
கதவுகள்
ஒரு வீட்டின் கதவு
பெரும்பாலும் சாத்தியே கிடக்கிறது
எப்போதாவதுதான் திறக்கிறது
ஒரு வீட்டின் கதவு
இரவைத் தவிர பகலில் எப்போதும்
திறந்தேயிருக்கிறது
ஒரு கதவு
பசிக்கிறது என வரும்
பிச்சைக்காரர்களுக்கும் திறக்காமல்
இறுக்கமாக மூடிக்கிடக்கிறது
ஒரு கதவு
யாராவது உதவி கேட்டு வருவார்களென எதிர்பார்த்தபடி
திறந்தே இருக்கிறது
கோயிலிலிருக்கும் கதவு
விபூதியும் குங்குமும் வைத்துக்கொண்டு
பக்திமயமாக இருக்கிறது
மதுக்கடையிலிருக்கும் கதவு
பாதி முலைகளைக் காட்டியபடி
கிறங்கிய கண்களோடு நோக்கும்
பெண்களை வைத்துக்கொண்டு
போதையேறி நிற்கிறது
ஒரு கதவு
தனக்குப்பின்னே கேட்கும்
விசும்பலொலி கேட்டு
யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா என
உதவி கேட்டு நிற்கிறது
ஒரு கதவு காதல் பார்வைகளை
ஏந்தி ஏந்தி
வெட்கப்பட்டு நிற்கிறது
கதவுக்கு முன்புறமும் கண்கள் உண்டு
பின்புறமும் கண்கள் உண்டு
ஒவ்வொரு கதவுக்கும்
நான்கு கண்கள் உண்டென்றாலும்
கதவுகள் ஒரே மாதிரியானவ அல்ல
கதவுகள் பலவகைப்படும்
****
தொடுவானம்
கடற்கரையிலிருந்து பார்க்கும்
தொடுவானம்
வெகுதூரத்திலிருக்கிறது
சுலபமாக நடந்துபோய்த்
தொட்டுவிடலாம் என்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்
அங்கிருந்துதான் அவன் அம்மா
சுண்டல் தயார் செய்து
ஒவ்வொரு மாலையும்
கடற்கரைக்கு அனுப்பி வைப்பதாகச்
சொல்கிறான்
நானும் அவனுடன் வருகிறேனெனச் சொல்லி
ஒரு நாளில் கடற்கரையோரத்திலிருந்த
அவன் வீட்டை அடைந்தேன்
தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்த வீட்டில் அமர்ந்தபடி
தொடுவானம் எங்கேயெனக் கேட்டேன்
தொடுவானம் இப்போது எனக்கு
எதிர்த்திசையிலிருந்தது
தினமும் தான் அங்குதான்
சுண்டல் விற்பதாகச் சொல்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்
அவனுடைய அம்மா
சுண்டல் தயாரிப்பதற்கான வேலைகளைத்
தொடங்கியிருந்தாள்
சிறுவன் தான் தினமும்
சுண்டல் விற்பதாகச் சொன்ன
திசையில்
கடலைத் தாண்டி தொடுவானம்
சிரித்துக்கொண்டிருந்தது
****
அறிமுகம்
வேகமாகக் கடந்து போன
இரு சக்கர வாகனம்
திடீரெனத் திரும்பி
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த
என்னருகில் வந்தது
அருகில் வந்து
கூர்ந்து பார்த்தவர்
‘அல்ல’ என்றார்
நீங்க s.k.ராஜ் அல்ல என்றார்
அல்ல என்றேன் நானும்
நான் அவருடைய நண்பர்
s.k.ராஜ் போலவே இருப்பதாகவும்
s.k.ராஜ் என நினைத்தே
என்னருகே வந்ததாகவும் கூறினார்
எனக்கு அறிமுகமில்லாத
s.k.ராஜை
எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு
அவரை அறிமுகப்படுத்திக்கொள்ளாமலே
சென்றுவிட்டார்
அறைக்குவந்து
கண்ணாடியில் முகம் பார்த்தேன்
நலமா எனக் கேட்கிறார்
s.k.ராஜ்
கண்ணாடிக்குள்ளிருந்து
****
வரிசை
இன்னும் வெகுதூரத்திலிருக்கிறார்
கடவுள்
வரிசை நீண்டிருக்கிறது
நகர்ந்து சேரும் முன்
நடை சாத்தப்பட்டு விடுமோ?
வரிசையில்
கடைசி ஆளாய் நிற்கிறேன்
டிக்கெட் கிடைக்குமோ? கிடைக்காதோ?
தெரியவில்லை
கிடைத்தாலும்
உள்ளே செல்வதற்குள்
படம் ஆரம்பித்துவிடுமோ?
அடுத்த சிவப்பு விழுவதற்குள்
கடந்து விட முடியுமா?
சிக்னலில் மெல்ல நகர்கிறது
வாகன வரிசை
இன்னும் விடியவேயில்லை
ரேசன் கடை வாசலில்
நீண்ட வரிசை
இன்று மண்ணெண்ணெய் ஊற்றுவதாக
நேற்றிரவு சாட்டினார்கள்
ரயில் புறப்பட
இன்னும் ஐந்து நிமிடங்கள்தானுள்ளன.
டிக்கெட் வாங்க வரிசையில்
எனக்கு முன்னே
பன்னிரெண்டுபேர் காத்திருக்கிறார்கள்
வாழ்வென்பது வேறொன்றுமல்ல
வரிசைகளில் நின்று
வரிசைகளில் நகர்வது
****
இரவு
உறக்கம் வராத நாய்கள்
வீதிகளில் விழுந்து கிடக்கும்
நட்சத்திரங்களை எடுத்துக்கொண்டுபோய்
பத்திரமாக வானத்தில்
விட்டுவிட்டுத் திரும்புகின்றன
மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளில்
தனக்குப் பிடித்த இலைகளை மட்டும்
காற்று
தன்னோடு கூட்டிக்கொண்டு நடந்துபோகிறது
தெருவிளக்குகளின் வெளிச்சத்தில்
தன்னை வீதியில்
வரைந்து பார்க்கும் மரத்தின் முகத்தில்
தன்னைப் பற்றிய அழகு குறித்து
அளவிடமுடியாத சந்தோஷம்
கயிறுகள் ஏதுமற்ற மாடு
இரவோடு
பகலைப் பற்றிப் பேசிக்கொண்டு
தனியாகப் படுத்திருக்கும்
வீதிக்குத் துணையாய் நடந்துபோகிறது
வீதிக்குள் நுழையும்
மின்மினிப்பூச்சியை
தவறி விழுந்த நட்சத்திரமென்று
காப்பாற்ற எழுந்தோடிவந்த நாய்
படபடப்பு அடங்கி
மின்மினிப்பூச்சியை முத்தமிட்டுவிட்டு
பழைய இடத்திற்கே சென்று
படுத்து உறங்கத் தொடங்குகிறது
சலனங்கள் குறைந்து போன இரவு
தேர்ந்த ஓவியனொருவன் வரைந்த
உயிர்ப்பான சித்திரமென
உறைந்து நிற்கிறது
*****
முடிவு
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
உங்கள் வசையைக் கேட்டுக்கொண்டு
அழுதுகொண்டே கடந்துவிடுகிறான் ஒருவன்
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
வசைக்கு ஆளானவன்
உங்கள் மேல் காவல் நிலையத்தில்
புகாரளிக்கிறான்
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
தலைவிதி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு
அமைதியாகப் போய்விடுகிறானொருவன்
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
கேட்டுக்கொண்டு வீட்டுக்குப்போனவன்
தூங்கமுடியாமல்
இன்னொருவனோடு சேர்ந்து வந்து
உங்களைத் திட்டுகிறான்
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
அவன் மறுத்துக்கொண்டேயிருந்துவிட்டு
கோவிலுக்குச் சென்று
வருத்தங்களை கடவுளிடம் முறையிடுகிறான்
நீங்கள் வசைபாடுகிறீர்கள்
கோபம் தலைக்கேறிய ஒருவன்
கத்தி எடுத்து
உங்கள் குரல்வளையை அறுத்துவிடுகிறான்
அதற்குப் பிறகு
வசைபாடுதல் நிறுத்தப்படுகிறது
அல்லது நின்றுபோகிறது
******