கட்டுரைகள்

அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்

கட்டுரை | வாசகசாலை

சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எவ்வகையான இடையூறுகள் உருவாகின்றன என்பன மட்டுமே பிரதானமாக இருக்கும்.

இரண்டாவது வகை, கதை மாந்தரின் மன உணர்வுகளை ஊடுருவிப் பார்த்து, சக மனிதர்கள், அவர்களை இயல்பான வாழ்க்கையை வாழவிடாமல் எவ்வாறு இடையூறு செய்கிறார்கள், அதை அவர் எவ்வாறு கையாள்கிறார், அதன்மூலம் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார் எனக் கூறியபடி முன்னகர்த்திச் செல்லும் கதைக் களமாக இருக்கும்.

இரண்டு தளங்களும் ஒருங்கிணைந்த கதைகளும் உண்டு.

தொகுப்பின் முதல் குறுநாவலான ’வடக்கிருந்த காதல்’ முதல்வகையைப் பிரதானமாக எடுத்துக் கொண்டிருக்கிறது..

முதல் வகை, வாசிப்பு அனுபவமாக மட்டுமே முடிந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. அப்படி நிகழாமல் தவிர்க்கும் வண்ணம் கதையின் போக்கையும், கதையின் முடிவையும் மிகக் கவனமாகக் கையாளவேண்டும்.

’வடக்கிருந்த காதலி’ல் இடையில் பேசப்படும் கருத்துகளும் முன்னகர்வுகளும் ஓரளவு உரையாடலுக்கு உகந்த தன்மையினதாக இருந்தாலும், கதையின் முடிவு எதிர்பாராத, அதிர்ச்சி தரக்கூடியதாக இருப்பதால் அதன் மீது மட்டுமே மனம் மயங்கி விடுகிறது. அதுவே பிரதான இலக்காக மாறிவிடுகிறது.

ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இறுதிவரை மர்மத்தைக் காப்பாற்றி இருக்கிறார். இடையில் துளிச்சந்தேகம் ஏற்படாத வண்ணம் குறுநாவலை நகர்த்திச் சென்றாலும், ஒருசில இடங்களில் சந்தேகம் முளைக்கவே செய்கின்றன.

ரோஸ் சந்திரன் எந்த இடத்திலும் தன் கதையைச் சொல்லவில்லை. ஆயர் டேனியல் தன்னுடைய பெண் தன்மையான நடை உடை பாவனைகளை எவ்வாறு மறைத்து வாழ்ந்தார் என்பதைச் சொல்வதையும் இங்குத் தவிர்த்திருக்கிறார். மனதில் மட்டுமே திருநங்கையாக, உடல்ரீதியாக ஆணின் ரூபத்தில் வாழ்ந்துவந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் முதல் குறுநாவலில் எழுகிறது. திருநங்கையின் வாழ்வைச் சித்தரிக்கும் களம்போல் காட்சியளித்தாலும், இறுதியில் அது ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை என்பதாக முடிகிறது. ஆணுக்கும் ஆணுக்குமான காதலும் எத்தகைய வலிமையுடையதாக இருக்கிறது என்பதைப் பேசினாலும், அதன் உன்னதமான இலக்கு இறுதியில் தவறிப்போகிறது. என்றாலும், குறுநாவலுக்குள் பல உரையாடல்களைத் தொடங்கிவைத்திருப்பது உண்மையே.

குழந்தைகள் மலம் வெளியேற்றுவதும் ஒரு வகைச் சுய இன்பம் தான். ஃப்ராய்டின் முடிவில் உண்மை இருந்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குச் சிலர் தயாராயில்லை. கைச் சூப்புவதுகூட அவ்வகையில் சேர்ந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.

மலம், சிறுநீர், சளி வெளியேற்றுதலைக் கெட்ட பழக்கமாக ஒப்புக்கொள்ளாத உலகம் சுய இன்பம் மூலம் விந்து வெளியேற்றுதலை மட்டும் ஆகச் சிறந்த கெட்ட பழக்கமாக முடிவு செய்கிறது. அது எவ்வாறாக வெளியேற்றப்படுகிறது, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றப்படுகிறது என்பதில் இருக்கிறது சுய ஒழுக்கம். உடலுறவு என்பது குழந்தைப் பிறப்புக்காக மட்டுமே என்ற தவறான புரிதல் பரவலாக உள்ளது. இதனுள் பெண்களை இயந்திரமாகப் பார்க்கும் போக்கும் அடங்கியிருக்கிறது. பல குடும்பங்களில் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு நிகழும் உடலுறவு விபத்தைப் போலவே பார்க்கப்படுகிறது. குற்ற உணர்ச்சியில் மனம் குலைகிறது.

அந்தரங்கம் புனிதமானது என்கிறோம். உண்மையில் அருவெறுப்பும் அதனுள்ளே பதுங்கிக் கிடக்கிறது. புனிதமானதாக நிர்ணயம் செய்யப்பட்ட எல்லாவற்றையும் அடிமைப்படுத்துகிறோம். பெண்களைத் தெய்வத்தின் அருகில் வைத்து பூஜிக்கும் அதே உலகம்தான் அவர்களை அடிமைப்படுத்தவும் செய்கிறது. திருநங்கைகளையும் அதே வகையினத்தில் சேர்த்திருக்கிறோம். அவர்களிடம் ஆசி வாங்கினால் வாழ்க்கை ராசியாகும் எனும் அதே நேரத்தில் கேலிக்குரிய பொருளாகவும், பாலியல் குறியீடாகவும் பார்க்கும் போக்கு நிலவுகிறது.

வடக்கிருந்த காதலில், ‘ஜெபத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே விளக்கியிருப்பார்கள். ஆனால் ஜேம்ஸ் அதை விளக்கும்போது திருநங்கை என்ற பாலினத்தையும் சேர்த்துக்கொள்கிறார்.

கிறித்துவ மதத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறையை வகுத்திருக்கிறார்கள். ஆயர் டேனியல் சார்ந்திருக்கும் பிரிவில் ‘திருமணம் செய்யாமல் வாழவேண்டிய அவசியமில்லை’ எனக் கூறுகிறார். உண்மையில் மதத்துக்கும் திருமணத்துக்கும் சம்பந்தமே இல்லை. இறை நம்பிக்கையும், இல்லறவாழ்க்கையும் வெவ்வேறு வழிகளில் பயணிப்பவை என்ற தவறான புரிதல்தான் இதற்குக் காரணம். ஒழுக்கம் சார்ந்த இல்லறவாழ்வு இறைப் பக்தியை என்றைக்கும் இடையூறு செய்யாது.

ஒவ்வொரு ஆணும் பதின்மவயது ஆரம்பிக்கும்வரைப் பெண்தன்மைக் குரலையே பெற்றிருக்கிறான். குறிப்பிட்ட வயது வந்தவுடன், குரல் உடைய ஆரம்பிக்கும். அதன் ஒலி திருநங்கையின் குரலை ஒத்ததாகவே இருக்கும். ‘பெரிய மனுசன் ஆயிட்டாண்டா’ என வீட்டில் கேலி செய்வார்கள். ஆண் தன்மைக்கும், பெண் தன்மைக்கும் இடையிலான குரலொலி ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. வெட்கப்படுவார்கள். அந்தக் குரல் பருவத்தை எப்போது கடப்போம் எனக் காத்திருப்பார்கள்.  அந்தக் குரல் சில மாதங்களில் ஆண்களுக்கே உரித்தான கம்பீரக்குரலாக வெளிப்பட ஆரம்பிக்கும். தன் உடலில் ஏற்படும் ரசாயனச் செய்திகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களுடனான காலத்தை ஒவ்வொரு ஆணும் கடந்தே ஆகவேண்டும். ஒரு சிலருக்கு அதில் தேக்கநிலை ஏற்பட்டுவிடுகிறது. இரண்டாங்கெட்டானான நிகழ்விலேயே தேங்கிவிடுகிறார்கள். கடந்து செல்பவர்கள் இரண்டும் கெட்டான் குரல் ஒலியை அந்நியமாகவே உணர்கிறார்கள். அதைக் கேலிக்குரிய வகையாகவே சித்தரிக்கிறார்கள்.

ஆரம்பநிலை வாசிப்பில் இருக்கும் வாசகர்களுக்கு ஏற்றமாதிரி, எளிய நடையில், கமாக்களுடன் வார்த்தைகளைப் பிரித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் குறுநாவல்களின் நடை இருக்கிறது. ஆனால், நான், எனது, எனக்கு என்ற வார்த்தைகளைக் குறைத்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

நிர்வாணம், காமம் என்ற சுதந்திரத் தன்மையுடன் இயங்கும் சாமியார்களை உடல்ரீதியான உணர்வுகளுடன் மட்டுமே அணுகுகிறோம். அது மன ரீதியானது. சமூகத்தில் கடைபிடிக்கப்படும் சில நம்பிக்கைகளுக்கு எதிரான தன் இருப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். உடலின் ஆடைகளைக் கலைவதுபோல், மனதின் மத ஆடைகளைக் கலைந்துவிட்டால்… நிர்வாணமே அழகு! அந்த ஆடைகள் வெளிப்பார்வைக்குக் கட்டுக்கோப்பானதாகவும், நாகரீக வாழ்க்கையின் திறவுகோலாகவும் தோன்றும். நிஜத்தில், அது அப்படியல்ல! உள்ளே வேட்கையுடன் உலவிக்கொண்டிருக்கும் சிங்கங்களையும், புலிகளையும் மறைப்பதற்கான மறைப்பு அது.

ஆணும் பெண்ணும் அன்பு மிகக் கொள்ளும்போது அது காதலாக மாறுகிறது. இருவரின் இணக்கத்துடன் அரங்கேற்றப்படும் உடலுறவும் காதலின் ஒரு பகுதிதான். அன்பை, காதலைப் பகிர்ந்து கொள்ளுதலில் இது ஒரு வழிமுறை. அவ்வளவே! அதை வக்கிர உணர்வுடன் அணுக வேண்டியதில்லை. ஆணுக்கும் ஆணுக்கும் இடையில் ஏற்படும் அன்பை, காதலை இவ்வாறே அணுகலாம். அருவெறுப்பு இதன் மூலம் மறையும்.

கடவுளை மறுப்பவர் மட்டுமல்ல; நானே கடவுள் என்பவரும் ஒரு வகை நாத்திகரே! இவர் ஏறத்தாழ குழப்பவாதி. கடவுள் என்ற கருத்தாக்கத்துக்கு எதிராகப் பேசவும் முடியாத, ஒப்புக்கொள்ளவும் முடியாத ஒரு நிலை. ஒருவகை மனநோய். கடவுள் என்ற கருத்தாக்கத்துக்குக் கிடைக்கும் மதிப்பு, மரியாதைக்கு மயங்கும் நிலை.

தடை உருவாகும்போது அதை மீறும் மனப்பான்மை அதிகரிக்கிறது. அபய் சந்த்தை அவருடைய பெற்றோர்கள் வெளியே விடாமல் அடைத்து வைத்ததால் சர்மத் கசானிக்கு இந்த நாகரீகத்தின் மேல், பண்பாட்டின் மேல் வெறுப்பு ஏற்படுவது இயற்கையே. சர்மத் கசானி, தன் ஆடைகளைத் துறந்து நிர்வாணமாய் ஓடுவதற்கான மனநிலையை இன்னும்கூடச் சற்று விரிவாகப் பேசியிருக்கலாம்.

சிற்றின்பத்தையும் பேரின்பத்தையும் ஒரே குடுவைக்குள் அடைக்கும் முயற்சி இது. இரு நிலைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

நிஜத்தில் மனநிலை பாதித்தவர் என்பவர் யார்? மனித நியதிகளை மீறுபவர்கள்!

மனிதனின் ஒழுக்க நியதிகளை வகுத்துக்கொடுத்தவர் என்ற ஒருவரை நம்மால் அடையாளம் காணவே இயலாது. அது காலத்தால் வடிவமைக்கப்பட்டது. அந்தக் காலம் மனிதர்களால் நிரம்பி வழிகிறது.

மனச் சமநிலை குலைந்தவர்கள் என்ற வரையறைக்குள் வருபவர்களைப் பைத்தியம் என்றோ முற்றும் துறந்தவர் என்றோ பிரித்து விடுகிறோம். சில நேரங்களில் இரு நிலைகளையும் ஒரு சேரவே அவதானிக்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. மனச்சமநிலையுடன் வாழ்க்கை நடத்துவது என்பது மிகப் பெரிய சுமை! அந்தச் சுமையை இறக்கிவைத்தவன்தான் நம்மைப் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

எல்லா மதங்களிலும் கூறப்பட்டுள்ள மகா வாக்கியங்களை உண்மையான அர்த்தத்துடன் புரிந்துகொண்டிருக்கிறோமா? அந்த வாக்கியங்களும் மூலத்தன்மையுடன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா? இடைச் செருகல்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றி அமைக்கப்பட்ட வாக்கியங்களையும் மதம் எனும் பெயரில் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

’லா இலாஹ’ குறுநாவலில் அபய்சந்த்தின் சாபம் இன்றைய சூழலுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

மதவாதம் பேசுகிறவன் இந்துவாக, முஸ்லிமாக இருந்தாலும், அவனை ஒழிக்கும்வரை ஹிந்துஸ்தான் ஓயாது! மதரீதியாகவும், ஜாதிரீதியாகவும் அரசியல் செய்யும், ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை உடையவர்களையும் ஒழித்துக்கட்டும். இந்த நம்பிக்கையில்தான் ஒவ்வொரு இந்தியனின் உடலிலும் இன்னும் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது!

ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்.
ஆசிரியர்: அழகர்சாமி சக்திவேல்.
நூல் விமர்சனம்: ஏ. ஆர். முருகேசன்.
வெற்றிமொழி வெளியீட்டகம்.
விலை: ரூ. 185/-

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button