
அதிகாலை நேரம். இவனுக்கு மட்டுமல்ல ஏனைய மனிதர்களுக்கும் கொஞ்சம் அசாதாரணமானது. சற்று தளர்வாக நடந்து கொண்டிருந்தான். அந்த நடையில் ஒரு நோக்கமும் இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் உலகம் இவ்வாறு இயங்குவதே இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறந்து வளர்ந்த நகரத்தில் அன்று எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. அரக்கப்பறக்க அதிகாலையில் வேலைக்கு ஓடும் ஆட்களை எல்லாம் இவன் பார்த்ததே இல்லை. இவன் உலகமே நண்பகல் பன்னிரெண்டுக்கு மேலேதான் செயல்படத் தொடங்கும். பிறந்ததில் இருந்து இப்போதுவரை வாழ்வுகுறித்தோ வாழ்தல்குறித்தோ இவன் உற்றுநோக்கியதே இல்லை. சற்று முன்புதான் பீடி குடிக்க வேண்டும் போலிருந்தது. கையில் பிரிக்கப்படாத கட்டு பீடியும் இருந்தது. அவ்வளவு ஏன் எப்போதும் இரவல் வாங்கும் வத்திப்பெட்டியில்கூட இருபதுக்கும் மேற்பட்ட குச்சிகள் இருந்தது. பீடியை அடிவயிற்றில் இருந்து இழுக்கத்தான் மனம் ஒத்துழைக்கவில்லை. எப்படி மனம் வரும்? ஆசையாய் கட்டிக்கொண்ட மனைவி பிணவறையில் கிடத்தப்பட்டிருக்கும்போது!
தாய், தந்தையை இழந்தவனுக்கு அடைக்கலம் கொடுத்தது யாரென்று அறியாத ஒரு மலையாளக் குடும்பம். படிப்பு என்பதே அறியாத இவனுக்கு கார் பழுது பார்க்கும் தொழிலைக் கற்றுக்கொடுக்க துணை புரிந்து, சொந்தக்காலில் நிற்க தன்னம்பிக்கை அளித்த குடும்பத்திற்கு இவன் ஏதும் செய்ய முடியாதவனாக இருந்தான். வளர்ந்து வாலிபன் ஆனவுடன் அந்த மலையாளக் குடும்பத்து இளைய மகளை காதலித்து கைபிடித்தான். இவன் பதிலுக்கு செய்த நன்றிக்கடனை பொறுக்கமாட்டாமல் அந்த குடும்பம் எர்ணாகுளம் சென்றது. ஒரு துரோகத்தில் வாழ்க்கை தொடங்குவது குறித்த எந்தப் புகாரும் இல்லாமல் இனிமையாகவே நாட்கள் நகர்ந்தது. கையில் இருக்கும் தொழில், காதல் மனைவி கொடுத்த நகைகளை வைத்து சொந்தமாக மெக்கானிக் ஷாப் ஆரம்பித்தவனுக்கு தொழிலில் நல்ல இலாபம். பணம் சற்று சேரவே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதே வாடிக்கையாகிப் போனது. எதிர்த்து கேள்வி கேட்ட மனைவியை எப்படி சமாளிப்பது என்று ஆரம்பத்தில் சற்று தடுமாறினான். பின் ஒருமுறை எதிர்வீட்டு ஆணுடன் இவளை சேர்த்து பேசினான். அவ்வளவு நேரம் ஆக்ரோசமாகக் கூச்சலிட்டுக் கத்தியவள் அப்படியே உடைந்துபோய் மூலையில் சரிந்து அடங்கினாள்.
அது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதைவிட அற்புதமான ஆயுதம் கிடைக்காது என்பதை உணர்ந்த அவன் தினமும் ஒரு ஆணுடன் இவளை சேர்த்து வைத்துப் பேசுவதே ஒரு வழக்கமாகிவிட்டது. மாலை குடிக்க ஆரம்பிக்கும்போதே இன்று யாருடன் அவளை சேர்த்து வைத்துப் பேசலாம் என்ற யோசனையுடன் ஆரம்பிப்பான். கூடவே வார்த்தைகளை எவ்விதம் கூர்படுத்தினால் அவள் அதிகம் காயப்பட்டு அமைதியாக இருப்பாள் என்று யோசிக்கவே இன்னும் இரண்டு கிளாஸ் அதிகமாகி குடிக்கும்படி ஆகிவிட்டது.
அன்று அப்படித்தான் சம்பிரதாயமாக ஒரு ஆட்டோக்காரனுடன் இணைத்துப் பேசிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டான். அதிகாலை ஒரு பெரிய பொருள் விழும் சப்தம் கேட்டுத் துள்ளி எழுந்தான். கழுத்தில் இறுக்கிய கயிறுடன் மனைவி கீழே விழுந்த சப்தம்தான் அது. பதைபதைப்புடன் அவளைத் திரும்பி எழுப்பினான். அவள் உடலில் பரவியிருந்த குளுமை இறந்துபோய் இரண்டு மணி நேரமாகிவிட்டது என்றது. ஒப்பாரி வைத்து அழுதான். அக்கம்பக்கம் ஓடிவந்து இறப்பு வீட்டு சூழலை நிர்மாணித்தது. ஆம்புலன்ஸ், மனைவியை வாரிக்கொண்டு அரசு மருத்துவமனை நோக்கிப் போனது. சற்று நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி இவனை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டுப் போனார். இந்த அதிகாலை நேரத்தில் இவன் தற்போது காவல்நிலையத்துக்குதான் போய்க்கொண்டிருக்கிறான்.
காவல்நிலையம் வருவது இவனுக்கு முதல்முறை. ஒரு திருட்டுக் காரை ரிப்பேர் செய்த குற்ற வழக்குக்குக்கூட இவன் காவல்நிலையப் படியேறியது இல்லை. பணம் கொண்டு அதை சரிசெய்தான். அது புதிதாகக் கட்டப்பட்ட காவல்நிலையம். நல்லதொரு உயர்வர்க்கக் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்திருந்தது. இது புதிய காவல்நிலையம் என்பதால் திருட்டு வழக்கு சார்ந்த வண்டிகள் அதிகமாக சேரவில்லை. இறைவன் அளித்த கொடை எனும் வாசகம் தாங்கிய ஒரு பழைய ஆட்டோ நிற்க சக்தியற்று நின்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவை இன்னும் ஊடுருவிப்பார்த்தான். ஒரு சவலை நாய், குட்டிகளைப் பராமரித்து பாதுகாத்துக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையில் இவனுக்கு குழந்தைகள் இல்லாதது குறித்து கொஞ்சம் நிம்மதியடைந்தான்.
காவல் நிலையத்துக்குள் செருப்புடன் போகலாமா வேண்டாமா எனும் யோசனை இப்போது தேவையில்லைதான். எனிலும் செருப்பை ஒரு ஓரமாகக் கழற்றிவிட்டு காவல்நிலையத்துக்குள் நுழைந்தான். திரைப்படத்தில் பார்க்கும் எந்த ஒப்பனையும் அங்கு இல்லை, வெளுப்பாக சிரித்துக்கொண்டிருந்த மகாத்மாவின் படத்தைத் தவிர. புதிய காவல்நிலையம் என்பதால் பழக நாளாகுமோ என்னவோ என நினைத்துக்கொண்டான். முடிந்துபோன ஆயுத பூஜையின் மிச்சங்கள் ஆங்காங்கே தென்பட்டன. காக்கிச்சட்டை பணியாளர்கள் இல்லாவிட்டால் அது கிட்டத்தட்ட யூனியன் ஆபீஸ்போலத்தான் இருந்திருக்கும். ஒரு இளமஞ்சள் சட்டை அழகான முறையில் ஒரு ஆங்கரில் இடது வலதாக ஆடிக்கொண்டிருந்தது. அதன் கீழே வயது கணிக்க இயலாத ஒரு காவலதிகாரி குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இவன் அந்த சட்டை ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். உண்மையில் அந்த அதிகாரி இவனைப் பார்த்து என்ன வேண்டும்? என்று கேட்க வேண்டும் என்பதே இவன் எதிர்பார்ப்பு.
நேரம் கடந்ததே தவிர அவர் நிமிர்ந்து இவனைப் பார்க்கவேயில்லை. இறுதியாக, ஸார் என்றான். அவர் என்ன வேண்டும் என்றார். அந்த “என்ன வேண்டும்” என்பதில் இருந்த சமிஞ்கை இவனுக்கு துக்கத்தைத் தாண்டி கலக்கமாக இருந்தது. வீட்டைப் பூட்டவில்லையே என்ற யோசனையும் மனைவிதான் வீட்டில் இருக்கிறாளே என்ற நிம்மதியும் பின்பு அவள்தான் இல்லையே எனும் உண்மையும் இவனுக்கு நெஞ்சை அடைத்து அழுகையாக வந்தது.
எப்படி ஆரம்பிப்பது என்பதை அவசரமாக மனதிற்குள் ஓட்டிப்பாரத்தான். அதற்குள் அதிகாரி, என்னய்யா வேணும்? என்று மரியாதையில் இருந்து ஒரு படி கீழே இறங்கி வந்தார். அந்த நேரம் பார்த்து மின்சாரம் தடைபட்டுப்போனதும் இவ்வளவு நேரம் அவனுக்காக கத்திக்கொண்டு ஒத்துழைத்த மின்விசிறி நின்றுபோனதும் அந்த இடம் இன்னும் அமைதியாகிப் போனது. “ஸார், சம்சாரம் தூக்கு மாட்டி செத்துப் போச்சு. ஸ்டேசனுக்கு வரச் சொல்லிருந்தாங்க, அதான்…” என்று முடிப்பதற்குள் “ரைட்டர் வர லேட்டாகும், கொஞ்சம் வெளிய போய் நில்லு” என்றார்.
வெளியே வந்து நின்றான். இரண்டு ஆடுகள் பாதுகாப்பாக கூண்டு போட்டு மூடி வைத்திருந்த செடியை மேய்வதற்கு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது. உண்மையில் அது அந்த செடியை மேய வாய்ப்பே இல்லை. ஏதோ முயற்சி செய்துகொண்டிருந்தது, அது இவனுக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. கூடவே, அவன் மனைவிக்கு ஆட்டுக்குட்டி என்றால் உயிர், இவனுக்கு ஆட்டுக்கறி என்றால் உயிர். இருவருக்குமிடையே நிலவிய முரண்பாடுகுறித்து முதன்முறையாக சிந்தித்தான். யோ, அறிவிருக்கா? ஆடு மேஞ்சிட்டுருக்குறத வேடிக்கை பாத்துட்டு இருக்க! என்ற குரல் கேட்டு திரும்பினான். காவல்நிலையத்தைக் கூட்டும் துப்புரவுத் தொழிலாளியின் குரல் அது. பொண்டாட்டி செத்துப் போச்சு, அவளுக்கு ஆட்டுக்குட்டின்னா உயிர் என்பதை அந்த தொழிலாளியிடம் ஒரு டீயுடன் பீடி இழுத்துக்கொண்டே சொல்ல வேண்டும்போல இருந்தது. மரியாதைக்காக ஆட்டுக்குட்டியை விரட்டினான். மேயாத அந்தக் குட்டிகள் இவன் விரட்டியதும் செடியை மேய்ந்தது போன்ற குற்ற உணர்வில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடியது.
ஒரு சிமெண்ட் தொட்டி போன்ற அமைப்பில் இருந்த திண்டில் அமர்ந்துகொண்டான். வெயில் மெல்லமெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. தினமும் தடையின்றி நிம்மதியாக குடிப்பதற்கு அவள்மீது அவ்வளவு பெரிய அபாண்டத்தை சுமத்தத் தேவையேயில்லை. குடும்பத்தை விட்டு தன்னை நம்பி வந்தவள் இப்போது முன்பின் அறிமுகமில்லாத சடலங்களுடன் கிடக்கிறாள். செய்த தவறுக்கு மன்னிப்பே இல்லை என்பது அடுத்தது, அவள் இல்லாத வாழ்க்கை இனி எப்படி இருக்குமோ என்பதை நினைக்கநினைக்க அவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது. அவளை விரும்பிய நாட்கள், அவள் கொடுத்த முதல் பரிசு, ஒன்று சேர்ந்துவிட்டு அவள் அவன் நெற்றியில் கொடுத்த முத்தம், சொந்த வீடுமுதல் பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் பெயர்கொண்டு அவள் பேசிய கணங்கள் அவன் நினைவை அழுத்த இன்னும் கொஞ்சம் அழுதான். கொஞ்சம் அங்க போய் உட்காருங்க, கூட்டிப் பெருக்கணும் என்றார் அந்த துப்புரவுத் தொழிலாளி.
இரவுப்பணி முடிந்த அதிகாரிகள் வெளியேறவெளியேற காலை பணிக்கு அதிகாரிகள் வந்து கொண்டிருந்தார்கள். வந்து கொண்டிருந்த எந்த அதிகாரிகள் முகத்திலும் ரைட்டர் சாயல் இல்லை. எல்லோரும் போலீசாகவே இருந்தார்கள். காவல்நிலையத்தை ஒட்டியிருந்த சாலை வழக்கமான காலை அலுவல்களுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.
இன்னும் சொல்லப்போனால் இது ஒரு கொலையே. வார்த்தையாலே கொன்ற முழுபொறுப்பும் இவனுடையது. கேட்க, பார்க்க ஆள் இல்லை, கோபித்துக் கொண்டு ஓட அம்மா வீடும் இல்லை என்கிற மமதை, கூடவே சுயமாக நிற்கும் ஆணின் திமிர் இவனை ஆட்கொண்டதில் இருந்து நேற்று இரவுவரை மீளவே இல்லை.
இவன் உட்கார்ந்து கொண்டிருந்த அல்லது இவனை உரசியபடி ஒரு ஒன்னரை லட்சம் மதிப்புள்ள ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது. அதுவும் ஒரு அதிகாரி. தோள்பட்டையில் இருக்கும் நட்சத்திர எண்ணிக்கை இரண்டு. அதிகாரியின் பார்வையே இவனை மிரட்டி அடித்தது. இத்தனைக்கும் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். அதையும் தாண்டி இவரது உக்கிரம் வெளிப்பட்டது. இவனாகவே இன்னொரு இடம் தேடி அமர்ந்தான். இந்த இடத்திற்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்ற பதற்றம் மனைவியின் இழப்புக்கு நிகராக இருந்தது.
மனைவி இருந்திருந்தால் டீ கொடுப்பதற்காக இந்நேரம் தூங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒருவித பயத்தோடு எழுப்பியிருப்பாள் என்று நினைக்கும்போது இவனது கண்கள் நனைந்திருந்தது. என்னைத் தவிர எதுவும் அறியாத இவளை என்னென்ன வார்த்தை சொல்லி வதைப்படுத்தியிருப்பேன் என்று மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டான். கூடவே தனக்குத் தானே ஏதாவது ஒரு சிறிய அளவிலான தண்டனை கொடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தின்படி புறச்சூழல் மறந்து தன்னைத்தானே அறைந்துகொண்டான். அது இன்னொருவரை அறையும்போது கொடுக்கும் சௌகரியம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் வலிக்கவே செய்தது. நான்கு, ஐந்து அறைகளுக்குப் பின்தான் யாராவது நம்மை கவனிக்கிறார்களா என்பதை அறிய முற்பட்டான். வெகு அருகில் ஒரு நாய் விசித்திரமாகப் பார்த்தது. அதுதவிர தூரத்தில் அந்த துப்புரவு தொழிலாளி மேடை நாடகம்போல இதை பீடி குடித்துக்கொண்டே கவனித்துக்கொண்டிருந்தார். இந்த காவல்துறை வளாகத்தில் இதைவிட பல அற்புதமான தருணங்களையெல்லாம் அவர் பார்த்திருப்பார். அதுகுறித்து இவனுக்கு அவமானமாக இல்லை. காவல்நிலைய வாசலை மிதித்த கணத்தில் அந்த நிலையெல்லாம் எப்போதோ கடந்துவிட்டான்.
எவ்வளவு துடைத்தாலும் கண்ணர் கசிவது நிற்கவேயில்லை. துடைப்பதும் அழுவதும் சுழற்சியாக நடந்துகொண்டிருந்தது. என்ன அழுதாலும் அவள் துடித்த வலிக்கு இது ஒருபோதும் ஈடாகாது. இப்போது முடிந்தது அழுகை மட்டுமே. ஒரு பீடி குடித்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால் புகைக்க முடியாது. இது காவல்நிலைய வளாகம் எனும் லஜ்ஜை இருந்தது அவனுக்கு!
காவல்நிலைய வாசலில் இருந்து யாரோ கைத் தட்டி அழைத்தார்கள். கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர், காட்சியை மங்கலாக்கியது. கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். இவனை வெளியே நிற்கச் சொன்ன அதிகாரி. கைலியை அவிழ்த்து கட்டினான். எப்படி கட்டினாலும் அந்த கைலி பார்ப்பதற்கு மரியாதைக்குரியதாக இல்லை. பத்தடியில் அவரை அடைந்து நின்றான். ஸார், ரைட்டர் வந்துட்டாங்களா? என்ற அவனது ஆர்வத்தை சட்டை செய்யாமல், ரெண்டு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வா சொல்றேன் என்றார். சொன்னதும் மாத்திரை வாங்க ஓடுவான் என்று எதிர்பார்த்திருப்பார்போல. இவன் மாத்திரைக்கு உண்டான காசுக்காக அவரின் முகத்தைப் பாரத்தான். வேண்டா வெறுப்பாக பணத்தை எடுத்து நீட்டினார்.
மனைவியை இழந்து விசாரணையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒருவனிடம் வேலை வாங்குவது என்ன நீதி என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் நிலையில் இவனும் சமூகமும் இல்லை என உணர்ந்தவன்போல கடைக்கு நடந்து சென்றான். மாத்திரைக்கு இவன் நீட்டிய பணத்தைப் பார்த்து கடைக்காரருக்கு கோபம். எனிலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சில்லறையாக கொடுக்குமாறு கூறினார். இவனிடம் வேறு பணமும் இல்லை. திரும்பிச் சென்று அதிகாரியிடம் சில்லறை கேட்கும் மனநிலையில் இவன் இல்லை. இவன் கடைக்காரரை மீண்டும் பார்க்க அடுத்தமுறை வரும்போது கொடுக்குமாறு கருணை காட்டினார். கடைக்காரர் இவன்மீது வைத்த அந்த நம்பிக்கை கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
மாத்திரையையும் பணத்தையும் நீட்டினான். விநோதமாகப் பார்த்தார். சில்லறையாகக் கேட்டார்கள் என்று இவன் சொன்னதற்கு, அதிகாரி, “சில்லறையை வச்சுக்கிட்டே என்கிட்ட நீ பணம் கேட்ருக்க” என்று முறைத்துப் பார்த்தார்.
சரியாக இரண்டு நிமிடம் கழித்து, “ரைட்டர் வந்துட்டாரு, மாடிக்குப் போ” என்றார். அப்போதுதான் மேலே மாடி இருப்பதாய் அறிந்தான். மாடிப்படி எங்கிருக்கிறது என்று கேட்டால் அதிகாரி நிச்சயம் கோபித்துக்கொள்வார் என்பதால் மாடிப்படியை அவனே தேடிப்பிடித்து மேலே சென்றான். கீழே இருக்கும் அதே அளவில்தான் மேலேயும் கட்டியிருக்கிறார்கள். ஆனால், கீழ்த்தளம்போல மாடி அவ்வளவு விசாலமாக இல்லை. நான்கு அறை இருந்தது. முதல் அறையில் யாருமில்லை. இரண்டாவது அறை பூட்டியிருந்தது. மேலே ஆயுதம் வைக்கும் அறை என்றிருந்தது. மூன்றாவது அறையில் ஓய்வு வயதுக்கு சற்று அருகில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
வணக்கம் வைத்தான். பதிலுக்கு அவர் தலையை ஆட்டி அது காலைப்பொழுது என்பதை உறுதிப்படுத்தினார். இவன் விவரத்தைச் சொன்னதும் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றவர், மேஜையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினார். இந்த லெட்டர் உன் பொண்டாட்டி போட்ருந்த டிரெஸ்ல இருந்துச்சு. இப்பதான் ஜிஹெச்ல இருந்து வந்துச்சு. இதுல என்ன எழுதிருக்கு தெரியுமா? என்றதும் இவன் கால் நடுக்கம் அதிகமானது. எனிலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். சொல்லுய்யா என்று அழுத்திக் கேட்டதும் கூடுதலாக கொஞ்சம் சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. அவரே ஆரம்பித்தார், லெட்டர்ல வயித்து வலி காரணமா தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு இருக்கு என்றதும், நிற்க திராணியற்றவன்போல கூனிக்குறுகி தரையில் உட்கார்ந்தான். அழுகை கட்டற்று வந்தது. சூழல் புரிந்து அடக்க நினைத்தாலும் நிலை கை மீறிப்போனது. “உசுரை மாய்க்கும்போதுகூட என்னய காட்டிக்குடுக்காத புண்ணியவதியை வம்பா கொன்னுட்டனே” என்று யாருக்கும் கேட்காதவாறு புலம்பி அழுதான். அந்த அதிகாரி சற்று இரக்கப்பட்டவர்போல இன்னும் கொஞ்சம் புலம்பி அழ அவகாசம் கொடுத்தார். இவன் அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு, மூன்று பைல்களை அலமாரியில் இடம் மாற்றி வைத்து, பீரோவில் இருந்து ஒரு பைலை எடுத்து அவரது மேசைக்கு வந்தார். அப்போதும் அவன் அழுதுகொண்டிருந்தான்.
“தம்பி, இப்ப அழுது என்ன புண்ணியம்? உயிரோட இருக்கும்போது ஒழுங்கா மருத்துவம் பாத்துருக்கணும்” என்று சொல்லும்போதே ஒரு பெண் காவலர் அறைக்குள் நுழைந்து இவன் அழுவதை வேடிக்கை பார்த்தார். என்ன கேஸ் ஸார்? எனக் கேட்க, வயித்துவலி, சூசைட் என்றார். மேலும் பொண்ணுகனாலே வயித்து வலி வரத்தான் செய்யும். அதுக்குப் போய் தூக்கு மாட்டிக்கிட்டா, நாட்ல பொண்ணுங்களே இருக்காதே என்றவாறு, என்ன ஜெயா நான் சொல்றது சரிதானே? என பெண் காவலரைப் பார்த்து கண்ணடித்தார். அதையும் இவன் கவனிக்கத் தவறவில்லை!
“இங்க பாருங்க தம்பி. நடந்தது ஒரு சூசைட். போஸ்ட்மார்டம் பண்ணிதான் பாடியைக் கொடுப்பாங்க. நீ ஒரு மனு எழுதி குடுத்துட்டு போ. உன் வீட்டுக்கு எஸ்ஐ வந்து விசாரிச்சிட்டு ரிப்போர்ட் குடுப்பாரு. அந்த ரிப்போர்ட் வச்சுதான் பாடியை போஸ்ட்மார்டம் பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம்தான் பாடியை உங்ககிட்ட ஒப்படைப்பாங்க. என்ன புரியுதா?’ என்றார் அந்த ரைட்டர். இவன் காதில் “புரியுதா” மட்டுமே விழுந்தது.
மனுவில் சாட்சிக் கையெழுத்து போட அஞ்சு பேர் வேணும். ஆள் கூட்டிட்டு வந்துருக்கியா? ஆள் இருந்தா பிரச்சனையில்ல, இல்லேன்னா அவசியம் கூட்டிட்டு வரணும்! என்று கூறியதற்கு, சரி என்பதுபோல தலையாட்டினான்.
நண்பர்களை உதவிக்கு அழைத்தான். உடன் குடித்த பத்தில் மூன்று நண்பர்கள் மட்டுமே வந்தார்கள். முன்பே அழைத்திருக்கக் கூடாதா? என்று ஆதங்கமும் கொண்டார்கள். மனுவைத் தயாரித்து ஒவ்வொருவராக கையெழுத்து போட்டனர். கையெழுத்து போட்ட இருவரிடம் இருந்து வெளிப்பட்ட மதுவாடையைக் கண்டு ரைட்டர் கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. காரணம், அவரிடமும் மிதமான மதுவாடை இருந்தது. மனுவை சமர்ப்பித்து உயரதிகாரியைப் பார்த்து வருவதற்குள் நேரம் நண்பகலை அடைந்திருந்தது. இவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதா? வீட்டுக்கு அழைத்துச் செல்வதா? என்று நண்பர்கள் ஆலோசனை நடத்தி இவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இவன் தெருவுக்குள் வருவதை வேடிக்கை பார்த்தார்கள். இவனுக்கு உடையின்றி நிர்வாணமாக நடந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது. வீடு பூட்டியிருந்தது. யாரோ பாதுகாப்பாக பூட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு அருகில் வந்ததும் பக்கத்துவீட்டு சிறுவன் சாவியைக் கொடுத்தான். வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். மனைவி குளித்துவிட்டு வரும்போது வரும் வாசம் வீசியது. அழ முயற்சித்தான். முடியவில்லை. காலையில் இருந்து தண்ணீர்கூட குடிக்கவில்லை. நண்பன் ஒருவன் குளிர்பானம் வாங்கி நீட்டினான். வாங்க ஆவலிருந்தாலும் மனம் ஒத்துழைக்கவில்லை.
தூக்குப் போட மாட்டிய அறுந்த கயிறு இன்னும் மீதி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. துக்கம் விசாரிக்க ஒவ்வொருவராய் வரத் தொடங்கிவிட்டார்கள். இனிமேல்தான் தைரியமாக இருக்கவேண்டும் என்று ஆறுதல் கூறினாலும் பின்னால் இவன்தான் அவளை ஏதோ செய்துவிட்டதாக கூறிச்சென்றார்கள். நீண்ட யோசனைக்குப் பின்னால் தண்ணீர் குடிக்கச் சமையலறைக்குச் சென்றான். அடுப்பில் பால் பொங்கிய தடம் அவளை மீண்டும் நினைவுபடுத்தியது. அள்ளிய தண்ணீரை குடிக்காமலே வைத்திருந்தான்.
வெளியே விசாரிப்பதற்கு போலீஸ் வந்திருப்பதாக நண்பன் ஒருவன் வந்து சொன்னதும் தண்ணீர் சொம்பை வைத்துவிட்டு வெளியே வந்தான். காலையில் காவல்நிலைய வாசலில் உட்கார்ந்திருக்கும்போது புல்லட்டில் வந்த அதிகாரிதான் விசாரிக்க வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டான். மனைவி பெயர், வயது, முகவரியைக் கேட்டு எழுதிக்கொண்டார். உங்களுக்கும் மனைவிக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்று கேட்டார் அந்த அதிகாரி. இவன் தலையைக் கவிழ்ந்து ஏதும் பேசாமல் இருந்தது அங்கிருந்த நிலைமையை கொஞ்சம் கலவரமாக்கியது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அந்த அதிகாரி இன்னும் உற்சாகமாகி அதே கேள்வியை இன்னும் அழுத்தமாகக் கேட்டார். “என்னாலதான் ஸார், அவ செத்துப்போனா!” என்றதும் பேரமைதி நிலவியது. சம்சாரம் செத்துப்போனதால ஏதோ விரக்தில பேசறான் ஸார் என்று கூறி அந்த அதிகாரியைத் தனியாக அழைத்துக்கொண்டு சென்ற நண்பர்களில் ஒருவன் அப்படியே “பேசி” அவர்களை அனுப்பிவைத்தான்.
எல்லா நடைமுறையும் முடிந்து உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. தெருவில் இருந்த மொத்த கூட்டமும் அவன் வீட்டின் முன்பு கூடியிருந்தது. அது இரங்கல் தெரிவிக்கவும் வேடிக்கை பார்க்கவும் வந்தவர்கள் என்று கலந்திருந்தது. இவன் கிட்டத்தட்ட நிலையை மறந்து ஏதோ உளறிக்கொண்டிருந்தான். வெளியே உடல் குறிப்பிட்ட பிரதான சாலையை கடந்துவிட்டதாகவும் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடும் என்று வீட்டுக்கு முன் கூடியிருந்த கூட்டத்தை கலையவிடாமல் பரபரப்புடன் வைத்திருந்தான். இவனுக்கு அவளின் உயிரற்ற உடலை எதிர்கொள்ளவே அச்சமாக இருந்தது. அவளைப் பார்த்த கணத்தில் இருதயம் வெடித்து இறந்தால்கூட தேவலை என்றிருந்தது.
இப்போது தெருவில் எந்த இருசக்கர வாகனமும் செல்ல முடியாதபடி மக்கள் கூட்டம். தெருமுனைக்கு உடல் வந்துவிட்டதாக கூற, வசதியாக நின்று வேடிக்கை பார்க்கும் ஆவலில் கூட்டம் முண்டியடித்தது. உடல் ஆம்புலன்ஸில் வந்து இறங்கியது. உடன் குடித்து கூத்தடித்த நண்பர்களின் ஏற்பாட்டின் பேரில்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. தெரு வழி குறுகியது என்பதால் தெருக்களை இணைக்கும் பிரதான சாலையிலேயே உடலை இறக்கி ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு வந்தார்கள். மக்களின் முணுமுணுப்புகள் ஒன்று சேர்ந்து பேரிரைச்சலாக இருந்தது.
தெருவாசிகள் யாரும் சொல்லாமலே உடலுக்கு வழிவிட்டார்கள். ஸ்ட்ரெச்சர் வீட்டுக்குள் செல்ல வழி இல்லாததால் வெளியே வைத்து சடங்குகள் செய்ய ஏற்பாடானது. இவனை நண்பர்கள் மெதுவாக அழைத்து வெளியே வந்தார்கள். அவனது கை, கால்கள் எல்லாம் நடுங்கியதை எல்லோருமே கவனித்தார்கள். மனைவியின் உடலுக்கு அருகே சென்றவன், “நான்தான் இவளைக் கொன்னேன்” என்று தெருவே அதிரும்படி கதறினான்.
*******