இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

சுவையிழந்த நாக்கின் தளுகை – லட்சுமிஹர்.

சிறுகதை | வாசகசாலை

னக்கு பிடித்த ஒருவருக்கான உணவை இப்படியாக வாங்க வருவேன் என்று ஒரு போதும் எண்ணவில்லை. அவரின் பல்வேறு கதைகளின் கதாப் பாத்திரங்கள் அனைவரும் பொரிப்பிரியர்களாகவே இருந்திருக்கின்றனர் அவரின் கதையை  வாசித்தவர்கள் எல்லோருக்கும்   அது தெரியும். அவரை ஒருமுறை கூட நேரில் சந்தித்தது கிடையாது. ஒரே முறை அனைவருடன் ஒரு கலந்துரையாடலில் பேசியது அவ்வளவுதான். ஆனால்  இன்று அவருக்கு பிடித்த அந்த பொரியை வாங்க இப்படி வந்து நிற்பேன் என்று நினைக்கவில்லை.

பல்வேறு கதைகளில் அந்த பொரி பற்றியான குறிப்புகள் வந்திருந்தாலும் பொரிக் கடைக்காரரை பற்றி அவர் எழுதிய கதை தனி சிறப்புடையது.  அதில் வரும் அந்த  ரெட்டை கிணற்றை கொண்ட பக்கங்களை கடக்கும் போதே ஏனோ மனம் ஒவ்வொரு முறையும் பதற்றம் கொள்ளும் , ஓரளவு இந்த கதை என்னுள் மிகவும் தாக்கத்தை எற்படுத்திய கதை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதன் முடிவு ஏற்படுத்திய துயரை என்னால் இன்னும் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. எத்தனையோ நாட்கள் அதன் சொற்களில் சுற்றி கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது அதே நிலத்தில் கால் வைப்பது அவர் கட்டமைக்கும் வார்த்தைகளுக்குள் பொருந்தும் முகமாய் மாற முயல்கிறேன். ஆனால் அதை தாண்டி மனம் அந்த மகள் எண்ணத்திலேயே உருண்டோடியது இப்படிப்பட்ட துயரத்தின் ஆரம்பப் புள்ளியே அந்த பொரிக்கடைகாரர் மகள் ஊரை விட்டு சென்றது. நிறைய முறை அதுவரை கதையை  ஒரு சிறுவன் நம்மை சிரிப்புடன் கூட்டிபோவான் ஆனால் அவள் காணவில்லை என்கிறது முதல் தொடங்கும் பக்கங்களில் நிறைய இரவுகளை நிறுத்தி இருக்கிறேன்.

  எப்பேர்பட்ட அலறலுடன் இவன் எழுப்பிய அழுகை ஒலி தான் அந்த துயர காட்சியின் முதல் சாட்சி. இப்போது என்னுடன் துணைக்கு வரும் அவனுக்கு  சுமார் பத்து வயது இருக்கும். அவனின் வழிகாட்டுதலின் பேரிலே பேருந்து நிறுத்ததிலிருந்து ஊருக்கு செல்லும் வழியென அவன் கூட்டி போகும் இந்த ஒத்தை அடி பாதை வரை  நடந்து வந்திருக்கிறேன். நான் பார்க்க விரும்பிய நபருக்கு மிகவும் நெருக்கமான சொந்தமவன். சொந்தம் என்று சொல்வதை காட்டிலும் விளையாட்டு தோழன் என்று சொல்லலாம். வழிநெடுக என்ன நினைகிறானோ அதை எந்த வித வடிகால்களும் இன்றி சில நேரங்களில் பயனுள்ளதாகவும் சில நேரங்களில்  உளறல்கலாகவும் சொற்களை  கொட்டித் தீர்த்தான். வாசித்ததற்கும் பார்ப்பதற்கும் குத்துமதிப்பாக என் கணிப்பிற்கு தான் இருந்தான் ஆனால் நான் நினைத்ததை விட குரல் கீச்சு தொனியில் வெளிப்பட்டது. சில நேரங்களில் அது என் உடலை கூசவும் செய்தது. இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு சொந்தக்காரன் என்று எனக்கு முன்பே தெரியும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

அவனின் பேச்சை இடை நிறுத்தும் வீதம் “இன்னும் எம்புட்டு தூரம்டா நடக்கணும் ,வழி முடியற மாதிரியே தெர்லயே..கண்ணுக்கு படுற திக்குல ஊரே இல்லையேடா..” என்று புலம்ப ஆரம்பிக்கும் மனநிலைகான ஆரம்ப சுருதியில் மெட்டுகட்டினேன்.

அதை அறிந்தவனாய் ஒரு சிரிப்பை முகத்தில் வெளிப்படுத்தி அதன் அர்த்தத்தை தனக்குள் மறைத்துக்கொண்டு “இன்னும் போகனும்.நானும் அங்க தானா போறேன் கூட்டிட்டு போகமையா போயிருவேன்…” என்றவன் இயல்பாய்  என்னை தாண்டி நடக்கத் தொடங்கினான். அவனின் இந்த பதில் நான் முன்பே சொன்னது போல பயனுள்ளதா , உளறலா  என தெரியாது. ஆனால் நான் கொடுத்த மெட்டிற்கான சுருதியில் அவன் வெளிபடுத்திய வார்த்தைகள் தாளத்தில் போய் சரியாக பொருந்தின. அவன் நான் பார்க்க நினைத்தவரை பற்றி பேசியதால் அவரின் முகம் தோராயமாக என் மனவெளியில் உருகொண்டு என்னை பற்றிய உரையாடலை தொடங்கு என்பது போன்ற பாவனையை அறிந்திட முடிந்தது. அதற்கு இசைந்தவனாக “பொரி கடக்காறாரு இன்னும் அப்படியே தான் இருக்குறாரா..” என்று முன்னோக்கி நடப்பவனின் காதில் விழும்படி வீசினேன். எந்த பதிலும் இல்லை. மீண்டும் அதே சொற்றொடர்களை கொண்ட அதே கேள்வி. எந்த பதிலும் இல்லை. சிறுவன் என்னிடம் அவனது விளையாட்டை தொடங்கி விட்டான் என்று தோன்றியது. அது நல்ல சகுனம் இல்லை. அதை ஆரம்பத்திலேயே  வெட்டி வீசவேண்டும் என்கிற களத்தில்  திரிகையில் முன் செல்பவனின் பின் பக்கம் சிறிய வால் ஒன்று ஆடிக்கொண்டிருந்தது. பதிலேதும் சொல்லாது முன் சென்று கொண்டிருப்பவனை எப்படி கையாள்வது என்று தெரியாததால் ஒரு வித பதட்டம்வேறு தொற்றிக்கொண்டது. அதை கட்டுபடுத்த எவ்வளவோ முயன்றும் தோற்றுகொண்டே இருந்தேன். இப்போது நான் அவன் விளையாட்டு களத்தின் மையப்புள்ளியில் இருக்கிறேன். தப்பிக்க ஒரே வழி அவனை பற்றியான இன்னும் சில குறிப்புகளை ஞாபகப்படுத்த முயல்வது. அவனின் இந்த குறும்பு விளையாட்டுகள் தான் என்னை கதையில் அவன்பால் எப்போதும் ஈர்த்தது. அது மட்டுமில்லாமல் நான் பார்க்க நினைப்பவருக்கும் அவனுக்குமான உறவு என்று ஏதேதோ தோன்றி சரியான புள்ளியை வந்தடைய முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதற்கு விடையாய் எத்தனையோ பெயர்களை கடந்து வந்திருந்தாலும் அவன் பெயர் வந்து விழுந்தது. அதற்க்கு காரணம் அந்த பொரிக்கடைக்காரருக்கும் அவனுக்குமான உறவு பற்றியான காரணிகள் தோன்றுகையில் அவர் வரட்டு குரல் வளையத்திலிருந்து வெளிப்படும் சிறுவனின் பெயர் என்னுடைய புத்தியில் தோன்ற.

“பொன்னையா.. ” என்று ( என்னால் முடிந்தவரை பொரிக்கடைக்காரரின் குரலிலேயே அது ஒலிக்கும் படி பார்த்துக்கொண்டேன். )

அதை மீண்டும் கேட்டிட விரும்பியவன் போல அவனின் கால்கள் நின்று முழு கவனத்துடன்  இப்போது என் பக்கம் திரும்பியது. இந்த கவனத்தை பெறுவதற்கு , அதாவது அடுத்த வார்த்தை உரையாடலுக்கு எவ்வளவு எண்ணங்களை திரட்ட வேண்டி இருக்கிறது என்பதை நினைக்கையில் இப்போது தானாக வார்த்தைகள் வந்து விழுந்தன..” இன்னும் அப்படியே தான் இருக்காரா..” என்று.

“அவரு மட்டும் இல்ல..அவரோட கைபக்குவமும் இன்னும் அப்படியே தான் இருக்கு..இன்னும் எதுவுமே மாறால..ஏன் இப்போ இப்படி கேக்குறீங்க.. எல்லாம் மாறிப்போயிருக்கும்னு நெனச்சீங்களா..”

எங்கும் எதிலும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாமல் வெளியேறவே விரும்பிய  நான் அவனின் கேள்விக்கு தெளிவாக ‘இல்லை’ என்ற பதிலை வாய் நிறைய சொன்னேன். ( அது அவனுக்கு பொரிக்கடையில் அள்ளி அள்ளி வாய் நிறைய தின்னும் பொரியை ஞாபகப்படுத்தி இருக்கலாம்  ஏனென்றால் அவனின் சிரிப்பு அப்படி தான் இருந்தது.) விளையாட்டும் , சிரிப்பும் , பாட்டும்  மட்டும் தான் பொன்னையாக்கு தெரியும் என்று பொரிக்கடைகாரர் எப்போதும் சொல்வார். வாய்க்கு வந்ததை பாடிக் காட்டி எல்லோரிடமும் கைதட்டி வாங்கி கொள்ளும் அப்பாவி.

நாங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினோம். ஓரளவு இந்த விளையாட்டின் பயனாக  சில விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொள்ள என்னால்  முடிந்தது. நான் அதை முதலில் அனுபவித்த தருணங்களுக்கு இட்டுச் சென்று பெரும் மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த அது காலம் தாழ்த்தவில்லை. அந்த எண்ண ஓட்டங்கள் ஓரளவு என்னால் கைகொள்ள முடிந்தது. சில நேரங்களில் அது இயல்பாய் வெளிப்படும் அப்போது ஓரிரு நிமிடங்களை அதற்கு செலவழித்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்புவது வழக்கம். இப்போது நடக்கையில் நான் பார்க்கும் வெட்ட வெளி நிலங்கள் , சிறு சிறு பனை மரங்கள் , பின்தொடரும் அமைதியின் உரையாடல் என இப்போதும் அந்த நிலத்தை கைவசம் பிடித்துக்கொள்ள முயன்றேன்.

“அந்த சுவைய உணரீங்களா “என அருகில் நடந்து கொண்டிருந்த சிறுவன் என்னை பார்த்து கேட்கையில் அதற்கு பதில் சொல்ல முயலாமல் , அவனை பற்றி மனம் சிந்திக்கத் தொடங்கியது. அவன் சிறுவனாக இருந்தாலும் அவன் சொற்கள் பெரியவர்களின் சாயலில் வந்து விழுந்தது , நான் உணர்ந்தவனின் வார்த்தைகள் இல்லை அது என்பது போல தோன்றியது , ஒருவேளை என்னுடைய இயல்புகளும் அதில், அதாவது அவனுடன் கலந்திருக்க கூடுமோ என்று தோன்றியது. என்னை மீண்டும் தனது பிஞ்சு கைகளால் உலுக்கி “நம்ம பொரிக்கடைகாரர் பொரி சூப்பரா இருக்கும்ல..” என்றான்..

அதன் சுவையை அறிந்தது போல ஆமாம் என்று என் சுவை நாளங்களுக்கு வெளியே எட்டிப்பார்த்தன , அது நான் அனுபவித்த சுவையின் மிச்ச சொச்சம் தான் என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

இங்கு பொரிக்கடைக்காரர் பற்றியான சிறு விளக்கவுரை கொடுக்க முயல்கிறேன். ஞாபகத்தில் இருப்பவைகளின் குறிப்பு தான் இது முழுமையானதாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

மடித்து கட்டிய வேட்டி  , மழித்து கொண்ட முகம் , மார்பு நிறைய இருக்கும் முடியை மறைக்கும் சட்டை , சுத்தமாக இருக்கும் நகங்களை கொண்ட  விரல்கள் , நடுங்கும் கால்கள் , சுமார் ஒரு அறுப்பத்திஐந்தை நெருங்கி கொண்டிருக்கும் முதிர்ச்சி என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.  ஏனென்றால் அவரை நானும் இதற்கு முன் பார்த்தது இல்லை. அவர் தயாரிக்கும் பொரியின் சுவையை பற்றியே  நானும் அறிந்திருக்கிறேன். இந்த கிராமம் முழுவதும் அவர் தயார் செய்யும் பொரியின் சுவை தான் எப்போதும் பேச்சாக இருக்கும் என்கிற தகவல்களும் வாசித்திருக்கிறேன்..

“பொரிக்கடைகாரர்  பொண்ணுக்கு என்னடா ஆச்சு.. ஊர விட்டு போனது வந்துச்சா..” என கேட்டேன் ஆர்வம் மிகுதியில். 

அதற்கு அவன் தரப்போகும் பதிலை அறிய மனம் அல்லல் கொண்டு அலைந்து திரிந்தது. எத்தனை நாட்களாக மனதிற்குள் உருகொண்டு என்னை ஆட்டிக்கொண்டிருந்த கேள்வி அது. நான் யாருக்காக இந்த பொரிக்கடைக்காரரை பார்க்க வந்திருக்கிறேனோ அவரிடம் எவ்வளவு கேட்டும் பதில் இல்லை.இப்போது அதற்கான வாய்ப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. இந்த கேள்வியை சம்பதப்பட்டவரிடமே கேட்க்கவும்முடியாது. ஆகையால் இதை இவனிடம் தான் இந்த சிறுவனிடம் தான் கேட்க முடியும். இப்போதாவது அதற்கு விடை தெரிய வருமா என்கிற ஆர்வ மிகுதியில் உன்னிப்பாக அவனின் எந்த வார்த்தைகளையும் தவற விட்டு விடக் கூடாது என நினைத்ததற்கு அவன் “அந்த புள்ள வீட்ல தான் இருக்கு… அதுக்கு என்ன ஆச்சு..ஊரவிட்டு போச்சா..அப்படிலா இல்லையே..” என்று சொன்னதும் முதலில் புரிந்து கொள்ள தடுமாறினேன் பின் ஓரளவு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மூளை அனுமதிக்கத் தொடங்கியது..அதை உறுதி படுத்திக் கொள்ளும் விதத்தில் அவனிடம் மீண்டும் ஒரு வித சம்பவத்தை தெரிந்துகொள்ள விளைந்தேன்..

“அந்த ரெட்டை கெணறு ஆலமாரம் எங்கடா இருக்கு.. அத தாண்டிட்டோமா..இல்ல இனிமேல் தான் வருமா..” 

அவன் அதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லை. நாங்கள் அந்த ரெட்டை கிணற்றை கொண்ட  ஆலமரத்தை நெருங்கி கொண்டிருந்தோம்..

அதை நெருங்கிய உற்சாகத்தில் சிறுவன் முன்னே ஓடிபோய் அந்த கிணற்றை எட்டிப்பார்த்தவன் தன் வசம் இருந்த இரண்டு மூன்று வார்த்தைகளை கோர்த்து மெட்டுகட்டினான். தண்ணீரின் ஆழம் தாளமிட அவன் நிறுத்துவதாக தெரியவில்லை. எனக்கு தெளிவாக புரிந்து விட்டது. இந்த ரெட்டை கிணறும் ஆலமரத்தின் நிலைமையும் என்னால் உணர முடிந்தது. அதன் அகோர ஒலியை வார்த்தைகளின் ஊடாக ஏறி என் மனதில் பதிந்தவைகள் இப்போது அழியப்போகும் ஒன்றாய் இன்னும் இருக்கிறது என்பதே என்னை நடுக்கமுற செய்தது.  அது என்னை நகர விடாமல் உறைய வைக்க . கிணற்றின் அருகில் இருந்து என்னை திரும்பி பார்த்தவன் ‘வாங்கண்ணா’  என்பது போல கையசைத்தான், இதே பொன்னையா தான் கிணற்றின் ஆழம் பார்த்து ஊரை கூப்பிடும் அழுகுரல் என்னை உலுக்கியது.  ‘நான் போலாம்’ என்றேன்.அவனுக்கு அது சங்கடத்தை தான் கொடுத்திருக்க வேண்டும்..ஆனால் நான் அதை கவனிக்கவில்லை முடிந்தளவு அங்கிருந்தவைகளுக்கு என் எச்சரிக்கை உணர்வுகளை கடத்த முயன்றேன். புரிந்து கொண்டது போல  காற்றின் சலசலப்புக்கு அந்த ஆலமரம் தலையசைத்தது.

“இன்னும் கொஞ்ச தூரம் தான்.. பொரிக்கடக்காரர் வீடு வந்துரும்.. யப்பா எத்தன நாளாச்சு அத தின்னு.. இன்னும் இன்னுமுனு கேக்குமே..” என சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. கதை முடிந்த இடத்தில் இருந்து தொடர வந்த எனக்கு கதையின் பாதியில் மாட்டிக்கொண்டது பெரும் மனவலியை கொடுத்தது. இந்த கதையை பத்து வருடங்களுக்கு முன் படிக்கும் போதே ஒரு வித மனவலியை ஏற்படுத்தியது. அதனுள் இருந்த இலக்கிய சுவையும் , மனித மனங்ளுக்குள் நடக்கும் விளையாட்டுகளும்  என்னை அந்த கதாசிரியனுடன் ஒன்றிட வைத்தது என்றே சொல்லவேண்டும்.எத்தனை எத்தனை பொழுதுகளை அவரின் எழுத்துகளில் கழித்திருக்கிறேன்.அவரின் கதாப்பாத்திரங்களாக பல நாட்களில் வாழ்ந்து வந்திருக்கிறேன். அந்த எழுத்துக்கள் என்னுடன் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு காணிக்கையாய் அந்த எழுத்தாளனை ஒரு தடவையாவது நேரில் சந்தித்திட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.ஆனால் அது எந்த காரணத்தாலோ அது நடந்தேரவே இல்லை.அது ஒரு விதத்தில் நல்லது என்று புரிகிறது. அதனால் என்னவோ அவரின் எழுத்துகளில் என்னால் அவ்வளவு ஒன்ற முடிந்தது. என்னை ஒரு போதும் அவரின் எழுத்துக்களுக்கு முன் மண்டியிட வைத்து ஆசான் என்று ஏற்றுக் கொள்ள எனக்கே தெரியாமல் என் மூளையை கழுவுகிறவர் அல்ல அவ்வளவு அப்பாவியும் இல்லை நான் ஆனால் அவரின் எழுத்துக்களுடன் உரையாடல்கள் என்னை இன்னும் இன்னும் தீவிரமான எழுத்துக்களை வாசிக்கவும் , விமர்சிக்கவும் வைத்தது ‘ காலம்பூராவும் என்னையே படித்து ஒப்பேத்தும் அளவுக்கு நான் எழுதவில்லை , இக்காலகட்டத்திற்கு அது அவசியமன்று ‘ என்ற அவரின் முன்னுரை அவரை பற்றியான பெரும் புரிதலை  கொடுத்தது.அவரின்  பல கதைகள் நினைவிலேயே இருகின்றது. எனக்கு அப்படி பிடித்த கதை தான் இதுவும்..அந்த பொரிக்கடைகாரரின் சுவை அழிந்த கதை..அதே முன்னுரையில் இந்த கதையை எழுத வேண்டும் என்கிற எண்ணம் நான் உட்கொண்ட உண்மையான பொரி வியாபாரியின் சுவையிலிருந்து தோன்றியது என்று குறிப்பிடிருந்தார். ஆனால் என் ஆதர்சத்தை சந்திக்கும் வாய்ப்பு இப்படி அமையும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

இப்படியாக பலவற்றை மனதிற்குள் போட்டு உலட்டிக்கொண்டிருந்த என்னிடம் அந்த சிறுவன் அங்க பாருங்க ‘ பொரி கடக்காரார்..”

ஆம்..அவரே தான் அது..நான் நினைத்ததுடன் ஓரளவு ஒத்திருந்தார்..

“வெரசா வாங்கணா..அவரு வியாபாரத்துக்கு கெளம்பிட்டாறு போல..” என்று அவரை பிடிப்பது போல  ஓடினான்..

தனது சைக்கிளில் பொரியை கொண்டிருக்கும் பெரிய பையை கீழே விழுகாமல் கட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு  துணையாக அவரின் எட்டு வயது மகள் உதவி செய்துகொண்டிருந்தாள்.  அவர்கள் இருவரும் இடையே இருக்கும் சந்தோஷம் எனக்கு அழுகையை வரவைத்தது.   அவருக்கு இனி நடக்கப்போகும்  மீதி கதை என் மனத்திரையில் ஒடிக்கொண்டிருந்தது.

சிறுவன் அவரை நோக்கி வருவதை பார்த்தவர் வரட்டுக் குரல்வளையிலிருந்து “பொன்னையா..’ என்று கட்டிக் கொண்டார். ஆனந்த அணைப்புகள் எல்லாம் முடிந்த பிறகு பொன்னையா என்னை கை நீட்டி அவரின் காதிற்குள் எதையோ சொன்னான்.நான் அசைய நினைத்தாலும் என் உடம்பை துளி அளவு கூட நகர்த்த முடியவில்லை..அவர் என்னை நோக்கி வரத் தொடங்கினார்….

அருகில் வந்தவர் என்னிடம் எதையோ கேட்டுக்கொண்டே இருக்கிறார் அவரின் குரலிலிருந்து வெளிப்படும் எந்த ஒரு வார்த்தைகளும் என் மண்டைக்குள் ஏறவில்லை  , செவி செயலற்று இருந்தது. என்னுள் அவருக்கு நடக்கப் போகும் , நான் படித்த மீதி கதையின் சாரம் தான் ஓடிக்கொண்டிருந்தது..” மயிறு எழுத்தாளேன்..இந்த மனுஷனுக்கு இப்படியா வாழ்க்க போனும்..” என்று முனங்கிய என்னிடம் “உங்களுக்கு..என்ன வேணும்..பொன்னையா சொன்னான் தொலவுல இருந்து வந்துருக்கீங்கனு..”

ஆமாம் என்பது போல தலையாட்டி இயல்பு நிலைக்கு வந்தேன். ஆனால் இவர்களின் நிலையை கொடூரமாக முடித்த எழுத்தாளன் மீதிருந்த கோபம் குறையவில்லை ..

“பொரி வாங்கிட்டு போலம்னு வந்தேன்..”

“வாங்க..”  என்று என்னை அழைத்துக்கொண்டு போய் பொரிக்கூடையிலிருந்து சிறு அளவில் சுவைத்துப் பார்ப்பதற்கு கையில் அள்ளிக்கொடுத்தார்..

முதன் முதலில் அதை சுவைத்து பார்க்க போகிற ஆர்வம் என்னுள் மேலெழுந்து வந்தது. அதை கையில் வாங்கி என் சுவை நாளங்களுக்கு காணிக்கை ஆக்கினேன்.. எழுத்தில் முற்றிலும் வெளிப்படாத அந்த சுவை என் வாழ்நாளில் மறக்கமுடியாதது. எப்படி இருக்கு என்பது போல என்னை பார்த்தவரை கட்டி பிடித்துக்கொண்டேன். அவரிடம் இனி நடக்கப் போவதை பற்றி சொல்லிவிடலாம் என்று யோசித்த என்னை அவரின் குரல் தடுத்தது..

“அப்படி யாருக்கு வாங்கி கொடுக்க இம்புட்டு தொலவுல இருந்து வாரீங்க..”

“வேண்டியப்பட்டவரு எறந்துட்டார்..நாளைக்கு கருமாதி..அதான் படையலுக்கு அவருக்கு ரொம்ப புடுச்ச பொரிய வாங்கிட்டு போலாம்னு தான்..” என்றேன்..

அவர் அறிந்திடதா அந்த எழுத்தாளருக்கு-நபருக்கு  ஒரு வித பாவமான முகத்துடன் பொரிக்கடைகாரர் அஞ்சலி செலுத்திவிட்டு , வியாபாரத்தை மகிழ்வுடன் முடித்தார்.

மூவரிடமுமிருந்து விடை பெற்று நடக்கத் தொடங்கினேன்.அவரிடம் கடைசி வரை அவருக்கு நடக்கப் போகும் கொடுமைகளை பற்றி சொல்லவில்லை. அவரிடம் சொல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்று. அவரை பற்றி மேலும் இங்கு எழுத  யாரும் இல்லை என்பது தான்..

*****

zhafilmotainment@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button