கண்ணாமூச்சி ரே ரே..
பழைய பெட்டியில் இருந்து
கைக்கு கிடைத்தது
ஜாதகப் புத்தகம்
ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன
அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்ற
அவளது பெயர்
கொஞ்சம் வெளிறி
வாழ்வை
கட்டங்களில் கண்டுபிடிப்பது
ஒரு
கிளர்ச்சிமிகு விளையாட்டு
நமக்கு
பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி
போற இடத்தில் செல்வம்
பெருகுமாம்
கல்யாணக் கடனில் இருக்கும் அப்பா சொன்னார்
வெளிநாடெல்லாம் போவியாம்
தம்பி சிரித்துவிட்டுப் போனான்
கட்டங்களில் வாழ்வை
வரைந்து பார்ப்பது
ஒரு
கிளர்ச்சிமிகு விளையாட்டு
நமக்கு
அடிவயிற்றில் உதைபடுவதையும்
வாசலில் இரவில்
நிற்க வைக்கப்படுவதையும்
பொதுவெளியில் கன்னத்தில் அறை விழுவதையும்
உடைந்த பல்லையும்
நெளிந்த வளையலையும்
வலி கசியும் யோனியையும்
கட்டங்களில் ஒளித்து வைத்து
ஒரு
கிளர்ச்சிமிகு விளையாட்டை
அதன் பின்னே
அப்புத்தகம்
விளையாடத் தொடங்கியது.
****
புணர்ச்சி விதும்பல்
ஒரு நெற்குதிரின் புழுக்கத்துடன்
இந்த உச்சிப் பொழுது
புரண்டு நெளிகையில்
விதை கிழித்து துளிர்க்கிறது
ஒரு பசலை
நண்டுகள் குடையும்
ஒலியில்
சிலிர்த்து அடங்கும் வயல்வெளி
முயங்கும் மழையின்
பற்தடம் வேண்டி
தன்னை விரித்துக் கொடுக்கிறது
துள்ளும் மீன்கள்
நித்திரை மறந்த குளம் ஒன்றில்
பாய்ந்து இறங்கும்
மீன் கொத்தி
வரைந்து காட்டுகின்றது
வட்ட ஓவியங்களை
சுழித்துப் பொழியும் கார்மேகம்
வெக்கையின் தடங்களை வருடி மேவி
விடாய் தீர்க்கிறது.
****
தற்கொலையிடம் தப்பி வந்தவள்
தோட்டத்து ஆள் தட்டிவிட்ட
அரளி விதை
சுருக்கிட்டுக் கொள்ளத் தெரியாமல்
திரும்பி அணிந்து கொண்ட தாவணி
ஒரு நகைச்சுவைப் படம் பார்த்த பின்
வாங்காமல் வந்த பால்டாயில்
மரணக் குறிப்பு எழுதிப் பார்த்து
ஆற்றிக் கொண்ட மனம்
என்று
வழி நெடுக
தப்பி வருபவளை
மீண்டும்
ஊளையிட்டு
அழைக்கிறது அது
அகாலத்தில்
வந்து சேர்ந்த தற்கொலைச் செய்தி ஒன்றினை
நான்காக
நறுக்கி அதன் பக்கம்
வீசுகிறாள்
தன் கோரைப் பற்களில்
கவ்வியபடி
அது கொஞ்சம் மௌனிக்கிறது.
****
இம்மழை ரசிப்பதற்கு அல்ல
மழை
நோயுற்ற கிழவனைப் போல் இரவெல்லாம்
அனத்திக் கொண்டிருக்கிறது
அதன் ஈரத்தின் பிசுபிசுப்பு
கெண்டைக் காலில் புழுவென
ஊர்ந்து
உடல் பதறச் செய்கிறது
இந்த இருள்
தொண்டையில் கசந்து கொண்டிருக்கும்
மற்றொரு இரவைப் பிரதி எடுக்கிறது
அச்சுறுத்தும் அமைதி
கறுத்த நிழல் ஒன்று
வளர்ந்து வளர்ந்து
பச்சையத்தின்
பாடலை
சுருட்டி விழுங்குகையில்
துழாவும்
என் கைகள்
ஒற்றை ஒளிக் கீற்றை
தேடித் தளர்கின்றன.
******