இணைய இதழ் 107சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

17. நிலவறை விடியல்

‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’

சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது.

பல இடங்களில் சுற்றித் சுற்றித் தேடிய களைப்பு இருவரின் உடல்களில் வியர்வையாக வடிந்திருந்தது.

‘’இது அந்தச் சுரங்கக் கொள்ளையர்களின் வேலையாகவோ, வேங்கைபுரி ஒற்றர்களின் வேலையாகவோ இருக்கும். விடிந்ததும் அரசரிடம் சொல்ல வேண்டும்’’ என்றான் சூர்யன்.

‘’நான் ஒன்று சொல்லட்டுமா சூர்யா?’’ என்றான் உத்தமன்.

‘’சொல்!’’

‘’நாம் சிலர் இடங்களில் சோதனையிட வேண்டும்.’’

‘’யாருடைய இடங்களில்?’’

‘’மந்திரி மற்றும் தளபதி மாளிகைகளில்!’’

சூர்யன் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். ‘’அதற்கு அரசரின் அனுமதி பெற வேண்டும். ஆதாரமின்றி எந்த அடிப்படையில் அனுமதி கேட்பாய்?’’ என்றான் சூர்யன்.

‘’அரசரிடம் அனுமதி கேட்பது அந்த இருவருக்கே ஓலை அனுப்பிவிட்டு செல்வது போன்றது’’ என்றான் உத்தமன்.

‘’எனில், அதிரடியாகப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிறாயா? மடத்தனமாகப் பேசாதே… ஒரு சாதரண மெய்க்காப்பாளனும் பிரஜையும் தளபதி மற்றும் மந்திரியின் வீட்டுக்குச் சென்று சோதையிடுவதாகச் சொல்ல முடியுமா?’’

‘’சொல்லி எப்படிச் செய்யமுடியும்? விடியும் முன்பு ரகசியமாக உள்ளே சென்று பார்க்க வேண்டும்’’ என்றான் உத்தமன்.

‘’உனக்கு ஏன் அவர்கள் மீது சந்தேகம்?’’

‘’உனக்கு ஏன் என் மீது சந்தேகம் வந்தது?’’

‘’திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருக்காதே உத்தமா’’ என்று சிடுசிடுத்தான் சூர்யன்.

‘’சரி… மாற்றிக் கேட்கிறேன். உனக்கு ஏன் அவர்கள் மீதே சந்தேகமே வரவில்லை?’’ என்று புன்னகைத்தான் உத்தமன்.

‘’…..’’

‘’நட்சத்திரா மற்றும் குழலனால் இந்த இருவருக்கும் அரசரிடம் பெரும் மதிப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் அவர்கள் பொறுப்பில் இருந்த பாடசாலை விவகாரத்தில் இவர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். அவர்களின் ஊழல் விஷயம் அரசரை தவிர அனைவரும் அறிந்த ஒன்று’’ என்றான் உத்தமன்.

‘’அதற்காகப் பிள்ளையைக் கடத்திக் கொல்லும் அளவுக்குச் செல்வார்களா?’’ என்று தயங்கினான் சூர்யன்.

‘’பொன் பொருள் ஆசை எதையும் செய்யவைக்கும் நண்பா!’’

‘’என்ன செய்யலாம்?’’ என்று கேட்டான் சூர்யன்.

‘’நமக்கு அவகாசம் மிகக் குறைவாக இருக்கிறது. விடியும் முன்பு இருவர் மாளிகைக்குள்ளும் எப்படியாவது சென்று ஏதாவது தடயம் சிக்குமா என்று பார்த்துவிட்டு வர வேண்டும். பின்னர் அரசருக்குத் தெரிவிப்போம்’’ என்றான் உத்தமன்.

ஓரிரு நிமிடங்களே யோசித்த சூர்யன் எழுந்துகொண்டான். ‘’சரி… சென்று பார்த்துவிடுவோம். யார் எங்கே செல்வது?’’

‘’நீயே சொல்!’’

‘’நான் மந்திரி மாளிகைக்குள் நுழைகிறேன்’’ – சூர்யன்.

‘’சரி… தளபதி மாளிகைக்கு நான் செல்கிறேன்’’ – உத்தமன்.

‘’ஜாக்கிரதை நண்பா… எழுத்தாணியையும் ஏர்கலப்பையையும் மட்டுமே பிடிப்பவன் அல்லவா நீ?’’ என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டான் சூர்யன்.

‘’சமயங்களில் உங்கள் வாள்களைவிட எங்களைப் போன்றவர்களின் மூளைதான் வெற்றி வாகை சூடும் சூர்யா’’ என்று பதிலுக்குப் புன்னகைத்தான் உத்தமன்.

இருவரும் சூறாவளி மீது தாவி ஏறினார்கள். ‘’சூறா… மாளிகை வீதிக்கு விரைந்து போ’’ என்றான் சூர்யன்.

‘’ங்ஙீஙுஙை’’ என்றது சூறாவளி. (ரொம்ப நேரமா ரெண்டு பேரும் என் மேலே சவாரி பண்றீங்க. எல்லாம் நல்லபடியா முடிந்தால் இந்த இரட்டைச் சுமைக்கு நிறைய கொள்ளு கொடுக்கணும்பா)

‘’சரிடா… கொடுக்கிறோம் போ’’ என்றான் உத்தமன்.

******

புயல் வேகத்தில் தனது மாளிகையை நோக்கிப் புரவியைச் செலுத்திக்கொண்டிருந்தான் கம்பீரன்.

இவ்வளவு நேரம் கிங்விங்சன் மாளிகையில் பேசிக்கொண்டிருந்தது அவனுக்குள் பல அதிர்ச்சிகளை உருவாக்கி இருந்தது.

‘’கம்பீரா… உன் ஆசை என்ன? சிங்கமுகன் இடத்ல நீ அரசனாகணும் அதானே? அதுக்கு நான் உதவறேன். பதிலுக்கு நீ எங்ளுக்கு உதவணும்’’ என்றான் கிங்விங்சன்.

‘’உங்களுக்கு என்றால்..?’’ என்று புருவங்களை உயர்த்தினான் கம்பீரன்.

‘’எங்க கிழக்கிந்திய கம்பெனிக்கு… இங்கே சுரங்கத் தொழிற்சாலை அமைக்க எங்களுக்கு பர்மிஷன் தரணும். எடுக்கும் தங்கத்தில் அரிமாபுரி நாட்டுக்கு…. தட்ஸ் மீன்ஸ் அரிமாபுரி அரசானான உனக்கு இத்தனை பர்சன்டேஜ்… பங்கு கொடுத்துடறோம்’’ என்றான் கிங்விங்சன்.

 ‘’பலே ஆள்தான் நீ… எங்கள் இடத்தில் எங்கள் மன்னனை வீழ்த்த எங்களிலேயே ஒருவனான என்னை வைத்து உங்கள் காரியங்களை நிறைவேற்ற பார்க்கிறாய்?’’

கிங்விங்சன் பதில் பேசாமல் புன்னகைத்தான்.

‘’சரி… ஒரு நாட்டின் அரசனை வீழ்த்தி அரியணை ஏறுவது அத்தனை சுலபமானது என்று நினைக்கிறாயா? எங்கள் படை பலம் பற்றி தெரியுமா? இங்கே அரசர்தான் அப்பாவி கோமாளி போலிருக்கிறார். படைவீரர்கள் அல்ல. நாட்டுக்காக உயிரையே அளிப்பவர்கள். நீயோ, நானோ… அரசருக்கு எதிராக வாள் உயர்த்துகிறோம் என்று தெரிந்தால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள். அண்டை நாடான வேங்கைபுரி அரசனையும் படையையும் எத்தனை முறை புறமுதுகிட்டு ஓடும்படி செய்திருக்கிறோம் தெரியுமா?’’ என்றான் கம்பீரன்.

‘’ஹா… ஹா… எல்லா விஷயமும் என் விரல்நுனியில் இருக்கு கம்பீரா… வெறும் வாளாலோ போராலோ இதைச் செய்யப்போறதில்லே… அறிவால் செய்யப்போறோம். மக்களே அரசர் மேலே வெறுப்பு வந்து… ம்… அதென்ன… ஆங்… புரட்சி செய்வாங்க. அப்போ படைகளும் அவருக்கு எதிரா நிற்கும். அந்தப் படையை நமக்காக மாற்றி அந்தக் கோமாளியை காலி பண்றோம்’’ என்றான் கிங்விங்சன்.

‘’புரட்சியா? எதை வைத்து செய்வாய்? மக்களிடம் புரட்சி வரவேண்டுமென்றால் வறுமையோ, அரசனின் கொடூரத் துன்பங்களோ இருக்க வேண்டும். இங்கே இரண்டுமே இல்லை. பிறகு எதைச் சொல்லி புரட்சி செய்வாய்?’’

‘’சில உயிர்களை வைத்து…’’ என்று விஷமமாகப் புன்னகைத்தான் கிங்விங்சன்.

‘’உ… உயிர்களையா? எ… எந்த உயிர்களை?’’

‘’உனக்கும் பிடிக்காத உயிர்கள்தான்… குய்லன், நட்சத்திரா, அப்றோம் அந்த செவந்தி’’ என்றான்.

கம்பீரன் கண்களில் அதிர்ச்சி… ‘’எ… எப்படி?’’

‘’நாளை காலை அந்த குய்லன்… பிணமாகக் கிடைப்பான். அடுத்தடுத்து அந்தப் பெண்களும் இறப்பார்கள். பழி சுரங்கக் கொள்ளையர்கள் மேலே விழும். குய்ந்தைகளுக்கும் பெண்களுக்கும் இங்கே பாதுகாப்பில்லை. எல்லாம் இந்த அரசனின்… ம்… ஆங்… அரசனின் கையாகாலாத ஆட்சினு பரப்பறோம். மக்களிடம் வெறுப்பை உண்டாக்கறோம். கிளர்ச்சியை உருவாக்கறோம். அப்புறம் உன்னை நம்பி இருக்கிற அந்த சுகந்தன் கூட்டத்தை பிடிச்சு மக்களிடம் நீ நல்ல பெயர் வாங்கணும். அப்புறம் மக்களே உன் தலையில கிரீடம் வைப்பாங்க’’ என்றான் கிங்விங்சன்.

கம்பீரன் வியந்து போனான். ‘’இ… இதெல்லாம் நடக்குமா?’’

‘’இதற்கு வேலைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நடத்தினால் நடக்கும் கம்பீரா’’ என்று தன் தலையருகே தொட்டுக் காண்பித்துப் புன்னகைத்தான் கிங்விங்சன்.

பணியாளன் கொண்டுவந்து அளித்திருந்த மதுவை அருந்தியவாறு சற்று நேரம் யோசித்தான் கம்பீரன். பின்னர் கேட்டான்… ‘’சரி… உன் திட்டங்களுக்கு நான் ஒத்துழைக்கிறேன். ஆனால், பிறகு என்னையே ஏமாற்ற மாட்டாயே?’’

‘’இல்லை கம்பீரா… அரசருக்கு அப்புறம் படைகள் உன் பேச்சைதானே கேட்கும்? அது இல்லாம நான் என்ன செய்யமுடியும்? நீதான் அரிமாபுரி அரசன். எங்களுக்கு தங்கச் சுரங்கம் போதும்’’ என்றான் கிங்விங்சன்.

‘’சம்மதிக்கிறேன்… எனக்கு இப்போது ஓர் உண்மையைச் சொல். என் திட்டங்களை உனக்கு உளவு சொன்னவன் எவன்? என் மாளிகையில் என் அடிமையாக இருந்துகொண்டே இந்த வேலையைச் செய்தவன் எவன்?’’ என்று கோபத்துடன் கேட்டான் கம்பீரன்.

‘’சொன்னா என்ன செய்வே?’’

‘’அவன் தலையைச் சீவுவேன்!’’

கம்பீரன் சிரித்தான்… ‘’உனக்கு அந்த சிரமம் வேணாம் கம்பீரா… ராணியின் பாயசத்தில் பாய்சன் கலக்க நீ யூஸ் பண்ணின அதே முத்ரசன்தான் எனக்கும் ஸ்பை… உளவாளி. தங்கச் சுரங்கத்தில் ஒன்றைக் கொடுக்கிறேனு ஆசை காண்பிச்சு உளவு சொல்ல வெச்ச அவனை இனி தேவைப்பட மாட்டான்னு நானே முடிச்சுட்டேன். தலையில்லாம உன் மாளிகையில இருப்பான். போய்ப் பாரு’’ என்றான்.

கம்பீரன் அதிர்ந்தான். ‘’எ… என் மாளிகையிலா? எ.. எங்கே?’’

‘’வேற எங்கே? சுகந்தனும் அவன் கொடுக்கும் தங்கக் கட்டிகளும் எந்த வழியா வருமோ அதே அன்டர்கிரவுண்டில்… மீன்…’’

‘’என் நிலவறையிலா?’’

‘’ஆமா… போய்ப் பாரு’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.

அங்கே புறப்பட்டவன்தான் கம்பீரன்… புயலாகப் புரவியை விரட்டிக்கொண்டிருக்கிறான். அதைவிட அவன் மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

‘என் மாளிகையில் இருந்து ஒருவனை உளவாளியாக மாற்றி காரியம் முடிந்ததுமே என் இடத்திலேயே அவனைக் கொன்று போட்டிருக்கிறான் என்றால் இவன் சாதாரண ஆளே இல்லை. இவனோ இவன் கூட்டமோ வணிகம் மட்டும் செய்ய வந்திருப்பர்களில்லை. இப்படி ஒரு மூளைக்காரன் துணை இருந்தால் நிச்சயம் அரிமாபுரி அரியணையைப் பிடித்துவிடலாம். அதேநேரம் இவனிடம் நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உளவாளியைக் கொன்றது போல நாளை காரியம் முடிந்து என்னையே கொன்றாலும் கொன்றுவிடுவான். என்ன செய்யலாம்?’

‘முதலில் இவன் வழியில் போவோம். அரியணையைப் பிடித்த அடுத்த கணம் இவனையும் சிறையில் அடைத்து இவனுக்கும் சுரங்கக் கொள்ளையர்களுக்குமே தொடர்பு என்று நம்பவைத்து தலையச் சீவி விடுவோம். இப்போது முதல் வேலையாக அந்த நிலவறைப் பிணத்தை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து!’

இப்படி நினைத்தவாறு வேகவேகமாகப் புரவியைச் செலுத்தினான் கம்பீரன்.

******

கண்களைத் திறந்தான் குழலன்.

சில நிமிடங்களிலேயே தன் நிலையையும் அந்தச் சூழலையும் அவனது மூளை உணர்த்திவிட்டது.

இரண்டு கைகள் இரண்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடக்கிறோம் என்பது புரிந்தது. உடலில் பரவும் வெக்கை, குறைவானக் காற்றைக்கொண்டு தான் இருப்பது ஒரு நிலவறை என்பதை உணரமுடிந்தது. கண்கள் அந்த இருட்டுக்குப் பழக இன்னும் சில நிமிடங்கள் தேவைப்படும். சிந்தனை நன்றாக விழித்துக்கொண்டது.

‘வீட்டுக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டு கீழே விழுந்தோம். நிமிர்வதற்கு அவகாசமே இல்லாமல் முதுகு மீது அமர்ந்த உருவம் தாக்கியது. இரவு என்றாலும் நல்ல நிலவொளி என்பதால் அந்த உருவத்தின் வெளித்தோற்றம் நன்றாகவே தெரிந்தது. கறுப்பு ஆடையில் கண்கள் மட்டும் தெரியும்படி இருந்தது…’

குழலனுக்கு உடனடியாக பாடசாலை ஆலோசனைக் குழு கூட்டத்துக்காக சென்றபோது நடந்ததும் நினைவுக்கு வந்தது.

‘ஈட்டியால் தோளில் குத்துப்பட்டு பள்ளத்தாக்கில் சரிந்தோம். அரை மயக்கம், புழுதி என்றிருந்தாலும் அங்கே என்னைத் தூக்கி சூறாவளி மீது படுக்கவைத்த அந்த உருவமும் அதன் கண்களும் மனத்தில் உள்ளது. அன்று காப்பாற்றிய கண்கள் வேறு… இன்று தாக்கிய கண்கள் வேறு…’

‘உடை மட்டும் ஒன்று எனில், காப்பாற்றிய அந்த உருவம் போல இந்த உருவம் வேடமிட்டு வரவேண்டிய அவசியம் என்ன? என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறது? என்ன செய்யப் போகிறது? இது எந்த இடம்?’

குழலனின் கண்கள் இப்போது இருட்டுக்கு ஓரளவு பழகியது. எங்கிருந்தோ வருகிற விளக்கின் மிக மெல்லிய ஒளிக்கீற்று இருட்டை ஊடுருவிக் காண்பதற்குப் போதுமானதாக இருந்தது. உடலை வளைத்துக் கால்களை நீட்டியபோது பாதங்கள் எதன் மீதோ இடறியது.

‘எ… என்ன அது?’

குழலன் மீண்டும் நீட்டிப் பார்த்தான். ‘ஏதோ உடல் மீது படுகிறது. என்னைப் போலவே வேறு யாரையோ கடத்தி வந்திருக்கிறார்களா? என்ன செய்யப் போகிறார்கள்?’

குழலன் தனது உடலை அப்படியும் இப்படியும் அசைத்து சிறிது சிறிதாக நகர்ந்து அந்த உடலை இன்னும் நெருங்கி தொட்டான்.

அதுவும் தன்னைப் போலவே தரையில் கட்டப்பட்டு இருக்கலாம். ஆனால், இன்னும் விழிக்கவில்லை போலும் என்று நினைத்தான்.

‘’யா… யார்? ஐயா… ஐயா… யார்?’’ என்று மெல்ல அழைத்துப் பார்த்தான்.

எந்தப் பதிலும் இல்லை. எந்த அசைவுமில்லை. கண்களை இன்னும் கூர்மையாக்கி மெல்லிய ஒளியில் கண்ட குழலன் அதிர்ந்துபோனான்.

அந்த உடலிலும் உடலின் அருகிலும் ரத்தமாக இருந்தது.

‘ஆ… இ… இது வெறும் உடல்… உயிரற்ற உடல்!’

அதே நேரம் தலைக்கு மேலே… நிலவறையின் மேல் பகுதியில் யாரோ நடக்கும் ஓசை கேட்டது.

குழலனுக்குள் ஒவ்வொரு செல்லும் உயிர்ப்படைந்தது.

*****

சூறாவளி சிறு மூச்சைக் கூட வெளிப்படுத்தாமல் நின்றது. உத்தமனும் சூர்யனும் கீழே இறங்கினார்கள். மாளிகை தெருவின் தொடக்கம் அது… வலது பக்கம் ஒரு பெரிய ஆலமரம் தெருவின் வாசல் தூண் போலிருந்தது. இருவரும் அங்கேதான் இறங்கினார்கள்.

மெல்ல மெல்ல பதுங்கி முன்னேறினார்கள். அங்குள்ள ஒவ்வொரு மாளிகை வாயிலும் காவலர் இருப்பர். அவர்கள் யார் கண்ணிலும் படாமல் தெருவின் மையத்தில் எதிரெதிரே இருக்கும் தளபதி கம்பீரன் மற்றும் மந்திரி நிலாமதிசந்திரன் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

இரண்டு பக்கமுமே ஒவ்வொரு மாளிகை வெளியிலுமே மரங்கள் அணிவகுத்து இருந்ததால் பதுங்கிச் செல்வது பெரிய சவாலாக இல்லை.

‘’இரவெல்லாம் கண்விழித்து காவல் புரிந்து மாளிகையைச் சுற்றிவரும் காவலர்கள் சோர்வுற்று கண்களுக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் நேரம் இது. அதனால், நாம் பதுங்கி வருவதை அவர்களின் கண்கள் மூளைக்கு அவ்வளவு சுலபத்தில் உணர்த்தாது’ என்று சொன்னான் உத்தமன்.

‘’ஆயினும் மிகுந்த கவனம் தேவை உத்தமா… நான் மந்திரியின் மாளிகையில் நுழைகிறேன்’’ என்ற சூர்யன் நண்பனிடமிருந்து பிரிந்து வலது பக்கம் சென்றான்.

உத்தமன் இடது பக்கம் பதுங்கி வந்து… காவலன் காணாத நொடியில் கம்பீரனின் மாளிகை மதில்சுவரில் தாவி ஏறினான். அப்படி ஏறிய வேகத்தில் உள்ளே குதித்தான்.

******

சட்டென கண்விழித்தார் சிங்கமுகன். தலையைத் திருப்பிப் பார்த்தார். தனக்கு அருகே கிளியோமித்ரா அயர்ந்து உறங்குவதை சில நொடிகள் கண்டார். பின்னர் சாளரம் பக்கம் அவரது பார்வை சென்றது.

விடிவதற்கான அறிகுறி தென்படும் நேரம்… இந்த நேரத்துக்கு எல்லாம் அவர் இதற்கு முன்பு விழித்ததே இல்லை. இப்போது மனம் முழுவதும் ஏராளமான குழப்பத்துடன் உறங்கியதால் உண்மையில் உறங்குகிறோமா விழித்திருக்கிறோமா என்கிற நிலையில்தான் இருந்தார். அது இப்போது மிக நன்றாகவே விழிக்க செய்துவிட்டது.

எழுந்து உப்பரிகையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரது உள்ளுணர்வு ஏதோ அபாயத்தை சொல்லியது.

தொடரும்…

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button