இணைய இதழ்இணைய இதழ் 73கட்டுரைகள்

வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்

கட்டுரை | வாசகசாலை

யணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான மலைத் தொடரை பார்க்கும் போதெல்லாம் விழிகளில் நிறையும் மகிழ்ச்சியைப் போலவே, மென்சோகம் ஒன்றும் நெஞ்சத்தில்  மழை மேகமாய் சூழும்.

மலைச்சாலையின் கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, அப்பால் தெரியும் மலையில் அமைந்துள்ள சிறிய ஊர் தென்படும்போது அமைதி ஒன்று அரவணைக்கும். மாலை நெருங்கும் வேளைகளில், மஞ்சு சூழ்ந்த மலைக் கிராமங்களின் வீடுகளை, அதன் திண்ணைகளில் அமர்ந்து கால்களை நீட்டியபடி சாவகாசமாக பேசிக் கொண்டிருக்கும் முதியவர்களை, விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், அடிப்படை வசதிகளுக்கு அவர்கள் படும் துன்பங்கள் பற்றிய எண்ணங்கள் எழுந்தாலும், அவர்கள் மேல் பொறாமை பொங்கி வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேடு பள்ளம் எதுவுமின்றி, வீடுகளை, வயல்களை, ஊர்களை, சாலையோர ஒன்றிரண்டு மரங்களை மட்டுமே பார்த்து வாழ்வது என்பது சமவெளியின் சாபம் அன்றி வேறென்ன? ஒளிந்து கொள்ள ஒரிடம் கூட வழியில்லாத வாழ்க்கை. என்னதான் காவேரி நீண்டு வளைந்து அழகாய் கிடந்தாலும், நகரச் சந்தடி நடுவே கிடக்கும் மலைக்கோட்டை உயரத்தில் வரலாற்றுப் பழமை பேசினாலும், உடல் வியர்க்க ஏறிச் சென்று உச்சியில் வீசும் தூயக் காற்றில் இதயம் குளிர வைக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல்வேறு வண்ணங்கள் பூசித் தெரியும் நிலக்காட்சியைக் கண்டு மனதை வெற்றிடமாக்கித் திரும்ப மலையென ஒன்று இல்லாத ஏக்கம் எப்போதும் உடன் வாழ்கின்றது.

அருகருகே மலைகள் தெரியும் போதெல்லாம், ‘ச்சே, அந்தப் பெரிய மலை இல்லையென்றாலும், இதைப் போல இருந்தால் கூட பரவாயில்லையே. பெரியத் தொடரின் முன்னால் சிதறிக் கிடக்கும் இந்தச் சிறிய மலைகள் போல ஒன்று இருந்தால் கூட போதுமேஎன்றுதான் பயணங்கள் நகர்கின்றன.

ஒரு மலை வேண்டும். தினமும் ஏறி இறங்குவதற்கு விரைந்து அணுகும் வகையில், கோபமோ, துன்பமோ ஓடிச் சென்று புதைந்து கொள்ளும் அண்மையில் இருக்க வேண்டும். மலை மீது வனம் போன்ற அடர்த்தி இல்லையெனினும் சில பெரிய மரங்கள் வளர்ந்து மூடியிருக்க வேண்டும். நீரோடை, அருவி இல்லையென்றாலும் பரவாயில்லை. மர நிழல்கள் வழியே மேலேறி உச்சிக்கு இட்டுச் செல்லும் காய்ந்த இலைகள் சிதறிக் கிடக்கும், ஓரத்தில் சிறிதும் பெரிதுமாய்த் தாவரங்கள் நம்மைத் தொடத் தம் கைகள் எப்போதும் நீட்டிக் கொண்டிருக்கும் சரிவான ஒற்றையடிப் பாதை, புற்களின் பச்சை வாசனை பரவிக் கிடக்க, மஞ்சள் பூக்கள் மலரும் குத்துச் செடிகள், நீல மலர்கள் பூக்கும் சிறு செடிகள், மரங்களின் மீதேறி வானத்தைத் துளாவும் கொடிகள், அலைந்து திரியும் பட்டாம்பூச்சிகள், பூச்சிகள், பறவைகள், சில குரங்குக் குடும்பங்கள், தலை தூக்கி பழித்துக் காட்டும் சிவப்புக் கழுத்து ஒணான்கள், அணில்கள் எனக் கொஞ்சம் உயிரோட்டம் நிரம்பியதாய் இருக்க வேண்டும். உச்சியில் அமைதியாய் அமர்ந்திருக்க ஒரு பாறை அதன் மேல் படிந்த ஒரு பெரிய மர நிழல்.

அந்த மலையைத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டினருகே வைத்துவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக, நாட்கள் எத்தனை கொண்டாட்டமாக நகரும். எவ்வளவு பேராசை.? வசிப்பிடத்தை அங்கே மாற்ற முடிகின்ற சுலபமான வழி ஒன்று இருக்கும் போது, மனம் மலையைத் தூக்கிக் கொண்டு வர பறக்கிறது. நமக்காக எல்லாமும் மாற வேண்டும். நம்மை மாற்றிக் கொள்ள முடியாத போதும், நமக்காக பிறர் மாறாத போதும் துன்பம் அட்டையாய் கவ்விக் கொள்கிறது.

நான் எடுத்துச் செல்வதற்காக மலை ஒன்று எங்கேயோ காத்துக் கொண்டிருப்பதை, அழைப்பதை உணர முடிகின்றது. அது எம்மலையென்று ஏறும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் தேடிப் பார்க்கிறேன். அந்தக் கற்பனை மலையின் மலர்கள், பறவைகள், பூச்சிகளின் ஒலிகள் என்னை அழைத்துக் கொண்டேயிருக்கிறது.

ட்டுட்ட்டுட்டூயுட்டிட்டிட்டுட்ட்டுட்டூயுட்டிட்டிட்டுட்ட்டுட்டூயுட்டிட்டி...

டிவீக் ட்டுவீக்டிவீக் ட்டுவீக்டிவீக் ட்டுவீக்

குக்……… குக்……. குக்…….

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மலையினை அள்ளிக் கொண்டு பறக்கும் வலிமை வேண்டிமலையுச்சிகளில் தவமிருக்கின்றேன்.

*********************

goldeneyesankar@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button