிய கம்பீரன், ‘’மூடு வாயை… ராஜாங்க விஷயம் பேசும் இடத்தில் பணிப்பெண் உனக்கு என்ன வேலை? போ இங்கிருந்து…’’ என்று சீறினான்.

‘’தளபதி… கொஞ்சம் அமைதி! செவ்வந்தி கொடுத்த யோசனையால்தான் சூர்யன் அரசரைப் பின்தொடர்ந்தான். அதனால்தான் காப்பாற்ற முடிந்தது’’ என்றார் கிளியோமித்ரா.

‘’அ… அதற்கில்லை மகாராணி… இந்த மாறுவேட விஷயத்தை என்னிடம் நீங்கள் முன்கூட்டியே தெரிவித்து இருந்தால்…’’

‘’நான்தான் சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தேன்’’ என்றார் சிங்கமுகன்.

கம்பீரன் மிகவும் பணிவான குரலில்… ‘’அ… அரசே… எனக்கு தெரியக் கூடாது என்றால்… இதன் பொருள் என்ன? என்னைச் சந்தேகப்படுகிறீர்களா?’’ என்று கேட்டான்.

செவ்வந்தியின் காலடியில் இருந்த வெற்றி, ‘’மியாவ்வ்வ்’’ (அடடா… என்ன நடிப்பு!) என்றபடி கட்டிலுக்குத் தாவியது.

‘’ராஜாங்க விஷயத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருமில்லை கம்பீரா… நாளை கிளியோமித்ரா மீது கூடச் சந்தேகப்படுவேன்’’ என்றார் சிங்கமுகன்.

‘’அ… அப்படியானால் எனக்கு இந்த தளபதி பதவியே வேண்டாம் மன்னா… நம் அரசி கேட்டுக்கொண்ட ஒரே காரணத்தினால்தான் இந்த முள்கிரீடத்தை நான் ஏற்றேன். இப்படி ஒரு சந்தேகம் வந்தால் இப்போதே விலகிவிடுகிறேன். தேவையென்றால் அந்தச் சுரங்கக் கொள்ளையர் பிடிபடும் வரை நான் சிறையில் இருக்கிறேன்.’’

இப்படிச் சொன்ன கம்பீரன் சட்டென தனது வாளை உருவினான். கட்டிலை நெருங்கி சிங்கமுகனின் காலடியில் வைத்துவிட்டு வணங்கினான்.

வெற்றி தாவிச்சென்று அந்த வாள் மீது நின்றது. ‘’மிய்ய்யாவ்வ்வ்’’ (அடேங்கப்பா… உலகமகா நடிப்புடா!)

இப்போது கிளியோமித்ரா சட்டென கோபத்துடன் எழுந்தார். ‘’அன்பே… கம்பீரன் மீது சந்தேகம் கொள்வதற்கு அரசராக உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அதனைத் தனியாக விசாரிப்பதுதான் நாகரிகம். இப்படி இத்தனை பேருக்கு முன்பாகப் பேசுவது சரியில்லை. இதன்மூலம் என்னையும் அவமானப்படுத்துகிறீர்கள். என்னால் நியமிக்கப்பட்ட ஒருவர் குற்றவாளி என்றால், என்னை அறியாமைக்காரி என்று மறைமுகமாகச் சொல்வது போலிருக்கிறது’’ என்றார்.

‘’இரு… இரு… கிளியோ… இப்போது என்ன சொல்லிவிட்டேன் என்று ஆளாளுக்கு முறுக்கிக்கொள்கிறீர்கள். கம்பீரா… முதலில் இந்த வாளைக் கையில் எடு… உரையில் போட்டுகொள். இது எனது உத்தரவு’’ என்றார் சிங்கமுகன்.

‘’மியாவ்… மியாவ்…’’ (அவனே போறேங்கறான்… விடுங்களேன்) என்றபடி நகர்ந்தது வெற்றி.

கம்பீரன் உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டு அந்த வாளை எடுத்துக்கொண்டு மீண்டும் அரசியையும் அரசரையும் வணங்கினான்.

அப்போது அறை வாசலில் வீரன் நல்லான் வந்து நின்று, ‘’அரசே… வணக்கம்’’ என்றான்.

‘’சொல்’’ என்றார் சிங்கமுகன்.

‘’கிழக்கிந்திய நிறுவனப் பொறுப்பாளர் கிங்விங்சன் வந்துள்ளார்’’ என்றான்.

‘’அவர் ஏன் இந்த விடியலிலேயே வந்துள்ளார்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’தங்களை நலம் விசாரிக்கவாம். சுரங்கக் கொள்ளையர்களால் தங்களுக்கு ஆபத்து ஏதுவுமில்லையே என்று அறியவாம்’’

சிங்கமுகன் திகைத்தார்… ‘’அதற்குள் இந்த விஷயம் எப்படி அவர் காது வரை சென்றது?’’ என்று கேட்டார்.

‘’அரசே… நேற்று நள்ளிரவு உங்களையும் மந்திரியாரையும் நான் மீட்டு வரும்போதே பொதுமக்களில் பலருக்கும் தெரிந்துவிட்டது. அந்த நள்ளிரவிலும் வீதி முழுக்கக் கூடிவிட்டார்கள். எப்படி தகவல் தெரிந்தது என்று புரியவில்லை’’ என்றான் சூர்யன்.

‘’ஆக வழக்கம் போல என் மானம் கிழக்கிந்திய கம்பெனி வரை கப்பல் ஏறிவிட்டது’’ என்றபடி சுற்றிலும் ஏறிட்டார்.

அனைவரும் அமைதியாக தலைகுனிந்திருந்தனர்.

‘’அரசே…’’ என்று அழைத்தான் நல்லான்.

சட்டென நிமிர்ந்த சிங்கமுகன், ‘’என்னடா?’’ என்று சீறினார்.

‘’இ… இல்லை… அவருக்கு என்ன பதில் சொல்லட்டும்?’’

‘’பொறு… என்ன அவசரம்?’’

‘’இ… இல்லை… எனது எட்டு மணி நேர இரவுப் பணி இன்னும் மூன்று நிமிடங்களில் முடிகிறது. நான் கிளம்ப வேண்டும்’’ என்றான் நல்லான்.

சிங்கமுகன் தலையை அண்ணாந்து உயர்த்தி… பற்களை நறநறத்து… ‘’வீரசிங்கா… என் அருமை தகப்பனே… நீங்கள் பாட்டுக்கும் பல சீர்த்திருத்தங்களைச் செய்துவிட்டுப் போய்விட்டீர். இப்போது நான் படும் அவதி இருக்கிறதே…’’ என்றார்.

‘’அன்பே… அமைதி… நல்லா… அவரை நமது விருந்தினர் அறையில் காத்திருக்கச் சொல். அரசர் குளித்துவிட்டு வருவார்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’ஆகட்டும் அரசியாரே… அப்புறம் அவர் உங்களையும் சந்திக்க வேண்டும் என்றார். அவரது தேசத்தில் இருந்து வரவைக்கப்பட்ட ஏதோ பிட்டி கரீமைக் கொடுக்க வேண்டுமாம்’’ என்றான் நல்லான்.

அடுத்த நொடி கிளியோமித்ரா முகம் மலர்ந்தது. ‘’நல்லா… அது பிட்டி கரீம் அல்ல… பியூட்டி க்ரீம். அதாவது அழகு சாதன ஒப்பனைப் பொருள். இதோ இரண்டு நொடிகளில் வருகிறேன் என்று சொல்’’ என்றார்.

‘’ஆகட்டும் அரசியாரே’’ என்றபடி திரும்பிச் சென்றான் நல்லான்.

சிங்கமுகன் பக்கம் திரும்பிய கிளியோமித்ரா, ‘’சரி… சரி… நடந்ததை தீய கனவாக நினைத்து மறந்துவிட்டு சீக்கிரம் தயாராகி வாருங்கள். நான் மிஸ்டர் கிங்விங்சன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சென்றார்.

‘’பார்த்தீர்களா வைத்தியரே… ஒப்பனைப் பொருள் வந்துள்ளது என்று சொன்னதும் உடல்நிலை சரியில்லாத என்னையே மறந்துவிட்டுச் செல்கிறாள்’’ என்று நொந்தபடி சொன்னார் சிங்கமுகன்.

*******

‘’சுரங்கத் திருடர்களைப் பிடிப்பேன். மன்னர் சிங்கமுகன் சூளுரை…’’

‘தினச் சிங்கம்’ என்கிற ஓலை நாளிதழை சத்தமாகப் படித்தாள் நட்சத்திரா. 

‘’ஓஹோ… அவரது சூளுரைதான் நள்ளிரவில் நன்றாகத் தெரிந்ததே’’ என்று கேலியாகச் சொன்னான் உத்தமன்.

இடம்… உத்தமன் வீட்டின் ஒரு பகுதியான, ‘உரைகல்’ அலுவலகம். அடுத்த வாரம் வெளியிட வேண்டிய உரைகல் ஓலைப் பத்திரிகையின் ஒரு பிரதியை எழுதிக்கொண்டிருந்தான் உத்தமன். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த குழலன், உத்தமன் எழுதித் தருவதை இன்னொரு பிரதி எழுதிக் கொண்டிருந்தான்.

நட்சத்திரா சூர்யனின் தங்கை. இருவரின் வீடுகளும் அருகருகில்தான் என்பதால் நட்சத்திரா அடிக்கடி இங்கே வருவாள். உத்தமனின் பத்திரிகைப் பணியில் தானும் உதவி செய்து பிரதி எழுதித் தருவாள்.

அவள் கையில் இருக்கும், ‘தினச் சிங்கம்’ என்பது தினமும் வெளியாகும் ஓலைப் பத்திரிகை. அரசரின் சிறப்பு, அரசு நிகழ்ச்சிகள் என்று முழுக்க முழுக்க அரசு பெருமை பேசுவதாகவே இருக்கும் நாளிதழ்.

‘’ம்… என் அண்ணனின் பெருமையையும்தான் ஊரே பேசுகிறது. நேற்று அவர் மட்டும் இல்லாவிட்டால் அரசரின் நிலை என்ன ஆகியிருக்கும்? இந்தச் செய்தியை வரும் வார உரைகல்லில் எழுதுவீர்கள்தானே?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.

‘’மாட்டேன்’’ என்றான் உத்தமன்.

‘’ஏன்? அரசரைக் காப்பாற்றியது எவ்வளவு பெரிய விஷயம்..?’’

‘’அரசரின் மெய்க்காப்பாளன் அரசரைக் காப்பாற்றியது அவனது கடமை. ஒருவன் கடமையைச் செய்தது பற்றி புகழ்ந்து எழுத என்ன இருக்கிறது?’’ என்றான் உத்தமன்.

‘’க்கும்….’’ என்ற நட்சத்திரா வாயைக் கோணிக் காட்டினாள். ‘’அதானே பார்த்தேன்… உங்கள் உரைகல் நல்லதை எல்லாம் எழுதாதே… எப்போதும் இது சரியில்லை அது சரியில்லை என்று குறைகளை மட்டும்தானே எழுதும்’’ என்றாள்.

‘’உன் அண்ணன் அரசரை மட்டும் காப்பாற்றிக்கொண்டு இருக்காமல் ஊரை என்றாவது காப்பாற்றட்டும். அப்போது தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கிறேன். சரி, எங்கே அவன்?’’ என்று கேட்டான் உத்தமன்.

‘’இன்னும் அரண்மனையில் இருந்து வரவில்லை’’ என்றாள் நட்சத்திரா.

‘’ஏன்… உங்கள் மாவீரர் சிங்கமுகனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லையா?’’ என்று சிரித்தான் உத்தமன்.

‘’அண்ணா… மயக்கப் புகையால் ஏற்பட்ட மயக்கம் எப்போதோ தெளிந்துவிட்டு இருக்கும். பயத்தால் ஏற்பட்ட மயக்கம் இன்னும் தெளியாமல் இருக்கும்’’ எண்று சிரித்தான் குழலன்.

சட்டென நகர்ந்து வந்து அவன் தலையில், ‘தினச் சிங்க’த்தால் ஒன்று போட்ட நட்சத்திரா, ‘’பொடிப் பயலே… நீயெல்லாம் அரசரைக் கேலி செய்கிறாயா?’’ என்றாள்.

‘’பொடியன் எல்லாம் கேலி செய்யும் லட்சணத்தில் அரசரும் ஆட்சியும் இருக்கிறது’’ என்றான் உத்தமன்.

‘’எல்லாம் உங்களால்தான்… அரசரின் பெயரை அப்படி கெடுத்து வைத்திருக்கிறீர்கள். அரசரை என்னமோ சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், என் அண்ணன் பற்றி ஏதேனும் கேலி செய்தால்…’’

‘’என்ன செய்வாய்?’’ என்று கேட்டான் உத்தமன்.

நட்சத்திரா சட்டென அங்கிருந்த சிலம்புக் கம்பை எடுத்து, ‘விர் விர்’ எனச் சுழற்றி, அதன் முனையை உத்தமனின் முகத்தருகே கொண்டுவந்து நிறுத்தினாள்.

‘’மூக்கைப் பெயர்த்துவிடுவேன்’’

‘’செய்வாய்… செய்வாய்… சிலம்பு செல்வியே… ஆனால், என் எழுத்தாணி செய்வதைக் கூட உன் அண்ணனின் வாள் செய்வதில்லை’’ என்று சீண்டினான் உத்தமன்.

‘’மறுபடியும் மறுபடியும் அண்ணனைப் பற்றிப் பேசுகிறாய். முதலில் என்னோடு மோது. அப்புறம் அண்ணன் வாளோடு மோதுவாய்’’ என்றாள் நட்சத்திரா.

சட்டென அவளைப் பிடித்து இழுத்த உத்தமன், ‘’உன் வாள் வீச்சைவிட விழிவீச்சில் நான் நிச்சயம் தோற்றுவிடுவேன்’’ என்றான்.

‘’க்கும்…க்கும்… இங்கே ஒரு சிறுவன் இருக்கிறேன்’’ என்றான் குழலன்.

‘’இன்னுமா இருக்கிறாய்? கிளம்படா பொடியா’’ என்றாள் நட்சத்திரா.

எழுந்துகொண்ட குழலன், ‘’நான் போகிறேன். வருபவரை சமாளியுங்கள்’’ என்றான்.

வாசலில் தனது புரவியை நிறுத்திவிட்டு இறங்கிய சூர்யன் உள்ளே வந்தான்.

‘’அ… அண்ணா… இவர் உன்னைக் கேலி செய்கிறார்’’ என்றாள் நட்சத்திரா.

‘’ஆஹா… அண்ணனைக் கேலி செய்ததும் நீ சண்டை போட்ட லட்சணத்தை சற்றுத் தொலைவிலேயே பார்த்தேனே…’’ என்ற சூர்யன், அவள் காதைப் பிடித்து செல்லமாகத் திருகினான்.

‘’ஆ… விடு அண்ணா… நான்… நான்… இங்கே உரைகல் பிரதி எடுக்கும் உதவிக்கு வந்தேன்’’ என்றாள் நட்சத்திரா.

‘’உன் நடிப்பைப் பிறகு வைத்துக்கொள். என் நண்பனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். வெளியே போ’’ என்றான் சூர்யன்.

அவன் குரலில் சட்டென வந்துவிட்ட தீவிரத்தைப் பார்த்த நட்சத்திரா, ‘’சரி… சரி… காலை உணவைத் தயாரித்து வைக்கிறேன். இருவரும் சீக்கிரம் வாருங்கள்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

‘’நானும் பாடசாலைக்குச் செல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் செல்லும் குழலனையே பார்த்தான் சூர்யன்.

‘’என்னடா… அவனை முறைத்துக் கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டான் உத்தமன்.

அவன் பக்கம் திரும்பிய சூர்யன், ‘’நேற்று மாலை இந்தப் பொடியன் உன்னிடம் வந்து ஏதோ சொன்னானே… என்ன அது?’’ என்று கேட்டான்.

‘’அது உனக்கு எதற்கு?’’ என்று கேட்டான் உத்தமன்.

‘’ஏன்… என்னிடம் சொல்லக் கூடாத அளவுக்கு ரகசியமா?’’ என்று உத்தமனின் கண்களை ஊடுருவினான் சூர்யன்.

மெல்லப் புன்னகைத்த உத்தமன், ‘’சரி சொல்கிறேன். அவனது கரிக்கோல் தீர்ந்துவிட்டதாம். வாங்கித் தரமுடியுமா என்று கேட்டான்’’ என்றான்.

‘’கிண்டலா? நேற்று நள்ளிரவு நடந்த விஷயம் முழுமையாகத் தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’முழுமையாக என்றால் என்ன? புரியவில்லை’’

‘’மயக்கப் புகை குண்டுகளை வீசிய மர்ம ஆசாமி… அவன் யாரென்று உனக்கு தெரியுமா?’’

‘’சம்பவ இடத்தில் இருந்த உனக்கே அவனைத் தெரியாதபோது எனக்கு எப்படித் தெரியும் நண்பா?’’ என்று புன்னகைத்தான் உத்தமன்.

நண்பனின் கண்களையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்த சூர்யன், ‘’அப்படியா? சரி… விரைவில் அவனைப் பிடிக்கிறேன்’’ என்றான்.

‘’வாழ்த்துகள்… சுரங்கக் கொள்ளையர்களைத்தான் பிடிக்க முடியவில்லை. அவனையாவது பிடியுங்கள். சரி… வந்ததுதான் வந்தாய். உன் தங்கையின் காலை உணவு தயாராகும் வரை அடுத்த வார உரைகல் இதழுக்குப் பிரதி எடுக்க உதவி செய்’’ என்று புன்னகையுடன் ஓர் ஓலையையும் எழுத்தாணியையும் நீட்டினான் உத்தமன்.

********

iamraj77@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button