”சொல்லில் அடங்காத தவளைகள்”; றாம் சந்தோஷின் ‘சொல்வெளித் தவளைகள்’ வாசிப்பனுபவம் – இரா.கவியரசு
கட்டுரை | வாசகசாலை

நள்ளிரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுப்புகிறது ஒரு தவளையின் குரல். அதற்குப் பிறகு பத்து, நூறு ஆயிரமெனப் பெருகுகின்றன தவளைகள். உறக்கம் கலைந்த கோபத்துடன் வெளியே வந்து பார்த்தால் மழை தொடங்குகிறது. தவளைகள் முன்பை விடவும் உற்சாகமாகப் பாடுகின்றன. தவளைகளின் பாடலைக் கேட்கத் துவங்குகிறேன். அதில் தெருவின் கதை, ஊரின் கதை நாட்டின் கதையெல்லாம் திரண்டு வருகின்றன. ”சிறிது நேரம் பேசாமல் இருங்கள். நான் உறங்க வேண்டும்” என்கிறேன். ”எப்போதும் உறங்கியபடிதானே இருக்கிறாய்? கொஞ்சம் எங்களின் பாடல்களைக் கேள். தவிரவும் நாங்கள் சொல்வெளித் தவளைகள், கட்டளைக்கெல்லாம் அடங்கமாட்டோம்” எனச் சிரித்துக்கொண்டே குதிக்கின்றன.
இரண்டாயிரமாண்டு கவிதைகளின் மரபை, அதே வழியிலேயே செல்லும் ஒருவன் அந்தப் பக்கத்திலிருந்து பாலத்தைத் தட்டிவிட்டு ஆட்டம் காண்பிப்பது போல் சங்க காலத்தின் தலைவன், தலைவியை அவர்களின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்டதை, தற்கால வாழ்வின் தலைவன் தலைவியோடு பொருத்த முற்பட்டு அந்த முகங்கள் அலறியடித்து ஓடுவதை பகடியாகச் சொல்லிப் பார்க்கின்றன இந்தக் கவிதைகள்.
“பிரிவதன் வருத்தம்
என் முதுகை சொறிகிறது
உடலெல்லாம் பசலை படிவது போல்
ஒரு மாதிரி ஆகிறது.அய்யோ !
நான் தலைவி அல்ல என்ற பிரக்ஞை
என்னை மடலேறும் தொழிலுக்கு
இட்டுச் செல்லலாம்
பிறகு நான் மடலேறியது அலரானால்?
யாராவது
இந்த தலைவனுக்கும், தலைவிக்கும்
லீவு விட்டால் தேவலை என்று படுகிறது “
எல்லா மரபுகளையும் உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் சமகால அரசியல். ஒவ்வொருவர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு அவர்களிடம் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு கைகளில் திருவோடு கொடுக்கும் அவலத்தைத் தாள முடியாமல் கொந்தளிக்கின்றன.
” நாம் விளைவிக்கும் பூமிகளைச்
சிறுக கொறித்துக் கொண்டிருந்த
பெருச்சாளிகள் யாவும்
அவற்றை தற்போது தனக்கானவையாக
உரிமை கோருகின்றன
யாவற்றையும் அவற்றிற்கு கொடுத்து விட்டு
நாம் எதைத் தின்னுவது என
விசனப்படும் என் பிதாவே !
அவை இடும் புழுக்கைகளை உண்ணலாம்
கவலைப்படாதே !
சாந்தி ! சாந்தி ! சாந்திஜீஇ”
தலைவர்களுக்காக, நடிகர்களுக்காக வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு, குடும்பத்தை எண்ணிக் கவலைப்படாமல் உயர்ந்த லட்சியத்தோடு வாழ்பவனின் சட்டைப்பையில் நுழைந்து கொண்டு அவனை முத்தமிட்டு எரிச்சலை ஏற்படுத்தும் தவளைகள். அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன.
காந்தி குரங்குகளின் இருத்தல்
எனும் கவிதையில்
“காற்று போல ஆடி
இலைகளென சொல் உதிர்க்கும் நெடுமரத்தலைவனின்
உடலெல்லாம் பொய்கள்
கிளைவாழ் குரங்குகள்
செவி, கண் பொத்தி
வாய்வழிப் புசிக்குது பார்
வயிற்றுக்கே பாவம் “
இன்னொரு கவிதையில்
“ஆறுக்கு ரெண்டின் இருமடங்கு பேனர்
அதில் நின்றுறங்கும் நம் தலைவர்
ஊருக்கு உழைக்கும் நல்லவன் நானுமாதலால்
நானும் உறங்குகிறேன் அதில் .”
சுற்றிலும் இருக்கும் சிறுமைகளின் அழுத்தம் தாங்க முடியாமல், கோபம் கொப்பளிக்கும் ஒருவன் உருவாக்கிய இந்தத் தவளைகள் உண்மையை அறிவித்தபடியே இருக்கின்றன. தவளைகள் காதுக்குள் வந்து நச்சரிப்பது நிறைய பேருக்கு எரிச்சலாக இருக்கும். ஆனாலும், அந்தரங்கத்தைத் தொட்டு நீ இப்படித்தானே இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு கன்னத்தில் அறைகின்றன.
“அது ஒரு பெருநகரம்
அதில் பல நாய்கள் உண்டு
உண்மை நாய்கள் கொஞ்சம்தான்
வாயாட்டி, சேகண்ட் கொடுத்து
வணக்கம் சொல்லல் என
பலவும் செய்வர் பலரும்.
கொஞ்சம் வயிற்றைப் பிளந்து
கோஸ்,சாஸ், மிளகாய் உடன்
அதிக எண்ணையுமிட்டு
தாளிப்பர் குடலை …..”
புராணங்களையும், ஆன்மீக மரபுகளையும் அதை மட்டுமே நம்பி ஏமாறும் ஒருவன், அந்தக் கடவுள்களை விருப்பம் போல வைத்து செய்கிறான். வெறும் வேண்டுதல்கள் மட்டுமே! கடைசி வரைக்கும் வேண்டுதல்கள் மட்டுமே பக்தனிடத்தில் இருக்கின்றன. அந்தப் பக்கம் கடவுள் அதைக் கேட்டாரா? இல்லையா? உண்மை தெரிந்தாக வேண்டும் என்று கத்தும் தவளைகள் எல்லாவற்றையும் கேலி செய்து சிரிக்கின்றன
” வெய்யில் காலம் மெல்ல வந்து
வேகமாய் மனுஷனைச் சுட்டுப் போட்டது
முதுகுப் பச்சை போய்
காய்ந்த மரமாய் புழுத்துப் பூத்தது
பச்சையைக் கொஞ்சம் உள்ளே தேக்க
பரந்தாமா கொஞ்சம் அதை
அருளச் செய்வாய் !
படியப் பரந்த
இப்பெரிய வெயிலுக்குத்தான்
இந்த பாக்கெட் வாட்டர் எப்படிச் சாலும் ”
மொழியின் செழுமை, கவிதை தரிசனத்தின் மகிமை, அழகியல் புதுமை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் பெருங்காவியம் என்றெல்லாம் இந்தக் கவிதைகளை நெருங்கினால், வாயில் தண்ணீரைத் தேக்கி துப்பி விளையாடும் குழந்தைகள் போல ஆரம்பத்திலேயே தீர்த்தம் தெளித்து உள்ளே அனுப்புகின்றன. வழக்கமான எல்லாவற்றையும் மீறி, புதிய பாதையில் அதுவும் தாறு மாறாகச் செல்லும் தவளைகள் வேடிக்கை பார்ப்பவர்களை திட்டுபவர்களைப் பற்றி கவலைப்படாமல் செல்கின்றன. தொல்காப்பியனை நவீன காலத்தின் நடிகனாக்குகிறது இந்தக் கவிதை
“ என் பாட்டன்களின்
நைனா தொல்காப்பியன்
சாயா குடித்துக் கொண்டிருக்கிறான்
பிரஞ்சு பியர்டுடனும்
பெல்ஸ் பேண்ட்டுடனும் இருக்குமவன் சிறப்பு நட்சத்திர அக்மார்க்
நடிகனைப் போல …..”
தேர்வு எழுத வந்தவர்களை, தீவிரவாதிகள் போல பலமுறை சோதனை செய்து அனுப்பும் நடைமுறையில் படித்த பாடமெல்லாம் மறந்து போய் பெயருக்கு ஏதோ எழுதிவிட்டு திரும்பும் தலைவனும், தலைவியும் எரிச்சலோடு பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது எழுந்த கவிதை
“மயிர்ப்பரப்பில் சோதனை செய்ய
என்ன மயிர் இருக்கிறது
என்று தலைவிக்குப் பலமுறை
கேள்வி வந்தது
அவள் வந்த கேள்விகளை
டேக்– டைவர்ஷன் போர்டு காண்பித்து
திரும்பவும் தொண்டைக்குள்ளேயே திருப்பி அனுப்பினாள்.
ஆகையால் அவள் தேசத்துரோகி இல்லை என்பது நிறுவப்பட்டு
தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டாள் ”
பார்க்குமிடமெல்லாம் அநியாயத்தின் நிறம் படர்ந்திருக்கிறது. அதைப் பூசிக் கொள்ள நிர்பந்திக்கப்படும் ஒருவன் வீட்டுக்கு வந்து கழுவி வெளியேற்றும் நிறங்களோடு தோலும் வெளியேறுவது போன்ற வலி ஒவ்வொரு கவிதையின் பின்னும் இருக்கிறது. வலியை மறக்க எல்லாவற்றையும் பகடி செய்து சிரித்துக் கொண்டே பாடுகிறான். பகடி என்றால் பகடி மட்டுமல்ல. நாம் அருவருப்பாக நினைப்பவற்றை நாசிக்கு அருகில் கொண்டு வந்து நிலைகுலையச் செய்கிறான். தவளைகள் விடாது கத்திக் கொண்டே இருக்கின்றன. முக்கியமாக நம்மைத் தூங்கவிடாமல் செய்கின்றன.
சொல்வெளித் தவளைகளின் கவிதைகள் ஒரே தட்டலில் திறக்கும் கதவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதால், அவை எளியவை அல்ல. அடுத்தடுத்த கதவுகளைத் தேடும் வாசகனின் முதுகில் ஒரு அடி கொடுத்து, போய் தெருவைப் பார்! ஊரைப் பார்! நாட்டைப் பார்! என்று விரட்டுகின்றன.
நூல் : சொல்வெளித் தவளைகள்
ஆசிரியர் – றாம் சந்தோஷ்
வெளியீடு : சொன்மை பதிப்பகம்
வெளிவந்த ஆண்டு -2018
விலை : ரூ. 110