இணைய இதழ் 117கவிதைகள்

கார்த்திகேயன்.ர கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சொல்லக் கூடாது

வீட்டின் நடுவில்
மேசைகளில் அமர்ந்து
உணவு உண்டுவிட்டுப் போகும்
உங்களுக்கு எப்படித் தெரியும்,
காய்கறி நறுக்குகையில்
கையை வெட்டி வழிந்தோடிய
குருதியின் வாடை

எனது சமயலறைக்குள்
வந்து பார்க்க
எத்தணிக்காதவர்கள்
ஒருபோதும் சொல்லக்கூடாது,
“சோறு நல்லாயில்ல”.

*

எப்படி வாழ்வது?

பேசிப் பேசியே
பூசிய நமது உறவை
உள்ளேயே இருந்துகொண்டு
வெளியே வந்து பார்த்தால்
பல்வேறு ஓட்டைகள்
சிறிதும் பெரிதுமாய்

ஒவ்வொரு முறையும்
என்னோடே சாகும்
எனது மௌனங்களை எடுத்து
எச்சில் துப்பிக் குலைத்து
ஓட்டைகளை அடைக்கிறேன்

செங்கல்கள் வைத்து
கலவை பூசி
கண்டிப்பாய் கட்டிவிடலாம்
ஒரு வீட்டை
வெளியிருந்து பார்க்க
வண்ணங்கள் நிரம்பி
ஓட்டைகள் இல்லாதிருக்கும் வீடு

நாம் கட்டிய வீட்டை
வியந்து பார்க்கிறாய்

சட்டென்று மேலெழுகிறது

ஓட்டை இல்லாத வீட்டில்
எப்படி நுழைவது?
எப்படி சுவாசிப்பது?
எப்படிதான் வாழ்வது?

*

சாபம்

பெருவனத்தில்
வீசிப்போகும் காற்றின்
ஈரப்பதத்தைக் குடித்து
உயிர் வாழ்கின்றன
என்னுடையவை

குவிந்த எனது
சருகுகளையும்
கூட்டிக் கொண்டோடுகிறது
இக்குளிர்காற்று

எங்கோ செல்லும்
ஒரு நாய் கால் தூக்கி
சிறுநீர் கழித்துப் போகிறது
வேர்களில் படர்கிறது குளுமை
கிளைகள் விரிய
மலர்கள் நிரம்ப
மீண்டும் ஒரு வாடுதலுக்கு
தயார்படுத்திப் போகிறது காலம்

*

சிறுநீர் கழிக்காதிர்

கிழிந்த சேலைகளைப்
பிணைத்து
தூரி செய்து
ஆடிக் கொண்டிருக்கிறேன்

உருண்டு பிரண்டு
அழுகிறீர்கள்
உங்களையும் ஏற்ற வேண்டுமென்று

கால்களில் மிதித்து எம்பி
முதுகில் பதித்து
தோள்பட்டையில் ஏறி
கைகள் தட்டி ஒலி எழுப்பி
மகிழ்கிறீர்கள்
கைகள் முதுகைப் பிடித்திருக்க
தோள்களும் குறுக்கும்
வலியெடுக்கிறது

வலிக்கிறது என்றவுடன்
முதுகில் மிதித்து
பக்குவமாய் தரையில் கால்பதித்து
கீழிறங்கி என் மீது
சிறுநீர் கழித்துவிட்டுச்
செல்கின்றீர்.

*

சில நேரங்களில் சில மனிதர்களால்

தாழ்ப்பாள் இல்லாத
கழிவறைக் கதவுக்குப் பின்னால்
பிளாஸ்டிக் கப்பில் நீர் பிடித்து
அண்டம் கொடுத்து
வைக்கிறேன்
வெளியே எனது ஒலிகள்
கேட்டுவிடக்கூடாது என்கிற
எண்ணம்
உள்ளிருப்பைத் தெரியப்படுத்த
தண்ணீர் குழாயைத் திறந்து
வாலி நிரம்பி வழிகிறது
காலடி ஒலி கேட்கும்போதெல்லாம்
பயம் பதற்றம்

எண்ணம் முழுதும்
நிறைந்திருக்கின்றது,
’யாரேனும் நுழைந்துவிடுவார்களோ?’

*

என் இருப்பு

பெருவனத்தில்
ஒரே செடி
இலைகள் பழுத்து பொழிய
வேர் பிடுங்கி நடந்துபோவது
எவருக்கும்
எச்சலனத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை

அலைகள் அழுத்த
மரித்து மண்ணில் புதையும்
அலையின் உட்குறள்
செவிட்டுக் காதுகளில்
மோதி உடைந்து நனைக்கிறது

வலி தாளாது
உருகி ஓடும் எனது அன்பை
நனைந்த துணியால்
குவித்து
கோப்பைகளில் நிரப்பி
நித்தம் நித்தம்
குடிக்கக் கொடுத்துக்கொண்டே
இருக்கிறேன்

என் இருப்பு
பாலையில் தன்
நீரைத் தேடிக் கொண்டிருக்கும்
கள்ளிச்செடி போன்றது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button