இணைய இதழ் 104சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்;14 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

14. பிறந்தநாள் விழா

கோட்டை மைதானம் பொதுமக்கள் தலைகளால் நிறைந்திருந்தது. மையமாக இருந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் மையமாக தேர் போன்ற வடிவமைப்பில் ஒரு நாற்காலி இருந்தது.

ஆங்காங்கே இருந்த சிறு சிறு மேடைகளில் வாத்தியக் கலைஞர்கள், நாட்டிய மங்கைகள் தங்கள் நிகழ்ச்சியை நடத்திய வண்ணம் இருந்தார்கள்.

திடீரென அனைத்தும் நிறுத்தப்பட்டு முரசு கொட்டியது. தொடர்ந்து நல்லானின் கட்டிய முழக்கம் எழுந்தது…

‘’ராஜாதி ராஜ… ராஜ கம்பீர… ராஜ குல தில… மக்களின் மன்னர் சிங்கமுகன் அவர்களின் மாசற்ற மகராசி… கருணையின் வடிவு… அன்பின் ஊற்று… அழகில் அயல்தேச ராணிகளே தோற்கும் அற்புத நங்கை… மகாராணி மித்ரா தேவி என்கிற கிளியோமித்ரா வருகிறார்… வருகிறார்… வருகிறார்…’’

எல்லோரும் ஆர்ப்பரிப்புடன் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள். அனைவரின் கண்களில் வியப்பு குடியேறியது. ‘வழக்கமாக அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையில் வருகிற அரசியார் இப்போது ஒரு குதிரை மீது வருகிறாரே? அதைவிட வியப்பு… அரசர் அந்தக் குதிரையின் அருகே நடந்து வருகிறாரே…?’ என்று பார்த்தார்கள்.

கிளியோமித்ரா அப்படி கம்பீரமாக வருவது சூர்யனின் செல்லக் குதிரையான சூறாவளி மீதுதான். சிங்கமுகன் அதனை ஒட்டி அருகில் வந்தார். அவ்வப்போது நிமிர்ந்து தன் அரசியைப் பெருமிதமாகப் பார்த்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து கம்பீரன், நிலாமதிசந்திரன் மற்றும் கிங்விங்சன் வந்தார்கள்.

மேடையை நெருங்கியதும் சிங்கமுகன் கை நீட்ட… கிளியோமித்ரா புன்னகையுடன் அதைப் பற்றிக்கொண்டு கீழே இறங்கினார். பின்னர் இருவரும் மேடையில் ஏற… மக்கள் ஆர்ப்பரித்தனர்.

‘’மகாராணி கிளியோமித்ரா….’’

‘’நீடூழி வாழ்க… நோய் நொடியின்றி வாழ்க’’

‘’மாமன்னர் சிங்கமுகன்…’’

‘’நெடுங்காலம் வாழ்க… நலமுடன் வாழ்க’’

கிளியோமித்ரா அனைவரையும் பார்த்து மலர்ச்சியுடன் கையசைத்தார். சிங்கமுகன் கையை உயர்த்த கூட்டம் அமைதியானது.

‘’என்னருமை அரிமாபுரி மக்களே… இன்று காலையும் இதே வளாகத்துக்குள் முழக்கங்கள் எழுந்தன. ஆனால், அது உரிமை முழக்கம். அந்த முழக்கத்தில் என் அருமை இதய அரசியும் ஒருவளாக இருந்தாள். இப்போது ஒலிப்பது அன்பின் முழக்கம். அந்த உரிமையின் முழக்கம் வென்றதால் வருகிற அன்பின் முழக்கமாகவே இதைப் பார்க்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

எல்லோரும் கைகளைத் தட்டினார்கள்.

‘’அந்தக் காலை முழக்கம் எனக்குள் நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. அதுதான் இப்போது புரவியில் வந்து இறங்கியது. ஆம்… வழக்கமாக பட்டத்து யானையில் பூ போல ராணியை அழைத்து வருவேன். பெண் என்பவள் பூ போன்ற மென்மையானவள்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அது பெண்ணின் மனம். அதேநேரம்… புயல் போன்ற ஆற்றலும் அவளுக்குள் இருக்கிறது. அதனால்தான் குதிரையில் கம்பீரமாக… வீரமாக அழைத்து வந்தேன்’’ என்றார்.

கூட்டம் இன்னும் உற்சாகமாக ஆர்ப்பரித்தது.

‘’அமைதி… அமைதி… இப்போது உங்களுக்கு ஒரு ரகசியமும் சொல்கிறேன். என் அருமை அரசியைப் பற்றி நான் ஒரு கவிதை வாசிக்கப் போகிறேன். அதிலும் முதலில் ஒரு கவிதை எழுதினேன். எல்லா ஆண்களைப் போல மானே தேனே மயிலே குயிலே என்று வர்ணித்து எழுதியிருந்தேன்’’ என்றார்.

கூட்டம் சிரித்தது. கிளியோமித்ரா வெட்கத்துடன் ஏறிட்டார்.

‘’ஆனால்… பெண் என்றால் உடல் அழகை வர்ணிப்பது மட்டுமல்ல என்பதையும் இன்று புரிந்துகொண்டு புதிதாக வேறு எழுதியிருக்கிறேன். அதை வாசிக்கப் போகிறேன். ஆனால், கவிதை சுமாராகத்தான் இருக்கும். இங்கே பெரும் புலவர்களும் இருந்தால் பொறுத்தருளுங்கள்’’ என்றார்.

கூட்டம் பெரும் சிரிப்புடன் கைகளைத் தட்டியது.

‘’க்கூம்.. க்கூம்…’’ என்று தொண்டையைச் செருமிக்கொண்டு அந்தப் பட்டுத்துணியை விரித்தார்.

கூட்டம் பெரும் அமைதிக்குச் சென்று கவனித்தது.

‘’அன்று நான் ஓர் இளங்காளை

அந்த நாளும் ஓர் இளம்காலை

சென்றிருந்தேன் ஓர் தேசத்துக்கு

வென்று வர ஓர் இதயத்தை

ஆம்… பெண் பார்க்கும் படலம் அது

நந்தவனம் ஒட்டிய அறை அது

நானிருந்தேன் அங்கே அமர்ந்து

அலங்கார ஓவியம் வருமென்று

அறை வாசலில் விழி இருந்தது

ஆம்… கிளியோமித்ராவுக்காக காத்திருந்தேன்’’

இப்படிச் சொன்னவாறு முகம் திருப்பி கிளியோமித்ராவைப் பார்த்தார் சிங்கமுகன். அவர் சிரிப்புடன் கையில் வைத்திருந்த பூச்செண்டால் செல்லமாக அடித்தார். கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது.

சிங்கமுகன் தொடர்ந்தார்…

‘’கொடியநேரம் ஓடிக்கொண்டே இருந்தது

கொலுசொலி ஏதும் கேட்டபாடில்லை

அலுப்புடன் பார்வையைத் திருப்பினேன்

அறை சாளரம் வழியே வெளியே வீசினேன்

ஆம்… அங்கே ஒரு நங்கையைக் கண்டேன்

அல்ல அல்ல வாள் வீசும் சிங்கத்தைக் கண்டேன்

மெல்ல எழுந்து நெருங்கிப் பார்த்தேன்

வீரமங்கையின் வாள் சுழற்சியில் வியந்தேன்

பயிற்சி முடிந்தே அவள் அகன்றாள்

அப்புறம்தான் அலங்கரித்து வந்தாள்

அந்த நாளை பிறகு எப்படி மறந்தேன்?

அவள் கையிலிருந்த வாளை ஏன் பறித்தேன்?

அதற்காக இன்று வருந்துகிறேன்

அவள் கையில் வாளை மீண்டும் தருகிறேன்’’

இப்படிச் சொல்லி தனது உடைவாளை எடுத்த சிங்கமுகன், மண்டியிட்டு கிளியோமித்ராவை நோக்கி நீட்டினார்.

கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் விண்ணைத் தொட்டது.

கிளியோமித்ரா முகமெல்லாம் மலர அதைப் பெற்றுக்கொண்டு சிங்கமுகனுக்கு கைகொடுத்து எழுப்பினார்.

‘’இங்குள்ள ஆண்கள் எல்லோருக்கும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் மனைவி, தாய், தமக்கை கைகளிலும் வாளைக் கொடுங்கள். அவளை மயிலாக குயிலாகப் பார்த்து ரசியுங்கள். அதே சமயம் வீரமாகவும் வளர்த்தெடுங்கள். இதுதான் இன்று நான் என் அரசிக்குக் கொடுக்கும் பொர்த்டே கிஃப்ட்… அதாவது, பிறந்தநாள் பரிசு… வணக்கம்’’ என்று கூட்டத்தை நோக்கி வணங்கினார்.

கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது.

பின்னர் கிங்விங்சன், நிலாமதி சந்திரன், கம்பீரன் என ஒவ்வொருவராக மேடையில் ஏறி அரசிக்குப் பரிசு அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து பிரபுக்கள், உயர் அதிகாரிகள் அளித்தார்கள்.

கூட்டத்தின் முன்னிலையில் நின்றிருந்த நட்சத்திரா தன் அருகே இருந்த உத்தமனைப் பார்த்தாள்.

‘’என்ன உத்தமரே… இதுவாவது உரைக்கல்லில் வருமா?’’ என்று கேட்டாள்.

உத்தமன் புன்னகைத்தான்… ‘’நிச்சயம் வரும்… ஒரு நாட்டின் தலைவன் பெண்ணை மதிக்க ஆரம்பித்தால் பிரஜைகளும் மதிக்க ஆரம்பிப்பார்கள். அரசர் இப்போதுதான் ஒரு நாட்டுத் தலைவனுக்கான தகுதியில் முதல் படியில் கால் வைக்கிறார்’’ என்றபடி கைதட்டினான்.

‘’அடேங்கப்பா… உங்கள் வாயிலிருந்து பாராட்டுரை… இனி நிச்சயம் நாடு நல்ல நிலைக்குச் செல்லும்’’ என்றாள் நட்சத்திரா.

ஒரு பக்கமாக நின்றிருந்த சூறாவளி, ‘’ஙஙங்ஙஙி’’ என்று மெல்ல கனைத்தது.

அதன் காலருகே இருந்த வெற்றி தலையை உயர்த்தி, ‘ஆங்… என்னப்பா சொன்னே? மக்கள் ஆர்ப்பாட்டத்தில் சரியா கேட்கலை’ என்றது.

‘வெட்கப்படறேன் வெற்றி!’

‘எதுக்கு?’

‘நானும் பெண்களைப் பற்றி கொஞ்சம் குறைவாகவே நினைப்பேன். நட்சத்திரா என் மேலே ஏற வரும்போதெல்லாம் வம்பு பண்ணுவேன். பெண்ணைச் சுமப்பதானு மனசுல ஒரு இது இருந்துச்சு. இப்போ கன்னத்துல அறைந்த மாதிரி இருக்கு.’

‘சரி சரி அதான் இப்போ புரிஞ்சுக்கிட்டியே விடு. ரொம்ப ஃபீல் பண்ணாதே’ என்றது வெற்றி.

‘என்னது?’ என்று சட்டென குனிந்து பார்த்தது சூறாவளி.

‘ஃபீல்… ஃபீல்… இது ஆங்கில வார்த்தைப்பா… அந்த வெள்ளைக்காரர் அரசருக்குக் கற்றுத் தரும்போது நானும் ஒட்டுக் கேட்க ஆர்ம்பிச்சுட்டேன்’ என்றது வெற்றி.

பரிசளிப்பு… பாராட்டு கவிதைகள், நடனங்கள், கிளியோமித்ராவின் நன்றியுரை என வரிசையாக முடிந்தது.

‘’மக்களே… விருந்து தயாராக உள்ளது. அனைவரும் தவறாமல் உணவருந்திவிட்டுச் செலுங்கங்கள்’’ என்று இறுதியாக முடித்தார் சிங்கமுகன்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக களைந்தது. கம்பீரன் நெருங்கி வந்தான்… ‘’அரசே… மகாராணி… நமக்கான விருந்தும் தயாராகிவிட்டது. போகலாமா?’’ என்றான் பணிவுடன்.

‘’இன்று என் மனம் நிறைந்துள்ளது கம்பீரா… உணவு ஒரு வாய் இறங்குமா என்று தெரியவில்லை’’ என்று மகிழ்வுடன் சொன்னார் கிளியோமித்ரா.

‘’ஆஹா… இப்படிச் சொன்னால் எப்படி? நானே உனக்கு ஊட்டிவிட வேண்டும் என்றல்லவா காத்திருக்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

சிரித்த அரசி, ‘’சரி… உங்களுக்காக வருகிறேன்’’ என்றார்.

‘’விருந்து பகுதி மேற்பார்வை பொறுப்பை நம் செவ்வந்தியிடம்தான் ஒப்படைத்து இருக்கிறேன் மகாராணி… உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பது எல்லோரையும் விட அவளுக்குத்தானே தெரியும்?’’ என்று அர்த்தம் பொதியச் சொன்னான் கம்பீரன்.

‘’அப்படியா…? மகிழ்ச்சி…’’ என்றபடி மேடையை விட்டு இறங்கினார் கிளியோமித்ரா.

நட்சத்திராவையும் குழலனையும் பார்த்து கையசைத்து அருகில் அழைத்தார். அவர்கள் நெருங்கி வணங்கினார்கள்.

‘’நீங்களும் என்னுடன் வந்து விருந்தில் பங்கேற்க வேண்டும்.’’

‘’ஆகட்டும் மகாராணி’’ என்றாள் நட்சத்திரா.

‘’எங்கே உன் அன்புக்குரிய உத்தமன்… என் அன்புக்குரியவரின் எதிரி?’’ என்று சிரிப்புடன் கேட்டார் கிளியோமித்ரா.

புன்னகைத்த நட்சத்திரா, ‘’அவர் யாருக்கும் எதிரி அல்ல அரசியாரே… அவரும் யாரையும் எதிரியாக நினைப்பவரல்ல. சற்று முன்பு நம் அரசரை மனம் திறந்து பாராட்டினார்’’ என்றாள்.

‘’அப்படியா..? மழைதான் வரப்போகிறது’’ என்றார் சிங்கமுகன்.

‘’சரி எங்கே அவர்? நம்மோடு விருந்து சாப்பிட அழை!’’

‘’ஏதோ அவசர வேலை என்று கிளம்பிவிட்டார்’’ என்றாள் நட்சத்திரா.

அவர்கள் பேசிக்கொண்டே அருகே இருக்கும் கூடம் ஒன்றுக்கு வந்தார்கள்.

அந்தக் கூடத்தில் ஒரு பக்கம் விதவிதமான உணவு வகைகள் தயாராக இருந்தன. பிரபுக்கள், உயர் அதிகாரிகள் காத்திருந்தனர்.

செவ்வந்தி புன்னகையுடன் வணங்கி, ‘’வாள் மங்கை கிளியோமித்ராவுக்கு வணக்கங்கள்’’ என்றாள்.

‘’அடியே செவ்வந்தி… நீயும் கேலி செய்ய ஆரம்பித்து விட்டாயா? இவர் எழுதிய முதல் கவிதையைப் படித்துவிட்டு இதெல்லாம் ஒரு கவிதையா என்று முகத்தில் எறியாத குறையாக நிராகரித்தாயாமே’’ என்றார் கிளியோமித்ரா.

‘’அப்படிச் செய்தால்தானே இன்று அற்புதமான வேறு கவிதை கிடைத்தது அரசியாரே’’ என்றாள் செவ்வந்தி.

‘’அப்படியா…? செவ்வந்தி… கவிதையை நீயும் கேட்டாயா?’’ என்று ஆவலுடன் கேட்டார் சிங்கமுகன்.

‘’என் வேலை இங்கே இருந்தாலும் செவிகள் வெளியேதான் இருந்தன அரசரே’’ என்றாள் செவ்வந்தி.

‘’உண்மையிலே கவிதை நன்றாக இருந்ததா?’’

‘’அற்புதமாக இருந்தது அரசே…’’ என்றாள் செவ்வந்தி.

‘’சரி… சரி… பேச்சு அப்புறம்… ராணியார் களைத்திருக்கிறார். விருந்து தயார்தானே?’’ என்று கேட்டார் நிலாமதிசந்திரன்.

‘’தயாராகவே இருக்கிறது மந்திரியாரே… ராணிக்கு மிகவும் பிடித்த பாயாசம் ஒன்றை என் கையாலே தயாரித்துள்ளேன்’’ என்றாள் செவ்வந்தி.

‘’அதை உன் கையாலே அரசிக்கு முதலில் கொடு’’ என்றான் கம்பீரன்.

செவ்வந்தி ஒரு கோப்பையில் பாயாசத்தைக் கொண்டுவந்து பணிவுடன் நீட்டினாள். கிளியோமித்ரா புன்னகையுடன் பெற்றுக்கொண்டார்.

‘’மற்றவர்களும் சாப்பிட அமருங்கள். நட்சத்திரா, குழலா நீங்களும் சென்று அமருங்கள்’’ என்றார் சிங்கமுகன்.

அதற்கு குழலன் தயக்கத்துடன், ‘’அரசே… நீங்கள் அழைத்தீர்களே என்கிற மரியாதைக்காகத்தான் வந்தேன். எனக்கு பாயாசம் மட்டும் போதும். மற்றவை வேண்டாம்’’ என்றான்.

‘’ஏன் குழலா?’’ என்று கேட்டவாறு பாயாசத்தை உதட்டருகே கொண்டுசென்றார் கிளியோமித்ரா.

‘’நான் மக்களுடன் மக்களாகச் சென்று சாப்பிடுகிறேன்’’ என்றான் குழலன்.

‘’இன்று ஒருநாள் எங்களுடன் சாப்பிடக் கூடாதா?’’ என்றார் சிங்கமுகன்.

‘’சொன்னால் கோபிக்காதீர்கள் அரசே… மக்களுக்கு ஒரு வகை உணவு, உங்களுக்கு ஒரு வகை உணவு என்கிற இந்தப் பிரிவுமுறையே எனக்குப் பிடிக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி அத்தனை கூட்டத்துக்கு மத்தியில் அரசியிடம் மண்டியிட்டு உங்கள் வாளை அளித்தீர்கள். ஆணும் பெண்ணும் சமம் என்றால் மன்னனும் மக்களும் சமம்தானே?’’ என்று கேட்டான் குழலன்.

‘’மடப்பயலே… என்ன பேசுகிறாய்? மாமன்னரும் மக்களும் ஒன்றா?’’ என்று கோபமாகக் குறுக்கிட்டான் கம்பீரன்.

‘’இதற்குத்தான் தகுதி அற்றவர்களை எல்லாம் உள்ளே விடக்கூடாது என்பது. ஐயோ பாவம் என்று தோளில் ஏந்தினால் தலைக்கு மேல் தாவுமாம் மந்தி’’ என்றார் நிலாமதிசந்திரன்.

இருவரையும் கையமர்த்திய சிங்கமுகன்… ‘’நீங்கள் வாயை மூடுங்கள். குழலா… நீ என்ன சொல்ல வருகிறாய்?’’ என்று கேட்டார்.

‘’அரசே… எல்லா நாட்களிலும் மக்களும் மன்னனும் ஒன்றாக ஒரே வகையான உணவைச் சாப்பிடுவது சாத்தியம் இல்லைதான். ஆனால், இதுபோன்ற சிறப்பு நாட்களிலாவது மக்களுடன் கலந்து அவர்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிடலாமே? அவர்களுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சொன்னது தவறு என்றால் மன்னியுங்கள்’’ என்றான் குழலன்.

‘’சபாஷ் குழலா… சரியாகவே சொன்னாய்? அன்பே வாருங்கள்… நாம் மக்களுடன் சேர்ந்து உணவருந்துவோம்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’அ… அரசியாரே… இவன்தான் விஷயம் புரியாமல் பிதற்றுகிறான் என்றால்…’’ என்று அவசரமாக குறுக்கிட்டான் கம்பீரன்.

‘’நல்ல விஷயம்தானே தளபதி… எதற்கு இவ்வளவு பதறுகிறீர்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அதற்கில்லை மன்னா… ஏற்கனவே உங்களுக்கு எதிரிகளால் ஆபத்து நடக்க இருந்தது. இப்போது இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில்…’’

‘’பாதுகாப்பிற்குத்தான் நீங்களும் சூர்யனும் இருக்கிறீர்களே…’’

‘’அ… அது… வந்து…’’ என்று கம்பீரன் தயங்க…

‘’ஆம் மன்னா… உங்கள் மற்றும் அரசி உயிருக்கு நான் பொறுப்பு. வாருங்கள் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றான் சூர்யன்.

‘’சரி… இந்தப் பாயாசத்தையாவது அனைவரும் இங்கேயே சாப்பிட்டுச் செல்லுங்கள். மற்றவறை அங்கேயே அனுப்பிவைக்கிறேன். அனைவரும் பகிர்ந்து சாப்பிடுங்கள்’’ என்றாள் செவ்வந்தி.

‘’இது பேச்சு… நம் உணவை அவர்களும் அவர்களுக்கான உணவை நாமும் பகிர்ந்து சாப்பிடுவோம்’’ என்றபடி பாயாசத்தை சில மிடறுகள் விழுங்கினார் கிளியோமித்ரா.

மற்றவர்களுக்கும் பணியாளர்களால் பாயாசகக் கோப்பைகள் அளிக்கப்பட்டது. தன் திட்டம் தோற்றுவிடுமோ என்று தவித்துப்போன கம்பீரன் சுதாரித்தான். அவசர அவசரமாக நிறைவேற்ற முடிவெடுத்தான்.

பாயாசக் கோப்பையை முகத்தருகே கொண்டு சென்றவன் சட்டென பதற்றமாகி… ‘’அ… அரசியாரே…’’ என்று ஆரம்பிக்க…

‘’ஸ்டாப்… ஸ்டாப்… ராணி ஸ்டாப்… குடிக்காதீர்கள்… குடிக்காதீர்கள்’’ என்று வேகமாகக் குரல் கொடுத்தவாறு கிங்விங்சன் ராணியை நெருங்கினான்.

‘’என்ன… என்ன ஆயிற்று?’’ என்று குழம்பினார் சிங்கமுகன்.

‘’இதில் ஏதோ வித்யாசமான ஸ்மல்… மீன்… வாசனை வருகிறது. பாய்சன்… பாய்சன்… விஷம் இருக்கலாமென நினைக்கிறேன்’’ என்றான் கிங்விங்சன்.

அனைவரும் அதிர்ந்தார்கள். அதே நேரம் கம்பீரன் மனதுக்குள், ‘என்ன இவன்? நான் பேசவேண்டிய வசனத்தை என்னை முந்திக்கொண்டு பேசுகிறான்? விஷம் விவகாரம் இவனுக்கு எப்படி தெரிந்தது?’ என்று திகைத்தான்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button