
1.
அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு, சிலுவை குத்தி நிறுத்தி ‘கோயில் மணி நாடார்’ என்று கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்லறை மீது குப்புறப் படுத்தால், முதுகைப் பிளக்கும் உச்சி வெயிலும் உரைக்காது. உயிர் சிவ லோகத்தில் பொன்னூஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருக்கும். கொஞ்சம் மேற்கு தள்ளி கிழக்கு பார்த்தவாறு சிவ சுடலை மாடனின் தலம். அப்போதெல்லாம் மேற்கூரை இல்லாத ஆலமரத்தடி திண்டில் சுடுகாட்டை நோக்கியவாறு ஆங்காரச் சுடலையின் திரு உருவம் விழுது இடுக்குகளில் தெரிந்து கொண்டிருக்கும். சுப்பையா வரிக்காரர்களிடம் பேசி கல் தூணுடன் கொட்டகையை கட்டியதால் இப்போது கல் தூண்களுக்கிடையில் சுடலை காட்சி தந்துகொண்டிருக்கிறார். இருப்பினும் சுத்தம் செய்ய ஆளில்லை. நிறைய புள்ளதாச்சிகளை அடித்திருப்பதாய் பேச்சு. சுப்பையா ஊரில் இருந்தவரை சுடலையைச் சுற்றி இப்படி புதர்கள் மண்ட விட்டதில்லை. விழுதுகளை வெட்டி, புல்லைச் செதுக்கி, நேர் பண்ணி வைத்திருப்பார். அடிக்கும் வெயிலுக்கு தினமும் ஒரு குடம் குளிர்ந்த தண்ணீரும் கிடைத்துவிடும் சுடலைக்கு.
கோயில் மணியாருக்கு சுடலையிடம் ஒரே ஒரு வேண்டுதல் தான். “ஏம் பொண்டாட்டி ராத்திரில மேல கை போட்டாலே எனக்கு மூச்சு முட்டும். தெனோம் இந்த ரத்னசாமி வாத்தியாரு மொவன் என் நெஞ்சு மேல விழுந்து கெடக்கான். எனக்குன்னா திக்கு முட்டு அடிக்கு. செத்தையம் இவன எழுப்பி விடுயா.” என்று சிலுவைக்கு மேல் கைகூப்பி வேண்டாத நாளில்லை. மேற்கே தலை சாய்த்திருப்பதால் அவரால் சுடலையைப் பார்க்க முடியாது.
பூதத்தானுக்கு சாராய வாடை ஆகாது. அங்கும் இங்கும் உருண்டு முகம் சுழித்துக் கொண்டிருப்பதே நிலையாகிவிட்டது. அப்பாவிடம் நெருங்க பயம். மாயவனின் வாயிலிருந்து வரும் காட்டமான வாடை தாங்க ஆகாது. குழந்தையை அந்த பாபநாசநாதர்தான் குழிக்குள் கொண்டுவந்து போட்டது. ஐந்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு முன் ஏதோ ஒரு சனிக் கிழமை. துணிகளையெல்லாம் கோணிப்பையில் கட்டிக் கொண்டு பிள்ளையையும் கூட்டிக் கொண்டு அகத்தியர் தலையணைக்குச் சென்றிருந்த போது, தூரத்தில் குதித்து அணையின் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த மேரியின் காலுக்கு அருகில் எழுந்து, அவளை வியக்கச் செய்து கொண்டிருந்தான் பூதத்தான். சுதாரிப்பதற்குள் நேரம் கடந்து விட்டது. குதித்த பிள்ளை காலுக்குள் எழும்பவில்லை. கொடியில் சிக்கி ஆழ்ந்து விட்டான். எவ்வளவு அழகாக இருந்தது அந்தத் தாமரை. அதிலொன்றை அம்மாவுக்கும் கொய்து கொடுத்திருந்தான்.
“விவிலியத்த ஓங் காலுக்கு அடில வச்சதுக்கு நீ எனக்கு குடுத்ததுல்ல.. இது. எல்லாரும் பாவத்த தொலைக்க ஓங்கிட்ட வந்தா, நீ ஓம் பாவத்த ஏங்கிட்ட தொலைக்க கேட்டுட்டியே.” என்று பாபநாச நாதரின் முன் மண்டியிட்டு ஒப்பாரி வைத்தாள் மேரி. ஊரிலிருந்து அவள் அண்ணன்தான் வந்து கூட்டிச் சென்றான்.
திருமணத்திற்காக எமிலி அக்காவின் கைகள் சிவக்க மருதாணியிட்ட, சுதாகரின் பிறந்தநாளுக்கு கால் சட்டை தைத்துக் கொடுத்த கலாதேவியின் கடாட்சம் நம்மேல் விழாதா என ஏங்காதவர் ஊரிலில்லை. உள்ளூர் குடித்தனத்துக்குள் வாக்கப்பட்டது என்னவோ சந்தேகப் பேர்வழிக்கு. சகஜம் பாராட்டக் கூடாது. கால் மட்டும் அல்ல பல்லும் படிதாண்டக் கூடாது. ‘பால்காரன் பாலைக் கடைந்து வெண்ணை எடுத்துவிட்டான்’ என்று ஊர் வாய் பேசி, அந்த சந்தேகப் பேர்வழியின் காதுக்கு வந்தது. அடுத்தநாள் ஊரில் யாரும் பால் வாங்கவில்லை. முந்தின நாள் வாங்கிய பாலை கலாதேவியின் வாயில் ஊற்றக் காத்திருந்தார்கள்.
செங்கச்சூலையிலிருந்து வந்த வேகத்தில், “இல்லாமையாலா சொல்லுவாவ. நீ அவன் கிட்ட பல்ல காட்டுனதத்தான் ஊரே பாத்துருக்கே. அவுத்துப் போட்டதத்தான் பாக்கல. தேவிடியா செறுக்கி… இதுக்கு மேலையும் ஒன்னைய விட்டா அதையும் காட்டிருவ.” – என்று அந்த சந்தேகப் பேர்வழி பல்லை நெறித்துக் கொண்டு செவிட்டில் விட்டதில், கலாதேவி கோவில் மணியாரின் பக்கத்தில் சரிந்து விழுந்தாள்; விழுந்த நொடியிலிருந்து கணக்கில்லா கற்பழிப்புகள். கல்லறை மேல் விந்துத் துளிகளின் தூவானம். இளவட்டம் மத்தியில் கலாதேவியைப் பற்றி அநிய கதைகளுண்டு. நிறையபேர் படுத்தெழும்பிப் போவதும் உண்டு. அவளுக்கு சுடலையிடம் வேண்டுதலெல்லாம் எதுவும் இல்லை. கோபம்தான்.
“கடைசியில நீயும் என்னைய… இப்டி. நா அப்டிதான்னு ஊருக்கு நிரூபிக்கியோ. பாத்துட்டுதான இருக்க, ஒனக்கு ஏம் பேரு தேவின்னு தெரியாது? அதுசரி.. நீயும் மாவிசக்கிய… பெறவு எப்டி என்னைய தேவியா நெனப்ப; நீங்கதான் ஒரு பொண்ணு சிரிச்சாலோ, எயித்து பேசினாலோ உடனே அவளுக்கு பேரு வச்சிருவியலே தேவுடியான்னு!” மயான சுடுகாட்டில் அவளின் அறக் கதறல்.
காசியப்பன் கறிக்கடையில் கொஞ்சம் கறியை வாயில் கவ்வியதற்காக மண்டையில் வெட்டு வாங்கியதில் புழு வைத்து சுருக்கிடப்பட்ட மணிக்கு சுடலையிடம் ஒரு கேள்வி. “ஒனக்குன்னா மட்டும் கெடாவ கொண்டாந்து பரண்ல கட்டுதானுவ. நா ஒரேயொரு துண்டு கறிய எடுத்ததுக்கு அந்தக் காசி கெடா வெட்டுத கத்தியப் புடிச்சு மேல எறிஞ்சுட்டான். மருந்து போடப் போரானுவன்னு நெனெச்சுதான் கிட்ட போனேன். மரணப் பாடைல கெடத்திட்டானுவ. ஒன்னு கேப்பேன்; நெசத்தச் சொல்லணும், இவனுவளுக்கு காவலுக்கு நின்னது நானா? நீயா?”
சிவ சுடலையின் கண் பார்வைக்கு கொஞ்சம் தள்ளி தென்னந்தோப்பிற்குள் விளக்கு வைத்து வணங்கப்படும், நிலக்கிழார் என்று அழைப்பிதழ்களிலும் அறிவிப்புகளிலும் பட்டத்தைப் பொறித்துக் கொள்ளும் பொன்னுச்சாமி அண்ணாச்சிக்கு பொது நிலத்தில் அல்லாமல் தன் நிலத்திற்குள் புதையுண்டது மீசையை முறுக்கிவிடத் தோன்றியது. சுப்பையாவைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குடியழைப்புதான் அவர் நினைவுக்கு வரும்.
ஆடி முதல் வெள்ளி குடிமகன் சந்திரன் வாசலில் வந்து நின்று, “ஐயா இன்னைக்கு வரி; எட்டாம் பக்கம் கொட.” என்று சொல்வதைக் கேட்பதற்காகவே விடியும் முன் எழுந்து வேட்டி சட்டை உடுத்தி, நெற்றியிலும் கழுத்திலும் திருநீறு பூசி வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக் கொண்டிருப்பார். முகத்தில் தெய்வக் களை தவழ்ந்தாடும்.
அப்படியொரு ஆடியில், “தொரைக்காவ காத்து கெடக்கணுமோ; சீக்கிரம் வந்தா என்னடே?” என்று உத்திரத்தைப் பிடித்தவாறு பொன்னுச்சாமி அண்ணாச்சி கேட்க, “எனக்கென்ன தோட்டமா? தொரவா? நீங்க பெரும் நெலத்துக் காரவிய; வேல கெடக்கும். ஒரு எட்டு மணிக்கு டேவிட் அண்ணாச்சி கடைல போயி ஒரு கடுச போட்டுட்டு கடைய தொரக்கணும்.” என்று சந்திரன் சலிக்க, “அதுவும் சரிதான். ஓங் கடையிலதான் ஊரு மசுரெல்லாம் துட்டா கொட்டுதடே. சுத்தியுள்ள கொடைவளுக்கெல்லாம் நீயும் ஒங்க அண்ணனும் தான் போறிய போலுக்கு; ஆடில ரெண்டுபேரும் சக்க போடு போடுதியலடே!” என்று ஒரு ஒதுக்கிய சிரிப்புடன் பொன்னுச்சாமி அண்ணாச்சி சொல்ல, “ஆமா, துட்டு பாத்துட்டாலும். பங்கு வைக்கதுக்குள்ள, ‘அத இங்க வை’, ‘அதுல கொறையா இருக்கு பாரு’ ன்னு ஒரு வாய் கறிக்கஞ்ச குடிக்கதுக்கு நம்ம மூச்ச தொளச்சுப்புடுவானுவ. இவனுவ சண்டைல நம்ம பங்க மறந்துட்டு, ‘அடுத்த தடவ வாங்கிக்கிடலாம்டே’ ன்னு சொல்லி பேசுனதவிட கொறச்சு பைல சொருவிட்டு, ‘தோல நீ எடுத்துக்கடே.’ ன்னு சொல்ல ப்போரானுவ. துட்டாம் துட்டு. எல்லாம் ஒரு கட்டு.” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சந்திரன் மண்டையை சொறிந்தவாறு, “நம்ம மொதலாளி டேவிட் அண்ணாச்சி கடைக்கு போவவையும் வந்துருவாறு ‘என்ன சந்திரா எல்லா பக்கமும் சொல்லியாச்சா’ன்னு. அவருக்கு சொல்ல வேண்டியதில்ல. இருந்தாலும் மொறன்னு ஒன்னு இருக்குள்ளா. நா வாரேன்.” என்று பேச்சை மாற்றி நழுவ, “மொதலாளியா! யாருடே அது?” என்று பொன்னுச்சாமி அண்ணாச்சி சந்திரனை இழுத்துப் பிடிக்க, “நம்ம இவரு, சுப்பையா நாடாரு.”
“அவனே மூனாஞ்சொக்காரன். கல்யாணம் பிள்ளகுட்டின்னு எதுவும் பாக்காம எல்லாத்தையும் அனாமத்தாக்கிட்டு திண்ணைல கெடக்கான். அவன் ஒனக்கு மொதலாளி ஆயிட்டானோடே?” என்று தன் தலை உத்திரம் தட்ட எக்கிச் சொல்லியவர், சுடலைக்கு தினமும் கட்டளையிட்டுக் கொண்டேயிருக்கிறார். – “ஏம் புள்ள வயித்துல ஒரு புழுப் பூச்சிய உண்டாக்கு.”
சர்மிளாவுக்காக நஞ்சுண்ட அப்துல், கணவனின் கடனால் பிள்ளைகளைத் தவிக்க விட்டு உத்திரத்தில் நாண்டுகிட்ட பூவம்மை, சீக்குப் பிடித்து கிடையாய் கிடந்து மாண்ட மாயாண்டி. இன்னும் பலர் சுடுகாட்டில்; அவர்களுக்குள்ளும் வேண்டுதல்கள், கோபம், கேள்வி இன்னும் பல.
அத்தனையையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கும் சுடலையின் கண்களில் ஆங்காரம் துடித்தாடும். படுத்துக் கொண்டிருப்பவர்களின் பார்வையெல்லாம் சிவ சுடலையின் வல்லையத்தின் மேல்தான். கண்களிலிருக்கும் துடிப்பு வல்லையத்திற்குள் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றாதா என்ற அவதானிப்பு. கலாதேவிக்கோ அந்த ஆங்காரம், மிரட்டும் தொனி; இணங்க வைக்கும் அதிகாரப் பார்வை. எத்தனை முறை எம்பிப் பார்த்தாலும் அதே ஆங்கார மிடுக்கு; கண்களிலும் நிற்கும் தோரணையிலும் மட்டும்.
2.
ஆடி இரண்டாவது வெள்ளி சுடலைக்கு கொடை. இந்த ஆண்டு சுப்பையாவால் நான்காவது வெள்ளிக்குத் தள்ளிவிட்டது. காலையில்தான் வந்திறங்கியிருந்தான் ராமன். அந்தோனியார் பள்ளிக் கூடத்தை கடக்கையில் போன ஆண்டு புனிதநீர் பவனியின் போது பள்ளிக்குள் வெடிகளை கொளுத்திப் போட்டு தலைமை ஆசிரியர் சோசப்பை, சுப்பையா வம்புக்கு இழுத்தது நினைவுக்கு வந்தது.
உச்சி வெயில். ராமனின் தலையில் குற்றால நீர் நிரம்பிய வெண்கலக் குடம். குடத்தின் தலையில் சந்தனமும் குங்குமமும் பூசப்பட்ட தேங்காவும், மாவிலைகளும், ஒரு சுருட்டிய மாலையும். ராமனின் கழுத்தில் ஒற்றை சம்பங்கிப்பூ மாலை. மஞ்சள் காப்பு கட்டிய கையில் ஒரு எலுமிச்சை. தலையிலிருந்த குடத்தைப் பிடிக்காமல் முன்னும் பின்னும் சாய்ந்து ஆடியவாறு ராமன் அடியெடுக்க, சிறுசுகள் அவன்முன் டவுசரைப் பிடித்துக் கொண்டு ஆட, இளசுகள் விசில் அடித்து கை அசைக்க, பெருசுகள் பிரம்பங்கை கட்டி நடக்க, பெண்களின் ஆரத்தி வரிசை நீள, நையாண்டி மேளக்காரர்கள் முன் சுப்பையா வாண வேடிக்கை காட்ட, ஊர்வலம் அந்தோனியார் பள்ளிச் சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது. பூவரசன் ஏதோ சொல்ல சுப்பையா ஒரு சரத்தைக் கொளுத்தி பள்ளிக்குள் போட்டார். சப்தம் கேட்டு ஓடி வந்த தலைமையாசிரியர் சோசப் ஊர்வலத்தை நிறுத்தினார். மேளக்காரர்கள் குச்சியை மேளத்தில் சொருகிவிட்டு பக்கத்திலிருந்த மர நிழலில் ஒதிங்கினர்.
“இப்டி படிக்க பிள்ளைவ இருக்க எடத்துல வந்து ஊளச் சத்தம் போட்டுக்கிட்டு வெடியையும் கொளுத்திப் போட்டா என்ன அர்த்தம். புகாரு குடுக்கண்டியருக்கும்; பாத்துக்கிடுங்க.” என்று எச்சரித்தார் சோசப்.
“குடுல பாப்போம். ஒங்க சாமி பொறந்த நாளுக்கு பள்ளிகொடத்து மணிய அடிச்சு பிள்ளைவள பத்தி விடுவ. எங்க பிள்ளைவ கோயில் கொடைக்கு ஒரு நாள் விடுப்பு கேட்டதுக்கு கைல கெடந்த கயிற அவுக்கச் சொல்லி அடிச்சிருக்க. ஊருக்குள்ள இருக்கணும்னா ஒழுங்கு மரியாதையா நடந்துக்க. அதான் ஒனக்கு நல்லது. அடில மேளத்த.” என்று சுப்பையா கத்தவும் மேளம் முழங்கியது. ஊர்வலம் ஊருக்குள் முன்னேறியது. சோசப் வந்த வேகத்தில் உள்ளே திரும்பினார். விசில் சப்தம் பலமானது. “போட்.. போட்..” என்னும் கோசம்; சுடலை எதையும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
இரண்டாம் தாரத்தை கட்டிய பிறகு ராமன் கேரளாவுக்கு வேலைக்குச் சென்று விட்டான். பிள்ளை குட்டிகளெல்லாம் ஊரில்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊர்ப் பயணம். சாமி கொண்டாடி என்பதால் ஆடி மாதம் குறி சொல்ல வந்தாக வேண்டும்; மக்கள் அழைப்பு. ‘சொன்னா தப்பாது’ என்ற பேச்சும் உண்டு. நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம், தொழில் பாக்கியம் கிடைத்துள்ளதாக நம்பிக்கை. சுப்பையாவோ பிணி நீங்கி கெதியாக லாந்திக் கொண்டிருப்பது ராமன் போட்ட திருநீறால் தான் என்று சுடலையின் கோயில் திண்ணையை படுக்கையாக்கிக் கொண்டார்.
குடும்ப சகிதமாக ராமன் கோவிலுக்குள் நுழைவதற்குள் அங்கு வியாழக்கிழமை மதிய சைவப் படையல் போடப்பட்டு, செல்வி மாதவி வில்லிசைக் குழுவினரின் சுடலை மாடன் கதை தொடங்கியிருந்தது. வந்ததும் முருகன் தாம்பூலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தான். மக்களெல்லாம் திருநீறை நெற்றியில் வாங்கிக் கொண்டனர். சுப்பையா ஊரில் இருந்தவரை தாம்பூலத்தை எடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான். அவர்தான் எடுத்து ராமனின் கையில் கொடுப்பார். காய்கறியில் வகையாக சமைத்து சுடலைக்குப் படைத்துவிட்டு, வில்லிசைக் குழுவினரின் முன் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுவார். ஒவ்வொரு ஆண்டும் சலிக்காமல் சுடலை கதையைகே கேட்பார். மாதா மாதம் கடைசி வெள்ளிக்கு சர்க்கரைப் பொங்கல் அவர் பொறுப்பு. ‘படையலில் சுடலைக்கு திருப்தி இருக்குமா?’ என்பதுதான் அவரது கவலையாயிருக்கும். சுப்பையாவின் சொதியலை மெச்சாதவர்களே இல்லை. ‘சுப்பையா நாடார் கைப்பக்குவமே தனிதான்; யாருக்கும் வராது!’ என்பார்கள். இப்போதோ படையலுக்கு செல்வன் சமையல் குழுவினரிடம் நாட்டம்.
“ஆண்டவராகிய சிவனார்
தன் பிள்ளைக்கு எப்படி எப்படி பேர் வைக்கிறார்;
மணிவிளக்கில் பிறந்ததாலே மாயாண்டி ஒரு பெயரு,
சுடர் ஒளியில் பிறந்ததாலே சுடலையென்று ஒரு பெயரு.,
முண்டமாக உருண்டதாலே…
முண்டமாக உருண்டதாலே முண்டனென்று ஒரு பெயரு…
ஒனக்கு முண்டனென்று ஒரு பெயரு”
“…”
“ஆரிரரி ஆராரோ ஆரிரரி ஆராரோ
ஆரிரரி ஆராரோ ஆரிரரி ஆராரோ
கண்ணே ரரிரரி ராராரோ ரரிரரி ராராரோ
கண்ணே மணியுறங்கு
என் கண்மணியே வந்துறங்கு
பொன்னே மணியுறங்கு
ஏம் பூமரத்து வண்டுறங்கு”
மாதவியின் குரலில் தாலாட்டு; சொக்கித்தான் போவார்கள் கேட்பவர்கள். பெருசுகளெல்லாம் பனவோலை விரித்தமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். மாதவியைப் பார்க்கவந்த இளசுகள் சாரத்தை திரைத்துக் கட்டிக் கொண்டு திண்ணையில் அமர்ந்து பாதத்தை சொறிந்து கொண்டிருப்பார்கள். இடையே ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் இருக்கும் பலூன்கள் சுடுக்காட்டை விழாக்கோலம் பூணச்செய்யும்.
வியாழன் மதியமும் இரவும் வில்லுப்பாட்டு, வெள்ளி காலை நையாண்டி மேளம், மதியம் புனிதநீர் பவனி. வாண வேடிக்கை காட்ட சுப்பையாதான் இல்லை. எல்லாம் முடிந்து ஊட்டுக்கொடை தொடங்கியது.
3.
சுடலை சாமத்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளை. சிலர் விரித்துச் சாய்வதற்கு போர்வை மற்றும் தார்பாயோடு சுடுகாட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தனர். திண்ணைக்கு முன்னாலும் ஆலமரத்தைச் சுற்றியும் தட்டியால் மேவி கட்டப்பட்டிருந்த சுடலையின் கோட்டை வாசலில் வாழைமரம் நட்டு இரண்டு கட்டிக் கேந்தி யானைக்கால் மாலை தொங்கவிடப்பட்டிருந்தது. வாசலுக்கு எதிரே கட்டப்பட்டிருந்த பரணுக்குப் பக்கத்தில் மூட்டப்பட்டிருந்த அடுப்பில் மதியம் காவு கொடுக்கப்பட்ட மூன்று கருங்கிடாக்கள் வெந்து கொண்டிருந்தன. வாசலுக்குப் பக்கத்தில் சாம்பிராணி போடுவதற்கான கங்குகளை சேகர் தயார் செய்துகொண்டிருந்தான். பக்கத்தில் எண்ணெய் தடவிய பந்தம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தூணுக்குத் தூண் கொச்சையில் ஆர மாலைகள், வேப்பங்கொழுந்து, மா இலைகள் கட்டப்பட்டிருந்தன. நிலையில் சல்லடை குல்லா. நிலைக்கு அருகில் வலது கரையில் இருந்த தூணுக்கிடையில் பல்வேறு ரகத்தில் வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. பீடங்களுக்கு கலசம் ஏற்ற தென்னம்பாளை குருத்துக்களுடன் கலயங்கள் நிலையின் இடது கரையில் இருந்தன. பெண்கள் அனைவரும் இடது புறத்தில் விரிப்புகளை விரித்து அமர்ந்திருந்தனர். நேமிதமாக வந்த வல்லையங்களும் வீச்சருவாக்களும் எழுமிச்சைப் பழம் சொருகி சந்தனம் குங்குமம் தடவப்பட்டு ஆலமரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. நடுவே சிறியதும் பெரியதுமாய் பத்துக்கும் மேற்பட்ட வெண்கல மணிகள். சுடலையின் கோட்டை முழுவதும் ஒருவித கிறக்க வாடை. சாராயத்தை முகராதவரையும் அசைத்துப் பார்க்கும் வாடை. சாமந்தி-சம்பங்கி, திருநீறு, பன்னீர் மூன்றின் மணமும் கலந்த வாடை. இதற்கிடையில் சாம்பிராணி புகையும் கலந்துகொண்டது.
கொஞ்ச நேரத்தில் வெண்கல மணிகள் கல கலத்தன. மேளச்சத்தத்தில் பேச்சுக்கலெல்லாம் அடங்கிவிட்டது. தாய்மார்கள் பிள்ளைகளை மடியில் இருத்திக் கொண்டனர். முருகன் சாம்பிராணி கரண்டியோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். கோவிலுக்குள் இருந்த பீடங்களின் மேல் வண்ண மாலைகள் விழுந்தவண்ணம் இருந்தன. பூவரசன் கொழுந்து, உதிரி, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு என்று மாலைகளை முருகனுக்கு பிரித்து நீட்டிக் கொண்டிருந்தான். நேமித மாலைகளுடன் சிலர் முருகனின் காலுக்குப் பின் நடந்தனர். கரையாளர் சூடம், ஊதுபத்தி, மாலையோடு வந்து சிவ சுடலைக்கு முன் நெடுங்கிடையாக விழுந்து வணங்கி அவற்றை பூவரசனின் கையில் கொடுத்துவிட்டு வலப்பக்கத் தூணில் சாய்ந்து நின்று கொண்டார்.
கரையாளருக்கு முருகனின் படையலில் திருப்தியில்லை. மாலைகளை கழுத்து மாற்றிப் போடுகிறான். ஈசுவரியின் நெஞ்சுக்குப் பக்கத்தில் வைக்கவேண்டிய கொழுந்தை சுடலையின் வல்லயத்தில் சுருட்டுகிறான். சுடலைக்கு புண்ணாக்கு கம்மியாக வைத்திருக்கிறான். பெயர் தெரியாத பீடத்திற்கு முன் இலையை தலைகீழாக விரித்திருக்கிறான். பெயர் தெரியாத பீடம். அந்த பீடம் யாரையாவது ஆட்டும் போதுதான் தெரியும்; அது இன்ன சாமியென்று. முருகனிடம் சொல்ல மனதிற்குள் தயங்கிக் கொண்டிருந்தார் அவர். முருகனின் கையிலிருந்து விழுந்த தேங்காய் அந்தத் தயக்கத்தை உடைத்தது.
“ஏல முருகா. தேங்காய ஒழுங்கா புடி. சுப்பையான்னா இந்நேரத்துக்கு முடிச்சிருப்பான். பன்னென்டுக்குள்ள முடிச்சிருக்கணும்; நீ என்னன்னா இப்டி தாயமாடிக்கிட்டு கெடக்க. சீக்கிரம் படப்ப போட்டு முடிப்பியலா. ஒரு கொலைய சீப்பு போடுததுக்கு இந்த முக்கு முக்கிட்டு கெடக்கானுவ.” சுப்பையாவை இழுத்துப் போட்டு முருகனிடம் தன் மனதிற்குள் நினைத்து வைத்திருந்ததைச் சொல்லிவிட்டார் கரையாளர்.
“யோ சின்னையா, வந்து போட்டு பாக்கியரா? அவன் அவனுக்கு டவுசரு கிழிஞ்சிட்டு இருக்கு, நீரு தூண்ல சாஞ்சி கெடந்துகிட்டு வியாக்கியானம் பேசுதியரோ. போரும் போயி ஒம்ம சுப்பையையாவ கூட்டியாரும். சீக்கிரமா படப்ப போடட்டும்.” என்று சிரித்தவாறு சீப்பை உரிக்கத் தொடங்கினான் முருகன்.
கரையாளர் சொல்வதும் நியாயம்தான். சரியா பன்னிரெண்டு மணிக்குப் படையலைப் போட்டு முடித்திருப்பார் சுப்பையா. காவி வேட்டியை மடித்து வெள்ளைத் துண்டை இடுப்பில் கட்டி நாலா பக்கமும் சுழன்று வருவார். போன ஆண்டு நிலைப்படியில் வழுக்கி விழுந்து சுப்பையா கெதியிழந்து போனது கரையளாரின் நினைவுக்குள் வந்து போனது. சுருட்டிய நரை முடி. நெற்றியிலிருந்து காதுவரை பிறை போல் திருநீற்றுப் பட்டை. கலங்கிய எந்த ஏக்கமும் இல்லாத கண்கள். சாய்ந்து கிடக்கும் மீசை. நிமிர்ந்த உடல். நீளமான விரல்கள். கையில் அருவாவைத் தூக்கி மீசையை முறுக்கிவிட்டால் சுடலைக்குத் தம்பி போலவே காட்சியளிப்பார்.
ஒருவழியாக பன்னிரெண்டரைக்குப் படையலைப் போட்டு முடித்தான் முருகன். சுடலைக்கு சூடம் காட்டும் போது நையாண்டி மேளக்காரர்கள் அறைந்து முழங்கினர். நாத சப்தம் சுடுகாட்டிலிருப்போரின் நாடியைப் பிடித்திழுத்தது. வழக்கமாக முதலில் முண்டி வரும் லெட்சுமி பாட்டியை இந்த ஆண்டும் காணவில்லை. வேதத்திற்கு மாறிய பிறகு சுடலை சுடுகாட்டுப் பேயாக மாறிவிட்டார். குங்கும கும்பா சுமந்த கை இப்போது விவிலியத்தை சுமந்து கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டே அம்மாவைக் காணவில்லையென்று சுடலை ஒரே அடம். ‘நீதான கூட்டிட்டு வரணும். நீ கூப்ட்டா அம்ம வரமாட்டேன்னா சொல்லப்போறா.’ என்று மக்கள் சுடலையை சமாதானம் செய்வதற்குள் ஒருவழி ஆக்கிவிட்டார்.
“அய்.. அய்..” என்ற சப்தத்தோடு ராமன் நிலைப்படிக் கல்லில் தாவி வந்து சிவ சுடலையின் முன் விழுந்தான். நால்வர் அவன் கைகளையும் கால்களையும் பிடித்து உடல் முழுவதும் பன்னீரில் கரைத்து வைத்திருந்த சந்தனத்தை தடவினர். சிலையின் மீது கிடந்த ஒரு பெரிய மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டுவிட்டனர். முன்னால் தாவி விழுந்தவன் இப்போது பின்னால் தாவி எழுந்து ஆட ஆரம்பித்தான். ஒவ்வொருத்தராக வந்து மாலையை கழுத்தில் போட்டுவிட்டு காலில் விழுந்து வணங்கிவிட்டு அமர்ந்தனர். ஆடிய ஆட்டத்தில் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாலைகள் நாரானது. வாசலை நோக்கி ஓடிய சுடலை கையை மேலே உயர்த்தி ஆட்டியவுடன் பெண்கள் அனைவரும் குலவையிட்டனர். ஆண்கள் ஊளையிட்டனர். முருகனும் பூவரசனும் சல்லடத்தை சிலைக்கு முன்னாக விரித்துப் பிடித்தனர்.
“அய்..” என்ற சப்தத்துடன் தாவி நேராக சல்லடத்திற்குள் குதித்தார் சுடலை. முருகன் சல்லடத்தை இறுக்கி கட்டினான். பூவரசன் குல்லாவை தலையில் மாட்டினான். குலவையும் ஊளையுமாய் சுடுகாடே அதிர்ந்தது. முருகன் தாம்பூலத்தையும் வல்லயத்தையும் எடுத்து சுடலையின் கையில் கொடுத்தான். சுடலை வல்லயத்தை ஓங்கி தரையில் குத்தியதில் தொங்கிக் கொண்டிருந்த மணிகள் சிதறி அமர்ந்திருந்தவர்களின் மடியில் விழுந்தன. ‘செத்தையம் மெதுவாத்தான் ஆட்டுனா என்ன? சாமி இப்டி ஆட்டுனா மனுசன் தாங்குவானா?’ என்று சுற்றியிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
இடுகாட்டின் ஆழ்ந்த அமைதியில் துடித்தாடும் சுடலை மனிதனின் ஆதி குணம். நிறைவேறப் போகும் வரம். ஓய்வது அறிந்தும் அகங்காரம் ஓங்கி நிற்கும் மனதின் வாக்குமூலம். யாவும் எமக்குண்டு என்று ஒப்புக் கொள்ளும் மெளனிகளின் ரெளத்திரம். பசியும் வேட்டையுமாய் இருந்த காடு பொட்டலாய் கிடப்பது கண்டு ஆதாளி செய்யும் கானகத்தின் இதயம். ஏக்கம் கொட்டி ஏற்று வரும் முனி.
பொன்னுச்சாமி அண்ணாச்சியின் ஒற்றை வாரிசான மகள் சித்ரா மாலையோடு முன்னால் வந்து முன்னும் பின்னும் குதித்து ஆடிக் கொண்டிருந்த சுடலையை இடைமறித்து, மாலையை கழுத்தில் போட்டுவிட்டு கணவனுடன் காலில் விழுந்து வணங்கி எழுந்து முந்தானையை விரித்து நின்றாள். வாக்கப்பட்டு போன இடத்தில் குலதெய்வம் முதல் அத்துணை தெய்வங்களை வணங்கியும் மூன்று ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால், தான் பிறந்த இடத்து தெய்வத்தை தேடி வந்திருக்கிறாள். சுடலை இருவருக்கும் திருநீறு பூசிவிட்டு மேளத்தை நிறுத்தச் சொன்னவுடன் சப்தம் அடங்கியது. சுடலையின் சல்லடத்திலிருந்த மணிகள் மட்டும் கிலுங்கிக் கொண்டிருந்தது. சித்ராவுக்கு அந்தச் சப்தம் தொட்டில் மணியாகக் கேட்டது.
மூச்சிறைத்த சுடலை, சித்ராவைப் பார்த்து, “ஒனக்கு இல்லப்பா. நீ அடி.” என்று சொல்லவும் மேளம் முழங்கியது. சுடலையிடமிருந்து ‘அய்..’ என்ற சப்தம்.
முந்தானையை விரித்துப் பிடித்திருந்த சித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. விம்மலை அடக்க முந்தானையை வைத்து மூச்சை அடைத்தாள். பிறந்து இறக்கும் உயிருக்காக பெண் சிந்தும் கண்ணீர்தான் சுடுகாடு வந்தடையாது என்றால், இங்கே பிறக்காமல் இறந்த உயிருக்காக சுடுகாட்டிலேயே அவள் சிந்திய கண்ணீர் கூட சுடுகாட்டு மண்ணில் விழவில்லை. முந்தானை அதை வாங்கிக் கொண்டது.
“ஆடுவாராம் பாடுவாராம் ஆதாளி போடுவாராம்
மணிவிளக்கில் பிறந்தபிள்ளை எங்க ஐயா சுடலையாண்டி
ஒத்தப் பந்தம் கையில் பிடித்து யய்யா
ஓடியா ஓடியா ஓடியாய்யா”
“…”
“மையானம் போகவேணும் மாண்ட பிணம் திங்க வேணும்
சுடுகாடு போக வேணும் சுட்ட பிணம் திங்க வேணும்
இடுகாடு போக வேணும் இறந்த பிணம் திங்க வேணும்”
மாதவியின் அழைப்பிற்கு ஏற்ப கொளுத்திய பந்தத்தை சுடலையின் கையில் கொடுத்தான் பூவரசன். சுடலை அதை கக்கத்தில் சொருகிக் கொண்டு மூலத்திற்கும் வாசலுக்குமாய் ஓடினார். நான்காவது முறை வாசலை நோக்கி ஓடிய போது வாசலைத் தாண்டிவிட்டார். உடனே ஒரு குடம் நிறைய தண்ணீரோடு பூவரசன் வாசலுக்கு ஓடினான். மேளச் சப்தமும் வில்லுப் பாட்டும் நின்றது. முருகன், ஈசுவரியை சேலையால் மூடிவிட்டு, சுடலைக்கு முன் பெரிய வாழை இலையை விரித்து வெண்பொங்கல் வைத்து கருங்கிடாக் கறியை கோதி ஊற்றினான். பந்தத்தின் வெளிச்சம் சுடுகாட்டுக்குள் மறையும் வரை பூவரசன் பார்த்துக் கொண்டிருந்தான்.
4.
சுடலை சுடுகாட்டிற்குள் இறங்கியதும் பந்தத்தில் இருந்த வெளிச்சம் மங்கி அணைந்தது. சுடலையின் வேகமும் ஆங்காரமும் சற்று தணிந்தது. ஆடிக் காற்றும் சற்று தணிந்து கருவைகளை அசைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே எந்தப் பிணமும் எரியவில்லை. வெள்ளையடிக்கப்பட்ட ஒரு புது கல்லறையின் மேல் அமர்ந்த சுடலை வல்லயத்தை பக்கத்தில் குத்தி நிறுத்திவிட்டு சல்லடத்தில் கட்டியிருந்த துண்டிலிருந்து ஒரு சுருட்டை எடுத்துப் பந்தத்தில் பற்றவைத்து இழுத்தார்.
ஊதிய புகையின் ஊடாக ஒருவன் சுடலை அமர்ந்திருந்த திசையை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஆள் பார்ப்பதற்கு இருபது வயது இளவட்டப் பயல் போலிருந்தான். பொலிவான, மீசை அரும்பாத முகம். சட்டையில் இரண்டு நிறங்கள். யானைக்கால் காலாடை. காலில் செருப்பில்லை. சுருள் முடி நெற்றியில் பூசியிருந்த திருநீற்றின் மேல் ஆடிக் கொண்டிருந்தது. அந்த வெண் சாம்பல் சுடுகாட்டிற்கு வெளிச்சம் ஏற்றியது போல் இருந்தது.
சுடலையின் மூச்சின் வேகம் கூடியது. “ம்.. ம்..” என்று நாக்கைத் துருத்தினார். ஆங்காரம் தலைக்கேறியது.
“என்னடே, ஏங்கிட்ட ஒனக்கென்ன கோவம்.” வந்தவன் சுடலையிடம் பேச ஆரம்பித்தான்.
“ம்.. ம்..”
“நா இங்கேயேதான் கெடப்பேன் டே. ஏங்கிராத. இத விட்டா எனக்கென்ன! வீடா? குட்டியா?”
“ம்.. ம்..” சுடலையிடமிருந்து அதே துருத்தல்.
மெதுவாக தலையைத் திருப்பிய அவன் கலாதேவியின் கல்லறையைப் பார்த்துவிட்டு,”இந்தப் புள்ளைய பாத்தா அப்டி தெரியலையடே; ஒனக்கு எப்டி படுது?” என்று கேட்கவும், சுடலையின் முகத்தில் மாற்றம். முகத்தை கலாதேவியின் கல்லறைக்குத் திருப்பினார். ஏறியிருந்த ஆங்காரம் சுருட்டுப் புகையுடன் மூக்கு வழியே இறங்கியது. ஏதோ ஒன்றை இழந்துவிட்ட கவலை கண்களில்.
அந்தக் கலக்கத்தைப் பார்த்ததும் அவன், “இந்த பச்சப் புள்ள மொகத்த பாத்துருக்கியா?” என்று பூதத்தானின் கல்லறையை நோக்கி கையை நீட்டினான்.
“என்னடே பாவம் செஞ்சுதுவ, இந்த இல்லாது பட்டதுவ. கெடப்புல போட்டும் பட்டுன்னும் இப்டி மாத்தி மாத்தி அடிக்கியே. நியாயமாடே?” என்று அவன் கேட்கவும், உவர்ப்பான கடலைத் ததும்பச் செய்யும் மழைத்துளியில் ஒன்று தெரித்து விழுந்தது போல் சுடலையின் கண்கள் அலையாடியது. மேரியின் கண்ணீர் சுடுகாட்டு மண்ணில் வீழக் காத்திருந்தது.
“இந்தா கெடக்கானே இந்த மணி; இவன்… கொன்னு சத திங்கதுக்கு நாக்கு வடிச்சா இப்டிதான்னு மட்டும் நெனச்சுராதடே. அப்டி நெனச்சன்னா அடுத்த கத்தி ஓந்தலைக்குத்தான்!” என்று அவன் கூறவும் சுடலைக்கு ஆங்காரம் ஏறியது. கண்ணீர் கரைக்குள் அடங்கிவிட்டது. இரண்டு இழுப்பு சுருட்டை இழுத்து புகையை விட்டார்.
“ம்.. ம்..” சுடலையிடமிருந்து மீண்டும் அதே துருத்தல்.
“ஏங்கிட்ட ஏன்டே துருத்துத.”
“ம்.. ம்..”
“இன்னுமாடே யாருன்னு மட்டுப் படல?” என்று சொல்லியவனின் நெற்றியில் திருநீறு பிறைபோல் விரிந்தது. அரும்பாத மீசை மடிந்து விழுந்தது. தலையில் சுருள் வெளிறியது. சட்டையின் ஒரு பக்க காவி வேட்டியானது. மறுபக்க வெள்ளை இடுப்பில் இறுக்கிக் கொண்டது.
சுடலையின் கண்களில் அரவமில்லை. சுருட்டு கீழே விழுந்தது.
“அய்..” என்ற சப்தத்தோடு கோவில் மணியாரின் கல்லறையைத் தாண்டி ஓடிய சுடலை திரும்பி வந்து குத்தி வைத்திருந்த வல்லையத்தை அவன் முகத்தைப் பார்த்தவாறு பிடுங்கித் தூக்கிக் கொண்டு கோவிலை நோக்கி ஓடினார். ஓடிய ஓட்டத்தில் காற்றில் உரசி அணைந்திருந்த பந்தம் பற்றிக் கொண்டது. மேரியின் கண்ணீர் காற்றில் கலந்து அதன் வாசத்தைக் கூட சுடுகாடு நுகர்ந்திருக்க வாயப்பிலாத அளவுக்கு கரைந்துவிட்டது.
“என்னய்யா இவன் இப்டி மறந்து போயிட்டான! இவன் அறியத்தான லாந்திக்கிட்டு இருந்தேன்?!” என்ற ஏக்கத்தோடு சுடலை ஓடிய திசையை நோக்கி நின்றார் அந்த காவி வேட்டிக்காரர்.
பந்தத்தின் வெளிச்சம் பூவரசன் கண்களுக்குப் படவும், “சாமி வந்துட்டு” என்று வாசலுக்குள் தலையை நீட்டி கத்தினான். பெண்கள் குலவையிட ஆரம்பித்தனர். சுடலை வாசலுக்கு வரவும் பூவரசன் ஒரு குடம் தண்ணீரை காலில் ஊற்றினான். சுடலை உள்ளே வந்தவுடன் முருகன் பந்தத்தையும் வல்லையத்தையும் வாங்கிக் கொண்டான்.
“அய்..” என்ற சப்தத்துடன் சுடலை போய் சுடலையின் காலில் விழுந்தார்.
குலவையும் ஊளையுமாய் சுடுகாடே அதிர்ந்தது.
********