
நம் தேசம் இன்னும் நிறைய்ய அடிமைகளையே உருவாக்குகிறது.
i)
நாம் நிலக்கரிகளை வெட்டத்துவங்கினோம்
சுரங்கங்களைப் பெருக்கினோம்
இரும்புத்தாதுக்களை பிளந்து எடுத்தோம்
அதன் வழியே தான்
வனங்களையும் அதன் பழங்குடிகளையும் மூர்க்கமாகப்
பிரித்தோம்.
இப்போது யுரேனியச் சுரங்கங்களும் அதிகரித்திருக்கின்றன
ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும் பூச்சிக்கொல்லிகளும்
பெரும் அணைகளும் அனுமின்கூடங்களும்
எட்டுவழிச்சாலைகளும் பாலங்களும் தொலைத்தொடர்புக்
கோபுரங்களும் தொழில்கூடங்களும்
நிறைந்து கிடக்கின்றன.
ஒரு பொருளை விற்பதற்கென நிறைய்ய சந்தைகளையும்
அச்சந்தைகளில் வாங்குவதற்கென இன்னும் நிறைய்ய
போலி மனிதர்களையும் தான்
நாம் திரும்பத்திரும்ப உருவாக்கி வருகிறோம்.
ஒரு சிறிய பூச்சியைப் போலல்லாமல்
ஒரு சிறிய தாவரத்தைப் போலல்லாமல்
ஒரு சிறிய பறவையைப் போலல்லாமல்
ஒரு சிறிய விலங்கைப் போலல்லாமல்
நாம் இன்னும் நிறைய்ய அடிமைகளைத் தான்
உற்பத்திசெய்து கொண்டேயிருக்கிறோம்.
கொள்ளை நுகர்வுக்கும்
கொள்ளை பொருளாதாரத்திற்கும்
கொள்ளை அரசியலுக்கும்
ii)
குப்பைகளைப் பிரித்துக் கொண்டிருக்குமவனுக்கு
நிறைய்ய பொருளாதாரம் தெரிந்திருக்கிறது.
உணவுச்சங்கிலியில் அவனொரு கடைசி வில்லை
சூழலியல் தொடர்ச்சியில் அவனொரு நசுங்கிய புழு
பெரும்வணிக பிரமிட்டில் அவனொரு மதிப்பற்ற எண்
அரசியல் சுழற்சியில் அவனொரு தீர்ந்திடாத கணக்கு
கடவுள்களின் சேதாரத்தில் அவனொரு எரிவதற்கான உடல்
நீதிகளின் மாண்பில் அவனொரு தோற்றுப் போன நம்பிக்கை
நாட்டின் ஜனநாயகத்தில் அவனொரு இந்தியப் பிரஜை
நல்லது பிரிக்கத்துவங்குவோம்,
நம் தேசத்தின் இனிய குப்பைகளை.
************
புலம் பெயர்ந்தவர்கள் திரும்பும் சாலைகள்
தங்களது சிறிய இரைப்பைகளை வெட்டி எறிந்திட முடியாதவர்கள்
தேசங்களுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வருகின்றனர்.
தலைநகரிலிருந்து புறப்படும் ஒவ்வொரு ரயிலும்
வெகுதொலைவிலிருக்கும் ஏதேனுமொரு நகரில் அவர்களை
கொண்டுவந்து சேர்க்கிறது.
ஒவ்வொரு நாளும் நகரின் பிரம்மாண்டங்களுக்குள் நுழைந்து
பணி முடித்துத் திரும்பும் பாதையில்,
தன் சின்னஞ்சிறிய குரலில்
எண்ணற்ற முறை அவள் பாடித்தீர்த்த ஒரு பாடலுக்குள்ளிருந்த
தனித்த மகிழ்ச்சிகளை
முழுவதுமாக நிரப்பிய பிறகே வீடு நோக்கி நடக்கத் துவங்குகின்றனர்.
தங்களையே மறந்து கொள்ளும் அந்நிமிடங்களே
தினந்தோறும் நகரை சூரியனை நோக்கி இழுத்துச்செல்கிறது
என நம்பிக்கொண்டிருந்தனர்.
கொள்ளை நோயொன்றில்
தங்களைக் கைவிட்டு விட்ட நகரத்திலிருந்து இரைப்பைகளைக்
தூக்கிக்கொண்டு கிளம்பும் சாலைகளில்
அந்தச் சின்னஞ்சிறிய குரலைத் தன் மகளுக்குக் காண்பிக்கத்
தேடுகிறான்.
நகரம் அச்சிறுமியை சில நாட்களுக்கு முன்பே
வெகு ஆழத்தில் புதைத்திருந்தது.
************