கசப்பு கலந்த காடி
இது என்
ரத்தமும் அல்ல
கண்ணீரும் அல்ல
அதோ அந்தக் கசப்புக் கலந்த
காடியில் சிந்தப்பட்டிருக்கின்றன.
****
அழுக்கு நீரில் விழுந்த நாவு
அழுக்கு நீரில் விழுந்த நாவை
மீண்டும் அதே இடத்தில் வைக்க பெருத்த அவமானம்.
****
புறாக் கண்களில் திரிபவன்
புறாக் கண்களில் திரிபவன்
வறள் நிலத்தை அடைமழையாக்குகிறான்
அவனுக்கென்று பூவில் அலைவரிசை உண்டு
காடுகளில் நீர்முள்ளிச் செடி
கண்களில் குத்திட்டு நின்றாலும்
காருண்யக் கண்களால் பூமியை
எலுமிச்சம் பழ நிறமாக்குகிறான்
இறகுகளின் மெல்லிய தோகையை
கூடார நிழலாக்கி
பெண்களுக்கு ஆடை நெய்து அனுப்புகிறான்
சிறு சிறு ஊடாட்டத்தில் மோதி
வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும் குழந்தைகளை
விளையாட அனுப்புகிறான்
பிழையோடு இருக்கும் வாசகத்தைச் சரி செய்து
மேற்கு மலைத்தொடரின்
அடிவானில் படுத்துறங்குகிறான்
காலையில் குதிரை சவாரி செய்கின்றான்
இடைவிடாது பயணிக்கின்றான்
புதிய நண்பர்களோடு கனிரசத்தை
நூலைப் பதம் பிரித்துப் பக்குவப்படுத்துகிறான்
அவனுக்கென்று எந்த அலுவலகமும் இல்லை
அவன் கட்சி பேதங்களுக்கு
அப்பாற்பட்டு நடந்து கொள்கிறான்
அங்கே அவனது வானில் வெண்ணிறச் சிறகுகள் விரிகின்றன.
****
கனிநாவு
காயிலிருந்து கனியாகும் வரை காத்திருந்தவனுக்கு
அவளது நாவு
சுவை மிகுந்த கனியெனத் தெரியாமல் போனது.
****
ஜென் துறவி
ஜென் துறவி அதிகாலை வெளியில்
குறுஞ்சிரிப்பைச் சூரியன் மீது ஏற்றிப் பரிசளிக்கிறார்
பொன்வண்டு முட்டைகளை மனதில் வரைந்து
நதிக்கரை நாகரிகத்தின் செழித்த கூழாங்கற்களைக்
கையில் உருட்டி உருட்டி
உடல் முழுக்க சிறுதானியங்களை விளைவிக்கின்றார்
உடலில் அதிகப்படியான நீர் இருப்பது
தானியம் விளைவிப்பதற்காகவே என்பதை
அவர் சொல்லாமல் மற்றவர்கள் அறிந்து கொள்கிறார்கள்
புணர்தலும் புணர்தல் நிமித்தம் உண்டாகும்
மனிதர் வாழ்வில்
விளைச்சலும் விளைச்சலின் மிகுதியால்
உண்டாகும் களிப்பு
சிறப்பினும் சிறப்பாகிறது துறவியின் வாழ்வில்.
*******