
18. வாள் விளையாட்டு
சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா.
அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் சிங்கமுகன். புறாவை நெருங்கி கையில் ஏந்தினார். பார்வையை வெளியே வீசினார்.
அரண்மனை மதில் சுவரை ஒட்டி அந்தப் பக்கமாக ஒரு மரம்… அதன் கீழே குதிரையில் வீற்றிருக்கும் ஓர் உருவம் நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த உருவத்தைக் கண்ட மறுநொடியில் சிங்கமுகன் உடலில் பதற்றம் தொற்றியது. உடல் முழுவதும் கறுப்பு ஆடை அணிந்திருந்த உருவம் அது.
‘’யார் அங்கே?’’ என்று கீழ்நோக்கி பலமாகக் குரல் கொடுத்தார் சிங்கமுகன்.
அடுத்த நொடியே அந்த உருவம் தனது புரவியைத் தட்டிவிட்டு காற்றில் பறப்பதைப் பதைபதைப்புடன் கண்டார். அதே நொடியில் கீழே சில வீரர்கள் ஓடிவந்து நின்றனர்.
தலையை உயர்த்திப் பார்த்து, ‘’மன்னா…’’ என்றார்கள்.
‘’மதில் சுவருக்கு மறுபுறம் ஒருவன் குதிரையில் கிழக்கு நோக்கிப் போகிறான். விரைந்து பிடியுங்கள்… கறுப்பு ஆடை மனிதன்’’ என்று கத்தினார்.
கீழே இருந்த வீரர்கள், ‘தபதப’ எண்று ஓடினார்கள். மதில்சுவர் மாடத்தில் நின்றிருந்த முகிலனும் குனிந்து பார்த்துவிட்டு வேகமாக முரசு கொட்ட ஆரம்பித்தான்.
‘தொம்… தொம்… தொம்…’
விடிந்தும் விடியாததுமான அந்தப் பொழுதில் முரசு ஒலி பெரும் ஓசையுடன் எழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த கிளியோமித்ரா பதறி எழுந்தார்.
‘’அன்பே… அன்பே… என்ன ஆயிற்று?’’ என்றபடி ஓடிவந்தார்.
அதேநேரம் அவரது அறை வாசலுக்கும் ஒன்றிரண்டு வீரர்கள் பதற்றத்துடன் வந்து, ‘’அரசே… அரசே…’’ என்றார்கள்.
‘’மதில் சுவருக்கு வெளியே காவலில் இருப்பவர்கள் யார்? என்ன லட்சணத்தில் பணிபுரிகிறார்கள்? அவர்கள் என் முன்னால் வந்து நிற்க வேண்டும்’’ என்று சீறினார்.
வீரர்கள் விழுந்தடித்து ஓடினார்கள். உப்பரிகை அருகே நின்று பார்த்த கிளியோமித்ரா… ‘’எ… என்ன விஷயம்?’’ என்று கேட்டார்.
‘’அந்தக் கறுப்பு ஆடை மர்ம மனிதன்…’’ என்றவர் தன் கையில் இருக்கும் புறாவின் கால்களில் இருந்து ஓலையை உருவினார்.
சுருட்டப்பட்டிருந்த அதை நீவி பார்வையை ஓட்டினார்…
‘தளபதி மாளிகையில் தலையில்லா மனிதன். அரசிக்கு விஷம் கலந்த கரங்கள்’
அதைப் படித்ததும் அதிர்ந்துபோனார். ‘’கிளியோ… நான் உடனே தளபதி மாளிகைக்குச் செல்கிறேன்’’ என்றபடி நகர ஆரம்பித்தார்.
‘’என்ன… என்ன எழுதியிருக்கிறது?’’ என்று பதற்றமாகக் கேட்டார் கிளியோமித்ரா.
‘’உனக்கு விஷம் கலந்தவன் பற்றிய விடை கிடைக்கப் போகிறது என நினைக்கிறேன்’’ என்றபடி உடைவாளை எடுத்து இடையில் சொருகிக்கொண்டார்.
‘’சூர்யன் இன்னும் வரவில்லையே…’’
‘’அவனை உடனடியாக தளபதி மாளிகைக்கு வரும்படி ஆள் அனுப்பு’’ என்றபடி விரைவான நடையில் அறையை விட்டு வெளியேறினார்.
*******
தளபதி கம்பீரன் மாளிகைக்குள் பதுங்கி நுழைந்தான் உத்தமன். அவன் கையில் குத்துவாள் ஒன்று எதையும் சந்திக்கும் முனைப்புடன் இருந்தது.
உள்ளே நீளமான வராண்டாவில் காவலுக்கு இருந்த ஒரு வீரன், அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். உத்தமன் ஒரு தூணுக்குப் பின்னால் பதுங்கினான். அந்த வீரன் தன்னருகே வருவதற்காகக் காத்திருந்தான்.
வராண்டாவின் அந்த முனை வரையில் சென்ற வீரன் திரும்பி வர ஆரம்பித்தான். அவன் முகத்திலும் நடையிலும் களைப்பு இருப்பது நன்றாகவே தெரிந்தது. எந்தவித எச்சரிக்கை உணர்வுமின்றி அனிச்சையாகவே நடந்து வந்தான்.
அவன் தூணை நெருங்கிய நொடியில் உத்தமன் புலி வேகத்தில் பாய்ந்தான்.
கையில் குத்துவாளுடன் திடீரென நெஞ்சுக்கு நேராக வரும் உருவத்தைக் கண்டு வீரன் திகிலாகி ஒரு நொடிக்கு உறைந்துபோனான். அவன் சுதாரிக்கும் முன்பு மேலே பாய்ந்த உத்தமன், கத்தி இல்லாத கையைக் குவித்து வீரனின் முகத்தில் குத்து விட்டான்.
வீரன் மல்லாந்து சரிந்தான். அவன் மேலே பரவிய உத்தமன், அவனது இடையில் இருந்த வாளை உருவி தூரமாக வீசினான்.
‘’சொல்வதைக் கேள்… உனக்கு ஒரு சிறு காயமும் உண்டாக்க எனக்கு விருப்பம் இல்லை. அமைதியாக இரு… தளபதி அறை வரையில் கைகளை உயர்த்தி நடக்க வேண்டும். எந்த தந்திரம் செய்ய முயன்றாலும் பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பில்லை’’ என்றான் உத்தமன்.
‘’ச… சரி… எ… என்னை எதுவும் செய்துவிடாதே… நேற்றுதான் எனக்கு குழந்தைப் பிறந்துள்ளது’’ என்றவன் குரல் நடுங்கியது.
உத்தமன் மெல்ல புன்னகைத்தான்… ‘’உன் குழந்தைக்கு என் வாழ்த்துகள்… அதை நீ கையில் ஏந்தி கொஞ்சலாம். நான் சொல்வதை ஒழுங்காகச் செய்தால்…’’
‘’நிச்சயம் எதுவும் செய்ய மாட்டேன்’’ என்றான் வீரன்.
‘’தளபதி அவன் அறையில் இருக்கிறானா?’’ என்று கேட்டான் உத்தமன்.
‘’என்னைப் பார்க்க அவ்வளவு அவசரமா உத்தமா? உன் உரைக்கல்லைக் கொடுக்க வந்தாயா?’’
முதுகின் பின்னால் ஒரு குரலும் அதே நொடியில் உத்தமனின் பின்னங்கழுத்தில் வாளின் கூர்முனையும் தீண்டியது.
உத்தமன் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தான்.
‘’எழுதுவதில் நீ திறமையானவன்தான் உத்தமா… நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வாள் ஏந்தும் விஷயத்திலும் இப்படி உளவாளியாக நுழைவதிலும் பெரும் பயிற்சி தேவை. உன் கையில் இருக்கும் அந்தக் குத்துவாளை தூரமாக வீசிவிட்டு எழுந்து நிற்கிறாயா? என் வீரனுக்குச் சொன்னாயே அதேபோல இரு கைகளையும் உயர்த்திக்கொண்டு’’ என்றான் கம்பீரன்.
*******
குழலன் சட்டென அமைதியாகி செவிகளைத் தீட்டிக்கொண்டான். மேலே காலடிகள் நெருங்குவது கேட்டது. கதவு திறக்கப்படும் ஒலி…
‘இப்போது என்ன செய்வது? விழித்திருக்கலாமா? அல்லது இன்னும் மயக்கத்தில் இருப்பது போலிருக்கலாமா?’ என நொடிப்பொழுதில் சிந்தித்து கண்களை மூடிக்கொண்டான்.
கதவு திறக்கப்பட்டு ஒளி பரவுவது மூடிய கண்களுக்குள் உணரமுடிந்தது. மூச்சுக் காட்டாமல் இருந்தான். மரப்படிகளில் இறங்குகிற காலடியோசைகள்.
‘’பொடியன் இன்னும் விழிக்கவில்லையே…’’
‘’இன்னுமா? அருகே சென்று பார்!’’
ஒரு காலடி ஓசையும் விளக்கின் ஒலியும் அதிகமானது. குழலன் மிக மெல்ல கண்களைச் சுருக்கிவிட்டான்.
சிரிப்பு சத்தம்… ‘’ஹா… ஹா… மருதா… பயல் விழித்துவிட்டான். நடித்துப் பார்த்திருக்கிறான்… அடேய் எழடா’’ என்றபடி குழலனின் வயிற்றில் எத்தினான் அவன்.
குழலன் கண்களைத் திறந்துப் பார்த்தான். கையில் விளக்குடன் ஒருவன். சற்றுத் தள்ளி மரப்படிகள் அருகே இன்னொருவன்.
‘’என்னடா… நாங்கள் அருகில் வந்ததும் பாய்ந்து தாக்கலாம் என்று கண்களை மூடியிருந்தாயோ?’’ என்று கேலியுடன் கேட்டான் இவன்.
குழலன் எழுந்து அமர்ந்தான். ‘’யார் நீங்கள்?’’ என்று கேட்டான்.
‘’அதை நீ அறிந்துகொள்வதற்காகத்தானே அழைத்துச் செல்ல வந்தோம்’’ என்றான் படியருகே இருந்த அவன்.
குழலன் பார்வையைத் திருப்பி தனக்கு அருகே பார்த்தான். மனம் திடுக்கிட்டது. அருகே நெஞ்சில் கத்தி பாய்ச்சப்பட்ட நிலையில் ஓர் உடல். அந்த உடலில் கறுப்பு ஆடை.
‘’என்ன பார்க்கிறாய்? உன்னைத் தாக்கி இங்கே தூக்கிவந்தவன் அவன்தான். அவனது செயலுக்கான கூலி உடனே கொடுக்கப்பட்டு விட்டது’’ என்றான் இவன்.
குழலன் எழுந்தவாறு… ‘’சுரங்கக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தானே நீங்கள்?’’ என்று கேட்டான்.
‘’அட… எப்படி கண்டுபிடித்தாய்? எங்கள் உடலில் தங்கத் துகள்கள் ஒட்டியுள்ளதா என்ன?’’ என்று கேட்டான்.
‘’அன்று என்னையும் நட்சத்திரா அக்காவையும் தாக்க வந்தவர்களில் ஒருவன்தானே நீ?’’ என்ற குழலன் பார்வை படியருகே நின்றிருப்பவனிடம் சென்றது.
‘’பலே பொடியன்டா நீ. அடையாளம் கண்டறிந்துவிட்டாயே’’ என்றான் அங்கிருந்தவன்.
‘’பேசியது போதும் நடடா…’’ என்று குழலன் கழுத்தில் கை வைத்து நகர்த்தினான் இவன்.
‘’உங்கள் தலைவனிடமா?’’ என்று கேட்டவாறு நகர்ந்தான் குழலன்.
படியருகே நின்றிருந்தவன் மேலே ஏற ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து குழலனும் அடுத்து இன்னொருவனும் ஏறினார்கள்.
‘’உங்கள் தலைவனிடமா என்று கேட்டேன்?’’
‘’உனக்கு யாரைச் சந்திக்க விருப்பம் என்று சொல். அங்கேயே அழைத்துச் செல்கிறோம்’’ என்றான் கீழே வந்தவன்.
‘’கொள்ளையன் தலைவனுக்கும் மேலாக ஒரு தலைவன் இருப்பானே…’’ என்றான் குழலன்.
மேலே ஏறிவிட்டவன் குனிந்துப் பார்த்து சிரித்தான். அவன் கண்களில் கொஞ்சம் வியப்பும் இருந்தது.
‘’பொடியா… அப்படியா சொல்கிறாய்?’’
‘’ஆமாம்… வெறும் கொள்ளையர்களாக இவ்வளவு காலம் அரசிடம் அகப்படாமல் இருக்க முடியாது. உங்கள் மார்பில் ஒரு வலுவான கவசம் இருக்க வேண்டும்’’ என்றபடி மேலே ஏறிவிட்டான் குழலன்.
‘’அடேங்கப்பா… பயங்கர மூளைக்காரனடா நீ’’ என்று கீழே இருந்தவன் குரல் வியந்து பாராட்டியது.
‘’அவனைப் புகழ்வதை நிறுத்தி சீக்கிரம் இழுத்து வாருங்கடா மடையன்களே’’ என்று குரல் வந்தது.
குழலன் திரும்பிப் பார்த்தான். அந்த அறையின் வாசலில் கண்களில் கோபத்துடன் சுகந்தன் நின்றிருந்தான்.
குழலன் முதுகில் கைவைத்து தள்ளினார்கள். அவன் நகர்ந்து வாசலை நெருங்கினான்.
‘’வயதுக்கு மீறிய வளர்ச்சியடா உனக்கு’’ என்றான் சுகந்தன்.
‘’நன்றி’’ என்று புன்னகைத்தான் குழலன்.
‘’அட… புன்னகைக்கிறாய்? பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் திறமையாக நடிக்கிறாயா?’’ என்று கேலியாகச் சிரித்தான் சுகந்தன்.
‘’எதற்கு நடிக்க வேண்டும்? உண்மையிலே எனக்கு பயமில்லை’’ என்றான் குழலன்.
‘’ஓஹோ… சரி நட… சற்று நேரத்தில் உன் தைரியத்துக்குப் பரிசு கிடைக்கப் போகிறது’’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளினான் சுகந்தன்.
******
கழுத்தைத் தீண்டும் வாள் முனையுடன் கைகளை உயர்த்தியவாறு உத்தமன் அடியெடுத்து வைக்க இருந்த நேரத்தில்…
‘’உத்தமனுக்கு வேண்டுமானால் பயிற்சி குறைவாக இருக்கலாம். எனக்கு பயிற்சி உண்டு தளபதியாரே’’ என்ற சூர்யன் குரல் கேட்டது.
உத்தமன் மனம் மகிழ திரும்பிப் பார்த்தான். கம்பீரனின் முதுகில் தனது வாளை வைத்தவாறு சூர்யன்.
‘’சூர்யா…’’ என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்தான் உத்தமன்.
‘’நான் மந்திரி மாளிகைக்குள் நுழையும் முன்பு வீதி முனையில் ஒரு புரவி வருவதைக் கண்டேன். பதுங்கி கவனித்தேன். நம் தளபதியார் மின்னலாக வந்து நுழைந்தார்’’ என்றான் சூர்யன்.
‘’இருவரும் என்ன மாதிரி காரியத்தைச் செய்கிறீர்கள் புரிகிறதா?’’ என்று சீற்றத்துடன் கேட்டான் கம்பீரன்.
‘’புரிந்தே செய்கிறோம் கம்பீரா’’ என்றான் உத்தமன்.
‘’மடையர்களே… விடிந்தால் உங்கள் தலைகள் உடம்பில் இருக்காது’’ என்றான் கம்பீரன்.
அப்படிச் சொன்ன வேகத்தில் மின்னலாகச் சுழன்று சூர்யனின் வாள் தீண்டலிலிருந்து விலகினான். தனது வாளைச் சுழற்றினான்.
சூர்யன் சட்டென விலகி அந்த வாளை தனது வாளால் சந்தித்தான். இரண்டும் ‘கிணிங்’ என மோதிக்கொண்டு தீப்பொறியைச் சிதறவிட்டது.
இன்னொரு புறம் தனது வாளை எடுக்க ஓடிய வீரனைப் பாய்ந்து பிடித்து தாக்கினான் உத்தமன். சத்தம் கேட்டு வெளியிலிருந்து இரண்டு வீரர்கள் ஓடிவந்தார்கள்.
‘’முட்டாள்களே… இன்றோடு தொலைந்தீர்கள்’’ என்று ஆவேசமாக முழங்கியவாறு வாளைச் சுழற்றினான் கம்பீரன்.
அவனையும் மற்ற இரு வீரகளையும் சமாளித்தவாறு மாறி மாறி வாள் வீசினான் சூர்யன்.
‘’உதவிக்கு வரட்டுமா சகோதரா?’’ என்றபடி உருவிய வாளுடன் உள்ளே வந்தாள் நட்சத்திரா.
‘’ஹேய்… நீ எப்படி இங்கே?’’ என்று நொடிப்பொழுது வியந்தான் சூர்யன்.
‘’குழலன் நிலை என்ன என்று புரியாமல் நானும் வீதிகளில் உலாவினேன். நீங்கள் இந்தப் பக்கம் வருவதைக் கண்டு பின்தொடர்ந்தேன்’’ என்ற நட்சத்திரா ஒரு வீரனின் வாளை தனது வாளால் சந்தித்தாள்.
‘’கிணிங்!’’
‘’இரவெல்லாம் தெருவில் சுற்றினாயா?’’ – சூர்யன்
‘’கிணிங்!’’
‘’ஆமாம்…’’ -நட்சத்திரா
‘’டிடிங்!’’
‘’நடந்தேவா?’’
‘’சிலீங்!’’
‘’உன் திமிர் பிடித்த சூறாவளியை விட்டால் நாட்டில் வேறு புரவிகளே இல்லை என்கிற நினைப்பா உனக்கு?’’
‘’டிடிங்!’’
‘’நள்ளிரவில் பெண் இப்படியெல்லாம் சுற்றலாமா?’’
‘’கிணிங்!’’
‘’சரி போய் விடட்டுமா? உனது ஓலைப் பத்திரிகை நண்பனை வைத்தே இந்த வாள் வீரர்களைச் சமாளித்துக்கொள்கிறாயா சகோதரா? வரும் வார உரைக்கலில் உங்கள் இருவருக்கும் நானே அஞ்சலி செய்தி எழுதுகிறேன்.’’
‘’சிலீங்!’’
‘’ஏய்… உங்கள் சகோதர சண்டையில் என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்?’’ என்று கேட்டவாறு ஒரு வீரனை வீழ்த்திவிட்டு அருகில் வந்தான் உத்தமன்.
கம்பீரனின் ஆக்ரோஷ வாள்வீச்சினால் மயிரிழையில் தப்பிய சூர்யன், ‘’வாள்வீச்சு போலவே உனக்கு வாய்க்கொழுப்பும் அதிகம் நட்சத்திரா’’ என்றான்.
ஒரு வீரனின் கையைச் சீவி அவன் வாளைப் பறித்த நட்சத்திரா அதை உத்தமனிடம் கொடுத்துவிட்டு, ‘’குத்துவாள் சரிப்படாது உத்தமரே… இந்த வீரனைக் கவனித்துக்கொள்ளும். சகோதரனுக்குத் துணையாக நானும் போகிறேன். என்ன இருந்தாலும் தளபதிக்கு என்று ஒரு மரியாதை உள்ளதல்லவா? இருவராகக் கவனிக்கிறோம்’’ என்றாள்.
‘’வாருங்கள்… வாருங்கள்… இருவரையும் இன்று என் வாளுக்குப் பலியாக்கிக் காட்டுகிறேன்’’ என்று ஆவேசத்துடன் கத்தினான் கம்பீரன்.
அவன் குரல் போலவே வாள்வீச்சும் சரியாக இருந்தது. சூர்யனையும் நட்சத்திராவையும் எளிதாகச் சமாளித்து அவர்களின் வாள்களிடமிருந்து விலகினான்.
அதே நேரம் தளபதியின் மாளிகை வாசலில் சிங்கமுகனும் அவருடன் சில வீரர்களும் வந்து இறங்கினார்கள்.
‘’அரசே… உள்ளே பெரும் சத்தமாக இருக்கிறது’’ என்றான் ஒரு வீரன்.
‘’வாள் சண்டைதான். இந்நேரத்தில் உள்ளே யார்?’’ என்றான் இன்னொரு வீரன்.
அவர்கள் தங்கள் வாள்களை உருவிக்கொண்டு உள்ளே பாய்ந்துசென்றார்கள்.
‘’சூர்யனின் புரவியைத் தெருமுனையில் கண்டேன்’’ என்ற சிங்கமுகன் மாளிகைக்குள் நுழையும் முன்பு திரும்பிப் பார்த்தார்.
தெருமுனையில் மற்றொரு புரவி… அதில் வீற்றிருந்த கறுப்பு ஆடை உருவம்… இரு நொடிகள் பார்த்தது. மூன்றாவது நொடியே மறைந்துப் போனது.
சிங்கமுகன் பதறவில்லை. தன் அருகே இருக்கும் வீரர்களிடமும் சொல்லவில்லை.
‘’ம்… உள்ளே வாருங்கள்’’ என்றபடி மாளிகைக்குள் நுழைந்தார்.
தொடரும்…